‘நீட்’ – NEET (National Eligibility cum Entrance Test) – தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு.
மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் நுழைந்து படிக்க என்ன தகுதி பிரதான தேவையாக இருக்க முடியும்?
மருத்துவ கல்லூரியில் படிக்க விருப்பமுள்ள மாணவர்கள், மருத்துவ படிப்புக்கு தேவையான பாடங்களான உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2017 செப்டம்பரில் ‘நீட்’ தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா(வயது 17) தனது 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 200 மதிப்பெண்களுக்கு தலா 194, 200 மற்றும் 199 மதிப்பெண்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவரால் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. காரணம், மாநில வழி கல்வியில் பயின்ற அனிதாவுக்கு நீட் தேர்வில் மத்திய பாட திட்டமான சி.பி.எஸ்.ஈ முறையில் கேள்விகள் கேட்கப்பட்டது தான்.
இப்படி மருத்துவ படிப்புக்கு தேவையான எல்லா பாடங்களிலும் சிறந்த முறையில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஒரு மருத்துவராக பயிற்றுவித்து தகுதி படுத்தும் பொறுப்பு அந்தந்த மருத்துவ கல்லூரிகளுக்கே உள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதால் எவரும் மருத்துவராகிவிட முடியாது. அடுத்த ஐந்து ஆண்டுகள் மருத்துவ கல்லூரிகளில் பயின்ற பிறகே ஒருவர் மருத்துவராக முடியும். இதை நீட் என்ற ஒரு பாகுபாடான நுழைவு தேர்வின் பேரில் ‘தகுதி’ என்று சொல்வதே ஒரு மிகப் பெரிய மோசடி மற்றும் அயோக்கியத்தனம்.
2017 முதல் இன்று வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வின் காரணமாக 15 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். மருத்துவ கல்லூரிகளில் அனுமதி பெற்று படிக்கும் அனைத்து தகுதிகளும் இருந்தும், வேறு பாட திட்டத்தில் தேர்வை எதிர்கொள்ளும் நிர்பந்தத்தாலும், நீட் தேர்வு பயிற்சிகளுக்கு செலவு செய்து படிக்க இயலாத சூழலாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் இத்தனை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலைகள் தீர்வாகாது. நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வாகும்.
நீட் நுழைவு தேர்வில் மேலும் ஒரு மிகப்பெரிய மோசடி ‘நீட் பயிற்சி மையங்கள்’. கடந்த ஆண்டு(2019) தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் நீட் நுழைவு தேர்வின் மூலம் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 3033 பேர் தனியார் நீட் பயிற்சி மையங்களில் பயின்றவர்கள். வெறும் 48 மாணவர்களே தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறாமல் தேர்வானவர்கள். இது வெறும் 1.58% மட்டுமே.
அதே போல் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அனுமதி பெற்ற மாணவர்களில் 1598 பேர் தனியார் பயிற்சி மையங்களில் பயின்றவர்களே. வெறும் 52 பேர் மட்டுமே தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறாமல் தேர்வானவர்கள். இது வெறும் 3.15% மட்டுமே.
தனியார் பயிற்சி மையங்கள் மூலம் தேர்வானவர்களில் கூட முதல் முறை தேர்வு எழுதி நுழைந்தவர்கள் 1628 பேர் மட்டுமே. இரண்டாவது அல்லது மூன்றாவது முறை தேர்வு எழுதி நுழைந்தவர்கள் எண்ணிக்கை 3104.
இவை அனைத்தும் 2019 நவம்பரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட தகவல்கள். இவற்றை கேட்டறிந்த நீதிபதிகள், “நீட் தேர்வின் மூலம் சமமற்றவர்கள் சமமானவர்களாக நடத்தப்படுகிறார்கள்”, “இதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் ஏழைகளுக்கு அடைக்கப்பட்டுவிட்டது நிரூபனமாகிறது. இதுவே உண்மை” என்று குறிப்பிட்டனர்.
இந்த தனியார் நீட் பயிற்சி மையங்கள் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் சுமார் இரண்டரை லட்சம்(2,50,000) முதல் ஐந்து லட்சம்(5,00,000) ரூபாய் வரை பயிற்சி கட்டணமாக வசூலிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் வரை நீட் நுழைவு தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் பயின்றாலும் கூட 2,500 முதல் 5000 கோடி ரூபாய் வரை கட்டணம் செலுத்தி இருப்பார்கள்.
நீட் தேர்வினால் தனியார் மருத்துவ கல்லூரிகளின் நன்கொடை/ஆளினர் வீத கட்டணமாக(Capitation Fees) வசூலிக்கப்படும் நிலை இருக்காது என்று வாதிடுபவர்கள், இந்த தனியார் பயிற்சி மைய கொள்ளைகளை பற்றியும் பேச வேண்டும்.
“முந்தைய அரசாங்கம் எடுத்த அனைத்து
முடிவுகளையும் நீங்கள் (இந்திய ஒன்றிய அரசு) மாற்றியமைக்கிறீர்கள், இதையும் மாற்றவும். தனியார் கல்லூரிகள் பணம் சம்பாதிப்பதைத் தடுப்பதே
நீட்டின் நோக்கம், ஆனால் இப்போது பயிற்சி மையங்கள் பணம்
சம்பாதிக்கின்றன.” – நீதிபதி கிருபாகரன்.
இந்திய மக்கள் தொகையில் வெறும் 1.15% பேர் மட்டுமே வருமான வரி செலுத்துபவர்கள்(2019-20 நிதியாண்டு). அதாவது ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்துக்கும் மேல் சம்பாதிப்பவர்கள். மீதமுள்ள 128.5 கோடி மக்களின் ஆண்டு வருவாய் இரண்டரை லட்சத்துக்கும் கீழ். இவர்களில் யாரும் இனி தங்கள் குழந்தைகளை மருத்துவராக்கும் கனவை காண முடியாது!
சமீபத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டு இறந்த தமிழக மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா(19 வயது) தனது தற்கொலை வாக்குமூலத்தில் எழுதிய “என்னை மன்னிக்கவும். நான் சோர்வடைந்துவிட்டேன்” (“I SORRY. I AM TIRED”) என்ற வாக்கியம், இந்த நீட் தேர்வு முறையால் கல்வியில் காட்டப்படும் பாகுபாடு, பயிற்சி மையங்கள் என்ற பெயரில் நடக்கும் மோசடிகள், இவற்றால் நசுக்கப்படும் ஏழை-தடுத்தர குடும்பங்களின் மொத்த வலியின் வெளிப்பாடே. கடந்த ஆண்டை விட இந்த வருடம் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 13% வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பணக்காரர்களுக்காகவும் முதலாளித்துவ லாப வெறிக்காகவும்
கொண்டு வரப்பட்ட இந்த நீட் தேர்வினால் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு இந்திய ஒன்றிய
அரசும் மாநில அரசும் தான் முழு பொறுப்பு.
மாணவர்கள் கல்வியில் இதை விட மிகப்பெரிய அடுத்த
பேராபத்தாக வரப்போவது ‘புதிய கல்வி கொள்கை 2020’ சட்டம்
தான்.
தமிழ்நாடு போன்ற கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தின் பறிபோகும் உரிமைகளை மீட்க வேண்டுமென்றால், கல்வி அதிகாரம் மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும். 1976-ல் அவசர கால(Emergency) நடவடிக்கையாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கல்வி உள்ளிட்ட இன்னும் சில அதிகார உரிமைகள் மாநில பட்டியலில் இருந்து பொது(ஒன்றியம் மற்றும் மாநிலம்) பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டது. கல்வி பொதுப் பட்டியலில் இருக்கும் வரை அதில் ஒன்றிய அரசின் கையே ஓங்கி நிற்கும்.
அன்புடன்,
ஜெகன்









