புதன், 30 ஏப்ரல், 2025

பயங்கரவாதப் பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடாக இருந்து வருவது உலகிற்கே தெரியும். இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்.

இதைப் பலர் ஏற்க மறுக்கலாம். கோபித்துக் கொள்ளகூட வாய்ப்புள்ளது. ஏன் இஸ்லாமியத் தாக்குதல் என்று மதத்தின் பெயரைக் குறிப்பிடுகிறீர்கள் என்றும், தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்றும், வெறுப்புணர்வைத் தூண்டுகிறீர்கள் என்றும்கூட புலம்பலாம். காவி பயங்கரவாதம் என்ற சொல்லாடல் இருக்கும்போது இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடலும் இருக்கத் தான் செய்யும். ஆங்கிலத்தில் ‘Extremism’ என்ற ஒரு வார்த்தை உள்ளது. அதாவது ஓர் அரசியல் அல்லது மதவாதக் கருத்தைத் தீவிரமாக ஆதரிப்பது தான் அந்தத் தீவிரவாதம்.

இந்தத் தீவிரவாதம் எந்த அளவிற்குச் சென்றுள்ளது என்பதைத் தான் காஷ்மீரில் நாம் கண்டோம். காஷ்மீருக்கு இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவிற்கு பல்வேறு மக்கள் வருகிறார்கள். அவர்களை அதே காஷ்மீரில் உள்ள மக்கள் தான் தங்கள் விடுதிகளில் தங்க வாடகைக்கு அனுமதிக்கிறார்கள், சுற்றுலா பயணிகளை நம்பி உணவகங்கள் நடத்துவம் அதே காஷ்மீரிகள் தான். மேலும் காஷ்மீரின் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் சென்று காண்பிப்பதும் அதே காஷ்மீர் மக்கள் தான். இந்தச் சுற்றுலா சேவைகளைச் செய்து வரும் காஷ்மீரின் பெரும்பாலான மக்கள் இஸ்லாம் மதத்தினர் தான். பிற மாநிலங்களில் இருந்து அங்கு சுற்றுலா செல்லும் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் தான். அங்கு, சுற்றுலா துறையைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரம் இந்த மக்களைச் சார்ந்தே உள்ளது.

அதனால் தான் இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்து ஒரு சுற்றுலா தொழிலாளி கூறுகையில் “பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் உறவினர்கள் போல். அவர்கள் தான் எங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தீவிரவாதிகள் மதத்தின் பெயரால் சுற்றுலா பயணிகளை இந்துக்கள்-இஸ்லாமியர்கள் என இரண்டாகப் பிரித்து குரான் வரிகளைச் சொல்லச் சொல்லி கேட்டு, அப்படிச் சொல்பவர்களை விட்டுவிட்டு, சொல்லாதவர்களை இந்துவா என அடையாளம் கண்டு நெத்திப்பொட்டில் துப்பாக்கி வைத்துச் சுட்டுக் கொன்றுள்ளனர். இத்தகைய ஒரு கொடூரச் சம்பவம் நிகழும் வேளையில் தான் அங்கிருந்த குதிரை சவாரி ஓட்டுனரான சையத் ஆதில் ஹுசைன் ஷா அந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மதத் தீவிரவாதிகளிடம் இருந்த துப்பாக்கியைப் பறிக்கச் சென்றுள்ளார். அதனால் அவரையும் அந்தத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆதில் ஒரு இஸ்லாமியர் தான், ஆனால் அவரிடம் மதம் கடந்த மனிதம் இருந்துள்ளது. ஆதிலிடம் மட்டுமல்ல, அவரைப் போன்ற பல காஷ்மீரிகளுக்கும் தங்களை நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணம் இருந்துள்ளது. அதனால் பல சுற்றுலா பயணிகளைப் காப்பாற்றியுள்ளனர்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்கள் வீட்டிற்கு ஒரு விருந்தாளி தன் குடும்பத்துடன் வருகிறார். அவர் உங்கள் வியாபாரத்திற்காக உங்களுக்குப் பண உதவி செய்துள்ளார். உங்கள் வியாபாரமும் அமோகமாக உள்ளது. நீங்கள் அவருக்கு விருந்து பரிமாறிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஒரு நான்கு பேர் கொண்ட கும்பல் உங்கள் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்து உங்கள் விருந்தாளியை உங்கள் கண்முன்னே வெட்டிச் சாய்க்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? தடுக்க முயல்வீர்கள். உங்களுக்கும் சில வெட்டுக் காயங்கள் விழலாம் அல்லது உங்கள் உயிரேகூட போகலாம். இந்தச் சம்பவம் நடந்த பிறகு உங்கள் மனம் எத்தனை வேதனைப்படும். உங்களுக்குப் பேருதவி செய்த அந்த வேண்டப்பட்டவரை உங்கள் வீட்டில் உங்கள் கண் முன் வைத்தே கொன்றுள்ளார்கள். இனி உங்களால் அந்தத் தொழிலை நிம்மதியாக நடத்த முடியுமா? காலம் தான் மருந்து.

எனினும், ஒரு மிகவும் அழகான இயங்கியல் நடந்து கொண்டிருக்கிறது. அதைச் சிதைக்க எப்படி ஒருவருக்கு மனம் வரும்?

ஆனால், இதையே தொழிலாக வைத்துள்ளது ஒரு நாடு. அது தான் பயங்கரவாதப் பாகிஸ்தான்!

பஹல்காமில் நடந்த தாக்குதலில் நான்கு முதல் ஆறு தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் சொல்கின்றன. இதில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஹஷிம் முசா என்கிற சுலைமான் மற்றும் அலி பாய். இந்தத் தாக்குதலை வழிநடத்திச் செயல்படுத்தியது, முன்னாள் பாகிஸ்தான் ராணுவ வீரனாகவும் பிறகு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் படைப் பிரிவினராகவும் இருந்த ஹஷிம் முசா என்பவன். இவன் இந்தத் தாக்குதல் மட்டுமின்றி இதற்கு முன்பு காஷ்மீரில் நடந்த ககன்கிர் மற்றும் புடா பத்ரி ஆகிய இடங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களிலும் ஈடுபட்டுள்ளான். இந்தத் தாக்குதல்களில் பாகிஸ்தானின் உளவுப்பிரிவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-ன் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

உலக அரங்கில் பாகிஸ்தான் ஒரு Rogue Nation – பயங்கரவாத நாடு. “இத்தகைய தீவிரவாதச் செயல்களை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்காக மூன்று தசாப்தங்களாகச் செய்து வருகிறோம்” என்று பயங்கரவாதப் பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஸ்கை நியூஸ் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானில் ஏற்கெனவே பல உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளன. அவை, பலூஜிஸ்தான் விடுதலைப் போராட்டம், பெருநிறுவனமயமாக்கப்படும் விவசாயத்திற்கு எதிராக ஏப்ரல் 14ம் தேதி சிந்து மாகாணம் முழுவதும் நடந்த மக்கள் போராட்டம். 2022க்குப் பிறகான அரசியல் நிலையற்ற தன்மையும் அதன் பிறகான பொருளாதார நெருக்கடி சூழலும். கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தின் மக்கள் தங்கள் நிலங்களையும் இயற்கை வளங்களையும் பாகிஸ்தான் அரசு கொள்ளை அடிப்பதாகப் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கைபர் பக்துன்க்வா மாகாணம் வழியாக ஆஃப்கானிஸ்தான் போராளிகள் பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.

ஆக, பாகிஸ்தான் அரசுக்குப் பல முனைகளில் பிரச்சனைகள் இருக்கிறது. இவற்றை மழுங்கடிக்க வேண்டும் என்றால் இந்தியாவிற்கு எதிராகத் தன் மக்களைத் திசைத்திருப்ப அவர்கள் கையில் எடுத்த அஸ்திரம் தான் பஹல்காம் தாக்குதல்.

ஆனால், அந்த அஸ்திரமும் பாகிஸ்தானுக்கு வேலை செய்யவில்லை. தங்களைப் பகடைக்காயாகப் பாகிஸ்தான் அரசு பயன்படுத்துவதை உணர்ந்த பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 4,500 பேரும், 250 இராணுவ அதிகாரிகளும் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

குறிப்பாக, பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் சில உயர் அதிகாரிகள் பயந்துகொண்டு தங்கள் குடும்பத்தினரை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குத் தனி விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளனர் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்களின் நாட்டுப்பற்று சந்தி சிரிக்கிறது. 

பாகிஸ்தான் அரசு ஒரு பயங்கரவாத அரசு மட்டுமல்ல அது ஒரு தோல்வியடைந்த அரசு என்பதற்கு இவையே ஆதாரங்கள்.

பாகிஸ்தான் மக்கள் விழித்தெழ வேண்டும். இராணுவ ஆட்சி மக்களாட்சியாக மாற வேண்டும். 

இத்தகைய தீவிரவாதச் செயல்களில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதால், பணமோசடி மற்றும் தீவிரவாத நிதியளித்தல் ஆகிய நடவடிக்கைகளில் அந்நாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF – Financial Action Task Force) என்ற சர்வதேச அமைப்பின் கருப்புப் பட்டியலில் மூன்று முறை பாகிஸ்தான் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறை நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கருப்புப் பட்டியலில் சேர்ப்பதுடன் ஐ.நா பாதுகாப்பு சபை மூலம் பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடையையும் விதிக்க வேண்டும். அப்போது தான் பாகிஸ்தான் அரசு தன் அடாவடித்தனங்களை நிறுத்தும்.

தற்போது இந்தியா தரப்பில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியமான நகர்வு. இது பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்திருக்கும் ‘நீர் யுத்தம்’. சிந்து நதியில் இருந்து 80% தண்ணீரைப் பாகிஸ்தான் பெற்று வருகிறது. பாகிஸ்தானின் 80% விவசாய நிலம் சிந்து நதி நீரை நம்பியே உள்ளது. அதில் 90% நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது. 1960ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே போடப்பட்ட இந்த ஒப்பந்தம் இந்நாடுகளுக்கு இடையே நடந்த நான்கு யுத்தங்களின் போதும்கூட நிறுத்தப்படவில்லை.

ஆனால், தற்போது பாகிஸ்தான் நடத்தியுள்ள தாக்குதல் என்பது பயங்கரவாதத்தின் உச்சம். இந்தியாவின் பல்வேறு மாநிலத்தின் சாமானிய மக்கள் கூடும் ஓர் இடத்தில் ஒவ்வொருவரையும் மதத்தின் அடிப்படையில் அவர்களின் குடும்பத்தினர் கண் முன்னே தலையில் சுட்டுக் கொன்றதும், இதை உங்கள் பிரதமரிடம் போய் சொல் எனச் சொல்வதும் கோழைத்தனமான செயல். இது ஒட்டுமொத்த இந்தியா மீதும் தொடுத்துள்ள தாக்குதல். பாகிஸ்தானுக்கு இந்தியாவிடம் முரண்கள் இருந்தால் வன்முறை அல்லாத அரசியல் நகர்வுகள் மூலம் முயன்றிருக்கலாம் அல்லது இந்திய இராணுவத்திடம் முயன்றிருக்கலாம். ஆனால், பொது மக்கள் மீதான வன்முறையையும், மதத்தையும் தான் பாகிஸ்தான் கையில் எடுக்கும் என்றால் பாகிஸ்தான் தோல்வியைத் தான் சந்திக்கும். அதுவே தற்போதைய பாகிஸ்தானின் நிலை. பாகிஸ்தான் ஒரு மதவாத நாடு. அதேபோல் இனவாதத்தால் இலங்கை யுத்தத்தில் பல தசாப்தங்களைக் கழித்தது. இறுதியில் 2022ல் திவாலாகி நின்றது. இந்தியாவையும் மதவாத நாடாக்க முயற்சிகள் நடக்கிறது. உஷார்!

காஷ்மீரில் சுமார் 2,500 பேர் வரை கூடக்கூடிய ஒரு முக்கியமான சுற்றுலா தளத்தில் காவலர்கள்/இராணுவத்தினரைப் போடாமல் விட்டது அரசுகளின் பொறுப்பு தான்.

குறிப்பாக, இதற்கு முன்பு காஷ்மீரில் நடந்த இரண்டு தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஹஷிம் முசாவை இத்தனை நாட்களாகப் பிடிக்காமல் விட்டது உளவுத்துறையின் தோல்வியே. ஏனெனில், அவன் காட்டுப்பகுதிக்குள் எங்கும் ஒளிந்திருந்தான் என்றால் இதை உளவுத்துறை மறுக்கலாம். ஆனால், ஏப்ரல் 18ம் தேதி புனேவில் இருந்து காஷ்மீருக்குத் தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ஒருவர் ஒரு சுற்றுலா தளத்தில் தன் குழந்தையைக் காணொளி எடுக்கும்போது அந்தக் குழந்தைக்குப் பின்னால் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஹஷிம் முசா உள்ளிட்ட இரண்டு தீவிரவாதிகள் மிகவும் சாதாரணமாக நடந்து செல்வது பதிவாகியுள்ளது. இவ்வளவு நாட்களாக ஏன் ஹஷிமைப் பாதுகாப்புத் துறை பிடிக்கத் தவறியது என்பதற்கு உளவுத்துறை பொறுப்பேற்க வேண்டும். 

பெரும்பாலான இந்தியர்கள் எளியவர்களே. அவர்களால் சுவிட்சர்லாந்து செல்ல முடியுமா என்று தெரியாது. அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பெரும் ஆசையாக இந்தியாவின் சுவிட்சர்லாந்தாகத் திகழும் ஜம்மு-காஷ்மீர் தான் உள்ளது. சுற்றுலா துறை மூலம் அம்மாநிலத்திற்கு ஆண்டுக்கு சுமார் 12,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம் 2.5 லட்சம் கஷ்மீரிகள் வரை பலனடைந்து வந்தனர். இப்போது அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியே! பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 87ல் 48 சுற்றுலா தளங்கள் அங்கு மூடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் மக்கள் மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது. சிறு வயதில் கிரிக்கெட் பார்க்கும்போது பாகிஸ்தானுக்கு எதிராக எல்லோரைப் போலவும் வெறித்தனமாகவே இருந்தேன். ஆனால், அதே கிரிக்கெட் ஒரு விளையாட்டு எனும் போது பாகிஸ்தானைச் சேர்ந்த சில ஆட்டக்காரர்களையும் எனக்கு பிடிக்கும். ஆனால், போரில் அதற்கான வாய்ப்பு கிடையாதே!



பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மனிதர்களுக்கு எனது அஞ்சலிகள்.

அன்புடன்,

ஜெகன்