சின்ன வயதில் ரஜினி ரசிகனாக வளர்ந்த எங்களுக்கு அவரது திரைப்படத்தில் வரும் அறிமுக பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவற்றை சினிமா பாட்டு புத்தகம் வாங்கி மனப்பாடம் செய்து பாடிய பள்ளிப்பருவமானது மலரும் நினைவுகள்.
அந்த கதாநாயக அறிமுக தத்துவ பாடல்களை பாடிய குரலுக்கு சொந்தக்காரரான பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை அப்படி தான் எனக்கு அறிமுகம். இப்படி தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் பலவிதமாக தங்கள் வாழ்வோடு ஒன்றிய ஒரு குரலாக எஸ்.பி.பி அவர்கள் இருந்திருக்கிறார்.
தமிழில் 10,000 பாடல்களுக்கு மேல் பாடி தமிழ் சினிமாவின் பிரதான பாடகராக இருக்கும் அவர், கன்னட மொழியில் அதைவிட அதிக எண்ணிக்கையில் பாடல்களை பாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல்! இப்படி தென்னிந்தியாவின் மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அனைத்திலும் பாடி ஒரு சகாப்தமாக இருக்கும் அவர் மொத்தமாக 16 மொழிகளில் 40,000-ற்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார்!
இசையமைப்பாளர் இளையராஜா இசையில் மட்டும் எஸ்.பி.பி சுமார் 2000 பாடல்களை பாடியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இவர்களின் இசை கூட்டணியில் உருவான அற்புதமாக பாடல்களை தமிழ் சினிமாவின் பொக்கிஷம் எனலாம். அதில் ரஜினியும் இருப்பார், கமல்ஹாசனும் இருப்பார், நடிகர் மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள், மற்றும் இயக்குனர்கள், இசைக் கலைஞர்கள், தமிழ் இசை ரசிகர்கள் என அனைவரையும் பின்னி பிணைந்த ஒரு கூட்டணி அது. இதுவே அவரை ஒரு காலாச்சார அடையாளமாகவும் மாற்றி இருக்கிறது. அதுவே சினிமா எனும் கலையின் சிறப்பு.
தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த பாடகர் யேசுதாஸ் அவர்கள். ஆனால், எஸ்.பி.பி-யை பொறுத்தவரை அவர் பல்வேறு விதமான பாடல்களை பாடி அசத்தியதே அவரை பின்னணி பாடகர்களில் ஒரு சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளது.
எஸ்.பி.பி பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி'. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அற்புதமாக இருக்கும்.
அவர் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமாக பாடக்கூடியவர் என்பதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிடுகிறார். யோசித்து பார்த்தால், அவர் ஒவ்வொரு நடிகருக்கும் பாடிய பாடல்களில் அந்த நடிகருக்கான ஒரு அடையாளத்தை கொடுப்பதோடு, அவரின் தனித்தன்மையையும் அந்த பாடல்களை கேட்ட உடனே நாம் அறிந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்லாமல் அவர் பாடிய எண்ணற்ற பாடல்கள் மூலம் நம்முடைய சந்தோஷத்திலும், கொண்டாட்டத்திலும், சோர்விலும், சோகத்திலும், உத்வேகம் அளிப்பதிலும் என நம் வாழ்வியலின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறார். உதாரணமாக ஒவ்வொரு வருடமும் ஆங்கில புத்தாண்டின் போதும் அவரின் 'விஷ் யூ ஹெப்பி நியூ இயர்' என்ற பாடலை கேட்டே நாம் புதிய வருடத்தை வரவேற்கிறோம். அதே போல் கல்யாண கச்சேரிகளில் அவரது பாடல்கள் இல்லாமல் கொண்டாட்டம் இருக்காது.
ஒரு பாடகராக மட்டுமில்லாமல், இசையமைப்பாளராக 60 படங்கள், நடிகராக 75 படங்கள், டப்பிங் கலைஞராக பல படங்கள், தயாரிப்பாளராக என பன்முகத்தன்மை கொண்ட ஒரு ஆளுமையாக திகழ்ந்திருக்கிறார்.
மத வேறுபாடு பார்க்காமல் ஆன்மீக பாடல்களையும் பாடியுள்ளார்.
இவை அனைத்தையும் கடந்து பணிவன்பான ஒரு மனிதராக அவரை பார்க்க முடிகிறது. அதுவே அவர் மேல் நமக்கிருக்கும் அன்பை அதிகப்படுத்துகிறது. அவர் மரணித்த செய்து பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த அவர், கொரோனா விழிப்புணர்வை குறித்தும் ஒரு பாடலை பாடிவிட்டு தான் சென்றிருக்கிறார்.
எஸ்.பி.பி எனும் சகாப்தம் உடலால் மறைந்தாலும், இசையாய் தினம் மலர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்பதற்கு,
"இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" என்று அவர் பாடிய பாடலே சாட்சி.
நிச்சயமாக சொல்ல முடியும் ஐயா, கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக நீங்கள் பாடி நாங்கள் கேட்ட பாடல்களை விட, இன்னும் கேட்காத பாடல்களே அதிகம் என்று!
அனைத்திற்கும் நன்றி திரு.எஸ்.பி.பி. 🙏
அன்புடன்,
ஜெகன்



