கடந்த சில வருடங்களில் பெரிதாகப் பயணம் செய்யவில்லை. ஆனால், பணிக்காகத் தஞ்சாவூர் வரை பயணிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.
கடந்த சில வருடங்களாக
எனது பணி என்பது மொழிபெயர்ப்புத் துறை சார்ந்து அமைந்துவிட்டது. சர்வதேச நிறுவனங்கள்,
அரசு துறை சார்ந்த நிறுவனங்கள், தனியார் எனப் பலருக்கும் மொழிபெயர்ப்பு சேவைகளையும்,
உள்ளடக்கம் எழுதும் பணிகளையும் செய்து வருகிறேன்.
சினிமா இயக்கும்
எண்ணம் இருந்தாலும், பிழைப்புக்கு மொழிபெயர்ப்பே எனது வேலையாக இருந்து வருகிறது.
அப்படி ஒரு சர்வதேசச்
செய்தி நிறுவனத்திற்காக அவர்களின் செய்தியாளர்களுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றும்
வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.
2024 அமெரிக்க
அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதன் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமம் தமிழ்நாட்டின்
தஞ்சாவூரை அடுத்த திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அது மன்னார்குடியில் இருந்து
சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும்.
அங்கு கமலா ஹாரிஸின்
தாய் வழி தாத்தா பி.வி.கோபாலன் வாழ்ந்துள்ளார். அவர் நூறு வருடங்களுக்கு முன்பே அந்த
கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்றாலும், அவர்களது குலதெய்வக் கோவிலான ஸ்ரீ தர்மசாஸ்தா
ஸ்ரீ சேவகப்பெருமாள் ஆலயத்திற்கு பி.வி.கோபாலன், கமலா ஹாரிஸ் (தனது சித்தி மூலமாக)
உள்ளிட்ட குடும்பத்தினர் நிதியுதவி செய்து வந்துள்ளனர். அவர்களின் பெயர்களும் அங்குள்ள
கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்திய வம்சாவளியைச்
சேர்ந்த கமலா ஹாரிஸ் 2020ல் அமெரிக்காவின் துணை அதிபராகப் போட்டியிடுகிறார் என்ற செய்தி
வெளியானவுடன் அவரது பூர்வீக ஊரான துளசேந்திரபுரம் பிரபலமடைந்தது. அங்குள்ள ஸ்ரீ தர்ம
சாஸ்தா கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடந்தன. அதேபோல் அவர் துணை
அதிபரான பிறகு அந்த கிராம மக்கள் அதைக் கொண்டாடியுள்ளனர். அப்போது நானும் அவற்றைச்
செய்தியில் பார்த்தேன். ஆனால், 2024 அதிபர் தேர்தலுக்காக நான் அங்கு செல்வேன் என்று
நினைத்துக்கூட பார்க்கவில்லை!
தற்போது 2024ல்
கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருந்த சூழலில் அந்த கிராம மக்களிடம் கமலாவின்
வெற்றிக்கான எதிர்பார்ப்பு இருந்தது, அதற்காகப் பிராத்தனையும் செய்தனர். மீண்டும் ஊடகங்களின்
பார்வை துளசேந்திரபுரம் மீது திரும்பியது.
இதற்கான செய்திகளைச்
சேகரிக்க வந்த சர்வதேச ஊடகத்தினருக்குத் தமிழ் மொழி தெரியாத சூழலில் அவர்களுக்கு மொழிபெயர்த்து
உதவிட ஒரு மொழிபெயர்ப்பாளரின் தேவை இருந்தது. அந்த வாய்ப்பு மூலம் தஞ்சாவூர் சென்றிருந்தேன்.
நான் வலைப்பதிவுகளில்
பல கட்டுரைகளை எழுதி புத்தகம் கூட வெளியிட்டுள்ளேன். ஆனால், களத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்காக
இதுவரை பணியாற்றியதில்லை. அந்த வகையில் இந்தப் பயணம் ஒரு சிறந்த அனுபவமாகவே அமைந்தது.
அமெரிக்க அதிபர்
தேர்தலையொட்டி கமலாவின் பூர்வீக கிராம மக்களிடையேயும் அவரது குலதெய்வக் கோவிலிலும் எத்தகைய சூழல் நிலவுகிறது என அறிவதற்காகச் சென்றிருந்தோம்.
உள்ளூர் மக்களிடமும், கோவில் அர்ச்சகரிடமும், உள்ளூர் அரசியல்வாதிகளிடமும்
அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது குறித்துக் கேட்டறிந்தோம். அது செய்தித்
தொகுப்பாகவும் வெளியானது.
இதற்காகச் சில
நாட்கள் தஞ்சையில் தங்கியிருந்தேன். பொதுவாக வெளியூர்களுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டால்
அந்தப் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களைப் பார்வையிடவும் நேரம் ஒதுக்கி அந்தப் பயணத்தைத்
திட்டமிடுவது எனது வழக்கம். அப்படித் தஞ்சாவூரைச் சுற்றிப் பார்க்கவும் ஒரு நாள் ஒதுக்கி
எனது பயணத்தை அமைத்துக்கொண்டேன்.
சென்னையில் இருந்து
தஞ்சைக்குச் செல்லும் வழியில் கொள்ளிடம் ஆறு, குடமுருட்டி ஆறு, வெண்ணாறு, கல்லணை கால்வாய் என காவிரி ஆற்றின் பல கிளையாறுகளும் காவிரியாறும் தஞ்சையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும்
செல்கின்றன.
மீண்டும் தஞ்சைக்குத் திரும்பினேன். அங்குள்ள தஞ்சையை ஆண்ட மாராத்திய மன்னர் அரண்மனைக்குச் சென்றேன். நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு 50 ரூபாய். அதிலேயே அரண்மனையின் கலைக்கூடம், சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகம், தஞ்சையைப் பற்றிய 20 நிமிட ஒலி-ஒளி குறும்படம் என எல்லாவற்றிற்கும் ஒருமுறை சென்று வர அனுமதி உண்டு. இது தஞ்சையில் நிச்சயம் பார்க்க வேண்டிய ஓர் இடம். பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்ததால் அரண்மனையின் ஒரு சில பகுதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
சரபோஜி மன்னரின்
தர்பார் அறைக்குச் செல்ல தனியாக 5 ரூபாய்க்கான நுழைவுச்சீட்டு பெற வேண்டும். அங்கு
தான் மிகவும் எதிர்பார்ப்புடன் சென்ற சுரங்கப்பாதை இருந்தது. அதாவது, அந்தக் காலத்தில்
அந்த அறையில் இருக்கும் சுரங்கப்பாதை வழியாகவே தஞ்சை பெரிய கோவிலுக்கும்,
திருச்சி மலைக்கோவிலுக்கும் (உறுதிப்படுத்தப்படவில்லை) மன்னர்
பயணிப்பதற்கான வழித்தடம் இருந்துள்ளதாகவும், அதை மன்னர் பயன்படுத்தியதாகவும் அங்குள்ளவர்கள்
தெரிவித்தனர். அந்த சுரங்கப்பாதையை எட்டிப் பார்த்தால் இருட்டாகவும், முழுக்க வௌவால்களும்
இருந்தன, துர்நாற்றமும் சேர்ந்தே அடித்தது.
அன்றைய காலத்தில் ரகசியமாகப் பயணிக்க மன்னர்கள் சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தி வந்தனர். இன்றைய நவீனக் காலத்தில் சுரங்க ரயில்கள் மூலம் நாம் பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறோம்.
யுனெஸ்கோவின் பாரம்பரிய
சின்னங்கள் தஞ்சையில் இருப்பதுபோல், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களும் கலைப் பொருட்களும்
தஞ்சையில் நிறையவே இருக்கின்றன.
மொத்தமாக, புதிய
பணி அனுபவம், புதிய மனிதர்களைச் சந்தித்தது, பயணம் தந்த மகிழ்ச்சி என இந்த முறை எனது
தஞ்சை பயணம் திருப்திகரமாகவே அமைந்தது. ஆனால், சரஸ்வதி மகாலில் போடப்பட்ட குறும்படத்தில்
காட்டியபடி பார்த்தால், தஞ்சை மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் ஏராளமாக
இருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பார்க்க ஒரு நாள் மட்டும் போதாது, ஒரு வாரமாவது தேவை.
வரும் காலங்களில் பயணிப்போம்.
அன்புடன்,
ஜெகன்








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக