இந்தியாவின் கிழக்குக் கடற்கரைகளின் சிறப்பம்சங்களில் ஒன்று வருடந்தோரும், அழிவின் விளிம்பில் உள்ள அறிய வகை ஆமை இனமான ‘ஆலிவ் ரிட்லி ஆமைகள்’ பல்லாயிரக் கணக்கில் வந்து முட்டை இட்டுச் செல்வதாகும். அந்த முட்டைகளை வனத்துறையினரும் தன்னார்வலர்களும் சேர்ந்து பாதுகாத்து குஞ்சுகள் பொரிந்த பின் பாதுகாப்பாகக் கடலில் மீண்டும் விடுகின்றனர். இந்நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது.
அவ்வாறு விடப்படும்
ஆமைக் குஞ்சுகள் பெரும்பாலும் கடல் மீன்களுக்கு
இரையாகிவிடும். அதிலிருந்தும் தப்பி உயிர் பிழைக்கும் ஆமைகள்
வளர்ந்து மீண்டும் முட்டைகளை இடுவதற்கு நம் கடற்கரைக்குத் திரும்ப வருகின்றன.
வேடந்தாங்கல் போன்ற மற்றுமொரு அபூர்வ இனப்பெருக்க
நிகழ்வு இத்தகைய ஆலிவ் ரிட்லி ஆமைகளின் வருகை.
சென்ற
வருடம் பெசன்ட் நகரில் தங்கியிருந்த போது ஆமைகளைக் கடலில் விடும் நிகழ்வைக் காண வேண்டுமென
நினைத்தேன்.
சென்னையில் தன்னார்வ அமைப்பான SSTCN (The Students Sea Turtle Conservation
Network – மாணவர்களின் கடல் ஆமைகள் பாதுகாப்பு அமைப்பு) ஒவ்வொரு
வருடமும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்த ஆமைகளைப் பேணுவதற்கான நடைபயணத்திற்கு
(நீலாங்கரை கடற்கரை முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரை) பொதுமக்களை அழைக்கிறது. அப்படி
சென்று வருடம் போனபோது ஆலிவ் ஆமைகள் இனம் குறித்தும் எப்படி இங்கு வந்து குஞ்சு பொரிக்கின்றன
உள்ளிட்ட சில தகவல்களை அந்த அமைப்பினர் நம்மிடைய பகிர்ந்துகொண்டனர்.
அதன் பிறகு நடைபயணம்
தொடங்கியது. இரவு முழுவதும் கடற்கரையை ஒட்டிய மீனவ கிராமங்களைக் கடந்து பெசன்ட் நகரில்
வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள குஞ்சு பொரிப்பகத்திற்கு வந்தடைகிறோம். அங்கு கடற்கரை
மணலில் கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றோம்.
இந்தக் காலக்கட்டத்தில்
தினமும் மாலை வேளையில், பொரிந்த குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் வெளியிடும் நிகழ்வு
நடைபெறுகிறது. அதையும் பொதுமக்கள் சென்று பார்க்கலாம்.
இத்தகைய ஆமைகளுடைய
முட்டை இடுதல் நிகழ்வு, அவற்றைப் பேணுதல், பொரிந்த குஞ்சுகளைக் கடலில் விடுதல் ஆகியவை
மெரினா கடற்கரை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு கடற்கரைகள் மற்றும் இந்தியாவின் கிழக்கு
கடற்கரைகளிலும் நடைபெறுகின்றன. குறிப்பாக ஒடிசாவின் கடற்கரைகளில் ஆலிவ் ஆமைகள் அதிகளவில்
குஞ்சு பொரித்து வந்தன. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அதிகப் படகுப் போக்குவரத்து காரணமாக
அவற்றின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகின்றன மற்றும் ஆமைகளின் இறப்பும் அதிகரித்துள்ளன.
ஒடிசா மாநிலத்தில்
இத்தகைய அழிந்து வரும் ஆலிவ் ஆமைகளைப் பாதுகாக்க நவம்பர் முதல் மே மாதம் வரை கடலில்
மீன் பிடிக்கத் தடை உள்ளது மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மீன் பிடிக்கத் தடையும்
அதை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதல்
சிறப்பாக, ஒடிசாவின் அனைத்துத் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகளுக்கான அதிஷ்ட விலங்காக
‘ஓலி’ என்று பெயரிடப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல்லுயிர் மற்றும்
சுற்றுச்சூழலைப் பேணுவதில் ஒடிசா அரசு இவ்வளவு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில்
திமுக அரசு தற்போது கடலில் பேனா நினைவு சின்னம் வைக்கத் திட்டமிட்டுள்ளது சுற்றுச்சூழல்
ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர் கருணாநிதிக்கு
முதலில் அண்ணா நினைவிடத்திற்கு அருகில் உள்ள அவருடைய நினைவிடத்தில் தான் நினைவுச் சின்னம்
வைக்கப்படுதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீடீரென அதே பேனா சின்னம் கடலுக்குள்
81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் வைக்கப்படும் என்ற அறிவிப்பு வியப்பூட்டுகிறது.
கடலுக்குள் பேனா
நினைவிடத்தை அமைத்து அதைச் சுற்றுலாத் தளமாக மாற்றினால் கடல் மேலும் மாசடையும். ஒரு
புறம் ஒடிசா அரசு அழிவின் விளிம்பில் உள்ள ஆமைகளையும் சுற்றுச்சூழலையும் பேணுவதற்காகப்
பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசோ கடலுக்குள் நினைவு சின்னம்
அமைக்கும் திட்டத்தை வகுக்கிறது. இதுபோன்று சுற்றுச்சூழல் மீது அக்கறை காட்டாமல் இருந்தால்
எப்படி காலநிலை மாற்ற விளைவுகளை நம் அரசால் சமாளிக்க முடியும் என்ன ஐயம் எழுகிறது.
கருணாநிதி தமிழ்நாட்டின்
மிகப் பெரிய தலைவர். அவருக்கு நினைவு சின்னம் வைப்பதை எவரும் தடுக்கவில்லை. அவருக்கு
நினைவுச் சின்னம் அமைப்பதற்கு முன் சுற்றுச்சூழலையும் திமுக அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள
வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
அன்புடன்,
ஜெகன்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக