தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி இரண்டு வருடங்கள் கூட ஆகவில்லை. அந்தக் கட்சியின் தலைவர் விஜய் போராட்டத்தில் கூட கோஷம் போடாமல் அமைதியாக நிற்பவராக இருக்கிறார். களத்திற்குச் சென்று மக்களைச் சந்திப்பதில்லை. கட்சி தொடங்கும் முன்பு பல விஷயங்களில் மக்களைச் சென்று சந்தித்தவர், கட்சி தொடங்கிய பின் பெரிதாகச் சென்று சந்திக்கவில்லை.
திரைப்படப் படப்பிடிப்பு
முடிந்த பின் அரசியல் கட்சிக்காக ஆறு மாத கால்ஷீட் ஒதுக்கி ரோட் ஷோ நடத்தினார். அது
விபரீதமாக முடிந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகக் கூட சென்று சந்திக்காமல்
அவர்களைத் தன் இடத்திற்கு அழைத்துச் சந்தித்தார். கரூர் சம்பவத்தில் நீதிமன்றத்தை நாடியிருப்பது
மட்டுமே அவர் கட்சி சார்பில் செய்த ஒரே உருப்படியான செயல்.
‘உப்புமா’ கட்சி
என்றால் என்ன? அதற்கு முதலில் ‘உப்புமா’ படம் என்றால் என்ன எனத் தெரிய வேண்டும். உப்புமா
படம் என்பது சினிமா துறையில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதாவது, ஒரு திரைப்படக்குழு
ஒரு படத்தை எடுப்பதாகச் சொல்லி தயாரிப்பாளரிடம் பணத்தைக் கறந்துவிட்டு மோசடி செய்வதாகும்.
இத்தகைய படங்கள் சில நாள்கள் படப்பிடிப்பிலேயே நின்றுவிடும். அதன்பிறகுத் தயாரிப்பாளரும்
பணத்தை ஏமாந்து சென்றுவிடுவார். படமும் வெளிவராது. இதுவே உப்புமா படம்.
விஜய்யின் த.வெ.க-வும்
ஒரு உப்புமா கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. விஜய் எதற்காகக் கட்சி தொடங்கினார்? எல்லாக்
கட்சிகளும் அதிகாரத்திற்கு வர தான் தொடங்கப்படுகின்றன. ஆனால், நிதர்சனம் என்று ஒன்று
உள்ளது. தொடங்கி 2 வருடங்கள் கூட ஆகாத ஒரு கட்சி, கூட்டணியும் ஏற்படுத்தாமல் ஆட்சியைப்
பிடிக்கும் என்றால் எப்படிச் சாத்தியமாகும்? இதுகூட தெரியாமல் கட்சியை நடத்துவதா?
அதிகாரத்தைப் பிடிக்க
வேண்டும் என்றால் முதலில் ஜெயிக்க வேண்டுமே? திமுக, அதிமுக என இரு கட்சிகளுமே கூட்டணி
வைத்து தான் தேர்தலைச் சந்திக்கின்றன. கள எதார்த்தம் இப்படி இருக்கும் பட்சத்தில்,
தனியாக நின்று ஒரு புதிய கட்சியால் எப்படி முதலில் ஜெயிக்க முடியும்?
த.வெ.க தலைவர்
விஜய்யின் தாரக மந்திரம் “2026ல ரெண்டே ரெண்டு பேருக்குள்ள தான் போட்டியே. ஒன்னு த.வெ.க
இன்னொன்னு திமுக” என்பதைத் தான் விஜய் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இது தான் த.வெ.க தலைவர் விஜய் கிண்டும் உப்புமா.
2026ல் த.வெ.க-வின்
நோக்கம் என்ன? அதாவது, “ஒன்னு த.வெ.க இல்லனா திமுகவா?” த.வெ.க வராது என்பது அனைவருக்கும்
தெரியும். பிறகு, திமுகவை எதிர்க்கிறேன் என்பது அர்த்தமற்ற வெற்றுக்கூச்சல் அரசியல்,
மேடை நாடகம். அதுவே த.வெ.க-வை ஓர் உப்புமா கட்சியாகப் பாவிக்கிறது.
அதாவது, திமுக
தோற்க வேண்டும் என்று முழங்குகிறீர்கள். ஆனால், உங்கள் அணி திமுகவைத் தோற்கடிக்கும்
அளவிற்குப் பலமாக இல்லை. பிறகு எப்படி திமுகவைத் தோற்கடிப்பீர்கள் விஜய்? சினிமாவில்
நடிப்பது போல் அரசியல் கால்ஷீட்டில் பஞ்ச் டயலாக்குகளாகப் பேசிவிட்டு தேர்தல் முடிந்த
பின் பெரும்பான்மை(!) பெற்றால் ஆட்சி, இல்லை என்றால் மீண்டும் படப்படிப்பு என்று கிளம்பிவிடுவீர்களா?
இவ்வளவு தான் த.வெ.க-வின் அரசியலா?
கட்சி தொடங்கி
இரண்டு வருடங்களுக்குள் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு நீங்கள் அப்படி என்ன மக்கள்
சேவையைச் செய்துவிட்டீர்கள் விஜய்? எவ்வளவு மக்களைச் சந்தித்துவிட்டீர்கள்? பள்ளியில்
முதல் மதிப்பெண் வாங்குபவர்களுக்குப் பரிசு தருவதெல்லாம் தன்னார்வத் தொண்டு நிறுவனம்
வைத்திருப்பவர்கள் செய்யும் காரியம். தமிழ் நாட்டில் அப்படிப் பல்லாயிரம் தொண்டு நிறுவனங்கள்
உள்ளன. இன்று பள்ளியின் பழைய மாணவர்களே தங்கள் பள்ளிகளை மேம்படுத்துகிறார்கள். ஊர்
மக்களே ஒன்று சேர்ந்து ஏரிகளைத் தூர்வாருகிறார்கள், நீர்நிலைகளைப் புனரமைக்கிறார்கள்.
த.வெ.க கட்சி தற்போது
தேன்நிலவு பருவத்தில் உள்ளது. முதல் தேர்தலில் பெறும் வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தே
கட்சியின் நிலை தீர்மானிக்கப்படும். ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் பல காலம் ஆகும்.
ஆறு மாதத்தில் ஆட்சியைப் பிடிக்க இது என்ன சர்க்கார் திரைப்படமா? முதலில் கட்சியை வளருங்கள்
விஜய். பிறகு ஆட்சியைத் தானாகப் பிடிக்க முடியும்.
திரைத்துறையின்
உச்சத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தது உப்புமா கிண்ட தானா விஜய்?
அன்புடன்,
ஜெகன் கஜேந்திரன்