ஞாயிறு, 15 மார்ச், 2026

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கப்போவது யார்?

2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. கட்சிகளும் தங்கள் கூட்டணிகளை முடிவு செய்துகொண்டும் தேர்தல் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுக் கொண்டும் பரபரப்பாக இருக்கின்றன.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எந்தக் கூட்டணி ஜெயிக்கும்?

ஊடகங்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த கூட்டணி தான் வெல்லும் என்று கருத்துக் கணிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. கருத்துக் கணிப்புகள் தான் உண்மை என்றால், எப்படி அவைகளின் முடிவுகள் வித்தியாசப்படுகின்றன? அதற்கு தேர்தலே நடத்தாமல் கருத்துக் கணிப்பின் முடிவுகளை வைத்தே ஒரு கூட்டணியை ஆட்சியில் அமர்த்தலாமே!

தெண்டமாக எதற்கு 100 கோடி ரூபாய் பணத்தைத் தேர்தல் ஆணையம் செலவு செய்ய வேண்டும்?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் என்பது கடந்த 5 ஆண்டுகளாக திமுகவின் ஆட்சியை வைத்து இந்த ஆட்சி தொடரலாமா இல்லை வேறு ஒரு கட்சியை ஆட்சியில் அமர வைக்கலாமா என்பதற்காக தான்.

அப்படிப் பார்க்கும்போது, கடந்த 5 ஆண்டுகளில் திமுகவின் செயல்பாடுகள் என்னென்ன? அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்களா?

நீட் தேர்வு ஒழிந்துவிட்டதா? அதிமுக ஆட்சியில் இருந்து போகும் முன்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இடஒதுக்கீட்டை உறுதி செய்துவிட்டு சென்றது. அதேபோல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலர் இறந்தனர். இவை இரண்டும் அதிமுக அரசின் முக்கியக் கரும்புள்ளிகளாகப் பார்க்கப்பட்டன. 1990களிலும் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், அப்போதெல்லாம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டது. ஆனால், 2018ல் மூடப்பட்டதற்குப் பிறகு மீண்டும் அந்த ஆலை திறக்கப்படவில்லை. ஆனாலும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவில்லை.

நீட் தேர்வை ரத்து செய்தல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல் போன்றவை திமுக அரசு 2021ல் கொடுத்த சில முக்கியத் தேர்தல் வாக்குறுதிகள். இவற்றை திமுக நிறைவேற்றவில்லை. இவை தவிர, ஆசிரியர்கள் சம ஊதியம் கோரி போராட்டம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் என எண்ணற்ற பிரச்சனைகள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதை எப்படி ஒரு நல்லாட்சி என்று ஏற்க முடியும்?

திமுக ஒரு கொள்கைக் கூட்டணியா? வாரிசு தலைவர்களை வைத்துக்கொண்டு பண்ணையார் கட்சி போல் நடத்திக் கொண்டு சனாதனத்தை ஒழிக்கப் போகிறார்களா? குறைந்தபட்சம் இதுபோன்ற முரண்பாடான கருத்துகளையாவது சொல்லாமல் இருப்பது உத்தமம்.

பாஜக பூச்சாண்டியைக் காட்டியே கடந்த 3 தேர்தல்களை திமுக வென்றுவிட்டது. இதன்மூலம், பாஜகவால் அதிக லாபம் அடைந்த கட்சி திமுக தான் என்பது ஒரு கசப்பான உண்மை. அதற்கு ஒரு மோசமான சம்பவமும் சமீபத்தில் நடந்தது. அது தான் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நிகழ்வு. ஒரு நீதிமன்றம் உத்தரவு கொடுத்துவிட்டால் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும். இரண்டையும் செய்யாமல் இங்குள்ளவர்களின் அமைதியைச் சீர்குலைக்கும் வேலையை திமுக அரசு செய்தது. இதன்மூலம் பிரிவினைவாத அரசியலை திமுக செய்தது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் வலதுசாரி அரசியல் எங்கு தலைதூக்கியபோதும் தமிழ்நாட்டில் அந்தப் பிரச்சனை இல்லை. ஆனால், இப்போது திமுகவின் இந்தச் செயல்கள் அதற்கு வழிவகை செய்துவிடுமோ என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இந்த முறை திமுகவால் திருப்பரங்குன்றம் விஷயத்தில் லாபம் பார்க்க முடியவில்லை.

திமுகவின் இந்தத் திசைதிருப்பல்கள் மூலம் எண்ணற்ற பிரச்சனைகள் பேசுபொருளாவதே இல்லை. இதற்கு ஊடகங்கள் ஒரு முக்கியக் காரணம். ஊடகங்களின் வேலை என்ன? நடக்கும் நிகழ்வுகளை நடுநிலையாக மக்கள் முன் வைப்பது தான். மக்கள் தீர்மானிப்பார்கள். ஆனால், நம்மூரில் இருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் ஒவ்வொரு கட்சியைச் சார்ந்தவையாக உள்ளன. இன்று பிரதான ஊடகங்கள் செய்யத் தவறும் வேலையைச் சமூக ஊடகங்களே இட்டு நிரப்புகின்றன.

அடுத்ததாக, இந்தத் தேர்தலின் X-Factor – அதாவது முக்கியக் காரணியாக இருப்பது நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் த.வெ.க கட்சி. விஜய்க்குப் பெரிய அளவில் இளைஞர்கள் ஆதரவு உள்ளது. ஆனால், விஜய்யின் செயல்பாடு அதற்கு ஏற்றாற்போல் இல்லை என்பதே த.வெ.க-வின் கசப்பான உண்மை. கரூர் கூட்ட நெரிசலில் விஜய்யைப் பார்க்க வந்த 41 பேர் பலியானார்கள். அன்றிரவே விஜய் சென்னைக்குக் கிளம்பி வந்துவிட்டார். இது ஒரு நல்ல தலைமைக்கான பண்பு அல்ல. நான் கூட பல போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். 2018ல் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று தெரிந்தவுடன் என்னால் சென்னையில் இருக்க முடியவில்லை. கிளம்பி தூத்துக்குடிக்கே சென்றுவிட்டேன். அங்கிருந்த பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தேன். 2018ல் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டில் நிறைய போராட்டங்கள் நடந்தன. அப்போது குறிப்பிட்ட ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 80,000 பேர் கைதாகினர். அவர்களுக்கு இருக்கும் அந்தப் போராட்ட குணமாவது த.வெ.க-வினருக்கு இருக்கிறதா என்பது தான் கேள்வி? ஆனால், தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது. விஜய்யின் த.வெ.க-விற்கு உண்மையில் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்.

இவை தவிர முக்கியமாக, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு திமுகவின் ஊழல் கணக்கு இருக்கும் என்று அரசல் புரசலாகப் பேசப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் ஆளுநரிடம் இதுகுறித்த ஆவணத்தைச் சமர்ப்பித்துள்ளார். எனவே, கடந்த 5 ஆண்டுகளில் திமுகவினர் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பணம் சம்பாதித்துவிட்டனர்.

தமிழ்நாட்டில் அரசியலைத் தீர்மானிக்கும் இடத்தில் திரைத்துறையில் இருந்து பலரும் பல காலமாக இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் 2026ல் த.வெ.க-வின் விஜய் இருப்பதாகப் பலராலும் பரவலாகச் சொல்லப்படுகிறது.

இந்த நேரத்தில், மறைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் நடிப்பில் 2006ல் வெளிவந்த ‘மேன் ஆஃப் த இயர்’ (Man of the Year) படத்தில் டாம் டாப்ஸ் என்ற கதாபாத்திரத்தில் அவர் பேசிய வசனம் ஞாபகம் வருகிறது. அந்த வசனமும் அதன் தமிழாக்கமும் பின்வருமாறு:

“Remember this ladies and gentleman: It's an old phrase, basically anonymous, politicians are a lot like diapers, they should be changed frequently, and for the same reasons. Keep that in mind the next time you vote.”

“பெரியோர்களே, தாய்மார்களே: பெயர் அறியப்படாதவர் சொன்ன ஒரு பழைய கூற்று இது. அரசியல்வாதிகள் குழந்தை அணையாடைகள் (டயபர்கள்) போன்றவர்கள். அவர்களை ஒரே காரணத்திற்காக அவ்வப்போது மாற்றிட வேண்டும். அடுத்த முறை வாக்களிக்கும்போது இதை நினைவில் கொள்ளுங்கள்.”

பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்புடன்,

ஜெகன்