ஜூன் 19, 2024ல் தமிழ்நாடு மறக்க முடியாத கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் நடந்தன. அதில் 66 பேர் மரணமடைந்தனர், 200 பேர் வரை உடல்நல பாதிப்படைந்தனர். இன்றுடன் அச்சம்பவம் நடந்து ஓராண்டாகிறது.
கள்ளக்குறிச்சி
கள்ளச்சாராய மரணத்திற்குத் திமுக அரசும் பலவகைகளில் காரணமாக இருந்துள்ளது. முதலாவதாக, சாராயம் காய்ச்சப்படுவது எந்தவித தங்கு தடையும் இன்றி காவல்துறையின் அனுமதியுடன்
சுதந்திரமாக நடந்துள்ளது. இதை கவனிக்கத் தவறியது அரசின் நிர்வாகத்
தோல்வி.
இரண்டாவதாக, நடந்த குற்றத்தை மறைப்பதற்காக,
அங்கு ஏற்பட்டது கள்ளச்சாராய மரணங்களே அல்ல என்ற அறிக்கையை ஓர்
அரசு அதிகாரி மூலம் வெளியிடச் செய்தனர் திமுகவினர். இதன் விளைவாக, அங்கு கள்ளச்சாராயம் குடித்து இறந்தவரின்
வீட்டிற்கு வந்த மேலும் பலர் கள்ளச்சாரயத்தைக் குடித்து இறந்தனர். இறந்தவர்களில் பாதி பேர் தலித் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தில்
அங்கு இறந்த அப்பாவி மக்களுக்கு எனது நினைவஞ்சலியைச் செலுத்துகிறேன்.
என் வீட்டில்
என் தந்தைக்குக் குடிப்பழக்கம் இருந்தது.
அவர் குடிக்கு அடிமையாகி இருந்தார். எனக்கு நினைவு
தெரிந்த நாள் முதல் அவர் இறக்கும் சில வருடங்களுக்கு முன்பு வரை குடி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் எங்கள் குடும்பம் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல.
எனக்கும்
குடிப்பழக்கம் இருந்தது. ஆனால், நான் குடிக்கு அடிமையாகும் அளவிற்குச் சென்றதில்லை.
எப்போதாவது குடிப்பேன், அவ்வளவு தான். ஆனால், என் குடும்பம் உட்பட சமூகத்தில் பல குடும்பங்கள்
குடிக்கு அடிமையாகி பாதிக்கப்படும்போது குடிப் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று எண்ணுவேன்.
சமூக மாற்றம் காண வேண்டும் என்பதற்காக, கடந்த வருடம்
நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்குப் பிறகு குடிப் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டேன்.
இன்றுடன் ஓராண்டுக்கு மேலாகிறது.
2016ல் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும்
‘தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு’ என்பதைத் தங்கள்
தேர்தல் வாக்குறுதியாகக் கொண்டு வந்தனர். ஆனால், 2016ல் 27,000 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக்
(TASMAC – Tamil Nadu State Marketing Corporation) நிறுவனத்தின் ஆண்டு
வருமானம் 2025ல் 48,344 கோடி ரூபாயாக மாறியுள்ளது.
எனவே, இரண்டு அரசுகளும் மக்களுக்குத் தந்த வாக்குறுதிகளைப்
பொய்யாக்கி சாராய வியாபாரத்தை வளர்த்தெடுக்கும் வேலையைச் செய்து வந்துள்ளது இதன்மூலம்
அம்பலமாகிறது.
2015ல் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், மாநிலத்திற்குச் சாராய விற்பனையால் கிடைக்கும் ஆண்டு வருமானம் சுமார்
25,000 கோடி ரூபாயாக இருந்தாலும், சாராயம் குடிப்பதால்
ஏற்படும் பணிநேர இழப்புகள், உடல் ஆரோக்கியத்திற்கான செலவுகளுக்கு
என 67,444 கோடி ரூபாய் இழப்பு மாநிலத்தில் ஏற்படுகிறது என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இங்குள்ள சாராய மாடல் அரசின்
ஆதரவாளர்களோ, டாஸ்மாக் அல்லது சாராய விற்பனை இல்லை என்றால் அரசுக்கு
இழப்பு ஏற்படும் என்றும், கள்ளச்சாராய விற்பனை பெருகிவிடும் என்றும்
சொல்கின்றனர். இவை இரண்டும் பொய் மற்றும் அயோக்கியத்தனத்தின்
உச்சம்.
