வியாழன், 1 பிப்ரவரி, 2018

பறையிசை


2008 ஆம் ஆண்டு உலக போதை ஒழிப்பு தினமான சூன் 26-ஆம் தேதி சென்னை பட்டினப்பாக்கம் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்களுக்காக விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றைபரீக்ஷாநாடக குழு சார்பாக அரங்கேற்றினோம். அதுவே பரீக்ஷா குழுவில் எனது முதல் நாடகம்.

எங்கள் வீதி நாடக துவக்கமே பறையிசையில் தான் ஆரம்பமானது. கட்டியக்காரன் பறையிசையை வாசித்துக் கொண்டே நடனமாடிய படி வருவார். அவரை பின் தொடர்ந்து வீதி நாடகம்/தெருக் கூத்து கலைஞர்களும் நடனமாடிய படியே வந்து நாடகத்தை துவங்குவோம். எங்கள் நாடகத்திற்கு இசை என்பது பறையிசை தான். நிகழ்வை அவ்வளவு உற்சாகமூட்டும் விதமாக வைத்துக் கொள்ளும் அதன் இசை.

சிறு வயதில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பறையிசையை கேட்டிருந்தாலும் கூட அந்த இசையோடு பயணிக்க ஆரம்பித்தது என்னவோ அந்த வீதி நாடகத்தில் இருந்து தான்.

பரீக்ஷா நாடகக் குழுவில் நான் நடித்த பெரும்பாலான நாடகங்கள் வீதி நாடகங்கள் தான். அதற்கு பிண்ணனி இசை இந்த பறையிசை தான். அப்போதிலிருந்தே பறையிசை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்து வந்தது. அதற்கான சில வாய்ப்புகள் கிடைத்தும் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனது.

சமீபத்தில் முகநூல் வாயிலாகமையம் கலைக்குழுநடத்தும் பறையாட்ட பயிற்சி பட்டறை நிகழ்வு குறித்து தெரிய வந்தது. சனி மற்றும் ஞாயிறு என விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி. இரண்டு நாட்களுக்கான பயிற்சி கட்டணம் 750 ரூபாய். இதில் அடிப்படை பறையிசை மற்றும் நடனம் கற்றுத் தரப்படும் என்பதால் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணிணேன். பங்கேற்றேன். நன்றி, முகநூல்!

பறையிசை பயிற்சி பட்டறை நடைபெற்றது சென்னை சாந்தோம்-இல் உள்ள சி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி வளாகத்தில் தான். பட்டினப்பாக்கத்தில் இருந்து சாந்தோம் வர எனக்கு பத்து வருடங்கள் எடுத்துக் கொண்டது!!

பயிற்சி தொடங்குவதற்கு முன்பாக படிமத்தில் பங்கேற்பாளர்கள் பெயர், முகவரி மற்றும் தொடர்புகள் பெறப்பட்டது. அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, ஏன் இந்த பறையாட்ட பயிற்சியில் கலந்து கொள்கிறோம் என்பதையும் கூறினோம். மையம் கலைக்குழு சார்பாக பறையிசை குறித்த ஒரு அறிமுகத்தோடு பயிற்சி துவங்கியது.

பறை என்ற இசைக் கருவி மாட்டின் தோளால் செய்யப்படும் ஒரு கருவி. ஓர் அடி சுற்றளவு கொண்டது. பறை இசைக்க இரண்டு மரத்தாலான குச்சிகள் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று, மூங்கில் மரத்தால் செய்யப்பட்ட சுண்டு குச்சி. மற்றொன்று வேப்பம் மரத்தால் செய்யப்பட்ட அடி குச்சி. இந்த இரண்டு குச்சிகளில் இருந்த வரும் ஓசைகள் இரண்டு தாளங்களாக வாசிக்கப்படுகிறது. அதுவே பறையின் அடிப்படை தாளங்கள்.

இந்த தாளங்களின் பல்வேறு அடிகள் மூலமாக பறையிசை வாசிக்கப்படுகிறது. இந்த அடிகளை மிகவும் எளிமையான வாய்ப்பாடுகள் மூலமாக மையம் கலைக் குழுவின் கோகுல கிருட்டிணன் என்பவர் பயிற்றுவித்தார். இந்த வாய்ப்பாடுகள் கற்றுக் கொள்பவர்களின் மனதில் சுலபமாக பதிவேறும் வகையில் பயில்பவர்கள் தரையில் அமர்ந்து கொண்டு தங்கள் கைகளால் கால்களில் இசைத்தபடி இந்த தாளங்களை மனப்பாடம் செய்து கொண்டோம். அடுத்த கட்டமாக அனைவருக்கும் பயிற்சிக்காக வழங்கப்பட்ட பறையில் இந்த அடிகளை இசைத்து பழகினோம்.

பறையாட்டத்தின் சிறப்பு அம்சம் என்பதே அதை ஆடிக் கொண்டே இசைப்பது தான்! ஆக அடுத்ததாக முதலில் கற்றுக் கொண்ட அடிகளுக்கான அடவு(நடனம்) பயிற்றுவிக்கப்பட்டது. இது உடல் சார்ந்த பயிற்சி. பிறகு, கைகளில் பறையை வாசித்துக் கொண்டே அதற்கு ஒன்று சேர நடனமும் ஆட வேண்டும். பறையாட்டத்தின் மிக கடினமான விடயம் இது தான். அதோடு பறையாட்டம் எப்போதும் ஒரு குழுவாக அரங்கேற்றப்படும் ஒரு நிகழ்வு. அதனால் பறையை இசைப்பதாகட்டும் அதற்கு நடனமாடுவதாகட்டும் இரண்டையும் குழுவோடு ஒருங்கிணைந்து செய்ய வேண்டும். இதற்கு செறிவு  மற்றும் விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

இரண்டு நாட்களும் பறையிசையின் அடிப்படை அடிகள்/தாளங்கள், அதன் வாய்ப்பாடுகள், அதை பறையில் பயில்வது, அதற்கான அடவு பயில்வது, பிறகு அதை இணைந்து பறையாட்டம் செய்வது என சென்றது. இறுதியாக குழுவாக அரங்கேற்றம் நடத்தினோம். பறை இசை என்பதை உள்வாங்க முடிந்தது மகிழ்ச்சியளிக்கும் அனுபவமாக இருந்தது.

இதற்கு முன்பாகவும் பறையை வாசித்த அனுபவம் எனக்கு இருந்தது. பரீக்ஷா குழுவின்முனியன்நாடகத்தை 2009-ல் டி.பி.ஜெயின் கல்லூரியில் அரங்கேற்றிய போதும் பிறகு அதே நாடகத்தை திருச்சியில் அரங்கேற்றிய போதும் பிண்ணனி இசையாக பறையை வாசித்திருக்கிறேன். அது முற்றிலும் தாளங்களால் மட்டும் இசைத்த அனுபவம். தற்போதைய பயிற்சி என்பது முழுமையாக வேறோரு அனுபவம்.

இன்று நாம் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள தொலைபேசி, சுடரொளி கொண்ட கைபேசி என தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவிட்டோம். ஆதி தமிழர் பறையிசையை தான் தம் சமூகத்தின் தொலைதொடர்பு கருவியாக பயன்படுத்தியுள்ளனர். ஊர் மக்களுக்கு ஒரு தகவலை தெரிய படுத்த பறையிசை பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தகவல்களுக்கு பல்வேறு அடிகள் வாசிக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஊருக்குள் வெள்ளம் வருகிறது என்றால் ஒரு விதமான அடி வாசித்து மக்களை விழிப்படைய செய்திருக்கின்றனர். இன்னும் ஆழமாக சென்று பார்த்தால், பறை என்பதை மனிதன் காடுகளில் வாழும் காலங்களில் இருளிடம் இருந்த பயத்தை போக்குவதற்கும் விலங்குகளிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ளவும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறான்.

திருமண நிகழ்வுகளில் பறையிசை வாசிக்கப்பட்டிருக்கிறது. தமிழரின் பண்பாட்டு அடையாளமாக பறை இருந்து வருகிறது. தமிழ் இலக்கியங்களில் அகநானூறு, மணிமேகலை, குறுந்தொகை என பல இடங்களில் பறை குறித்து பாடப் பட்டிருக்கிறது. பறை என்பது மக்களின் கவனத்தை நம் பக்கம் ஈர்க்கும் ஒரு கருவி.

இன்றைக்கு நம் தொடர்பு சாதனங்கள் பல்வேறு வடிவங்களை பெற்று விட்ட நிலையில் பறையின் பயன்பாடு குறைந்து விட்டது. ஆனால் பறையிசை என்பது கலை நிகழ்வுகளில், பண்பாட்டு நிகழ்ச்சிகளில் பயன்பாட்டில் உள்ளது. இன்று பல்வேறு சினிமா பாடல்களை நாம் கேட்டு ரசித்தாலும் கூட நம்மை எழுந்து ஆட வைக்கும், புத்துணர்வு தரும் பாடல்களில் பறையிசை இருப்பதை காணமுடிகிறது. அதுநாக்க முக்காபாடலாக இருந்தாலும் சரி, ‘ஆளபோறான் தமிழன்பாடலாக இருந்தாலும் சரி.

இறுதிச்சடங்குகளில் பறை வாசிக்கப்படுவது நாம் அறிந்த ஒன்று தான். வாசிப்பதற்கான காரணம் தான் சற்றே ஆச்சரியப்படுத்துகிறது. பறை ஓசையை கேட்டும் ஒருவர் எழவில்லை என்றால் அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிபடுத்துவதற்காகவாம்! அந்தளவிற்கு இந்த கருவியும் அதன் இசையும் நம் வாழ்வோடு இணைந்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது.

திருமணங்களில் வாசிக்கப்பட்டதாக சொல்லப்படும் பறையிசை இன்று ஜாதிய சாயம் பூசப்பட்டு ஒடுக்குமுறைக்கு தள்ளப்பட்டுவிட்டது! இசையையும் விட்டு வைக்கவில்லை இந்த ஜாதி கொடுமை. தொழில்முறை பறை கலைஞர்களே இந்த கருவியின் மீது சுமத்த பட்டிருக்கும் ஜாதிய வன்மம் காரணமாக இதை கைவிட்டு செல்கிறார்கள். உலகில் வேறெங்கும் இது நடக்குமா என்று தெரியவில்லை.

பறையிசை என்பது தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. அதை பரவலாக்குவதும் அதன்மீதிருக்கும் ஒடுக்குமுறையை உடைத்தெறிவதும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் நமது கடமை. அத்தகைய முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் மையம் கலைக்குழுவில் எவரும் தொழில்முறை கலைஞர்கள் அல்ல! வெவ்வேறு துறைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் மாணவர்கள். அவர்களுக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும்.

அன்புடன்,

ஜெகன்.