சனி, 22 பிப்ரவரி, 2025

தமிழ்நாட்டின் கல்வி உரிமை மீட்கப்பட வேண்டும்

"கல்வித் துறைக்கு 44,000 கோடி ரூபாய் செலவிடும் தமிழ்நாடு அரசுக்கு 2,152 கோடி ரூபாய் வராதது பிரச்சனையா?" என்று கேள்வி எழுப்புகிறார் அண்ணாமலை. 

சமீபத்தில் அகரம் கல்வி அறக்கட்டளைக்காகப் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து பேசிய நடிகர் சூர்யா சொன்ன ஒரு செய்தி குறிப்பிடத்தக்கது. 

அது, "அகரம் அறக்கட்டளைக்கு கல்வி உதவி நாடி வருடத்திற்குச் சுமார் 10,000 விண்ணப்பங்கள் வருகின்றன. எங்களால் தற்போது 700 விண்ணப்பங்களை மட்டுமே ஏற்கமுடிகிறது. அகரம் தொடங்கிய போதும் 10,000 விண்ணப்பங்கள் வந்தன, அது தொடர்கிறது. கடந்த 20 வருடங்களில் 5,813 முதல் தலைமுறை மாணவர்களுக்குக் கல்வி உதவி வழங்கியுள்ளோம்." என்றார். 

10,000 விண்ணப்பங்களில் 700 உதவிகள் போக இருக்கும் 9,300 மாணவர்களுக்காகத் தான் 2,152 கோடி நிலுவையில் உள்ள உரிமைத் தொகையைக் கேட்கிறோம்.

இவற்றைப் புரிந்துக்கொள்ளும் ஆற்றல் பா.ஜ.க-வினருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. 

"பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு 5,000 கோடி ரூபாய் இழப்பு" என ஒன்றிய கல்வி அமைச்சர் கூறியுள்ளார். 

புதிய கல்விக் கொள்கை என்பது வெறும் மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல. அதில் கல்வியைச் சுமையாக்கும் விதமாக 3ம், 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் முறை உள்ளது. 

இந்திய உயர்கல்வி சேர்க்கையின் எண்ணிக்கையை 2035ம் ஆண்டுக்குள் 50% ஆக உயர்த்த புதிய கல்விக் கொள்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இலக்கை 2019ம் ஆண்டே தமிழ்நாடு அடைந்துவிட்டது. 

அத்துடன், மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வைப் போல், அனைத்துக் கல்விக்கும் CUET தேர்வைப் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. 

இந்தியாவின் மருத்துவத் தலைநகராகச் சென்னை திகழ்கிறது. இங்கு தரமான மற்றும் கட்டுப்படியான விலையில் (பிற நகரங்களை ஒப்பிடுகையில்) மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்பது தமிழ்நாட்டில் உள்ளது. இதைச் சிதைக்கும் திட்டமாகவே நீட் தேர்வு இருந்து வருகிறது. தற்போது 50% இருக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கையை CUET நுழைவுத்தேர்வு மூலம் கீழே இழுக்கும் செயலை ஒன்றிய பா.ஜ.க அரசு செய்ய முயல்கிறது. 

கடந்த 60 வருடங்களாக உருவாக்கிய  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பை, பின்னுக்கு இழுக்கும் செயலை ஒன்றிய அரசு செய்து வருகிறது. இதை அனுமதித்தால் தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பு, தமிழக மாணவர்களின் கல்வி உரிமை, சுகாதாரம் என அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்படும். 

எனவே, இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக, கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அதைச் செயல்படுத்த, தமிழ்நாடு அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். 

ஏனெனில், தலைவலி, மூட்டுவலி, கபம் போன்ற பல வியாதிகளுக்கு ஒரே மருந்தைப் பரிந்துரைத்தால் நோய் எப்படிக் குணமாகும்? 

அனைத்திற்கும் ஒரே தீர்வை ஒன்றிய பா.ஜ.க அரசு நடைமுறைப்படுத்த நினைப்பது தவறானது. 

அன்புடன்,
ஜெகன்