வியாழன், 11 செப்டம்பர், 2025

மனிதர்களும் நாய்களும்

ஒரு வழியாக தெரு நாய்கள் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் ஒரு தீர்வு கிடைத்துள்ளது.

நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு இன்று நேற்று தொடங்கியது அல்ல. விவசாயம் தொடங்குவதற்கு முன்பாகவே வேட்டைச் சமூகமாக மனிதன் இருந்தபோதிலிருந்தே ஓநாய்களுடனான உறவு மனிதனுக்கு இருந்துள்ளது.

சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பாக மனித கல்லறையில் மனிதனுடன் புதைக்கப்பட்ட பான்-ஓபர்காசல் (Bonn Oberkassel dog) என்ற நாய் இனத்தின் எச்சம் 1914ம் ஆண்டு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவைக் காட்டுகிறது. இத்தகைய நிகழ்வு நடந்த காலம் தான் மிகவும் முக்கியமானதுஅதாவது, பிளைஸ்டோசீன் காலம் (Pleistocene). அது பனிக்காலத்தைக் குறிக்கிறது. இன்றைய மனிதன் (ஹோமோ சேபியன்ஸ் – Homo Sapiens) பரிணாம வளர்ச்சியடைந்த காலமும் அதுவே. அதேபோல் யானைகளின் மூதாதைகளான கம்பளி யானைகள் போன்ற உயிரினங்கள் வாழ்ந்து அழிந்த காலமும் அதுவே. அந்தக் காலத்தில் தான் மனித சமூகத்துடன் வாழ்ந்த ஓநாய்கள் இனம் பரிணாம வளர்ச்சி டைந்து இன்றைய நாய்களாக உருமாறுகின்றன.

நாய்களுடனான எனது அனுபவங்கள் பல.. 

சிறு வயதில் (சுமார் 4-5 வயது இருக்கும்) வீட்டில் வளர்க்க நாய் வாங்க சென்றபோது நாய் குட்டிகளைக் காட்டினார் அந்த உரிமையாளர். அப்போது அந்தக் குட்டியின் தாய் என்று ஒரு பெரிய நாயைக் கூட்டி வந்தார்கள். அது என்னைவிட உயரமாகவும் பெரிதாகவும் இருந்தது.  அதுவே நாய்களுடனான எனது முதல் அனுபவம்.

அந்த நாய் குட்டிகளில் ஒன்றை வீட்டிற்கு வாங்கி வந்தோம். அந்தக் குட்டி நாய்க்கு ரோசி எனப் பெயரிட்டு சில காலம் வளர்த்து வந்தோம். அதுவொரு கருப்பு டாபர்மேன் நாய். முதல் நாள் எங்கள் வீட்டிற்குள் வந்தபோது மொசைக் தரையில் நடக்க முடியாமல் அந்த நாய் குட்டி வழுக்கி வழுக்கி விழுந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. 

 பிறகு மோனிகா என்ற ஒரு அல்சேஷன்/ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாயைச் சில மாதம் வளர்த்து வந்தோம். தினமும் காலையில் எங்களை எழுப்ப அதைப் படுக்கை மீது ஏற்றிவிடுவார் என் அம்மா. அது என முகத்தை நக்கிவிடும். அப்படித் தான் தூக்கம் களைந்து எழுந்துகொள்வோம். இவ்விரண்டு நாய்களையும் முழுதாக வளர்க்கவில்லை. மிகக் குறைந்த காலம் தான் எங்களுடன் அவை இருந்தன. ஆனால், இனிமையான அனுபவமாக அவை அமைந்தன. 

தெரு நாய்கள் நம் நாட்டு இன நாய்கள். ப்ளூ கிராஸிற்குச் சென்றால் பல நாய் குட்டிகளைப் பார்க்கலாம். அங்குள்ள படிவத்தை நிரப்பி கையெழுத்திட்டு நமக்கு விருப்பமான தொகையை நன்கொடையாக வழங்கி நாயைத் தத்தெடுத்துக்கொள்ளலாம். அப்படி ஒருமுறை லூசி என்ற நாயைத் தத்தெடுத்தேன். அதற்கு உடம்பு முடியாமல் போனதால் ஒரே நாளில் திருப்பியளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது ப்ளூ கிராஸில் நாய்களைத் தத்தெடுக்க வேண்டும் என்றால் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 10 மணிக்கு சென்னை வேளச்சேரி ப்ளூ கிராஸிற்குச் சென்றால் நாய் உரிமையாளர்கள் வருவார்கள். அவர்களிடம் நாய்களைத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.

