செவ்வாய், 24 டிசம்பர், 2024

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா - 2024



சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவின் 22ம் வருட தொகுப்பு 2024 டிசம்பர் 12 முதல் 19 வரை நடந்து முடிந்தது. ஒரு பங்கேற்பாளராக நான் கலந்து கொண்டது இதுவே முதல்முறை என்று சொல்லவே கூச்சமாக உள்ளது. 2015 சென்னை சர்வதேசக் குறும்பட விழாவில் எனது குறும்படமும் இடம்பெற்றது. அப்போது தான் இந்த விழாவின் ஒருங்கிணைப்பு குறித்து பரிச்சயம். ஆனால், ஏதோ காரணங்களால் முழுநீளத் திரைப்பட விழாவிற்குச் செல்லும் வாய்ப்பு அமையவில்லை. தொடர்ந்து ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் நடப்பதால் கூட கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த முறை கலந்துகொண்டது பெரும் மகிழ்ச்சியையும் அனுபவத்தையும் கொடுத்தது.

உலகம் முழுவதும் திரைப்பட விழாக்கள் 1932 முதல் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் 1952 முதல் கோவாவில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது என்றாலும், தமிழ்நாட்டில் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா தொடங்கப்பட்டு 22 வருடங்களே ஆகின்றன.

இந்த முறை சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவை, பி.வி.ஆர் சத்யம் மற்றும் சிட்டி சென்டர் ஐநாக்ஸ் ஆகிய இரண்டு திரையரங்கங்களில் உள்ள 6 திரையரங்குகளில் திரையிடப்பட்டன.

திரைத்துறையினர், மாணவர்கள் ஆகியோருக்கு 500 ரூபாய் நுழைவுக் கட்டணமும், பொதுமக்களுக்கு 1099 ரூபாய் நுழைவுக் கட்டணமும் பெறப்படுகிறது. விழாவிற்கு முன்பதிவு செய்து அடையாள அட்டை பெற வேண்டும்.

ஆறு திரையரங்குகளில் தினமும் 4 காட்சிகள் வீதம் 24 காட்சிகளும், 8 நாட்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட காட்சிகளும் திரையிடப்படுகின்றன. ஒருவரால் ஒரு நாளுக்கு 4 படங்களையும் அதிகபட்சமாக 8 நாட்களில் 32 படங்கள் வரையும் பார்க்க முடியும். இதனால், சில முக்கியமான படங்கள் ஒருமுறைக்கு மேல் திரையிடப்படுகின்றன. எனவே, பெரும்பாலானோர் அவற்றைப் பார்த்து ரசிக்க ஏதுவாக இருக்கும்.

திரையிடல் தவிர தினமும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை திரைத்துறை நிபுணர்களின் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில் சினிமாவின் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் தங்கள் அனுபவங்களையும் சினிமாவின் தொழில்நுட்பங்கள் குறித்த வகுப்புகளையும் அதையொட்டிய கலந்துரையாடல்களையும் நிகழ்த்துகின்றனர். இவை சினிமாவிற்கான கற்றலை ஊக்குவிக்கிறது.

பொதுவான திரையிடல்களைத் தவிர சினிமா கலைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்காகச் சிவப்புக் கம்பள வரவேற்புடன் ஓர் அரங்கில் தினமும் இரண்டு சிறப்புக் காட்சிகளும் திரையிடப்படுகின்றன. இந்தக் காட்சிகளுக்கு முன்பதிவு செய்து மற்றவர்களும் பார்க்கலாம். அந்தப் படங்கள் மற்ற நாட்களில் பிற திரையரங்குகளிலும் காட்சிப்படுத்தப்படுகின்றன. சில படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பாகவே இத்தகைய திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகின்றன, அது திரைப்பட விழாக்களின் சிறப்பம்சமாகும்.

ஒருவர் தினமும் 4 காட்சிகள் தவறாமல் பார்த்தாலும் அதிகபட்சம் 32 படங்கள் வரை தான் பார்க்க முடியும். ஆனால், 8 நாட்களில் 32 திரைப்படங்கள் என்பது எண்ணிக்கையில் அதிகமே! நான் 25 படங்களைப் பார்த்தேன்.

அவை: 1) The Locust, 2) Vera and the Pleasure of Others, 3) The Room Next Door, 4) Loveable, 5) Stormskerry Maya, 6) 35-Chinna Katha Kaadu, 7) The Village Next to Paradise, 8) The Girl with the Needle, 9) Sima’s Unfinished Narration, 10) Waves, 11) The Seed of The Sacred Fig, 12) Saturn Return, 13) Jama, 14) Kishkindha Kaandam, 15) Quiet Life, 16) Andrea Gets a Divorce, 17) Motel Destino, 18) Meiyazhagan, 19) The Best Families, 20) In the Blindspot, 21) Every You Every Me, 22) Emilia Perez, 23) Europa, 24) Fuhrer and Seducer, 25) Anora.

இவற்றில் என்னைக் கவர்ந்த படங்கள் – The Locust, The Room Next Door, Loveable, Stormskerry Maja, The Village Next to Paradise, The Girl with the Needle, Sima’s Unfinished Narration, Waves, The Seed of the Sacred Fig, Jama, Kishkindha Kaandam, Quiet Life, Andrea Gets a divorce, Meiyazhagan, Emilia Perez, Europa, Fuhrer and Seducer மற்றும் Anora.

பார்த்த 25 படங்களில் 18 படங்கள் பிடித்திருந்தன என்பது சிறப்பு தான். இதில் இந்தியத் திரைப்படங்களை விட்டுவிட்டு வெளிநாட்டுப் படங்களில் சிறந்த 6 படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால், இவற்றைச் சொல்வேன்:

1) The Seed of the Sacred Fig, 2) The Village Next to Paradise, 3) The Girl with the Needle, 4) Stormskerry Maja, 5) Emilia Perez 6) Quiet Life

உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் பகிர்வாகவே திரைப்பட விழாக்கள் அமைகின்றன.

சமூகப் பிரச்சனைகளைக் கையாண்ட படங்கள் – Stormskerry Maja, The Village Next to Paradise, The Girl with the Needle, Quiet Life, Europa.

Fuhrer and Seducer - சர்வாதிகாரி ஹிட்லரின் நாசி அரசின் பிரச்சார அமைச்சராக இருந்த ஜோசப் கோயபெல்ஸ் மேற்கொண்ட பிரச்சார உத்திகளை உண்மையான ஆவணக் காட்சிகளுடன் பொருந்தும் விதமாக வரலாற்றுப் படமாக சிறப்பாகக் கதை சொல்லப்பட்டிருந்தது.

The Village Next to Paradise – சோமாலியா நாட்டில் வாழும் சமூகத்தின் உதிரிகளின் கதையை இந்தப் படம் சொல்கிறது.

The Seed of the Sacred Fig, Kishkindha Kaandam - துப்பாக்கி தொலைந்ததால் நிகழும் பிரச்சனைகளால் பின்னப்பட்ட கதைகளாக இருந்தன.

Europa – பெரு நிறுவனத்திற்கான நில ஆக்கிரமிப்பிற்காக அல்பேனியா நாட்டில் ஒரு கிராமத்தின் பூர்வீக மக்களை வெளியேற்ற நிறுவனத்தின் பிரதிநிதி மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

Andrea Gets a Divorce மற்றும் The Best Families - Black Comedy படங்கள்.

Waves – 1968ல் செக்கோஸ்லோவாக்கியாவில் நடந்த அரசியல் விடுதலைப் போராட்டம் மற்றும் அதையடுத்து சோவியத் யூனியன் உள்ளிட்ட நான்கு நாடுகள் செக்கோஸ்லோவாக்கியா மீது படையெடுப்பு நடத்தியதை அந்நாட்டின் வானொளி அலுவலகத்தை மையமாகக் கொண்டு, கருத்து சுதந்திரம் குறித்து பேசுகிறது படம்.

Sima’s Unfinished Narration – பிரபலமான உளவியலாளரைப் பற்றிய ஒரு செய்தி சமூக ஊடகத்தில் வெளியானதால் அவரின் வாழ்வில் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய கதை.

சிறந்த உருவாக்கம், சிறந்த திரைக்கதை அம்சம், துப்பாக்கியும் பிரச்சனையும், உறவுமுறை சிக்கல்கள், உதிரிகளின் கதை, சமூகப் பிரச்சனைகள் எனத் திருவிழாவில் படங்களின் வகைமைகள் பரவலாக இருந்தன.

பல்வேறுபட்ட மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் அடிப்படையில் இந்தத் திரைப்படங்கள் வேறுபட்டு இருந்தாலும், உணர்வுகளின் அடிப்படையில் அவை நம்மை இணைக்கின்றன – அதுவே சினிமாவின் சிறப்பம்சம்.

அன்புடன்,

ஜெகன்

ஞாயிறு, 10 நவம்பர், 2024

அமெரிக்கத் தேர்தலுக்காகத் தஞ்சாவூர் பயணம்

கடந்த சில வருடங்களில் பெரிதாகப் பயணம் செய்யவில்லை. ஆனால், பணிக்காகத் தஞ்சாவூர் வரை பயணிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.

