புதன், 8 பிப்ரவரி, 2023

சாதியால் எனக்கு எந்தப் பயனுமில்லை



சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் கேள்விப்பட்டு திகைத்துப் போய் இருந்தேன். தமிழ்நாட்டில் இத்தகைய கொடூரச் சம்பவங்கள் நடக்கின்றனவா என்று ஒவ்வொரு முறை இதுபோன்ற சம்வங்களைக் கேள்விப்படும்போதும் தோன்றும். அத்துடன் இத்தகைய இழிவான செயல்களைச் செய்யும் மனித விலங்குகள் ஏன் தமிழ்நாட்டின் இருக்கின்றன என்ற கோபமும் ஆத்திரமும் வரும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமமாகச் சென்று தீண்டாமைச் சுவர்களை இடித்து நொறுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு கிராமத்தின் ஊர் முனைகளில் மேடை போட்டுநாம் அனைவரும் தமிழர்கள். அதைத் தவிர நமக்கு வேறு அடையாளம் கிடையாது. அதை மீறுபவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்!” என்று முழங்க வேண்டும் எனவும் தோன்றும்.

இவற்றைச் செய்தாக வேண்டிய நாட்கள் வெகு தொலைவில் இல்லை. த்தகைய பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை காலம் கனியும்போது நிறைவடையும் என நம்புகிறேன்.

நான் சென்னையில் பிறந்தேன். இங்கு ஊர்-சேரி என்ற பாகுபாடு கிடையாது. தலைநகரம் என்பதால் அனைத்து ஊர் மக்களும் இருப்பதால் சாதி பேதம் கிடையாது.

நான் பிறந்தது என்னவோ பட்டியல் சாதியில் தான் (OBC). ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இடஒதுக்கீட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு கூட நான் எனது பள்ளி இறுதி ஆண்டில் மதிப்பெண்கள் பெறவில்லை. இறுதியாக நான் கடைசி தேர்வாக வைத்திருந்த சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் மாலை சுயநிதி வகுப்புகளில் வணிகவியல் சேர்ந்தேன்.  

அங்கு என்னுடன் சேர்ந்த என் வகுப்பு மாணவர்களும் என்னைப் போல் தான். 17 வருடங்களுக்கு முன்பு, ஆண்டுக்கு 12,000 கட்டணம் செலுத்தி படித்தோம். நாங்கள் நன்மதிப்பில் இடஒதுக்கீடும் பெறவில்லை, தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் செலவாகும் மருத்துவம், பொறியியல் படிப்பையும் படிக்கவில்லை. எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த பலரும் முதல் தலைமுறை பட்டதாரிகளாகக் கல்லூரி படிப்பை முடித்து வெளிவந்தோம்.

மாணவர்களாக இருந்த எங்களுக்கிடையே சாதி பேதமோ வர்க்க பேதமோ இருந்தது கிடையாது. பொதுவாக அனைவரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே.

கிராமங்களில் இருப்பதுபோல் சென்னையில் சாதி பேதமில்லை. ஆனால் வர்க்க பேதம் நிச்சயம் உள்ளது. பொருளாதாரச் சமத்துவத்தைக் கொண்டுவர தான் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளது என்றால் தமிழ்நாட்டில் வேங்கைவயல் போன்ற சாதியக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.

பெரியார் முன்னெடுத்த, பெயருக்குப் பின்னால் சாதியைப் போடுவதில்லை என்ற வழக்கம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தில் தற்போது தமிழ்நாடு இருக்கிறது.

சாதியை ஒழிப்பதில் இருக்கும் முக்கியச் சிக்கலாக அண்ணல் அம்பேத்கர் கருதுவது, சாதி ஒழிக்கப்படுவதால் சில உயர் சாதியினர் தங்களுக்கான உரிமைகளையும் வசதிகளையும் இழக்க நேரிடும் என்பதால் இது மிகவும் கடினமாக ஒரு காரியம் எனக் கூறுகிறார்.

சக மனிதனை மனிதனாக மதிக்காத இழிநிலைக்குத் தமிழ்நாட்டைச் சாதிய மனநிலை கொண்டு செல்கிறது என்றால், உயர் சாதியினர் தங்கள் உரிமைகளையும் வசதிகளையும் இழப்பதில் எந்தத் தவறுமில்லை.

எனவே, சாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். வேங்கைவயல் கிராமத்தில் குற்றம் இழைத்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது மிகக் கடுமையான தண்டனையைத் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.


அன்புடன்,

ஜெகன்

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமைகள்

இந்தியாவின் கிழக்குக் கடற்கரைகளின் சிறப்பம்சங்களில் ஒன்று வருடந்தோரும், அழிவின் விளிம்பில் உள்ள அறிய வகை ஆமை இனமான ஆலிவ் ரிட்லி ஆமைகள்பல்லாயிரக் கணக்கில் வந்து முட்டை இட்டுச் செல்வதாகும். அந்த முட்டைகளை வனத்துறையினரும் தன்னார்வலர்களும் சேர்ந்து பாதுகாத்து குஞ்சுகள் பொரிந்த பின் பாதுகாப்பாகக் கடலில் மீண்டும் விடுகின்றனர். இந்நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது.









அவ்வாறு விடப்படும் ஆமைக் குஞ்சுகள் பெரும்பாலும் கடல் மீன்களுக்கு இரையாகிவிடும். அதிலிருந்தும் தப்பி உயிர் பிழைக்கும் ஆமைகள் வளர்ந்து மீண்டும் முட்டைகளை இடுவதற்கு நம் கடற்கரைக்குத் திரும்ப வருகின்றன. வேடந்தாங்கல் போன்ற மற்றுமொரு அபூர்வ இனப்பெருக்க நிகழ்வு இத்தகைய ஆலிவ் ரிட்லி ஆமைகளின் வருகை.

சென்ற வருடம் பெசன்ட் நகரில் தங்கியிருந்த போது ஆமைகளைக் கடலில் விடும் நிகழ்வைக் காண வேண்டுமென நினைத்தேன்.





சென்னையில் தன்னார்வ அமைப்பான SSTCN (The Students Sea Turtle Conservation Network – மாணவர்களின் கடல் ஆமைகள் பாதுகாப்பு அமைப்பு) ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்த ஆமைகளைப் பேணுவதற்கான நடைபயணத்திற்கு (நீலாங்கரை கடற்கரை முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரை) பொதுமக்களை அழைக்கிறது. அப்படி சென்று வருடம் போனபோது ஆலிவ் ஆமைகள் இனம் குறித்தும் எப்படி இங்கு வந்து குஞ்சு பொரிக்கின்றன உள்ளிட்ட சில தகவல்களை அந்த அமைப்பினர் நம்மிடைய பகிர்ந்துகொண்டனர்.

அதன் பிறகு நடைபயணம் தொடங்கியது. இரவு முழுவதும் கடற்கரையை ஒட்டிய மீனவ கிராமங்களைக் கடந்து பெசன்ட் நகரில் வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள குஞ்சு பொரிப்பகத்திற்கு வந்தடைகிறோம். அங்கு கடற்கரை மணலில் கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றோம்.




இந்தக் காலக்கட்டத்தில் தினமும் மாலை வேளையில், பொரிந்த குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் வெளியிடும் நிகழ்வு நடைபெறுகிறது. அதையும் பொதுமக்கள் சென்று பார்க்கலாம்.

இத்தகைய ஆமைகளுடைய முட்டை இடுதல் நிகழ்வு, அவற்றைப் பேணுதல், பொரிந்த குஞ்சுகளைக் கடலில் விடுதல் ஆகியவை மெரினா கடற்கரை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு கடற்கரைகள் மற்றும் இந்தியாவின் கிழக்கு கடற்கரைகளிலும் நடைபெறுகின்றன. குறிப்பாக ஒடிசாவின் கடற்கரைகளில் ஆலிவ் ஆமைகள் அதிகளவில் குஞ்சு பொரித்து வந்தன. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அதிகப் படகுப் போக்குவரத்து காரணமாக அவற்றின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகின்றன மற்றும் ஆமைகளின் இறப்பும் அதிகரித்துள்ளன.



ஒடிசா மாநிலத்தில் இத்தகைய அழிந்து வரும் ஆலிவ் ஆமைகளைப் பாதுகாக்க நவம்பர் முதல் மே மாதம் வரை கடலில் மீன் பிடிக்கத் தடை உள்ளது மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மீன் பிடிக்கத் தடையும் அதை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதல் சிறப்பாக, ஒடிசாவின் அனைத்துத் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகளுக்கான அதிஷ்ட விலங்காக ‘ஓலி’ என்று பெயரிடப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழலைப் பேணுவதில் ஒடிசா அரசு இவ்வளவு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக அரசு தற்போது கடலில் பேனா நினைவு சின்னம் வைக்கத் திட்டமிட்டுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் கருணாநிதிக்கு முதலில் அண்ணா நினைவிடத்திற்கு அருகில் உள்ள அவருடைய நினைவிடத்தில் தான் நினைவுச் சின்னம் வைக்கப்படுதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீடீரென அதே பேனா சின்னம் கடலுக்குள் 81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் வைக்கப்படும் என்ற அறிவிப்பு வியப்பூட்டுகிறது.

கடலுக்குள் பேனா நினைவிடத்தை அமைத்து அதைச் சுற்றுலாத் தளமாக மாற்றினால் கடல் மேலும் மாசடையும். ஒரு புறம் ஒடிசா அரசு அழிவின் விளிம்பில் உள்ள ஆமைகளையும் சுற்றுச்சூழலையும் பேணுவதற்காகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசோ கடலுக்குள் நினைவு சின்னம் அமைக்கும் திட்டத்தை வகுக்கிறது. இதுபோன்று சுற்றுச்சூழல் மீது அக்கறை காட்டாமல் இருந்தால் எப்படி காலநிலை மாற்ற விளைவுகளை நம் அரசால் சமாளிக்க முடியும் என்ன ஐயம் எழுகிறது.



கருணாநிதி தமிழ்நாட்டின் மிகப் பெரிய தலைவர். அவருக்கு நினைவு சின்னம் வைப்பதை எவரும் தடுக்கவில்லை. அவருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதற்கு முன் சுற்றுச்சூழலையும் திமுக அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.

அன்புடன்,

ஜெகன்