 நாய்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவற்றை வளர்ப்பதும் பராமரிப்பதும் கடினமான காரியம் என்பதாலும் வீட்டில் ஒத்துழைப்பு/அனுமதி வழங்காததாலும் வளர்ப்பதில்லை. காலம் அமையும்போது நிச்சயம் வளர்ப்பேன். 

தெரு நாய்கள் பிரச்சனை வந்த பிறகு நாய்கள் வளர்ப்பின் அவசியத்தை உணர்ந்து ஒரு நாயை வளர்க்கலாம் என்று முடிவெடுத்து வீட்டின் உரிமையாளரிடம் கேட்டேன். அவர் தனது சட்டையைத் தூக்கிக் காண்பித்து தனது வயிற்றில் வாங்கிய நாய் கடியைக் காண்பித்து மறுத்துவிட்டார். அதற்கு மேல் அவரிடம் ஒன்றும் பேச முடியவில்லை. 

நாய்களுடனான எனது அனுபவம் எப்போதும் இனிமையானதாக மட்டுமே இருந்ததில்லை. நாயிடம் கடி வாங்கியதில்லை என்றாலும் பல முறை நாய் கடியில் இருந்து தப்பித்திருக்கிறேன் என்பதே உண்மை.

சாலையில் செல்லும் நாய்கள் வாகனங்களைத் துரத்துவதற்கான முக்கியக் காரணம் அப்போது அவற்றுக்குத் தனது இறையைத் துரத்திச் செல்ல வேண்டும் என்ற உள்ளுணர்வு வேலை செய்ய ஆரம்பிக்கும். அதனால் அவை பின்னால் வருகின்றன.

இரவு நேரங்களிலும் அதிகாலை வேளைகளிலும் சாலைகளில் எனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது திடீரென சாலைகளில் உள்ள நாய்கள் குரைத்தபடி வெறியுடன் எனது வண்டியைத் துரத்திக்கொண்டே பின்னால் ஓடி வரும். அந்தச் சில வினாடிகள் பதைபதைப்பாகவே இருக்கும். ஆனால், அப்படி அவை வேகமாக துரத்தும்போது பதற்றமடைந்து மேலும் வேகமாக வண்டியை ஓட்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாவதைத் தவிர்க்க ஒரு சிறந்த வழி ஒன்று உண்டு. அதாவது, நாய்கள் துரத்தும்போது பயந்து ஓடினால் அவை மேலும் துரத்தும். அதற்கு பதிலாக நான் எனது வண்டியை உடனே சடன் பிரேக் போட்டு நிறுத்தி விடுவேன். உடனே நாய்களும் துரத்துவதை நிறுத்திவிடும். ‘ஏய்என்று நாய்களைப் பார்த்து சத்தமிட்டால் அவை அடங்கும். இல்லையேல் வண்டியை அவற்றை நோக்கி செலுத்தினால் நிச்சயம் பயந்து ஓடிவிடும். இதன் உளவியல் ஒன்று தான், நாம் ஓடினால் பயப்படுகிறார்கள் என்று அது துரத்த ஆரம்பிக்கும். ஆனால், நாம் அதை நோக்கி சத்தமிட்டாலோ அதைத் தாக்குவதுபோல் சென்றாலோ அது பயத்தால் ஓடிவிடும். சாலையில் நடந்து செல்லும்போது நாய்கள் குரைத்தால் சாலையில் குனிந்து கல்லை எடுப்பதுபோல் செய்கை செய்தாலே நாய்கள் ஓடிவிடும்.

ஆனால், குழந்தைகளால் நிச்சயம் நாய்களைக் கையாள முடியாது. இந்தியாவில் நாய் கடிக்கு ஆளாகும் நபர்கள் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே. எனவே, பெற்றோர்கள் சாலைகளில் குழந்தைகளைத் தனியாக விடுவதைத் தவிர்க்க வேண்டும். தெரு நாய்களை விலங்கு நல ஆர்வலர்கள் தத்தெடுத்து வளர்க்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் நாய்கள் குட்டிகளைப் போடும்போது அவற்றை அங்குள்ளவர்கள் தத்தெடுத்து வளர்க்க வேண்டும். இதன்மூலம் சாலைகளில் ஆதரவற்று கிடக்கும் நாய்களின் எண்ணிக்கை குறையும் மற்றும் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல்கள் குறையும். நாய்களைப் போன்ற நன்றியுள்ள விலங்கும் உலகில் வேறில்லை.

நாங்கள் தங்கியிருந்த ஒரு தெருவில் பல தெருநாய்கள் இருந்தன. புதிதாக வந்த ஒரு வெறி பிடித்த நாய் அங்கிருந்த மற்ற நாய்களைக் கடித்துக்கொண்டும் தொந்தரவு செய்துகொண்டும் இருந்தது. அதற்கு ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்த நான், மாநகராட்சியிடம் புகார் கொடுத்த பின் அந்தத் தெருவில் இருந்து அந்த நாயை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள்.

நாய்கள் வளர்க்க வேண்டும் என்றால் வெளிநாட்டு நாய்களைத் தான் வளர்க்க வேண்டும் என்றில்லை. நம் நாட்டு இன நாய்களையும் வளர்க்கலாம். அவையே உள்நாட்டின் தட்ப வெப்பத்திற்கு ஏற்ப வாழும் தகுதியுடையவை. தெரு நாய்களுக்கு உணவு வைப்பவர்களை ஏமாளிகள் என்றும், முட்டாள்கள் என்றும், அவர்கள் தெருநாய்களுக்குப் பின்னால் பெரிய வணிகம் இருப்பதை உணராதவர்கள் என்றும் சொல்லும் அறிவுஜீவிகள், வெளிநாட்டு நாய் வளர்ப்புக்குப் பின்னால் உள்ள வணிகத்தைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? அதன் பின்னால் வணிகமும் வளர்ப்பவர்களிடம் முட்டாள்தனமும் இல்லையா? வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் கடிப்பது உண்டு. தெருநாய்களைவிட வளர்ப்பு நாய்களே அதிகம் கடிப்பதாகத் தகவல்கள் உள்ளன. நாய்கள் வளர்க்க வேண்டும் என்பவர்கள் முதலில் உள்நாட்டு நாய்களை வளர்க்க முன் வர வேண்டும். நாய் வளர்ப்பில் கூட பாகுபாடு பார்ப்பவர்கள் விலங்கு நல ஆர்வலர்களே அல்ல.

ஒரு தெருவில் நாய் குட்டி போட்டால் அதை உடனே மாநகராட்சிக்குத் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி அந்த நாய்க்குக் கருத்தடை செய்ய வேண்டும். இதன்மூலம் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அதேபோல் அந்த நாய் குட்டிகளைத் தத்துக்கொடுக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன், நாயைத் தத்தெடுப்பவர்கள் முறையாக அதற்கு தடுப்பூசி போட்டு பராமரிப்பதை மாநகராட்சி/உரிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இவை தெருநாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டிலும் முறையான பராமரிப்பிற்கும் வழி வகுக்கும்.

அதேபோல் நாய் வளர்க்க வேண்டும் என்றால் முதலில் அதற்கான பராமரிப்பு விதிகள், சட்டங்களைப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொண்டு வளர்க்க வேண்டும். நாங்கள் முன்பு இருந்த குடியிருப்பில் நாய் வளர்க்கிறேன் என்ற பெயரில் ஒரு நாயைத் தத்தெடுத்துவிட்டு அதைத் தங்கள் வீட்டில் வைக்காமல் முழு நேரமும் குடியிருப்பில் அவர்கள் வீடு இருந்த தளத்தில் (நாங்களும் அதே தளத்தில் தான் இருந்தோம்) திறந்து விட்டிருந்தது ஒரு குடும்பம். அந்த நாய் எங்கள் தளம் முழுவதும் சிறுநீர் கழித்து நாசம் செய்து வைத்துவிடும். எங்கள் தளமே ப்ளூ கிராஸ் போன்ற தோற்றம் அளிக்கும். பல முறை சொல்லியும் திருந்தாத ஜென்மங்களாக அவை இருந்தன. இத்தனைக்கும் அவர்கள் குடும்பத்தினர் வழக்கறிஞர்கள் என்பது இன்னொரு கொடுமை. 

நாய் கடியால் ஏற்படும் இறப்புகளைத் தவிர்க்க, நாய்களுக்கான தடுப்பூசிகளை அரசாங்கம் செலுத்த வேண்டும். நாய் கடி ஏற்பட்டால் உடனே சிகிச்சை எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அத்தகைய சிகிச்சைக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இவற்றைச் செய்தால் தான் 2030க்குள் வெறிநாய்க்கடி நோய்/ராபிஸ் நோய் இறப்புகளைப் பூஜ்ஜியமாக்க முடியும்.

நாய்களும் மனிதர்களும் சமூக விலங்குகள். இரண்டும் வரலாற்றில் ஒன்றிணைந்து வாழ்ந்த ஆவணங்கள் உள்ளன. இந்தக் கட்டுரையும் கூட நிகழ்கால நாய்-மனித உறவின் ஓர் ஆவணம் தான்.

மாற்றம் நடக்கிறதா என்று பார்ப்போம்.


அன்புடன்,

ஜெகன் கஜேந்திரன்