வெள்ளி, 25 மே, 2018

தூத்துக்குடி படுகொலை – அதிமுக அரசின் தோல்வி!

         
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய பதில்களில் இருந்து எழும் கேள்விகள் :

1)   துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி வழங்கியது யார்?

2)   தற்காப்புக்காகவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்றால்,


i) 17 வயது சிறுமி முழக்கம் எழுப்பியது அரசை தாக்கியதால் தான் அவள் வாயில் சுட்டுக் கொல்லப்பட்டாளா?
ii) 74 வயது பாதிரியார் எந்த ஆயுதத்தை ஏந்தி தாக்கினார் அவரை இடுப்பில் சுட்டு தள்ள?
iii) தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திரேஸ்புரம் என்ற மீனவ கிராமத்திற்குள் நுழைந்த காவல்துறை, தன் குழந்தைகளுக்கு மீன் வாங்கி ஆட்டோவில் வந்திறங்கிய ஜான்சி ராணி என்ற பெண்ணை அவர் தலையில் சுட்டு மண்டையும் கண்ணும் சிதறி இருக்கிறது. அந்த தாயிடமிருந்து காவலர்களுக்கும் ஆட்சியருக்கும் அரசுக்கும் என்ன பாதுகாப்பு தேவைப்பட்டது? இரவு 10 மணி முதல் 12 மணி வரை மின் துண்டிப்பு செய்து திரேஸ்புரத்திற்குள் நுழைந்து இந்த கொடூர கொலைகளை அரங்கேற்றி இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு காவல்துறை.

3)   போராடிய மக்களை பதினான்கு முறை தூத்துக்குடி ஆட்சியர் சந்தித்தார் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே.. நீங்களோ அல்லது துணை முதலமைச்சரோ 99 நாட்களாக ஏன் அந்த மக்களை சந்திக்க செல்லவில்லை? ஓட்டுக்கு மட்டும் தான் மக்களா?

4)   தற்போதும் தூத்துக்குடி செல்லாமல் இருக்க அங்கு 144 தடை இருப்பதாகவும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் பேசும் நீங்கள், உங்கள் காவல்துறை சட்டத்தை மீறியதை ஏன் ஆதரிக்கிறீர்கள்? தூத்துக்குடி ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், துப்பாக்கி சூடு நடத்தியவர்களை பணி இடம் மாற்றினால் இறந்தவர்கள் உயிர் திரும்ப வந்துவிடுமா?

5)   தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு பத்து லட்சம் ரூபாய் என்று விலை அறிவிக்கும் நீங்கள் ஏன் 2000 காவலர்களுடன் ஊட்டியில் மலர் விழாவை திறந்து வைத்தீர்கள்? பத்து லட்ச ரூபாய் கொடுத்தால் உங்கள் உயிரை நீங்கள் கொடுப்பீர்களா?

தூத்துக்குடி மக்கள் பேரணியாக சென்ற போது மக்களுக்கும் காவல்துறைக்கும் ”தள்ளுமுள்ளு ஏற்பட்டது”, ”தள்ளுமுள்ளு ஏற்பட்டது” என்று ஊடகங்கள் மூலம் ஒரு பொய் பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.

பேரணியில் மாடுகளை அவிழ்த்துவிட்டு மக்களிடையே ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியது யார்? காவல்துறை தான் என்று அங்கிருந்த மக்களிடமிருந்து தகவல்கள் வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சரின் கீழ் இயங்கும் துறை தான் காவல்துறை. மாட்டை அவிழ்த்து விடுவதும் அமைதியான சூழலை ஆசாதாரணமாக மாற்றியதும் தான் பாதுகாப்பா?

அதை தொடர்ந்தே மக்கள் சிதறி ஓடுகிறார்கள். பிறகு கண்ணீர் புகை குண்டுகள், துப்பாக்கிச் சூடு, படுகொலை என அனைத்தையும் முதலமைச்சரின் கீழ் இயங்கும் காவல்துறை செய்து கொண்டிருக்கிறது.

இவ்வளவு கொடூரமான அரச பயங்கரவாதமும், வன்முறையும் தங்கள் மீது தொடுக்கப்படும் பொழுது மக்கள் தங்கள் உயிர்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள முடியும்? மிகப் பெரிய ஒரு அச்சுறுத்தலை இது தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு முழு பொறுப்பு தமிழக அதிமுக அரசு தான். தமிழ்நாட்டை ஒரு தோல்வியுற்ற நிலைக்கு(Failed State) கொண்டு செல்லும் இந்த அரசு இனியும் நீடித்தால் தமிழகத்தை அழிவிலிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது. எனவே, எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தமிழகமெங்கும் பல முக்கிய வாழ்வாதார போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம். அதை நசுக்க முயற்சிக்கும் இந்த அரசாங்கம் எப்படி மக்கள் நலன்களை பேணிப் பாதுகாக்கும் ஒரு அரசாக இருக்க முடியும்? தன் மக்களையே ரத்த வெறி கொண்டு கொலை செய்யும் அரசின் ஆட்சி எப்படி மக்களுக்கான ஆட்சியாக இருக்க முடியும்?

இத்தனை தோல்விகளுக்கும், கொலைகளுக்கும் காரணமான அதிமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

அன்புடன்,
ஜெகன்