இந்திய நிலப்பகுதியில் ஆரிய வருகைக்கு முன்பு
முழுவதுமாக தமிழர்கள் தான் வாழ்ந்து
வந்தார்கள் என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
![]() |
| ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த வழித்தடம் |
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய
வருகை என்பது இந்த நிலைப்பகுதியில் நடைபெறுகிறது. அதன் பின் ஆரிய மொழியான
சமஸ்கிருதம் இந்த நிலப்பகுதி முழுவதும் திணிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவை தவிர. இதுவும் ஒரு கலாச்சார படையெடுப்பு தான். ஆனால் அதோடு நிற்கவில்லை.
சமஸ்கிருதம் போதிக்கும் வேதங்களில் இருந்து
தான் ‘மனுஸ்மிருதி’ என்னும் ஆரிய மத நூல் இயற்றப்படுகிறது. மனுஸ்மிருதி சொல்லும் ‘வர்ணாசிரமம்’
அடிப்படையில் இந்திய சமூகத்தை ஜாதிகளால் மனிதனை பிறப்பின் அடிப்படையில்
ஏற்றத்தாழ்வுடன் பிரித்தன. இவை தான் தீண்டாமையின் ஆணிவேர்! இதை எதிர்த்து டிசம்பர்
25, 1927 அன்று அம்பேத்கர் அவர்கள் தனது போராட்டத்தில் இந்த
‘மனுஸ்மிருதி’-யை எரித்தார் என்பது வரலாறு.
இதன் மூலம் இரண்டாயிரம் வருடங்களாக இந்திய
நிலப்பகுதியின் மக்களை, ஆரிய மதமும் அதன் நூல்களும்
அடிமைகளாக தீண்டாமையின் பிடியில் வைத்திருந்தது என்பது நம் கண் முன்னே இருக்கும்
உண்மை.
இந்திய நிலப்பகுதியில் இஸ்லாமிய மன்னர்களின்
படையெடுப்பு என்பது எட்டாம் நூற்றாண்டில் துவங்குகியது. அதன் பிறகு பல இஸ்லாமிய
மன்னர்கள் தங்கள் ஆட்சியை இந்தியாவின் எல்லையில் பரவலாக்குகிறார்கள். இவை
அனைத்தும் இந்திய ஒன்றியம்(Union Government of India) உருவாவதற்கு முன்பாக.
இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்
பங்கு:
வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் அவர்களை
எதிர்த்து நான்கு முறை போர் செய்து இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தை
நடத்தியவர்கள் மைசூர் மன்னர் ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான். இந்த
போரில் தனது உயிரை விட்டார் மன்னர் திப்பு சுல்தான்.
1857-ல் சிப்பாய் கலக்கம் வெடித்த போது, லக்னோவில் ‘பேகம் ஹஸ்ரத் மஹால்’ என்ற இஸ்லாமிய பெண்
ராணி, தனது கணவர் மற்றும் அரசன் ‘நவாப் வாசித் அலி’-யின் அரசாங்கத்தை விக்டோரியா
மகாராணியின் ஆங்கிலேய அரசாங்கம் கையகப்படுத்தியதற்கு எதிராக இந்துக்கள்,
இஸ்லாமியர்கள், உதா தேவி என்ற தலித் பெண் படை தலைவி என அனைவரையும் ஒருங்கிணைத்து
போராடினார்.
