வெள்ளி, 27 மார்ச், 2020

கொரோனா!


நாங்கள் உங்களுக்காக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
நீங்கள் எங்களுக்காக வீட்டிலேயே இருங்கள்.”

உலகையே தற்போது உலுக்கி கொண்டிருக்கும் கொள்ளை நோயான கொரோனா வைரஸ் நோயால்(COVID-19) பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் உயிர்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக உலகம் முழுவதும் வேலை பார்த்து வரும் மருத்துவர்களின் கோரிக்கை தான் மேலே குறிப்பிட்டுள்ள அந்த வாசகம். நம் அனைவருக்கும் தான் இந்த வேண்டுகோளை மருத்துவர்கள் முன்வைக்கிறார்கள்.

கொரோனா வைரஸ்(நோய்க்கிருமி) உலகுக்கு புதியது கிடையாது. நமக்கு ஏற்படும் காய்ச்சலில் மூன்றில் ஒன்று கொரோனா வகை வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது தான் என்று குறிப்பிடுகிறார்  கொரோனா வைரஸில் ஆய்வு செய்த டாக்டர் பவித்ரா அவர்கள்.




கொரோனா வகை குடும்பத்தை சேர்ந்த வைரஸ்கள் விலங்களுக்கும் மனிதர்களுக்கும் காய்ச்சலை உருவாக்கக்கூடியது. இவை சாதாரண சளி காய்ச்சல் முதல் தீவிர நோய்களான சார்ஸ்(SARS – Severe Acute Respiratory Syndrome) மற்றும் மேர்ஸ்(MERS – Middle East Respiratory Syndrome) வரை பாதிப்பை உண்டாக்கக்கூடியது.  

தற்போது உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கும் இந்த ‘புதிய’ வகை கொரோனா வைரஸ் நோய்(COVID-19) என்பது முதன்முதலில் சீனாவின் ஹுபேய் மாகாணத்தின் வுஹான் நகரில் டிசம்பர் 2019-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்படும் மக்களில் சுமார் 80% பேர் சுலபமாக குணமடைந்து விடுகிறார்கள். பாதிக்கப்பட்ட ஆறில் ஒருவருக்கு தான் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. வயதானவர்களுக்கும் ஏற்கனவே நாள்ப்பட்ட நோய் உள்ளவர்களுக்கும் தான் இந்த நோய் தீவிரமாக பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறது உலக சுகாதார மையம்(WHO).

தற்போது வரை இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் உலகம் முழுவதும் 200 நாடுகளில்(நாடுகள், பகுதிகள், பிரதேசங்கள்) 4,65,915 பேர். அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21,031 பேர். அதாவது 4.51% இறப்பு. இதை விட கொடிய நோயாக 2003-ல் உருவான சார்ஸ்(SARS) நோய் பார்க்கப்படுகிறது(9.5% இறப்பு). ஆனால் சார்ஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 774 பேர்.




கொரோனா வைரஸ் நோய் பரவலின் தன்மை அதிவேகமாக இருப்பதும், இதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும், இந்த கொள்ளை நோயை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய சவாலாக உலக நாடுகளுக்கு இருக்கிறது. இந்த நோய் உள்ள ஒருவரிடமிருந்து சராசரியாக அது 2.5 நபர்கள் வரை பரவுகிறது. இது சாதாரண பருவ காய்ச்சலை விட இருமடங்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

உலகின் வளர்ந்த நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே இந்த கொரோனா-வை சமாளிக்க போராடி வரும் நிலையில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு இந்த நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானது. 

130 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவலை எப்படி தடுப்பது?

அதற்கு முன் அது எப்படி பரவுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று காற்றில் பரவக்கூடியது. இந்த நோய் உள்ள ஒருவர் தும்மினால் அதில் வெளிப்படும் நுண்ணிய நீர் துளிகளில் இருக்கும் கொரோனா வைரஸ் அருகில் இருப்பவர்கள் மீது, குறிப்பாக அவர்களின் வாய், மூக்கு அல்லது கண்களில் பட்டால் அவர்கள் உடலுக்குள் சென்று அவர்களுக்கும் பரவும்.

பாதிக்கப்பட்டவர் வாயையும் மூக்கையும் மூடாமல் தும்மினால், வெளிப்படும் நுண்ணுயிர்கள் சுற்றுப்புறத்தில் படுவதால், அதை பிறர் தொட்டாலும், அதன் வழியாகவும் பரவும்.

அதை தவிர தும்மிய நபர் தன் உள்ளங்கைகளால் மூடி தும்மிவிட்டு, பிறகு அந்த கையை கழுவாமல் மற்றவர்களுக்கு கை கொடுத்தாலோ, பிற இடங்களில் கை வைத்தாலோ, அவருக்கு கை கொடுத்தவர்களோ, அந்த இடங்களை தங்கள் கைகளால் தொட்டுவர்களோ அவர்கள் கைகளை கழுவாமல் தங்கள் முகத்தில்(வாய், மூக்கு, கண்) கை வைத்தால், அவர்களுக்கும் வைரஸ் பரவும்.  

கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் வழியாக பரவுவதால், அவர்களை தனிமை படுத்துவது அவசியம். இருப்பினும் இந்த நோயின் அறிகுறி ஒருவருக்கு இருப்பது 1 முதல் 14 நாட்களுக்கு பிறகே தெரியும், சராசரியாக 5 நாட்களில் தென்படும் என்று உலக சுகாதார மையம் தற்போதைய கணிப்பின் படி தெரிவிக்கிறது. நோயின் அறிகுறி தெரியாத இந்த நாட்களில் மக்கள் வேறொருவருடன் தொடர்பில் இருக்கும் நேரத்தில் மிக எளிதாக பரவும் சூழல் உள்ளது.

உதாரணமாக ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்ட வெளிநாட்டில் இருந்து டெல்லி விமான நிலையம் வருகிறார். அவர் டெல்லியில் இருந்து டாக்ஸி பிடித்து டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருக்கும் ஒரு உணவகத்தில் சாப்பிட்ட பிறகு ரயிலில் ஏறி இரண்டு நாட்கள் பயணம் செய்து சென்னை சென்டரல் ரயில் நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து மெட்ரோ ரயிலை பிடித்து தனது விட்டிற்கு செல்கிறார். வீட்டிற்கு வந்த ஒரு வாரம் கழித்து அவருக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. மருத்துவமனையில் அவருக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது தெரியவருகிறது.

இப்போது அவர் பயணத்தின் போது டெல்லியில் விமான நிலையத்தில் இறங்கிய பிறகு ஒரு டாக்ஸி ஓட்டுனர், உணவகத்தில் உணவை பரிமாறியவர், பணம் வாங்கியவர், இரயிலில் சக பயணிகள், ஊழியர்கள், சென்னையில் மெட்ரோ ரயிலில் உடன் பயணம் செய்தவர்கள் மற்றும் வீட்டில் தன் குடும்பத்தினர் என பலருடன் தொடர்பில் இருந்திருப்பார்.

இந்த ஒருவரிடமிருந்து பத்து பேருக்கும், பத்து பேரிடமிருந்து நூறு பேருக்கும், அவர்களிடமிருந்து ஆயிரம் பேருக்கும் கொரோனா வைரஸ் நோய் பரவுகிறது. இதுவே சமூக பரவல். கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இந்த சங்கிலி தொடரை அறுப்பது சமூக பரவலை தடுப்பது மிகவும் அவசியம்.




இந்திய ஒன்றிய அரசு மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் சங்கிலி தொடரை அறுப்பதற்கு இது முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.

ஊரடங்கு உத்தரவு என்றாலும், நம் அத்தியாவசிய பெருட்களை வாங்க தேவைக்காக வெளியே செல்ல வேண்டும்.

எனவே, கொரோனா பரவாமல் இருக்க ஐந்து எளிய வழிமுறைகளை உலக சுகாதார மையம் நமக்கு முன் வைக்கிறது. அவை:

கைகள், முழங்கை, முகம், தொலைவு மற்றும் உணர்தல்.
1)      கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி பயன்படுத்தி கழுவுவது. முக்கியமாக வெளியே சென்று வந்தவுடன்!
2)      முழங்கையால் வாயையும் முகத்தையும் மூடிக்கொண்டு தும்முவது/இருமுவது.
3)      முகத்தை கைகளால் தொடுவதை தவிர்ப்பது. குறிப்பாக கண்கள், வாய் மற்றும் மூக்கை தொட வேண்டாம்.
4)      சமூக தொலைவு - மற்றவர்களுடன் ஒரு மீட்டர் தொலைவை உறுதி செய்யவும்.
5)      காய்ச்சலை உணர்ந்தால், விட்டிலேயே இருக்கவும். சுகாதாரத்துறை சொல்வதை கேட்கவும்.

வதந்திகள் 

கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகள் பல தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் இருக்கிறது. எவற்றையும் பார்த்த உடனே நம்பாமல், உலக சுகாதார மையம்(WHO) அல்லது அரசு சுகாதாரத்துறை போன்றவற்றோடு அந்த தகவல்களை மறுஉறுதி செய்த பின் நம்பவோ அடுத்தவர்களுக்கு பகிரவோ செய்யவும்.

பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி ‘சுய ஊரடங்கு’ (Janta Curfew) என்பதை அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை என்று அறிவித்தார். அதேசமயம் அன்று மாலை 5 மணிக்கு அனைவரும் தங்கள் வீட்டு பால்கணியில் அல்லது மொட்டை மாடியில் வந்து நின்று கொரோனாவை ஒழிக்க பணியாற்றுபவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் கைகளை தட்டும்படி சொன்னார்.

அதற்கிடையே, “கொரோனா வைரஸ் 12 மணி நேரம்  தான் சுற்றுசூழலில் இருக்கும். அதன் பின் கொரோனா வைரஸ் அழிந்து விடும்” என்ற ஒரு தவறான செய்தி பரவலாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதை நடிகர் ரஜினிகாந்த் உட்பட உண்மை என்று நம்பி தனது ட்விட்டர் கணக்கில் காணொளியாக பகிர்ந்தார். அந்த பதிவை ட்விட்டர் தவறான தகவல் என்று நீக்கிவிட்டது.

இவற்றின் விளைவு, மார்ச் 22 மாலை 5 மணிக்கு இந்தியாவின் பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஊர்வலமாக தெருக்களில் சென்று கொரோனா அழிந்துவிட்டது என நம்பி கொண்டாட ஆரம்பித்தனர். இத்தகைய கூட்டங்களால் கொரோனா வைரஸின் சமூக பரவல் மிக எளிதாக ஏற்படும். எனவே, பொய் பிரச்சாரங்கள், வதந்திகளை நம்புவது ஆபத்தானது!

கொரோனா வைரஸ் கிருமி அது இருக்கும் மேற்பரப்பையும் அதன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை பொறுத்து, சில மணி நேரம் முதல் பல நாட்கள் வரை உயிருடன் இருக்கும். எனவே கொரோனா வைரஸ் இருக்கும் மேற்பரப்பை கிருமிநாசினி உபயோகித்து துப்புரவு செய்து அதை அழிக்க முடியும்.  

இந்திய பொருளாதாரம்

கொரோனா தொற்றுக்காக அரசு 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்துவிட்டது. 130 கோடி மக்கள் வீட்டிலேயே இருந்தால் நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கப்படும்.


அன்றாடம் வேலைக்கு சென்று மாத சம்பளத்தில் தங்கள் வீட்டு வாடகை, மாத தவணை(EMI) கட்டுபவர்கள், குடும்ப செலவை நடத்துபவர்கள் ஒரு புறம். அன்றாட சம்பளத்துக்கு வேலைக்கு சென்று அன்றைய உணவுக்காக உழைப்பவர்கள் என்று இந்தியாவின் தொழிலாளர்களில் 90% பேர் முறைசாரா தொழில்துறையை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் பசியை போக்குவதும் நிதிச்சுமையை குறைப்பதும் அரசின் கடமை.

விவசாயத்தில் உணவு பொருட்களை தவிர பூக்கள் உள்ளிட்ட இதர பயிர்கள், கால்நடைகள் இறைச்சி என பெரும் அளவில் பாதிக்கும். நாட்டின் முதுகெலும்பான இத்தகைய விவசாயிகளுக்கு கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

தொழில் நடத்துவோர் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் தர வேண்டும். அந்த தொழில்களை காப்பாற்ற அரசு சிறப்பான பொருளாதார சலுகைகளை அறிவித்து ஊக்குவிக்க வேண்டும்.

வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு தேக்கநிலை ஏற்படும் என்பதால், அவர்களுக்கான சலுகைகளை ஏற்படுத்த வேண்டும்.

‘அழுகிற குழந்தைக்கு தான் பால்’ என்பதை போல் நாம் நிர்பந்திக்காமல் இந்த அரசாங்கங்கள் நமக்காக எதையும் செய்துவிடாது.

மனிதநேயம் கொண்ட கியூபா மக்கள்

உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான இத்தாலி நாட்டில் தான் இதுவரை அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் நோயால் இறந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, இத்தாலியில் உள்ள தீவிர சிகிச்சை படுக்கைகளின்(ICU Beds) எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு 13 படுக்கைகள் என்பது. இது இந்தியாவிலோ, ஒரு லட்சம் பேருக்கு வெறும் 2.3 தீவிர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே உள்ளது! 

இதனால், இத்தாலி நாட்டு மக்களின் உயிர்களை காக்க ‘கியூபா’ நாட்டு மருத்துவர்கள் இத்தாலிக்கு வந்து மருத்துவ சிகிச்சை வழங்கி வருகின்றனர் என்பது வரலாற்று சிறப்புமிக்கது. 

அமெரிக்காவின் பொருளாதார தடையால் பிற நாடுகளிடமிருந்து பாதிக்கப்பட்ட கியூபா, இன்று கொரோனா நெருக்கடி சூழலில் முதல் ஆளாக தன் நாட்டின் தேர்ந்த மருத்துவர்களை பிற நாடுகளுக்கு அனுப்பி மக்களை காப்பாற்றி வருகிறது.

682 பயணிகளை கொண்ட பிரிட்டிஷ் நாட்டு கப்பலை கொரோனா அச்சத்தால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தங்கள் துறைமுகங்களில் நிறுத்த மறுத்த போதும், கியூபா முன்வந்து அந்த கப்பலை தன் நாட்டில் கரை இறக்கியது. கப்பலில் பல நாட்டு மக்கள் இருந்தனர். அதில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் இருந்தது உறுதிசெய்யப்பட்டது!

இன்றைய பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் போல்சொனாரோ தனது நாட்டின் ஊராக பகுதிகளில் மருத்துவ சேவை புரிந்து வந்த பல ஆயிரம் கியூபா நாட்டு மருத்துவர்களை, “கொரில்லா செல்கள்” என்றும் அவர்கள் “மக்களிடம் தங்கள் கருத்துக்களை புகுத்த வந்துள்ளனர்” என்றும் பிரச்சாரம் செய்தார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மருத்துவர்களை கியூபாவிற்கே தான் சொன்னபடி திருப்பி அனுப்பிவிட்டார்.

அதில் 1800 மருத்துவர்கள் மட்டும் திரும்பி போக மறுத்துவிட்டனர். அதில் இடால்மா(Idalma) என்ற பெண் மருத்துவரின் மருத்துவ சேவை செய்யும் உரிமை பறிக்கப்பட்டது. பல இன்னல்களை சந்தித்து, தன் நண்பர்கள் விட்டில் வீட்டு வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

ஆனால், தற்போது கொரோனாவால் பாதித்த உடனே, கியூபா மருத்துவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறது பிரேசில்! 


சுனாமி, காஷ்மீர் நிலநடுக்கம், ஹெய்தி பூகம்பம், எபோலா நோய் தொற்று போன்ற பல நெருக்கடி நிலைகளில் கியூபா மருத்துவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது உலகத்தின் யுத்தம், இதை நாம் ஒன்றிணைந்து தான் போராட வேண்டும்.”, என்கிறார் கார்லோஸ் அர்மாண்டோ என்ற கியூபா செவிலியர். 

கடவுள் வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டன

கொரோனா வைரஸ் நோய் தோற்றால் உலக மதங்களின் வழிபாட்டுத் தளங்களான வேட்டிகன் நகர தேவாலயம், சவுதியின் மெக்கா மதீனா மற்றும் திருமலை திருப்பதி கோயில் உட்பட அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.  

உலகையே அச்சுறுத்தும் கொரோனா நமக்கு சொல்லும் சில முக்கிய செய்திகள்:

கடவுளை நம்பாதே, அறிவியலை நம்பு!

மக்கள் அனைவரும் சமம். உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஏழை பணக்காரன் என்று எவரும் கிடையாது!

என்ன அரசியல் காரணங்கள் சொல்லி மக்களை ஒடுக்க முயற்சித்தாலும், அன்பே இறுதியில் வெல்லும். கியூபாவே இதற்கு சாட்சி!

உலகின் பிற பிரச்சினைகளையும் உலக நாடுகள் ஒன்றிணைத்து மும்முரமாக செயல்பட்டால், நாம் விரும்பும் அமைதியான ஒரு புதிய உலகத்தை உருவாக்கலாம். 


உலகம் முழுவதும் கொரோனா சிகிச்சையின் போது தங்கள் இன்னுயிரை மாய்த்து மக்கள் உயிர்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், துப்புரவு தொழிலாளர்களுக்கும் சுகாதார துறையினருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்.

அன்புடன்,
ஜெகன்

புதன், 11 மார்ச், 2020

இனப்படுகொலை செய்யும் ஒன்றிய அரசு!


இந்திய நிலப்பகுதியில் ஆரிய வருகைக்கு முன்பு முழுவதுமாக தமிழர்கள் தான் வாழ்ந்து வந்தார்கள் என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த வழித்தடம் 
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய வருகை என்பது இந்த நிலைப்பகுதியில் நடைபெறுகிறது. அதன் பின் ஆரிய மொழியான சமஸ்கிருதம் இந்த நிலப்பகுதி முழுவதும் திணிக்கப்படுகிறது. தென்னிந்தியாவை தவிர. இதுவும் ஒரு கலாச்சார படையெடுப்பு தான். ஆனால் அதோடு நிற்கவில்லை.

சமஸ்கிருதம் போதிக்கும் வேதங்களில் இருந்து தான் ‘மனுஸ்மிருதி’ என்னும் ஆரிய மத நூல் இயற்றப்படுகிறது. மனுஸ்மிருதி சொல்லும் ‘வர்ணாசிரமம்’ அடிப்படையில் இந்திய சமூகத்தை ஜாதிகளால் மனிதனை பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுடன் பிரித்தன. இவை தான் தீண்டாமையின் ஆணிவேர்! இதை எதிர்த்து டிசம்பர் 25, 1927 அன்று அம்பேத்கர் அவர்கள் தனது போராட்டத்தில் இந்த ‘மனுஸ்மிருதி’-யை எரித்தார் என்பது வரலாறு.

இதன் மூலம் இரண்டாயிரம் வருடங்களாக இந்திய நிலப்பகுதியின் மக்களை, ஆரிய மதமும் அதன் நூல்களும் அடிமைகளாக தீண்டாமையின் பிடியில் வைத்திருந்தது என்பது நம் கண் முன்னே இருக்கும் உண்மை. 

இந்திய நிலப்பகுதியில் இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பு என்பது எட்டாம் நூற்றாண்டில் துவங்குகியது. அதன் பிறகு பல இஸ்லாமிய மன்னர்கள் தங்கள் ஆட்சியை இந்தியாவின் எல்லையில் பரவலாக்குகிறார்கள். இவை அனைத்தும் இந்திய ஒன்றியம்(Union Government of India) உருவாவதற்கு முன்பாக.

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர் பங்கு:

வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் அவர்களை எதிர்த்து நான்கு முறை போர் செய்து இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தை நடத்தியவர்கள் மைசூர் மன்னர் ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான். இந்த போரில் தனது உயிரை விட்டார் மன்னர் திப்பு சுல்தான். 

1857-ல் சிப்பாய் கலக்கம் வெடித்த போது, லக்னோவில் ‘பேகம் ஹஸ்ரத் மஹால்’ என்ற இஸ்லாமிய பெண் ராணி, தனது கணவர் மற்றும் அரசன் ‘நவாப் வாசித் அலி’-யின் அரசாங்கத்தை விக்டோரியா மகாராணியின் ஆங்கிலேய அரசாங்கம் கையகப்படுத்தியதற்கு எதிராக இந்துக்கள், இஸ்லாமியர்கள், உதா தேவி என்ற தலித் பெண் படை தலைவி என அனைவரையும் ஒருங்கிணைத்து போராடினார்.
பேகம் ஹஸ்ரத் மஹால்

‘மவுலவி அகமதுல்லா ஷா’ என்ற போராளி 1857-ல் நடைபெற்ற சுதந்திர போராட்டத்தின் போது முக்கிய பங்கு வகித்தவர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைசாபாத் நகரில் இருந்த மசூதியை தன் போராட்டத்தின் தலைமை இடமாக வைத்து ஆங்கிலேய அரசுக்கு எதிராக செயல்பட்டவர். இவர் ராஜா ஜெகன்நாத் சிங் என்ற ஜமீன்தாரால் பிரிட்டிஷ் அரசிடம் சன்மானம் பெறுவதற்காக சுட்டுக் கொல்லப்பட்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஃபைசாபாத் நகரின் பெயரை ‘அயோத்தியா’ என்று மாற்றப் போவதாக இன்றைய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருக்கிறார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமானவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத். இவர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர்.

தமிழ்நாட்டில் பிறந்த சிறந்த தலைவரான முஹமத் இஸ்மாயில் ‘காயிதே மில்லத்’ இந்திய அரசியமைப்பு சட்ட உருவாக்க குழுவில் உறுப்பினர். ‘தமிழ்’ இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டும் என்ற முழக்கத்தை நாடாளுமன்றத்தில் அழுத்தமாக பதிவு செய்தவர்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் ரத்தம் சிந்திய இஸ்லாமிய சகோதரர்கள் ஏராளம். அந்த வரலாறு நமக்கு புறக்கணிக்கப்பட்டும், மாறாக இஸ்லாமிய வெறுப்புணர்வை தூண்டும் வரலாறும் தான் நம் முன் வைக்கப்படுகிறது. இதற்கு ஊடகங்கள் ஒரு முக்கிய காரணம்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் ‘இந்துத்துவா’வினர் பங்கு:

வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் அவர்களில் மூன்று பேரை கொலை செய்ய தூண்டுதலாக இருந்தவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற ஆரிய வழியில் வந்த ஒரு பார்ப்பனர். அதற்கு தண்டனையாக 50 வருடங்கள் சிறைவாசம் பெற்றார். அதில் பத்து வருடங்கள் அந்தமான் சிறையிலும், மூன்று வருடங்கள் இந்திய சிறையிலும் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதற்காக வெள்ளையர்களிடம் மனுக்களை அளித்து மன்னிப்பு கோரினார். அதில் தன்னை விடுதலை செய்ய மன்றாடினார். தன்னை விடுதலை செய்தால் தன்னை பின்பற்றி தவறான பாதையில் சென்றவர்கள்(ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள்) சரியான பாதைக்கு திரும்புவார்கள் என்றும், தன்னால் இயன்றவரை ஆங்கிலேய அரசிற்கு சேவை செய்ய தயார் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகே விடுதலை செய்யப்பட்டார்.

தன் சொல்லுக்கு கட்டுப்பட்ட சாவர்க்கர், இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேய அரசின் படைகளில் தனது இந்து மகாசபை மூலம் லட்சக்கணக்கான ஹிந்துக்களை இணைத்து, அவர்களை நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவ படைக்கு எதிராக கட்டமைத்து போஸின் படையை வீழ்த்தும் வேலையை செய்தார்.

‘இந்துத்துவா’ என்ற கொள்கையை உருவாக்கியவர் இந்த சாவர்க்கர் தான். இந்த மதவாத பயங்கரவாதம் என்பது சாவர்க்கரின் மனதில் 12 வயது சிறுவனாக இருந்த போதே துளிர்க்க ஆரம்பித்துள்ளது. 1894-95 காலங்களில் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்ற இந்து-முஸ்லிம் கலவரம் முடிந்த பிறகு சிறுவனாக இருந்த சாவர்க்கரும் தனது பள்ளி நண்பர்களும் அங்குள்ள இஸ்லாமிய சிறுவர்களை கத்தி போன்ற பொருட்களால் மிரட்டியும், மசூதிகளின் மீது கற்களை வீசி அதன் கண்ணாடிகளை உடைத்தும் உள்ளனர். இது தங்களுக்கு மன நிறைவை தந்ததாகவும், தங்கள் மன தைரியத்தை உயர்த்தியதாகவும் அவரே கூறியுள்ளார். கலவரத்தில் இந்துக்கள் இஸ்லாமியர்களை கொன்றனர் என்ற செய்தி வந்தால் அவரும் அவரது நண்பர்களும் சந்தோஷத்தில் நடனமாடுவார்களாம்!

இந்தியாவிற்குள் ஆரிய வழியில் வந்த பார்ப்பனரான சாவர்க்கரின் இந்துத்துவா கொள்கைப்படி i)இஸ்லாமியர்கள் இந்த மண்ணில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தாலும், இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் ரத்தம் சிந்தி உயிரை விட்டு போராடியிருந்தாலும், இந்த மண்ணில் வாழ தகுதியற்றவர்கள்; ii)ஆங்கிலேயர்கள் என்பவர்கள் இங்கு கிருத்தவ மதத்தை பரப்ப வந்தவர்கள்.
ஆனால், சாவர்க்கரின் இந்து மகாசபை ஆங்கிலேயரின் ராணுவத்தில் இருக்கும், பாகிஸ்தான் பிரிவினை சட்டம் நிறைவேற்றப்படும் போது முஸ்லிம் லீக்-குடன் கூட்டணியில் இருக்கும்.

அறம் என்பது எள்ளளவும் இல்லாத தலைவராக இருந்து, இன்று வரை அவரது ஹிந்துத்துவா கொள்கையை பின்பற்றி வருபவர்களும் அதே போல் இருப்பது தான் நிகழ்கால அரசியல்.

மகாத்மா காந்தியின் கொலைக்கு பின்னால் இருந்தது சாவர்க்கரும்  அவரது கூட்டாளிகளும் தான்.
சாவர்க்கர்                                              கோட்சே

இந்திய விடுதலை போராட்டத்திற்காக எதையும் செய்யாத, மாறாக அதற்கு எதிராக பெரும் சூழ்ச்சியை செய்தவர்கள் இந்துத்துவா கொள்கையுடையவர்கள்.

தன் சுயநலத்திற்காக பச்சோந்தி போல் நிறம் மாறி அரசியல் செய்த ஒரு தலைவரின் பயங்கரவாத கொள்கையை பின்தொடர்பவர்கள் தான் இன்று இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள். இவர்கள் தான் சட்ட விரோதமாக இஸ்லாமிய மக்களை மதவாத அடிப்படையில் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த நினைப்பவர்கள்.

இன்று..

இந்துத்துவா’ அர்.எஸ்.எஸ். கொள்கையான ‘ஹிந்து தேசம்’ என்ற ஒன்றை கொண்டு வருவதற்கு, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட்டு, இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். காஷ்மீரின் அரசியல் சட்டம் 370-ன் கீழ் இருந்த சிறப்பு அந்தஸ்தை திரும்பபெற்று, அந்த மாநிலத்தை திறந்தவெளி சிறையாக மாற்றியதற்கும், அசாமில் உள்ள இஸ்லாமியர் உட்பட 19 லட்சம் மக்களை குடியுரிமை திருத்த சட்டம்(CAA), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு(NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC) ஆகியவற்றால் அகதிகளாக்கியதற்கும் காரணம் இது தான். டெல்லியில் கலவரம் என்ற பெயரில் இனப்படுகொலை செய்கிறது ‘இந்துத்துவா’ அரசு. அதோடு சேர்த்து இந்து மதம் என்று சொல்லக்கூடிய ஆரிய மதத்தின் ‘மனுஸ்மிருதி’ போதிக்கும் ‘வர்ணாசிரமம்’ நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இரண்டாயிரம் வருட வரலாறு மீண்டும் நிகழும். ஜாதிகள் வழியாக நாம் அடிமையாக்கப்பட்டு, தீண்டாமையின் பிடியில் தள்ளப்படுவோம். இவை நிகழ வேண்டுமா?

இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள் வெறும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் போராடவில்லை. எப்படி சுதந்திர இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் அன்று போராட்டம் நடத்தினார்களோ, அதே போல் தான் இன்றும் அனைத்து மக்களுக்களின் நலனுக்காகவும் போராடுகிறார்கள். அதற்காக துன்புறுத்தப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள்.

அமைதியாக அறவழியில் போராட்டம் செய்வது குடிமக்களின் ஜனநாயக உரிமை. அதை மறுப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் காவல்துறையை பயன்படுத்தி போராடும் மக்களை ஒடுக்குவதும், கலவரம் செய்யும் மதவெறி கும்பலுடன் சேர்ந்து மக்களை தாக்குவதும், கொலை செய்ய அனுமதிப்பதும் ஜனநாயக, அடிப்படை மனித உரிமை மீறல்கள். ஒரு பக்கம் உரிமை மீறல்களும் அடக்குமுறையும் கொலை வெறி தாக்குதல்களும் செய்தால், எதிர்முனையில் அதற்கான விளைவுகள் நேரிடும். இவை அனைத்தும் சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும். ஆக, இதற்கு முழுவதுமாக அரசு காரணமாக இருப்பதை மறுக்கவே முடியாது.

இவ்வளவு சட்ட விதிமீறல்கள், மனித உரிமை மீறல்கள், கொலைகள் நாட்டில் நடைபெறும் வேளையில், ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று சொல்லப்படும் ஊடகங்கள் – செய்தி தொலைகாட்சிகள், செய்திதாள்கள், பத்திரிகைகள் இவற்றை சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லவே இல்லை. அரசு சார்புடனே பிரதான செய்தி ஊடகங்கள் இங்கு பொறுப்பற்று நடந்து கொண்டிருக்கின்றன.


இந்தியாவில் இஸ்லாமியர்
தமிழ்நாட்டின் முன்னணி செய்தித்தாள் ஒன்றில் ஒரு நடிகர் பேசிய பேச்சை முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக போட்டுவிட்டு, தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த படுகொலைகள் சம்பவத்தை 13-வது பக்கத்தில் பதிவு செய்கிறது. இதைவிட பெரிய அயோக்கியத்தனம் இருக்கமுடியுமா. பத்திரிக்கை தர்மம் என்பது துளியும் இல்லாத செயல்கள் இவை. இவை மற்ற வகை ஊடகங்களுக்கும் பொருந்தும்.

உண்மையில் பிரதான ஊடகங்கள் செய்ய தவறிய வேலையை சமூக ஊடகங்கள் தான் செய்து வருகின்றன. நிகழும் அரசியல் சூழலை நியாத்தின் பக்கம் நின்று மக்களுக்கு கொண்டு செல்கின்றன. இவை முதலாளிகளின் ஊடகம் கிடையாது, மக்களின் ஊடகம் என்பதால் மட்டும். 

நாட்டில் ஒரு ஃபாசிச அரசு இயங்கி வருகிறது. அது மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்துகிறது. மக்களிடையே வெறுப்புணர்வை விதைக்கிறது. சட்டவிரோத சட்டங்கள் மூலம் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்க மாற்றுகிறது. அவர்களை இனப்படுகொலை செய்கிறது. இதை மக்களுக்கு கொண்டு செல்ல மறுக்கும் ஊடகங்கள் ஃபாசிசத்திற்கு துணைபோகிறது என்றே அர்த்தம்.

அன்புடன்,
ஜெகன்