கடந்த சில வருடங்களாக எனது பணி என்பது மொழிபெயர்ப்புத் துறை சார்ந்து அமைந்துவிட்டது. சர்வதேச நிறுவனங்கள், அரசு துறை சார்ந்த நிறுவனங்கள், தனியார் எனப் பலருக்கும் மொழிபெயர்ப்பு சேவைகளையும், உள்ளடக்கம் எழுதும் பணிகளையும் செய்து வருகிறேன்.

சினிமா இயக்கும் எண்ணம் இருந்தாலும், பிழைப்புக்கு மொழிபெயர்ப்பே எனது வேலையாக இருந்து வருகிறது.

அப்படி ஒரு சர்வதேசச் செய்தி நிறுவனத்திற்காக அவர்களின் செய்தியாளர்களுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதன் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமம் தமிழ்நாட்டின் தஞ்சாவூரை அடுத்த திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அது மன்னார்குடியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும்.

அங்கு கமலா ஹாரிஸின் தாய் வழி தாத்தா பி.வி.கோபாலன் வாழ்ந்துள்ளார். அவர் நூறு வருடங்களுக்கு முன்பே அந்த கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்றாலும், அவர்களது குலதெய்வக் கோவிலான ஸ்ரீ தர்மசாஸ்தா ஸ்ரீ சேவகப்பெருமாள் ஆலயத்திற்கு பி.வி.கோபாலன், கமலா ஹாரிஸ் (தனது சித்தி மூலமாக) உள்ளிட்ட குடும்பத்தினர் நிதியுதவி செய்து வந்துள்ளனர். அவர்களின் பெயர்களும் அங்குள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் 2020ல் அமெரிக்காவின் துணை அதிபராகப் போட்டியிடுகிறார் என்ற செய்தி வெளியானவுடன் அவரது பூர்வீக ஊரான துளசேந்திரபுரம் பிரபலமடைந்தது. அங்குள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடந்தன. அதேபோல் அவர் துணை அதிபரான பிறகு அந்த கிராம மக்கள் அதைக் கொண்டாடியுள்ளனர். அப்போது நானும் அவற்றைச் செய்தியில் பார்த்தேன். ஆனால், 2024 அதிபர் தேர்தலுக்காக நான் அங்கு செல்வேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை!


தற்போது 2024ல் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருந்த சூழலில் அந்த கிராம மக்களிடம் கமலாவின் வெற்றிக்கான எதிர்பார்ப்பு இருந்தது, அதற்காகப் பிராத்தனையும் செய்தனர். மீண்டும் ஊடகங்களின் பார்வை துளசேந்திரபுரம் மீது திரும்பியது.

இதற்கான செய்திகளைச் சேகரிக்க வந்த சர்வதேச ஊடகத்தினருக்குத் தமிழ் மொழி தெரியாத சூழலில் அவர்களுக்கு மொழிபெயர்த்து உதவிட ஒரு மொழிபெயர்ப்பாளரின் தேவை இருந்தது. அந்த வாய்ப்பு மூலம் தஞ்சாவூர் சென்றிருந்தேன்.

நான் வலைப்பதிவுகளில் பல கட்டுரைகளை எழுதி புத்தகம் கூட வெளியிட்டுள்ளேன். ஆனால், களத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்காக இதுவரை பணியாற்றியதில்லை. அந்த வகையில் இந்தப் பயணம் ஒரு சிறந்த அனுபவமாகவே அமைந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி கமலாவின் பூர்வீக கிராம மக்களிடையேயும் அவரது குலதெய்வக் கோவிலிலும் எத்தகைய சூழல் நிலவுகிறது என அறிவதற்காகச் சென்றிருந்தோம். உள்ளூர் மக்களிடமும், கோவில் அர்ச்சகரிடமும், உள்ளூர் அரசியல்வாதிகளிடமும் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது குறித்துக் கேட்டறிந்தோம். அது செய்தித் தொகுப்பாகவும் வெளியானது.

இதற்காகச் சில நாட்கள் தஞ்சையில் தங்கியிருந்தேன். பொதுவாக வெளியூர்களுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டால் அந்தப் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களைப் பார்வையிடவும் நேரம் ஒதுக்கி அந்தப் பயணத்தைத் திட்டமிடுவது எனது வழக்கம். அப்படித் தஞ்சாவூரைச் சுற்றிப் பார்க்கவும் ஒரு நாள் ஒதுக்கி எனது பயணத்தை அமைத்துக்கொண்டேன்.


சென்னையில் இருந்து தஞ்சைக்குச் செல்லும் வழியில் கொள்ளிடம் ஆறு, குடமுருட்டி ஆறு, வெண்ணாறு, கல்லணை கால்வாய் என காவிரி ஆற்றின் பல கிளையாறுகளும் காவிரியாறும் தஞ்சையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் செல்கின்றன.




தஞ்சை ஏன் ‘நெற்களஞ்சியம்’ என்று அழைக்கப்படுகிறது என்பதை அங்குள்ள பரந்து விரிந்த நெற்பயிர் விளை நிலங்களைப் பார்க்கும்போது உணர முடிந்தது. அங்கு தங்கிய சில நாட்களில் தினமும் தஞ்சையில் இருந்து துளசேந்திரபுரம் வரை சென்று வரும் சூழலில் விவசாய நிலங்களில் பெரும்பாலும் நெல் விவசாயம் தான், ஒரு சில இடங்களில் கரும்பும் பயிரிடப்பட்டிருந்தன.



நான் சென்றிருந்த பணி முடிந்த பிறகு சுற்றிப் பார்க்க ஒதுக்கிய ஒரு நாளில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பழங்காலக் கோவிலைப் பார்க்க வேண்டுமென அதிகாலையில் எழுந்து கும்பகோணம் வழியாக அங்கு சென்றேன். கோவிலுக்குக் கடவுள் வழிபாட்டிற்காக எல்லாம் செல்லவில்லை. யுனெஸ்கோவின் (UNESCO) பாரம்பரிய சின்னம் என்பதாலும் அக்கால கோவில் கட்டடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகளைக் காண தான் சென்றேன். மனநிறைவான அனுபவமாகவே இருந்தது.

மீண்டும் தஞ்சைக்குத் திரும்பினேன். அங்குள்ள தஞ்சையை ஆண்ட மாராத்திய மன்னர் அரண்மனைக்குச் சென்றேன். நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு 50 ரூபாய். அதிலேயே அரண்மனையின் கலைக்கூடம், சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகம், தஞ்சையைப் பற்றிய 20 நிமிட ஒலி-ஒளி குறும்படம் என எல்லாவற்றிற்கும் ஒருமுறை சென்று வர அனுமதி உண்டு. இது தஞ்சையில் நிச்சயம் பார்க்க வேண்டிய ஓர் இடம். பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்ததால் அரண்மனையின் ஒரு சில பகுதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

சரபோஜி மன்னரின் தர்பார் அறைக்குச் செல்ல தனியாக 5 ரூபாய்க்கான நுழைவுச்சீட்டு பெற வேண்டும். அங்கு தான் மிகவும் எதிர்பார்ப்புடன் சென்ற சுரங்கப்பாதை இருந்தது. அதாவது, அந்தக் காலத்தில் அந்த அறையில் இருக்கும் சுரங்கப்பாதை வழியாகவே தஞ்சை பெரிய கோவிலுக்கும், திருச்சி மலைக்கோவிலுக்கும் (உறுதிப்படுத்தப்படவில்லை) மன்னர் பயணிப்பதற்கான வழித்தடம் இருந்துள்ளதாகவும், அதை மன்னர் பயன்படுத்தியதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அந்த சுரங்கப்பாதையை எட்டிப் பார்த்தால் இருட்டாகவும், முழுக்க வௌவால்களும் இருந்தன, துர்நாற்றமும் சேர்ந்தே அடித்தது.


அன்றைய காலத்தில் ரகசியமாகப் பயணிக்க மன்னர்கள் சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தி வந்தனர். இன்றைய நவீனக் காலத்தில் சுரங்க ரயில்கள் மூலம் நாம் பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறோம்.


தஞ்சை பெரிய கோவிலை அங்கு சென்ற முதல் நாளே நேரம் கிடைத்தபோது சென்று பார்த்துவிட்டேன். 1000 வருடங்கள் கடந்து கம்பீரமாக நிற்கும் அந்தக் கோயிலைப் பார்க்கும்போது பிரம்மிப்பு தான் ஏற்படுகிறது. இதுபோன்ற காலம் கடந்து நிற்கும் வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கும்போது நேர இயந்திரம் (Time Machine) மூலம் அந்தக் காலத்திற்கே நாம் சென்றுவிட்டதாக எண்ணத் தோன்றும்.

யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் தஞ்சையில் இருப்பதுபோல், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களும் கலைப் பொருட்களும் தஞ்சையில் நிறையவே இருக்கின்றன.

மொத்தமாக, புதிய பணி அனுபவம், புதிய மனிதர்களைச் சந்தித்தது, பயணம் தந்த மகிழ்ச்சி என இந்த முறை எனது தஞ்சை பயணம் திருப்திகரமாகவே அமைந்தது. ஆனால், சரஸ்வதி மகாலில் போடப்பட்ட குறும்படத்தில் காட்டியபடி பார்த்தால், தஞ்சை மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் ஏராளமாக இருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பார்க்க ஒரு நாள் மட்டும் போதாது, ஒரு வாரமாவது தேவை. வரும் காலங்களில் பயணிப்போம்.


அன்புடன்,

ஜெகன்