சனி, 4 ஏப்ரல், 2020

ஊரடங்கில் ஒரு நாள்!

காலை சற்று தாமதமாக எழுந்த பின் மொபைலை சிறிது நேரம் துலாவிய பிறகு நாட்டின் நிலை என்ன, ஏதாவது பிரேக்கிங் நியூஸ் தொலைகாட்சிகளில் ஓடுகிறதா என்று பார்த்து கொண்டு சத்துமாவு கஞ்சு ஒரு டம்ளர் குடிப்பேன். சில சமயங்களில் அதுவும் கிடையாது.

அன்றைய வீட்டின் தேவை ஏதாவது இருந்தால் அதற்காக கடைக்கு சென்று வாங்கி வருவது.

எப்போதும் இல்லாத அளவு அமைதியாக இருக்கும் தெரு. ஓரிருவர் ஆங்காங்கே நிற்பர். பல சமயம் அவர்களும் இருப்பதில்லை.

கடைக்கு சென்றால், வரிசையில் மக்கள் ஓரு மீட்டர் இடைவெளியில் தங்கள் முகங்களில் முக கவசம்(மாஸ்க்) அணிந்து கொண்டு நிற்கும் காட்சி. முகத்தில் கைக்குட்டையை கட்டிக்கொண்ட நானும் அந்த வரிசையில் நின்று பொருட்களை வாங்கும் போது கடைகார அன்னாச்சியின் புலம்பல்,

"மார்கெட்டுல(கோயம்பேடு) பக்கத்துல நிக்கறவன் டக்குனு தும்முறான். நமக்கு பகீருங்குது", என்றவர் தன் முகத்தில் இறங்கி இருந்த கை குட்டையை மேலே இழுத்து மூக்கை மறைக்கும் படி கட்டுகிறார்.

பொருட்களை கொடுத்துவிட்டு சில்லரை காசை வாங்கி திரும்ப தருகிறார். எப்போதும் இல்லாத அளவு பணத்தை தொடுவதற்கு சின்ன அச்சம் மனதில் இருக்கிறது. இருந்த போதும் அதை வாங்கி பர்சில் வைத்து கொண்டு வீட்டுக்கு திரும்புகிறேன்.

அந்த அன்னாச்சி தினமும் பலரிடம் நேரில் உரையாடுகிறார். அவர்கள் அனைவரிடமும் பணம் பரிவர்த்தனை செய்கிறார். உயிரை பணயம் வைத்து தொழில் நடத்தும் அவரது மனநிலையையும் புரிந்து கொள்ள முடிந்தது.

வீட்டிற்கு வரும்போது கேட்டை(Gate) திறக்க மேலே இருக்கும் தாழ்பாலை தொடும்போது, இதில் நோய்கிருமி இருக்குமா என்ற சந்தேகத்துடனே திறக்க நேரிடுகிறது.

வாசலில் காலிங் பெல்-ஐ முழங்கை முட்டியால் அழுத்திவிட்டு நின்றால், அம்மா கதவை திறப்பார். பையில் வாங்கி வந்த பொருட்களை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, பாக்கெட்டில் இருக்கும் பர்ஸ், அலைபேசி ஆகியவற்றை எடுத்து தனியாக வைத்துவிட்டு அதில் கிருமிநாசினியை உபயோகித்து துடைத்தபின் நேராக குளியலறைக்குள் சென்று கைகளை கிருமிநாசினி உபயோகித்து நன்றாக கழுவி விட்டு, முகத்தையும் கழுவிக்கொண்டு வந்த அமர்வேன்.

பிறகு எனது வேலைகளை துவங்குவேன். தொழில்நுட்ப தொழிலாளர்கள்(IT Professionals) போல் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி இல்லை. வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு காணொளிகள் உருவாக்கி தரும் சேவையில் ஈடுபட்டிருக்கும் எனக்கு வெளியில் போகாத காரணத்தால் தற்போது அந்த வேலையை செய்ய முடியாது.