![]() |
| பேகம் ஹஸ்ரத் மஹால் |
‘மவுலவி அகமதுல்லா ஷா’ என்ற போராளி 1857-ல்
நடைபெற்ற சுதந்திர போராட்டத்தின் போது முக்கிய பங்கு
வகித்தவர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைசாபாத் நகரில் இருந்த மசூதியை தன்
போராட்டத்தின் தலைமை இடமாக வைத்து ஆங்கிலேய அரசுக்கு எதிராக செயல்பட்டவர். இவர்
ராஜா ஜெகன்நாத் சிங் என்ற ஜமீன்தாரால் பிரிட்டிஷ் அரசிடம் சன்மானம் பெறுவதற்காக
சுட்டுக் கொல்லப்பட்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஃபைசாபாத் நகரின் பெயரை
‘அயோத்தியா’ என்று மாற்றப் போவதாக இன்றைய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
அறிவித்திருக்கிறார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் இருந்த இந்திய
தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும் இந்தியாவின் முதல் கல்வி
அமைச்சருமானவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத். இவர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை
கடுமையாக எதிர்த்தவர்.
தமிழ்நாட்டில் பிறந்த சிறந்த தலைவரான முஹமத்
இஸ்மாயில் ‘காயிதே மில்லத்’ இந்திய அரசியமைப்பு சட்ட உருவாக்க குழுவில்
உறுப்பினர். ‘தமிழ்’ இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டும் என்ற முழக்கத்தை
நாடாளுமன்றத்தில் அழுத்தமாக பதிவு செய்தவர்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் ரத்தம்
சிந்திய இஸ்லாமிய சகோதரர்கள் ஏராளம். அந்த வரலாறு நமக்கு புறக்கணிக்கப்பட்டும்,
மாறாக இஸ்லாமிய வெறுப்புணர்வை தூண்டும் வரலாறும் தான் நம் முன் வைக்கப்படுகிறது. இதற்கு
ஊடகங்கள் ஒரு முக்கிய காரணம்.
இந்திய சுதந்திர போராட்டத்தில்
‘இந்துத்துவா’வினர் பங்கு:
வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் அவர்களில்
மூன்று பேரை கொலை செய்ய தூண்டுதலாக இருந்தவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற ஆரிய வழியில் வந்த
ஒரு பார்ப்பனர். அதற்கு தண்டனையாக 50 வருடங்கள்
சிறைவாசம் பெற்றார். அதில் பத்து வருடங்கள் அந்தமான் சிறையிலும்,
மூன்று வருடங்கள் இந்திய சிறையிலும் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதற்காக
வெள்ளையர்களிடம் மனுக்களை அளித்து மன்னிப்பு கோரினார். அதில் தன்னை விடுதலை செய்ய
மன்றாடினார். தன்னை விடுதலை செய்தால் தன்னை பின்பற்றி தவறான பாதையில் சென்றவர்கள்(ஆங்கிலேயர்களை
எதிர்த்தவர்கள்) சரியான பாதைக்கு திரும்புவார்கள் என்றும், தன்னால் இயன்றவரை
ஆங்கிலேய அரசிற்கு சேவை செய்ய தயார் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகே விடுதலை
செய்யப்பட்டார்.
தன் சொல்லுக்கு கட்டுப்பட்ட சாவர்க்கர்,
இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேய அரசின் படைகளில் தனது ‘இந்து மகாசபை’ மூலம் லட்சக்கணக்கான ஹிந்துக்களை இணைத்து,
அவர்களை நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவ படைக்கு எதிராக
கட்டமைத்து போஸின் படையை வீழ்த்தும் வேலையை செய்தார்.
‘இந்துத்துவா’ என்ற கொள்கையை உருவாக்கியவர்
இந்த சாவர்க்கர் தான். இந்த மதவாத பயங்கரவாதம் என்பது சாவர்க்கரின் மனதில் 12 வயது
சிறுவனாக இருந்த போதே துளிர்க்க
ஆரம்பித்துள்ளது. 1894-95
காலங்களில் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்ற
இந்து-முஸ்லிம் கலவரம் முடிந்த பிறகு சிறுவனாக இருந்த சாவர்க்கரும் தனது பள்ளி
நண்பர்களும் அங்குள்ள இஸ்லாமிய சிறுவர்களை கத்தி போன்ற பொருட்களால் மிரட்டியும்,
மசூதிகளின் மீது கற்களை வீசி அதன் கண்ணாடிகளை உடைத்தும் உள்ளனர். இது தங்களுக்கு
மன நிறைவை தந்ததாகவும், தங்கள் மன தைரியத்தை உயர்த்தியதாகவும் அவரே கூறியுள்ளார். கலவரத்தில் இந்துக்கள்
இஸ்லாமியர்களை கொன்றனர் என்ற செய்தி வந்தால் அவரும் அவரது நண்பர்களும்
சந்தோஷத்தில் நடனமாடுவார்களாம்!
இந்தியாவிற்குள் ஆரிய வழியில் வந்த
பார்ப்பனரான சாவர்க்கரின் இந்துத்துவா கொள்கைப்படி i)இஸ்லாமியர்கள் இந்த மண்ணில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து
வந்தாலும், இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் ரத்தம் சிந்தி உயிரை விட்டு
போராடியிருந்தாலும், இந்த மண்ணில் வாழ தகுதியற்றவர்கள்; ii)ஆங்கிலேயர்கள்
என்பவர்கள் இங்கு கிருத்தவ மதத்தை பரப்ப வந்தவர்கள்.
ஆனால், சாவர்க்கரின் இந்து மகாசபை
ஆங்கிலேயரின் ராணுவத்தில் இருக்கும், பாகிஸ்தான் பிரிவினை சட்டம் நிறைவேற்றப்படும்
போது முஸ்லிம் லீக்-குடன் கூட்டணியில் இருக்கும்.
அறம் என்பது எள்ளளவும் இல்லாத தலைவராக
இருந்து, இன்று வரை அவரது ஹிந்துத்துவா கொள்கையை பின்பற்றி வருபவர்களும் அதே போல்
இருப்பது தான் நிகழ்கால அரசியல்.
மகாத்மா காந்தியின் கொலைக்கு பின்னால்
இருந்தது சாவர்க்கரும் அவரது
கூட்டாளிகளும் தான்.
![]() |
| சாவர்க்கர் கோட்சே |
தன் சுயநலத்திற்காக பச்சோந்தி போல் நிறம்
மாறி அரசியல் செய்த ஒரு தலைவரின் பயங்கரவாத கொள்கையை பின்தொடர்பவர்கள் தான் இன்று
இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள். இவர்கள் தான் சட்ட விரோதமாக இஸ்லாமிய
மக்களை மதவாத அடிப்படையில் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த நினைப்பவர்கள்.
தமிழ்நாட்டின் முன்னணி செய்தித்தாள் ஒன்றில்
ஒரு நடிகர் பேசிய பேச்சை முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக போட்டுவிட்டு,
தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த படுகொலைகள் சம்பவத்தை 13-வது
பக்கத்தில் பதிவு செய்கிறது. இதைவிட பெரிய அயோக்கியத்தனம் இருக்கமுடியுமா.
பத்திரிக்கை தர்மம் என்பது துளியும் இல்லாத செயல்கள் இவை. இவை மற்ற வகை ஊடகங்களுக்கும்
பொருந்தும்.
இன்று..
‘இந்துத்துவா’ அர்.எஸ்.எஸ். கொள்கையான ‘ஹிந்து தேசம்’
என்ற ஒன்றை கொண்டு வருவதற்கு, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இரண்டாம் தர
குடிமக்களாக மாற்றப்பட்டு, இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். காஷ்மீரின் அரசியல்
சட்டம் 370-ன் கீழ் இருந்த சிறப்பு அந்தஸ்தை திரும்பபெற்று, அந்த மாநிலத்தை
திறந்தவெளி சிறையாக மாற்றியதற்கும், அசாமில் உள்ள இஸ்லாமியர் உட்பட 19 லட்சம் மக்களை குடியுரிமை திருத்த சட்டம்(CAA), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு(NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC) ஆகியவற்றால் அகதிகளாக்கியதற்கும் காரணம் இது தான்.
டெல்லியில் கலவரம் என்ற பெயரில் இனப்படுகொலை செய்கிறது ‘இந்துத்துவா’ அரசு. அதோடு சேர்த்து இந்து மதம் என்று
சொல்லக்கூடிய ஆரிய மதத்தின் ‘மனுஸ்மிருதி’ போதிக்கும் ‘வர்ணாசிரமம்’ நடைமுறைக்கு
கொண்டு வரப்படும். இரண்டாயிரம் வருட வரலாறு மீண்டும் நிகழும். ஜாதிகள் வழியாக நாம்
அடிமையாக்கப்பட்டு, தீண்டாமையின் பிடியில் தள்ளப்படுவோம். இவை நிகழ வேண்டுமா?
இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு
எதிராக போராடும் மக்கள் வெறும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் போராடவில்லை. எப்படி
சுதந்திர இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் அன்று போராட்டம் நடத்தினார்களோ,
அதே போல் தான் இன்றும் அனைத்து மக்களுக்களின் நலனுக்காகவும் போராடுகிறார்கள்.
அதற்காக துன்புறுத்தப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள்.
அமைதியாக அறவழியில் போராட்டம் செய்வது
குடிமக்களின் ஜனநாயக உரிமை. அதை மறுப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை. அதிகாரத்தில்
இருப்பவர்கள் காவல்துறையை பயன்படுத்தி போராடும் மக்களை ஒடுக்குவதும், கலவரம்
செய்யும் மதவெறி கும்பலுடன் சேர்ந்து மக்களை தாக்குவதும், கொலை செய்ய
அனுமதிப்பதும் ஜனநாயக, அடிப்படை மனித உரிமை மீறல்கள். ஒரு பக்கம் உரிமை மீறல்களும்
அடக்குமுறையும் கொலை வெறி தாக்குதல்களும் செய்தால், எதிர்முனையில் அதற்கான
விளைவுகள் நேரிடும். இவை அனைத்தும் சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும். ஆக, இதற்கு
முழுவதுமாக அரசு காரணமாக இருப்பதை மறுக்கவே முடியாது.
இவ்வளவு சட்ட விதிமீறல்கள், மனித உரிமை
மீறல்கள், கொலைகள் நாட்டில் நடைபெறும் வேளையில், ஜனநாயகத்தின்
நான்காம் தூண் என்று சொல்லப்படும் ஊடகங்கள் – செய்தி தொலைகாட்சிகள்,
செய்திதாள்கள், பத்திரிகைகள் இவற்றை சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லவே
இல்லை. அரசு சார்புடனே பிரதான செய்தி ஊடகங்கள் இங்கு பொறுப்பற்று நடந்து
கொண்டிருக்கின்றன.
![]() |
| இந்தியாவில் இஸ்லாமியர் |
உண்மையில் பிரதான ஊடகங்கள் செய்ய தவறிய வேலையை சமூக ஊடகங்கள் தான்
செய்து வருகின்றன. நிகழும் அரசியல் சூழலை நியாத்தின் பக்கம் நின்று மக்களுக்கு
கொண்டு செல்கின்றன. இவை முதலாளிகளின் ஊடகம் கிடையாது, மக்களின் ஊடகம் என்பதால்
மட்டும்.
நாட்டில் ஒரு ஃபாசிச அரசு இயங்கி வருகிறது. அது மக்களை மதத்தின்
அடிப்படையில் பிளவு படுத்துகிறது. மக்களிடையே வெறுப்புணர்வை விதைக்கிறது.
சட்டவிரோத சட்டங்கள் மூலம் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்க மாற்றுகிறது. அவர்களை
இனப்படுகொலை செய்கிறது. இதை மக்களுக்கு கொண்டு செல்ல மறுக்கும் ஊடகங்கள்
ஃபாசிசத்திற்கு துணைபோகிறது என்றே அர்த்தம்.
அன்புடன்,
ஜெகன்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக