சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் கேள்விப்பட்டு திகைத்துப் போய் இருந்தேன். தமிழ்நாட்டில் இத்தகைய கொடூரச் சம்பவங்கள் நடக்கின்றனவா என்று ஒவ்வொரு முறை இதுபோன்ற சம்வங்களைக் கேள்விப்படும்போதும் தோன்றும். அத்துடன் இத்தகைய இழிவான செயல்களைச் செய்யும் மனித விலங்குகள் ஏன் தமிழ்நாட்டின் இருக்கின்றன என்ற கோபமும் ஆத்திரமும் வரும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமமாகச் சென்று தீண்டாமைச் சுவர்களை இடித்து நொறுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு கிராமத்தின் ஊர் முனைகளில் மேடை போட்டு “நாம் அனைவரும் தமிழர்கள். அதைத் தவிர நமக்கு வேறு அடையாளம் கிடையாது. அதை மீறுபவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்!” என்று முழங்க வேண்டும் எனவும் தோன்றும்.
இவற்றைச்
செய்தாக வேண்டிய நாட்கள் வெகு தொலைவில் இல்லை. இத்தகைய பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை காலம் கனியும்போது
நிறைவடையும் என நம்புகிறேன்.
நான் சென்னையில்
பிறந்தேன். இங்கு
ஊர்-சேரி என்ற பாகுபாடு கிடையாது. தலைநகரம்
என்பதால் அனைத்து ஊர் மக்களும் இருப்பதால் சாதி பேதம் கிடையாது.
நான் பிறந்தது
என்னவோ பட்டியல் சாதியில் தான்
(OBC). ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இடஒதுக்கீட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு கூட நான் எனது
பள்ளி இறுதி ஆண்டில் மதிப்பெண்கள் பெறவில்லை. இறுதியாக நான் கடைசி தேர்வாக வைத்திருந்த சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில்
மாலை சுயநிதி வகுப்புகளில் வணிகவியல் சேர்ந்தேன்.
அங்கு
என்னுடன் சேர்ந்த என் வகுப்பு மாணவர்களும் என்னைப் போல் தான். 17 வருடங்களுக்கு முன்பு,
ஆண்டுக்கு 12,000 கட்டணம் செலுத்தி படித்தோம்.
நாங்கள் நன்மதிப்பில் இடஒதுக்கீடும் பெறவில்லை, தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் செலவாகும் மருத்துவம், பொறியியல் படிப்பையும் படிக்கவில்லை. எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த பலரும்
முதல் தலைமுறை பட்டதாரிகளாகக் கல்லூரி படிப்பை முடித்து வெளிவந்தோம்.
மாணவர்களாக இருந்த
எங்களுக்கிடையே சாதி பேதமோ வர்க்க பேதமோ இருந்தது கிடையாது. பொதுவாக அனைவரும் நடுத்தர
வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே.
கிராமங்களில் இருப்பதுபோல்
சென்னையில் சாதி பேதமில்லை. ஆனால் வர்க்க பேதம் நிச்சயம் உள்ளது. பொருளாதாரச் சமத்துவத்தைக்
கொண்டுவர தான் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளது என்றால் தமிழ்நாட்டில் வேங்கைவயல்
போன்ற சாதியக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.
பெரியார் முன்னெடுத்த,
பெயருக்குப் பின்னால் சாதியைப் போடுவதில்லை என்ற வழக்கம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாகக்
கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தில்
தற்போது தமிழ்நாடு இருக்கிறது.
சாதியை ஒழிப்பதில்
இருக்கும் முக்கியச் சிக்கலாக அண்ணல் அம்பேத்கர் கருதுவது, சாதி ஒழிக்கப்படுவதால் சில
உயர் சாதியினர் தங்களுக்கான உரிமைகளையும் வசதிகளையும் இழக்க நேரிடும் என்பதால் இது
மிகவும் கடினமாக ஒரு காரியம் எனக் கூறுகிறார்.
சக மனிதனை மனிதனாக
மதிக்காத இழிநிலைக்குத் தமிழ்நாட்டைச் சாதிய மனநிலை கொண்டு செல்கிறது என்றால், உயர்
சாதியினர் தங்கள் உரிமைகளையும் வசதிகளையும் இழப்பதில் எந்தத் தவறுமில்லை.
எனவே, சாதி ஒழிப்புக்கான
நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். வேங்கைவயல்
கிராமத்தில் குற்றம் இழைத்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது மிகக் கடுமையான தண்டனையைத்
தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.
அன்புடன்,
ஜெகன்