தற்போது சினிமா திரைக்கதை எழுதுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அதற்கான வாசிப்பு, தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்.

மதியம் உணவு தயாரிக்க(சமைக்க) அம்மாவுக்கு முடிந்தால் சில உதவிகள் செய்வேன். அசைவ உணவு(கோழிக்கறி தொக்கு) செய்வது எனக்கு பிடிக்கும்  என்பதால் அதை சமைப்பதாக இருந்தால் நானே முழுவதுமாக அம்மாவின் மேற்பார்வையில் செய்வேன்.

இந்த ஊரடங்கு நாட்களில் சமையல் வகைகளை கற்க வேண்டும் என்ற பல நாள் தேவையை பூர்த்தி செய்ய நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மதிய உணவு உட்கொண்ட பிறகு களைப்பாக(உண்ட மயக்கம்) இருப்பதால், மொபைலில் ஏதாவது கேம் விளையாடியபடி சிறிது நேரம் செலவிடுவேன்.

சுமார் 4 மணிக்கு அம்மா கிரீன் டீ(பச்சை தேயிலை தேனீர்) போட்டு வந்து கொடுப்பார்.

வீட்டில் வேலை செய்யும் அக்கா ஊரடங்கு சமயத்தில் வருவதில்லை. வர வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். எனவே பாத்திரங்களை கழுவுவதும், வீடு பெருக்குவது, துடைப்பது போன்ற வேலைகளை செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது எனக்கு தான். அதற்கு சுமார் 1 முதல் 2 மணி நேரம் வரை பிடிக்கும்.

முழுவதுமாக வியர்த்த நிலையில் நான் குளித்து வந்த பிறகு மொட்டை மாடிக்கு நானும் அம்மாவும் செல்வோம். அப்போது சுமார் 6 மணியாகிவிடும். சிறிது நேரம் நடைபயிற்சி செய்வோம். அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள மக்களும் மொட்டை மாடியில் இருப்பதை பார்க்கலாம். நான் நண்பர்களுடன் அலைபேசியில் பேசுவது, பேஸ்புக் பார்ப்பது என்று இருப்பேன்.

வீட்டிலேயே அடைந்து கிடப்பதால், மாடியின் திறந்தவெளி என்பது நம் மன அழுத்தத்தை போக்க நல்ல ஒரு வழிமுறையாக இருக்கிறது.

வெயில் காலம் என்பதால் சூரியன் முழுவதுமாக மறைய 6:30 மணி ஆகிவிடுகிறது.

சூரியன் மறையும் நேரம், சுற்றியுள்ள காக்கைகள் ஆங்காங்கே உயரமான கட்டிடங்களில் கூட்டம் கூட்டமாக வந்து அமர்வதை பார்க்க முடிகிறது.

இருள் சூழ, காக்கைகள் பறந்து சென்றுவிடும். வடக்கு பகுதியில் இருந்து பல வவ்வால்கள் தெற்கு நோக்கி பறந்து வருவதை காண முடிகிறது. மேலே வட்டமடித்து கொண்டு இருக்கும். நிலவின் வெளிச்சம் தெரிய, கீழே இறங்கி வந்துவிடுவோம்.

மாலை தேர்ந்த சில புத்தகங்கள் வாசிக்க நேரிடும். கொரோனா ஒரு புறமிருக்க, சமூக வலைத்தளங்களில் சங்கிகளின் வன்மம் கலந்த பிரச்சாரத்தை எதிர்க்க பல பதிவுகளை போட வேண்டிய சூழல் உருவாகிறது. அது நிறைய நேரத்தை விரையமாக்குகிறது.

இரவு சாப்பிட்டு மீண்டும் வாசிக்க அல்லது சமூக வலைத்தளத்தில் நேரம் செலவாகிறது.

உறக்கம்.

அன்புடன்,
ஜெகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக