வியாழன், 15 மே, 2025

பாகிஸ்தான் ஏன் தோல்வியைக் கொண்டாடியது?

ஒரு மோதலில் வெற்றி பெற்ற நாடு கொண்டாடுவதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், தோல்வி அடைந்த நாடு கொண்டாடினால் என்ன அர்த்தம்?

பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அனுப்பிய பாகிஸ்தானின் ரேடார்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அத்துடன் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசமான சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய எச்.க்யூ-9 (HQ-9) மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கேள்விக்குள்ளானது.

மேலும் துருக்கியில் இருந்து பாகிஸ்தான் வாங்கிய டிரோன்களின் கிடங்கு அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் இராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தாக்குதல்கள் நடந்தன. பாகிஸ்தானில் உள்ள 30 விமானப்படை தளங்களில் 11 விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட பல நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த 11 விமானப்படை தளங்களில் அணு ஆயுதப் பாதுகாப்புத் தளமான நூர் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, பாகிஸ்தானின் அணு ஆயுதத் தளமான கிரானா மலைப்பகுதியில் உள்ள சர்கோதா விமானப்படை தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அணு விபத்துக்கான அவசரக்கால விமானமான பி-350 .எம்.எஸ் (B-350 AMS) மே 10ம் தேதி பாகிஸ்தானுக்கு வந்ததாகச் செய்திகள் வருகின்றன. அதேபோல் எகிப்தின் EGY1916 விமானம் பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. எகிப்தின் நைல் நதியில் போரான் கனிமம் உள்ளது. இது அணுக்கசிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானங்கள் பாகிஸ்தான் வந்ததற்கான ஆதாரம், ஃபிளைட்ரேடார் (Flightradar24) என்ற சர்வதேச விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு இணையதளம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதை ஆய்வு செய்யவே அந்த விமானம் அங்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து அமெரிக்காவும் மௌனம் கலைக்கவில்லை.

அன்று காலை தான் ‘புன்யன் அல்-மர்சூஸ்’ என்ற பெயரில் இந்தியாவிற்கு எதிரான ஆப்பரேஷனைப் பாகிஸ்தான் அறிவித்தது. அதற்கு முந்தைய நாள் உலக நாடுகளின் பேராதரவுடன் ஒரு பில்லியன் டாலர் கடனை சர்வதேச நாணய நிதியம் (IMF) பயங்கரவாதப் பாகிஸ்தானுக்கு வழங்கியது.

தே மே 10ம் தேதி தான் பாகிஸ்தானின் இராணுவ அதிகாரிகள் இந்தியாவைத் தொடர்புகொண்டு போர் நிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்கின்றனர். இந்தியாவும் அந்த அழைப்பை ஏற்கிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது.

அதற்கு முன்பாக நடந்த சம்பவங்களின் புள்ளிகளை இணைத்தால் என்ன நடந்திருக்கும் என்பது புரியும். குறிப்பாக, போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்தேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பதற்கு 24 மணிநேரம் முன்பு தான், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் போர் எங்களுக்கு சம்மந்தம் இல்லாதது என்றார் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்.

ஆனால், போர் நிறுத்தம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் இந்தியாவின் எல்லையோர மாநிலங்கள் மீது டிரோன் தாக்குதல்களைப் பாகிஸ்தான் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதுவே பாகிஸ்தான்.

ஒரு நாடு தனது வான் பாதுகாப்பை இழந்து, எதிரி நாட்டைத் தாக்க முடியாமல் திணறிக்கொண்டு, தன் நாடு பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும்போது, பேராபத்து ஏற்படும் அபாயமான சூழலில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் அது அந்த நாட்டுக்கு "தப்பிச்சோம்டா சாமி" என்ற பெருமூச்சைத் தருமே தவிர சோகத்தைக் ஏற்படுத்தாது. இதையே பாகிஸ்தானிடம் பார்க்க முடிகிறது. ஆனால், பாகிஸ்தானின் கை போரில் உயர்ந்து, இந்தியா போரை நிறுத்த அழைத்தது போன்ற பிம்பம் உருவாக்கப்படுவது தான் கேலிக்கூத்து.

பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவைப் போரில் வெல்ல முடியாது. பாகிஸ்தான் ஒரேயொரு நாடு. இந்தியா 28 நாடுகளின் ஒன்றியம். இந்தியா பாகிஸ்தானைச் சீண்டவும் இல்லை. பாகிஸ்தான் தான் முதலில் பஹல்காமில் இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதலை ஏவியது.

பாகிஸ்தான், தீவிரவாதிகளின் கூடாரமாக இருப்பது அதன் மீது ஏற்பட்டிருக்கும் துரு போன்றது. அது அந்நாட்டிற்கும் நல்லதல்ல, உலகிற்கும் நல்லதல்ல. மேற்குலகமும் சீனாவும் தை விரும்பலாம். ஆனால், இந்தியா இனி ஒருபோதும் பயங்கரவாதத்தைச் சகித்துக்கொள்ளாது.

ஆப்பரேஷன் சிந்தூர்என்பது தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கை.

ஆப்பரேஷன் சிந்தூர் என்பது போர் தொடங்கும் முன்பு நடந்த ஒரு மோதல் ஒத்திகை தான். போர் நடந்தால் என்ன நடக்கும் என்பதை அவரவர் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ குறித்து பிரதமர் மோடி நிகழ்த்திய உரை இந்தியாவின் நிலைபாட்டை உலகிற்குச் சொல்லும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆப்பரேஷன் சிந்தூர் இடைநிறுத்தம் தான் செய்யப்பட்டுள்ளது, முடிந்துவிடவில்லை.

பாகிஸ்தான் என்ற நாட்டிற்காக அங்கு இராணுவம் இயங்கவில்லை. பாகிஸ்தான் இராணுவத்திற்காகத் தான் அந்த நாடே இயக்கப்படுகிறது. ஏகப்பட்ட நிறுவனங்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் கீழ் செயல்படுகின்றன.

இவைகூட அந்த நாட்டின் பிரச்சனை என்று சொல்லலாம். ஆனால், தீவிரவாதத்தை வளர்த்தெடுப்பதும் பாகிஸ்தான் இராணுவத்தின் ஒரு தொழிலாக இருப்பது தான் இந்தப் பிராந்தியத்திற்கும் உலகிற்கும் மிகவும் ஆபத்தானது.

போர் நிறுத்தம் அறிவித்து 2 மணி நேரத்தில் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்த பாகிஸ்தான், அடுத்த சில நாட்களும் டிரோன்களை அத்துமீறி இந்திய வான் பகுதிக்குள் பறக்கவிட்டது.

தற்போது பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாண மக்கள் பாகிஸ்தானில் இருந்து தங்கள் பகுதியைத் தனி நாடாக அறிவித்துள்ளனர். பாகிஸ்தானின் போலி முகத்திரையைக் கிழித்து ஓர் அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அதில் தெற்காசியப் பிராந்தியத்தில் பாகிஸ்தான் என்ற நாடு இருப்பதன் ஆபத்து குறித்து துல்லியமாக விவரித்துள்ளனர்.


பயங்கரவாத அரசின் பிடியில் இருந்து விடுதலையை நோக்கி பயணிக்கும் பலூசிஸ்தான் மக்களே வாழ்த்துகள்.

அன்புடன்,

ஜெகன்