புதன், 19 ஜனவரி, 2022

சென்னைக்கு அருகே இரண்டு எரிமலைகள்!!

15-01-2022 அன்று தெற்கு பசிஃபிக் கடலில் ஏற்பட்ட டோங்கா எரிமலை வெடிப்புச் சம்பவம் உலகையே அதிர வைத்திருக்கிறது! தமிழகத்தில் சென்னை உட்பட சில பகுதிகளிலும் கேரளாவிலும் அன்றிரவு 8:15 மணிக்கு லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ல்லாயிரம் மைல்கள் தொலைவில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பே இங்கு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக சுனாமி ஏற்பட்டு அருகில் உள்ள தீவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டன.

டோங்கா எரிமலை வெடிப்பின் விண்வெளிப் புகைப்படம்

ஆனால், சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளது. கல்பாக்கத்தில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் ஒரு எரிமலை உறங்கிக்கொண்டிருக்கிறது! அது 265 ஆண்டுகளுக்கு முன்பு (1757-ல்) வெடித்திருக்கிறது.

புவி வெப்பமயமாதலால் பூமியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருவதால், இதுபோன்ற இயற்கைச் சீற்ற நிகழ்வுகள் சமீபக் காலமாக அதிகமாகவும் பெரிய அளவிலும் நடைபெறுகின்றன. இதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்றால், இல்லை என்பதே உண்மை. உதாரணமாக, 4 மணி நேரம் மழைப் பொழிந்தாலே இங்கு வெள்ளம் பெருக்கிடுத்து ஓடுவதைப் பார்க்கிறோம்.

265 ஆண்டுகளாக செயலில் இல்லாமல் அந்த எரிமலை கடலுக்கு அடியில் உறங்கிக் கொண்டிருப்பது நல்லது தான். ஆனால், சமீபத்தில் வெடித்த டோங்கா எரிமலை நமக்கெல்லாம் எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த எரிமலை வெடிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘நாம் வெவ்வேறு நாடுகளாக இருந்தாலும் உலகம் ஒன்று தான் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளதாக’ கூறினர். மேலும், கல்பாக்கம் அருகே கடலுக்கடியில் இருக்கும் எரிமலை செயலில் இல்லாமல் இருப்பதால் நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. அதற்கு மிக அருகில் ஒரு அணு உலை உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!

அணு உலைகள் கடல் அருகே கட்டப்படுவதால் அதில் ஏதாவது விபத்துகள் ஏற்பட்டால் கடலோடு அவை கரைந்துவிடும் என்று பலர் விவாதிப்பது உண்டு. ஆனால், கடலில் இருந்து இதுபோன்றதொரு ஆபத்து நிகழ்ந்தால் என்ன செய்வதென்று யாரிடமாவது பதில் உள்ளதா? இல்லை.

அணு சக்தி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் யுரேனியத்திலிருந்து வெளியேறும் அணுக் கழிவு / யுரேனியக் கழிவால் பெரும் சுற்றுச்சூழல் ஆபத்துகள் உள்ளன. அணு உலை விபத்து ஏற்பட்டால் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் பல மைல்கள் தூரத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் புல் பூண்டு கூட முளைக்காது.

உலகில் இதுவரை ஏற்பட்ட அணு உலை விபத்துகளால் நீர், நிலம், காற்று என எல்லாம் பாழடைந்து அப்பகுதிகளில் வாழும் மக்களும் மிக மோசமான விளைவுகளையே சந்தித்தனர் என்பதே உண்மை. புவிவெப்பமயமாதலால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான சென்னை உள்ளிட்ட நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் பேராபத்து இருக்கும் அதே சமயம் இதுபோன்ற பிரச்சனைகளும் உள்ளன.

எனவே, நம் (உலக நாடுகள்) அனைவரின் முழுக் கவனமும் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தி காலநிலை மாற்றம் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படுத்தாமல் தடுப்பதில் இருக்க வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயமாகும்.

1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவும் கூட புதிதாக அணு உலைகள் அமைக்கும் திட்டங்கள் எதையும் தங்கள் நாட்டில் தொடங்கப்படவில்லை. இது உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணு உலை விபத்துக்கு பிறகு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு கோளாறுகளைக் கொண்டுள்ள கூடங்குளம் அணு உலையை விரிவுபடுத்தும் திட்டங்களை திமுக-வின் ஸ்டாலின் அரசு கொண்டுவரத் திட்டமிடுவது மிகவும் ஆபத்தானது. இதை உடனே திமுக அரசு கைவிட வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரின் ஒருமித்தக் கருத்தும் கோரிக்கையும் ஆகும்.

தங்கள் ஊருக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்று கூட நாட்டின் குடிமக்களால் முடிவு செய்யமுடியாமல் இருப்பது மிக மோசமான சனநாயகத்தையும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை எதுவும் இல்லாமல் நம் ஆட்சியாளர்கள் இருப்பதையும் தான் காட்டுகிறது.

அணு உலைகளின் ஆபத்துகளையும், நம் மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்ய அணு உலைகள் ஏன் தீர்வாக இருக்க முடியாது என்பதையும் ஆதாரங்களுடன் மிகத் தெளிவாக விளக்கும் நூல் இந்த இணைப்பில் - https://gnani.net/puthagam-inner?product_id=169 உள்ளது. அனைவரும் இதைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அந்த இரண்டாவது எரிமலை, கல்பாக்கம் அணுமின் நிலையம் தான்!

 

அன்புடன்,

ஜெகன்