சனி, 6 டிசம்பர், 2025

தமிழ் நாட்டில் மத நல்லிணக்கம் சாத்தியமில்லையா?

தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்குப் பெயர் போன நாடு. ஆனால், அதை நிலைநாட்ட திமுக அரசு தவறிவிட்டது. 2021 தேர்தலின் போது முருகனின் வேலை எடுத்த திமுகவிற்கு, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவைத் தமிழ் மக்கள் கொண்டாட ஏன் அனுமதிக்க மனமில்லை?

சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவருவதற்காகப் பெரும்பான்மை மக்களின் உரிமையை மறுப்பதா? அதுவும் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காலம் தாழ்த்தி கலவரம் ஏற்படும் வகையில் திமுக அரசு நடந்துகொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது.

முருகன் தமிழர்களின் கடவுள். முருகனின் அறுபடை வீட்டில் உள்ள ஆறு கோவில்களில் முதல் கோவில் திருப்பரங்குன்றம் தான். இதில் மக்கள் தங்கள் கடவுளை வழிபடுவதில் திமுக அரசுக்கு ஏன் இவ்வளவு ஒவ்வாமை?

மதக் கலவரம் வந்துவிடும் என்று அஞ்சுகிறதா திமுக அரசு?

நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் தர்காவில் கந்தூரி விழா நேற்று நிறைவு பெற்றது. இதில் 5000க்கும் அதிகமானோருக்குச் சம்பந்தி வழங்கப்பட்டது. நாகூர் தர்கா என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி ஞானி சாகுல் ஹமீது அவர்களுக்காகக் கட்டப்பட்டது. இங்கு சாதி மத பேதம் இன்றி அனைத்து சமூகத்தினரும் வந்து வழிபடுகின்றனர். நாகூர் தர்கா இருக்கும் இடம் தஞ்சாவூரை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த மராத்தா மன்னர்களும் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு நிதி வழங்கி வந்தனர் என்பதே வரலாறு.

அடுத்ததாக, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் கிராமத்திற்கு வருவோம். அங்கு செல்லியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோரும் ஆடி மாதம் ஒட்டி நடைபெற்று வருகிறது. அங்குள்ள இந்து-முஸ்லீம் மதத்தினருக்கு இடையே 1912 முதலே சிறு பகைமை இருந்து வந்தது. 1990ல் அங்கு நடந்த பிரச்சனைக்குப் பிறகு அங்கு திருவிழா நடப்பதில் பதற்றம் நிலவி வந்தது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு அங்குள்ள இஸ்லாமிய சபையினர், இஃப்தார் நோன்புக்கும் தர்காவின் சந்தனக்கூடு தேர் திருவிழாவிற்கும் கிராமத்தில் வசிக்கும் இந்துக்களை அழைத்தனர். அதில் கிராமத்தின் இந்து மக்கள் கலந்துகொண்டனர். அதேபோல் செல்லியம்மன் கோவில் திருவிழாவிற்கும் அங்குள்ள இஸ்லாமியர்கள் அழைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முயற்சியால் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதேபோல், வி.களத்தூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலின் பூரணி பொங்கல் மாவிலக்கு சுவாமி திருவீதி உலாவிலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாகக் கலந்துகொண்டு மதநல்லிணக்கத்தைப் போற்றினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காசவளநாடு புதூர் எனும் கிராமம் மத நல்லிணகத்திற்குப் புகழ் பெற்றது. அந்தக் கிராமத்தில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் இந்துக்களே. எனினும், மொஹரம் பண்டிகையின் போது அங்குள்ள சாவடியில் அமைந்துள்ள அல்லா கோவிலைச் சுத்தம் செய்து, பச்சை கொடி ஏற்றி, பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கின்றனர். மொஹரம் பண்டிகையின் போது வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊரான காசவளநாடு புதூருக்கு வருகை தருகின்றனர். பெண்களும் குழந்தைகளும் பானைகளில் பானகம், பொரி, வெல்லம் ஆகியவற்றை ஊர்வலமாகக் கொண்டு வந்து அல்லா கோவிலில் படைத்து பூஜை செய்து அதை கிராம மக்களுக்குக் கொடுக்கின்றனர்.

தமிழ் நாட்டு மக்கள் ஒன்றுபட்டு வாழ தான் விரும்புகிறார்கள்.

இதே போல் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் அறுபடைவீட்டு முருகன் கோவில்களில் முதல் கோவிலான அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. அதே பகுதியில் சிக்கந்தர் ஷா என்ற மதுரை சுல்தான் மன்னரின் கல்லறையும் தர்காவும் அமைந்துள்ளன.

இந்த மலையில் தான் இஸ்லாமியர்கள் அவர்களின் வழிபாட்டை நடத்துகின்றனர். அதேபோல், முருக பக்தர்களும் தங்களின் கடவுளை வழிபடுகின்றனர். மேலே குறிப்பிட்டது போல் இதே கோவிலில் கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மக்கள் தீபம் ஏற்றி கார்த்திகை தீபத் திருவிழாவைக் கொண்டாடினால் மதக் கலவரம் வந்துவிடுமா!?

அருகாமையில் உள்ள மாநிலமான கேரளாவில் மிகப் பெரிய கோவில் சபரிமலை. அங்கு உலகம் முழுவதும் இருந்து வருடந்தோறும் சுமார் ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் ஐயப்பனைத் தரிசிக்க வருகின்றனர். இதில் விஷேசம் என்ன என்றால், ஐயப்பன் கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்லும் முன் எரிமேலியில் உள்ள வாவர் பள்ளி வாசலுக்குச் செல்கின்றனர். அங்கு பேட்டை துள்ளல் என்ற பாரம்பரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகே சபரிமலைக்கான தங்கள் யாத்திரையைத் துவங்குகின்றனர். இவ்வளவு பெரிய கோவிலில் அற்புதமாக மத நல்லிணக்கம் கடைபிடிக்கப்படும்போது ஏன் தமிழ் நாட்டில் இது சாத்தியமில்லை? சாத்தியம் இல்லாமலா நாகூர் தர்கா, வி.களத்தூர், காசவளநாடு புதூர் போன்ற பல பகுதிகளில் மத நல்லிணக்கம் பேணப்படுகிறது?

திமுக அரசுக்கு மத நல்லிணக்கத்தைக் காக்கும் எண்ணம் இல்லை. மாறாக, மத எதிர்ப்பைக் கையில் எடுத்து சிறுபான்மையினரின் வாக்கு வங்கியைத் தன்வசம் இழுக்க வேண்டும் என்ற திட்டமே உள்ளது. இதற்காக எல்லா நாடகங்களையும் மேற்கொள்கிறார்கள். தேர்தல் வரும் வரை மேலும் பல புதுப் புது நாடகங்களையும் அரங்கேற்றுவார்கள்.

2021 தேர்தல் வரும் முன் வேலைக் கையில் எடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விஷயத்தில் அதே முருக பக்தர்களுக்குக் கார்த்திகை தீபம் பண்டிகையின் போது தீபம் ஏற்ற இவ்வளவு அடக்குமுறையைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

திமுகவினர் முருகனின் வேலைக் கையில் எடுத்தார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழ் நாட்டின் கோவில்களைக் கொள்ளையடித்தார்கள். அனைத்தையும் உறுவிவிட்டு இப்போது தமிழர் கடவுள் முருகனைக் கோவணத்துடன் நடுத்தெருவில் நிற்கவிட்டார்கள். இது தான் திராவிட மாடல் அரசு.

அன்புடன்,

ஜெகன் கஜேந்திரன்

வியாழன், 4 டிசம்பர், 2025

மத அரசியலைக் கையில் எடுக்கும் திமுக

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குக் கடந்த திங்கட்கிழமை நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. ஆனால், இரண்டு நாள்கள் அமைதி காத்து புதன்கிழமை கார்த்திகை தீபத் திருவிழாவைத் தமிழ் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியுடன் மத அரசியலில் ஈடுபட்டு தமிழர்களின் பண்டிகையைச் சீர்குலைத்துள்ளது திமுக அரசு. இதன்மூலம் தமிழர்களுக்கு எதிரான தனது மத அரசியல் விளையாட்டைத் திமுக கையில் எடுத்துள்ளது. மத நல்லிணக்கத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது ஆளும் திமுக அரசு. நேற்றைய தினம் கோயிலில் தீபம் ஏற்ற தடை விதித்து 144 தடை போடுவதற்குப் பதிலாக இந்த நடவடிக்கையை ஏன் முன்பே திமுக அரசு செய்யத் தவறியது?

திமுக அரசின் நோக்கம் மத அரசியலை எதிர்ப்பதா அல்லது தமிழர்களின் கார்த்திகை தீபக் கொண்டாட்டத்தைச் சீர்குலைப்பதா?

திமுக எதையும் முதலில் செய்வதில்லை. அது கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை மரணமாக இருந்தாலும் நடவடிக்கை இல்லை. 2023ல் மரக்காணம் மற்றும் பெரம்பாக்கத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் இறந்தனர். ஆனால், அந்த மரணங்கள் நிகழ்ந்த பிறகும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2024ல் கள்ளக்குறிச்சியில் 68 பேர் மீண்டும் கள்ளச்சாரயம் குடித்து இறந்தனர். இதற்கு திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே முக்கிய காரணம்.

மத அரசியல் என்ன திமுகவிற்குப் புதிதா? வருணாசிரமத்தின் மறு உருவமே திமுக தானே. பிறப்பால் ஒருவரது தொழிலை முடிவு செய்வது தான் வருணாசிரமம். திமுகவின் கொள்கையே ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே தலைவராக முடியும் என்பதும் ஆட்சிக்கு வர முடியும் என்பதும் வருணாசிரமத்தின் அச்சு வடிவம் தானே. இதைக் களையாமல் திமுகவால் மத அரசியலை எதிர்கொள்ள முடியாது. அது ஒரு நாளும் நடக்காத காரியம்.

திமுகவின் நலனுக்காகத் தமிழ்நாட்டைப் பலிகடா ஆக்குவதா? 2006ல் இதேபோல் தான் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஒன்றியத்தில் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக அருகாமை நாட்டில் தமிழ் இனப்படுகொலை நடந்தபோதும் அமைதி காத்து வந்தது திமுக. இன்றும் அதே காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது திமுக. தமிழினத்தன் தலைமை என்று சொல்லிக்கொள்ளும் திமுகவால் தமிழீழத் தமிழர்களுக்குத் தீர்வு காண்பதை உறுதி செய்ய முடியுமா? இனப்படுகொலை செய்யப்பட்ட 1,50,000 தமிழர்களுக்குத் தீர்வு எதுவும் செய்ய முடியாத ஓர் அரசு வேறு எதைச் சாதித்து விடமுடியும்?

திமுகவின் குறிக்கோள் என்ன? தமிழ் நாட்டு மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதா? எதைத் தீர்த்து வைத்தார்கள்? நீட் தேர்வை ரத்து செய்து விட்டார்களா? ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்துவிட்டார்களா? சாராயப் பிரச்சனையைச் சரி செய்துவிட்டார்களா? பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதெல்லாம் சரி செய்ய திராணி இல்லாத ஓர் அரசை எப்படி நல்லாட்சி என்று சொல்ல முடியும்?

பாஜகவோ காங்கிரஸோ இரண்டும் தமிழ் நாட்டிற்குத் தேவையில்லாத ஆணிகள் தான், தமிழர் விரோதக் கட்சிகள் தான். காங்கிரஸ் கொஞ்சம் மோசமான கட்சி, பாஜக ரொம்ப மோசமான கட்சி என்றெல்லாம் பேசுவது அயோக்கியர்களின் பேச்சு. கெட்டவன் கெட்டவன் தான். இருவரும் தமிழர்களின் எதிரிகள் தான். ஒருவரை மட்டும் எதிர்ப்பது அயோக்கியத்தனத்தின் உச்சம். எனவே, அதிமுக-பாஜக கூட்டணியைச் சாடும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுமா? உங்கள் சுயநலத்திற்காகத் தமிழர் நலனைப் பலி கொடுப்பதா? உங்கள் சுயநலமே ஓர் இனப்படுகொலைக்குக் கொண்டு சென்றது.

பாஜக வந்தால் தமிழ் நாட்டை 2000 வருடம் பின்னுக்குக் கொண்டு செல்லும் என்று சொல்பவர்கள், ஏன் மன்னராட்சி முறையைப் பின்பற்றுகிறீர்கள்? திமுகவோ காங்கிரஸோ ஏன் வருணாசிரமத்தை விளக்கிக்கொள்ளக்கூடாது? முற்போக்கு அரசியலை உங்கள் கட்சியில் இருந்து ஏன் தொடங்கக்கூடாது?

கொள்கைவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் திமுக, 2026ல் கருணாநிதி குடும்பத்தில் இல்லாத ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த முன்வருமா? நாடகம் வேண்டுமானால் போடுவீர்களே தவிர, அதை நடைமுறைப்படுத்த மாட்டீர்கள். பிறகு எதற்காகச் சமூக நீதி, சமத்துவம், மத நல்லிணக்கம், தமிழ்த் தேசியம் ஆகிய வேஷங்கள்? உங்கள் சொந்தக் கட்சி கொள்கையையே காலில் போட்டு மிதித்துவிட்டு நாட்டின் தலையெழுத்தை மாற்றுவதாகப் பேசுவதெல்லாம் வெறும் பிதற்றல் தான். மக்கள் உங்களை நம்ப தயாராக இல்லை.

மற்ற எவரையும் விட திமுகவிற்கே தனது தவறுகள் குறித்து நன்றாகத் தெரியும். அவற்றை மறைக்கவே 2026 தேர்தல் முடியும் வரை எல்லா குழப்பங்களையும் திமுக அரசு தமிழ்நாட்டில் செய்யும். ஆனால், திமுக தன்னுடைய தவறுகளைச் சரி செய்யாமல் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

 

அன்புடன்,

ஜெகன் கஜேந்திரன்

வெள்ளி, 28 நவம்பர், 2025

த.வெ.க ஒரு உப்புமா கட்சியா?

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி இரண்டு வருடங்கள் கூட ஆகவில்லை. அந்தக் கட்சியின் தலைவர் விஜய் போராட்டத்தில் கூட கோஷம் போடாமல் அமைதியாக நிற்பவராக இருக்கிறார். களத்திற்குச் சென்று மக்களைச் சந்திப்பதில்லை. கட்சி தொடங்கும் முன்பு பல விஷயங்களில் மக்களைச் சென்று சந்தித்தவர், கட்சி தொடங்கிய பின் பெரிதாகச் சென்று சந்திக்கவில்லை.

திரைப்படப் படப்பிடிப்பு முடிந்த பின் அரசியல் கட்சிக்காக ஆறு மாத கால்ஷீட் ஒதுக்கி ரோட் ஷோ நடத்தினார். அது விபரீதமாக முடிந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகக் கூட சென்று சந்திக்காமல் அவர்களைத் தன் இடத்திற்கு அழைத்துச் சந்தித்தார். கரூர் சம்பவத்தில் நீதிமன்றத்தை நாடியிருப்பது மட்டுமே அவர் கட்சி சார்பில் செய்த ஒரே உருப்படியான செயல்.

‘உப்புமா’ கட்சி என்றால் என்ன? அதற்கு முதலில் ‘உப்புமா’ படம் என்றால் என்ன எனத் தெரிய வேண்டும். உப்புமா படம் என்பது சினிமா துறையில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதாவது, ஒரு திரைப்படக்குழு ஒரு படத்தை எடுப்பதாகச் சொல்லி தயாரிப்பாளரிடம் பணத்தைக் கறந்துவிட்டு மோசடி செய்வதாகும். இத்தகைய படங்கள் சில நாள்கள் படப்பிடிப்பிலேயே நின்றுவிடும். அதன்பிறகுத் தயாரிப்பாளரும் பணத்தை ஏமாந்து சென்றுவிடுவார். படமும் வெளிவராது. இதுவே உப்புமா படம்.

விஜய்யின் த.வெ.க-வும் ஒரு உப்புமா கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. விஜய் எதற்காகக் கட்சி தொடங்கினார்? எல்லாக் கட்சிகளும் அதிகாரத்திற்கு வர தான் தொடங்கப்படுகின்றன. ஆனால், நிதர்சனம் என்று ஒன்று உள்ளது. தொடங்கி 2 வருடங்கள் கூட ஆகாத ஒரு கட்சி, கூட்டணியும் ஏற்படுத்தாமல் ஆட்சியைப் பிடிக்கும் என்றால் எப்படிச் சாத்தியமாகும்? இதுகூட தெரியாமல் கட்சியை நடத்துவதா?

அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்றால் முதலில் ஜெயிக்க வேண்டுமே? திமுக, அதிமுக என இரு கட்சிகளுமே கூட்டணி வைத்து தான் தேர்தலைச் சந்திக்கின்றன. கள எதார்த்தம் இப்படி இருக்கும் பட்சத்தில், தனியாக நின்று ஒரு புதிய கட்சியால் எப்படி முதலில் ஜெயிக்க முடியும்?

த.வெ.க தலைவர் விஜய்யின் தாரக மந்திரம் “2026ல ரெண்டே ரெண்டு பேருக்குள்ள தான் போட்டியே. ஒன்னு த.வெ.க இன்னொன்னு திமுக” என்பதைத் தான் விஜய் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். இது தான் த.வெ.க தலைவர் விஜய் கிண்டும் உப்புமா.

2026ல் த.வெ.க-வின் நோக்கம் என்ன? அதாவது, “ஒன்னு த.வெ.க இல்லனா திமுகவா?” த.வெ.க வராது என்பது அனைவருக்கும் தெரியும். பிறகு, திமுகவை எதிர்க்கிறேன் என்பது அர்த்தமற்ற வெற்றுக்கூச்சல் அரசியல், மேடை நாடகம். அதுவே த.வெ.க-வை ஓர் உப்புமா கட்சியாகப் பாவிக்கிறது. இது வெறும் உப்புமா என்று மட்டும் கடந்து போய்விட முடியாது. கரூரில் இறந்த 41 பேருக்குச் செய்யும் பச்சை துரோகம்.

அதாவது, திமுக தோற்க வேண்டும் என்று முழங்குகிறீர்கள். ஆனால், உங்கள் அணி திமுகவைத் தோற்கடிக்கும் அளவிற்குப் பலமாக இல்லை. பிறகு எப்படி திமுகவைத் தோற்கடிப்பீர்கள் விஜய்? சினிமாவில் நடிப்பது போல் அரசியல் கால்ஷீட்டில் பஞ்ச் டயலாக்குகளாகப் பேசிவிட்டு தேர்தல் முடிந்த பின் பெரும்பான்மை(!) பெற்றால் ஆட்சி, இல்லை என்றால் மீண்டும் படப்படிப்பு என்று கிளம்பிவிடுவீர்களா? இவ்வளவு தான் த.வெ.க-வின் அரசியலா?

கட்சி தொடங்கி இரண்டு வருடங்களுக்குள் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு நீங்கள் அப்படி என்ன மக்கள் சேவையைச் செய்துவிட்டீர்கள் விஜய்? எவ்வளவு மக்களைச் சந்தித்துவிட்டீர்கள்? பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்குபவர்களுக்குப் பரிசு தருவதெல்லாம் தன்னார்வத் தொண்டு நிறுவனம் வைத்திருப்பவர்கள் செய்யும் காரியம். தமிழ் நாட்டில் அப்படிப் பல்லாயிரம் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இன்று பள்ளியின் பழைய மாணவர்களே தங்கள் பள்ளிகளை மேம்படுத்துகிறார்கள். ஊர் மக்களே ஒன்று சேர்ந்து ஏரிகளைத் தூர்வாருகிறார்கள், நீர்நிலைகளைப் புனரமைக்கிறார்கள்.

த.வெ.க கட்சி தற்போது தேன்நிலவு பருவத்தில் உள்ளது. முதல் தேர்தலில் பெறும் வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தே கட்சியின் நிலை தீர்மானிக்கப்படும். ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் பல காலம் ஆகும். ஆறு மாதத்தில் ஆட்சியைப் பிடிக்க இது என்ன சர்க்கார் திரைப்படமா? முதலில் கட்சியை வளருங்கள் விஜய். பிறகு ஆட்சியைத் தானாகப் பிடிக்க முடியும்.

திரைத்துறையின் உச்சத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தது உப்புமா கிண்ட தானா விஜய்?

 

அன்புடன்,

ஜெகன் கஜேந்திரன்

வியாழன், 11 செப்டம்பர், 2025

மனிதர்களும் நாய்களும்

ஒரு வழியாக தெரு நாய்கள் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் ஒரு தீர்வு கிடைத்துள்ளது.

நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு இன்று நேற்று தொடங்கியது அல்ல. விவசாயம் தொடங்குவதற்கு முன்பாகவே வேட்டைச் சமூகமாக மனிதன் இருந்தபோதிலிருந்தே ஓநாய்களுடனான உறவு மனிதனுக்கு இருந்துள்ளது.

சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பாக மனித கல்லறையில் மனிதனுடன் புதைக்கப்பட்ட பான்-ஓபர்காசல் (Bonn Oberkassel dog) என்ற நாய் இனத்தின் எச்சம் 1914ம் ஆண்டு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவைக் காட்டுகிறது. இத்தகைய நிகழ்வு நடந்த காலம் தான் மிகவும் முக்கியமானதுஅதாவது, பிளைஸ்டோசீன் காலம் (Pleistocene). அது பனிக்காலத்தைக் குறிக்கிறது. இன்றைய மனிதன் (ஹோமோ சேபியன்ஸ் – Homo Sapiens) பரிணாம வளர்ச்சியடைந்த காலமும் அதுவே. அதேபோல் யானைகளின் மூதாதைகளான கம்பளி யானைகள் போன்ற உயிரினங்கள் வாழ்ந்து அழிந்த காலமும் அதுவே. அந்தக் காலத்தில் தான் மனித சமூகத்துடன் வாழ்ந்த ஓநாய்கள் இனம் பரிணாம வளர்ச்சி டைந்து இன்றைய நாய்களாக உருமாறுகின்றன.

நாய்களுடனான எனது அனுபவங்கள் பல.. 

சிறு வயதில் (சுமார் 4-5 வயது இருக்கும்) வீட்டில் வளர்க்க நாய் வாங்க சென்றபோது நாய் குட்டிகளைக் காட்டினார் அந்த உரிமையாளர். அப்போது அந்தக் குட்டியின் தாய் என்று ஒரு பெரிய நாயைக் கூட்டி வந்தார்கள். அது என்னைவிட உயரமாகவும் பெரிதாகவும் இருந்தது.  அதுவே நாய்களுடனான எனது முதல் அனுபவம்.

அந்த நாய் குட்டிகளில் ஒன்றை வீட்டிற்கு வாங்கி வந்தோம். அந்தக் குட்டி நாய்க்கு ரோசி எனப் பெயரிட்டு சில காலம் வளர்த்து வந்தோம். அதுவொரு கருப்பு டாபர்மேன் நாய். முதல் நாள் எங்கள் வீட்டிற்குள் வந்தபோது மொசைக் தரையில் நடக்க முடியாமல் அந்த நாய் குட்டி வழுக்கி வழுக்கி விழுந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. 

 பிறகு மோனிகா என்ற ஒரு அல்சேஷன்/ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாயைச் சில மாதம் வளர்த்து வந்தோம். தினமும் காலையில் எங்களை எழுப்ப அதைப் படுக்கை மீது ஏற்றிவிடுவார் என் அம்மா. அது என முகத்தை நக்கிவிடும். அப்படித் தான் தூக்கம் களைந்து எழுந்துகொள்வோம். இவ்விரண்டு நாய்களையும் முழுதாக வளர்க்கவில்லை. மிகக் குறைந்த காலம் தான் எங்களுடன் அவை இருந்தன. ஆனால், இனிமையான அனுபவமாக அவை அமைந்தன. 

தெரு நாய்கள் நம் நாட்டு இன நாய்கள். ப்ளூ கிராஸிற்குச் சென்றால் பல நாய் குட்டிகளைப் பார்க்கலாம். அங்குள்ள படிவத்தை நிரப்பி கையெழுத்திட்டு நமக்கு விருப்பமான தொகையை நன்கொடையாக வழங்கி நாயைத் தத்தெடுத்துக்கொள்ளலாம். அப்படி ஒருமுறை லூசி என்ற நாயைத் தத்தெடுத்தேன். அதற்கு உடம்பு முடியாமல் போனதால் ஒரே நாளில் திருப்பியளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது ப்ளூ கிராஸில் நாய்களைத் தத்தெடுக்க வேண்டும் என்றால் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 10 மணிக்கு சென்னை வேளச்சேரி ப்ளூ கிராஸிற்குச் சென்றால் நாய் உரிமையாளர்கள் வருவார்கள். அவர்களிடம் நாய்களைத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.

 நாய்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவற்றை வளர்ப்பதும் பராமரிப்பதும் கடினமான காரியம் என்பதாலும் வீட்டில் ஒத்துழைப்பு/அனுமதி வழங்காததாலும் வளர்ப்பதில்லை. காலம் அமையும்போது நிச்சயம் வளர்ப்பேன். 

தெரு நாய்கள் பிரச்சனை வந்த பிறகு நாய்கள் வளர்ப்பின் அவசியத்தை உணர்ந்து ஒரு நாயை வளர்க்கலாம் என்று முடிவெடுத்து வீட்டின் உரிமையாளரிடம் கேட்டேன். அவர் தனது சட்டையைத் தூக்கிக் காண்பித்து தனது வயிற்றில் வாங்கிய நாய் கடியைக் காண்பித்து மறுத்துவிட்டார். அதற்கு மேல் அவரிடம் ஒன்றும் பேச முடியவில்லை. 

நாய்களுடனான எனது அனுபவம் எப்போதும் இனிமையானதாக மட்டுமே இருந்ததில்லை. நாயிடம் கடி வாங்கியதில்லை என்றாலும் பல முறை நாய் கடியில் இருந்து தப்பித்திருக்கிறேன் என்பதே உண்மை.

சாலையில் செல்லும் நாய்கள் வாகனங்களைத் துரத்துவதற்கான முக்கியக் காரணம் அப்போது அவற்றுக்குத் தனது இறையைத் துரத்திச் செல்ல வேண்டும் என்ற உள்ளுணர்வு வேலை செய்ய ஆரம்பிக்கும். அதனால் அவை பின்னால் வருகின்றன.

இரவு நேரங்களிலும் அதிகாலை வேளைகளிலும் சாலைகளில் எனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது திடீரென சாலைகளில் உள்ள நாய்கள் குரைத்தபடி வெறியுடன் எனது வண்டியைத் துரத்திக்கொண்டே பின்னால் ஓடி வரும். அந்தச் சில வினாடிகள் பதைபதைப்பாகவே இருக்கும். ஆனால், அப்படி அவை வேகமாக துரத்தும்போது பதற்றமடைந்து மேலும் வேகமாக வண்டியை ஓட்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாவதைத் தவிர்க்க ஒரு சிறந்த வழி ஒன்று உண்டு. அதாவது, நாய்கள் துரத்தும்போது பயந்து ஓடினால் அவை மேலும் துரத்தும். அதற்கு பதிலாக நான் எனது வண்டியை உடனே சடன் பிரேக் போட்டு நிறுத்தி விடுவேன். உடனே நாய்களும் துரத்துவதை நிறுத்திவிடும். ‘ஏய்என்று நாய்களைப் பார்த்து சத்தமிட்டால் அவை அடங்கும். இல்லையேல் வண்டியை அவற்றை நோக்கி செலுத்தினால் நிச்சயம் பயந்து ஓடிவிடும். இதன் உளவியல் ஒன்று தான், நாம் ஓடினால் பயப்படுகிறார்கள் என்று அது துரத்த ஆரம்பிக்கும். ஆனால், நாம் அதை நோக்கி சத்தமிட்டாலோ அதைத் தாக்குவதுபோல் சென்றாலோ அது பயத்தால் ஓடிவிடும். சாலையில் நடந்து செல்லும்போது நாய்கள் குரைத்தால் சாலையில் குனிந்து கல்லை எடுப்பதுபோல் செய்கை செய்தாலே நாய்கள் ஓடிவிடும்.

ஆனால், குழந்தைகளால் நிச்சயம் நாய்களைக் கையாள முடியாது. இந்தியாவில் நாய் கடிக்கு ஆளாகும் நபர்கள் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே. எனவே, பெற்றோர்கள் சாலைகளில் குழந்தைகளைத் தனியாக விடுவதைத் தவிர்க்க வேண்டும். தெரு நாய்களை விலங்கு நல ஆர்வலர்கள் தத்தெடுத்து வளர்க்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் நாய்கள் குட்டிகளைப் போடும்போது அவற்றை அங்குள்ளவர்கள் தத்தெடுத்து வளர்க்க வேண்டும். இதன்மூலம் சாலைகளில் ஆதரவற்று கிடக்கும் நாய்களின் எண்ணிக்கை குறையும் மற்றும் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல்கள் குறையும். நாய்களைப் போன்ற நன்றியுள்ள விலங்கும் உலகில் வேறில்லை.

நாங்கள் தங்கியிருந்த ஒரு தெருவில் பல தெருநாய்கள் இருந்தன. புதிதாக வந்த ஒரு வெறி பிடித்த நாய் அங்கிருந்த மற்ற நாய்களைக் கடித்துக்கொண்டும் தொந்தரவு செய்துகொண்டும் இருந்தது. அதற்கு ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்த நான், மாநகராட்சியிடம் புகார் கொடுத்த பின் அந்தத் தெருவில் இருந்து அந்த நாயை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள்.

நாய்கள் வளர்க்க வேண்டும் என்றால் வெளிநாட்டு நாய்களைத் தான் வளர்க்க வேண்டும் என்றில்லை. நம் நாட்டு இன நாய்களையும் வளர்க்கலாம். அவையே உள்நாட்டின் தட்ப வெப்பத்திற்கு ஏற்ப வாழும் தகுதியுடையவை. தெரு நாய்களுக்கு உணவு வைப்பவர்களை ஏமாளிகள் என்றும், முட்டாள்கள் என்றும், அவர்கள் தெருநாய்களுக்குப் பின்னால் பெரிய வணிகம் இருப்பதை உணராதவர்கள் என்றும் சொல்லும் அறிவுஜீவிகள், வெளிநாட்டு நாய் வளர்ப்புக்குப் பின்னால் உள்ள வணிகத்தைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? அதன் பின்னால் வணிகமும் வளர்ப்பவர்களிடம் முட்டாள்தனமும் இல்லையா? வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் கடிப்பது உண்டு. தெருநாய்களைவிட வளர்ப்பு நாய்களே அதிகம் கடிப்பதாகத் தகவல்கள் உள்ளன. நாய்கள் வளர்க்க வேண்டும் என்பவர்கள் முதலில் உள்நாட்டு நாய்களை வளர்க்க முன் வர வேண்டும். நாய் வளர்ப்பில் கூட பாகுபாடு பார்ப்பவர்கள் விலங்கு நல ஆர்வலர்களே அல்ல.

ஒரு தெருவில் நாய் குட்டி போட்டால் அதை உடனே மாநகராட்சிக்குத் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி அந்த நாய்க்குக் கருத்தடை செய்ய வேண்டும். இதன்மூலம் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அதேபோல் அந்த நாய் குட்டிகளைத் தத்துக்கொடுக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன், நாயைத் தத்தெடுப்பவர்கள் முறையாக அதற்கு தடுப்பூசி போட்டு பராமரிப்பதை மாநகராட்சி/உரிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இவை தெருநாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டிலும் முறையான பராமரிப்பிற்கும் வழி வகுக்கும்.

அதேபோல் நாய் வளர்க்க வேண்டும் என்றால் முதலில் அதற்கான பராமரிப்பு விதிகள், சட்டங்களைப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொண்டு வளர்க்க வேண்டும். நாங்கள் முன்பு இருந்த குடியிருப்பில் நாய் வளர்க்கிறேன் என்ற பெயரில் ஒரு நாயைத் தத்தெடுத்துவிட்டு அதைத் தங்கள் வீட்டில் வைக்காமல் முழு நேரமும் குடியிருப்பில் அவர்கள் வீடு இருந்த தளத்தில் (நாங்களும் அதே தளத்தில் தான் இருந்தோம்) திறந்து விட்டிருந்தது ஒரு குடும்பம். அந்த நாய் எங்கள் தளம் முழுவதும் சிறுநீர் கழித்து நாசம் செய்து வைத்துவிடும். எங்கள் தளமே ப்ளூ கிராஸ் போன்ற தோற்றம் அளிக்கும். பல முறை சொல்லியும் திருந்தாத ஜென்மங்களாக அவை இருந்தன. இத்தனைக்கும் அவர்கள் குடும்பத்தினர் வழக்கறிஞர்கள் என்பது இன்னொரு கொடுமை. 

நாய் கடியால் ஏற்படும் இறப்புகளைத் தவிர்க்க, நாய்களுக்கான தடுப்பூசிகளை அரசாங்கம் செலுத்த வேண்டும். நாய் கடி ஏற்பட்டால் உடனே சிகிச்சை எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அத்தகைய சிகிச்சைக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இவற்றைச் செய்தால் தான் 2030க்குள் வெறிநாய்க்கடி நோய்/ராபிஸ் நோய் இறப்புகளைப் பூஜ்ஜியமாக்க முடியும்.

நாய்களும் மனிதர்களும் சமூக விலங்குகள். இரண்டும் வரலாற்றில் ஒன்றிணைந்து வாழ்ந்த ஆவணங்கள் உள்ளன. இந்தக் கட்டுரையும் கூட நிகழ்கால நாய்-மனித உறவின் ஓர் ஆவணம் தான்.

மாற்றம் நடக்கிறதா என்று பார்ப்போம்.


அன்புடன்,

ஜெகன் கஜேந்திரன்