முதலில், வருமான இழப்பு என்பது பொய்
என்பதை மேலே பார்த்தோம். 2016ல் 27,000 கோடி ரூபாய் டாஸ்மாக் விற்பனைக்கு 67,444 கோடி ரூபாய்
இழப்புகள் என்றால், தற்போது 2025ல்
48,344 கோடி ரூபாய்க்குச் சுமார் 1,20,860 கோடி
ரூபாய் இழப்பு ஏற்படும்.
பொறுக! இது வெறும் கணக்கில் வரப்படும்
வருமானம் தான். தமிழ்நாட்டில் சாராய ஆலைகளை நடத்துவது திமுக-அதிமுக பிரமுகர்களே. தற்போது தமிழ்நாட்டில் உள்ள மதுபான
அருந்தகங்களில் (பார்களில்) விற்பனையாகும்
சாராயத்தில் 40% கணக்கில் வராதது என்று சொல்லப்படுகிறது.
48,344 கோடி ரூபாய் என்பது 60% என்றால்,
கணக்கில் வராத 40% என்பது சுமார்
19,337 கோடி ரூபாய்கள். ஆக, டாஸ்மாக்கின் அசல் வருமானம் 67,681 கோடி ரூபாய் வரை இருக்கும்.
அசல் வருமானம் இதுவென்றால், அசல் இழப்பு
1,69,202 கோடி ரூபாய்கள் ஆகும். எப்படிப் பார்த்தாலும்
இவை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எதிராகவே உள்ளன.
சரி, இந்த இழப்பு பணம் யாரிடம்
செல்கிறது என்று பார்ப்போம். முதலில், பணிநேர
இழப்பு மூலம் குடும்பத்தின் பொருளாதாரம் மோசமடைகிறது, இதனால்
குடும்பங்கள் மோசமான நிலைக்குச் செல்கின்றன. மற்றொன்று,
ஆரோக்கியச் செலவுகளுக்காக மருத்துவமனையை மக்கள் நாடுகின்றன. மருத்துவமனைகள் கார்ப்பரேட் வியாபாரமாகி பல வருடங்களாகின்றன. ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் கழித்து விடுவிக்கப்பட்டால்
லட்சங்களில் செலவாகும் நிலையே இன்று உள்ளது. எனவே, குடிப்பது என்பது சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வதாகும்.
சில மருத்துவர்கள்
தங்கள் குடிப்பழக்கத்தை ஒரு சாதாரணச் செயலாக வெளிப்படுத்திக்கொள்வார்கள். மருத்துவர்களும் மனிதர்களே.
ஆனால், அத்தகைய மருத்துவர்கள் அறமற்ற குற்றவாளிகளும்
கூட.
குடியால்
ஆரோக்கியம், பொருளாதாரம் தவிர சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், குற்றங்கள்,
சாலை விபத்துகள் எனப் பல சமூகப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஒரு குடிகாரன்
நாள் ஒன்றுக்கு 150 ரூபாய்க்குக் குடிக்கிறான் என்றால், வருடத்திற்குச் சுமார்
50,000 ரூபாய். 5 வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய். ஓட்டுக்கு அவனுக்குக் கொடுக்கப்படும்
பணம் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை. உங்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் சில்லரைக்
காசைத் தேர்தலின்போது அவன் உங்களிடம் சிதற விடுகிறான். நீங்களும் ஏமாறுகிறீர்கள்.
ஒரு வருடத்திற்கு 19,337 கோடி ரூபாய் கணக்கில்
வராத பணம் என்றால் 5 வருடங்களுக்குச் சுமார் ஒரு லட்சம் கோடி
ரூபாய்! இதற்கான வருமான வரி அரசு கஜானாவிற்குச் செல்வது கிடையாது.
இவற்றின் தயாரிப்பும் கணக்கில் வராது. இவை அனைத்தும்
கருப்பு பணமே! இதற்குத் தான் அமலாக்கத்துறை திமுக பிரமுகர்கள்
வீட்டிற்குப் படையெடுக்கிறது.
சமீபத்தில்
தமிழ்நாடு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டாஸ்மாக்கில் 39,775 கோடி
ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த
மூன்று வருடங்களாக நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தும் பிற மாநில முதல்வர்களைப்
புறக்கணிக்கச் சொல்லியும் வந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் தன் நெருங்கியவர்களிடம் டாஸ்மாக் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை வந்தவுடன் இந்த
முறை டெல்லிக்கு விரைந்தார். தமிழ்நாட்டின் உரிமைக்காக டெல்லி
சென்றதாகச் சொல்லும் அவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டின் உரிமைகள் தெரியவில்லையா?
நாங்கள் தான்
2026லும் 2031லும் ஆட்சிக்கு வருவோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். இரண்டு தேர்தல்களுக்கு
வாக்காளர்களை விலைக்கு வாங்கும் அளவிற்குத் தங்களிடம் பணமுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
தற்போது டாஸ்மாக்
பணியாளர் சங்கத்தை முன்னிறுத்தி திமுக அரசு போதை கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கப் பார்க்கிறது.
அதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கலாம். அவ்விரண்டு
கட்சிகளும் 25 கோடிக்கு திமுகவிடம் விலைபோன கட்சிகளே. நாட்டு மக்களின் நலனைவிட இவர்களுக்கு
ஊழல் பணமே முக்கியம். டாஸ்மாக் ஊழியர்கள் எண்ணிக்கை 29,000 பேர். அவர்களுக்கு சிறுகுறு
தொழில்கள் மூலம் வேலை வாய்ப்பை செய்து தர இயலாத ஓர் அரசு தமிழ்நாட்டை ஆள வேண்டுமா?
டாஸ்மாக்
ஊழலில் அதிமுக-திமுக ஆகிய இரண்டு கட்சிகள் மீதும் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழலால் தமிழ்நாட்டின் அரசியல் வலிமையை இவ்விரு கட்சிகளும் மோசமடையச்
செய்துள்ளன.
டாஸ்மாக்
ஊழல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் போதை பொருட்கள் விற்பனை. அதில் திமுக நிர்வாகி
சிக்கினார். நாட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை!
இவ்வளவு மோசமான ஆட்சியா என்ற அளவிற்கு உள்ளது. 2022ல் சிஐஐ தக்ஷின் என்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன்.
அந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தவர் முதல்வர் ஸ்டாலின் தான். அப்போது அவர் சொன்னது, ‘திரைப்படங்களில் இனி புகை,
குடிப் பழக்கம் கேடு என்பதுடன் போதைப்பொருள் பழக்கத்தையும் குறிப்பிடுங்கள்’
என்றார். அதன் பிறகு அந்தக் குறிப்பும் திரைப்படங்களில்
வருகிறது. ஆனால், அவர் கட்சியில் இருப்போரே
இத்தகைய தொழிலில் ஈடுபட்டு சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கர்நாடகாவில்
புகைப்பழக்க வயது வரம்பை
21 ஆக உயர்த்தியுள்ளனர். இங்கு வெறும் வெற்று அறிக்கைகள்
தான். எதுவும் செயல்பாட்டில் இல்லை.
இத்தகைய
மோசமான ஓர் ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாடு போதை மாநிலமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
சாராய
விற்பனை இல்லை என்றால் கள்ளச்சாராய விற்பனை பெருகிவிடும் என்பது சுத்த அபத்தம். சாராய விற்பனை அமோக ஊழலுடன்
நடந்து வரும் மாநிலத்தில் தான் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படுகின்றன. இது இங்குள்ள மோசமான நிலையையே காட்டுகிறது. அதனால் குடிப்பழக்கத்தை
ஒழிப்பதும் குடியின் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே தீர்வாக இருக்க
முடியும். கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதே அரசின் கடமை. அதைக் காரணம் காட்டி சாராய விற்பனை செய்வது
ஒரு நல்ல அரசின் பண்பு அல்ல.
திராவிட
மாடல் அரசு என்று சொல்லிக்கொண்டும் பெரியாரின் புகைப்படங்களைப் பயன்படுத்திக்கொண்டும்
இப்படி ஊழல் நிறைந்த ஆட்சி செய்வது ஏற்புடையது அல்ல. இவற்றைக் கேட்காமல் மௌனமாக இருப்பது பெரியாரிய
இயக்கங்கள் செய்யும் தவறு.
தமிழ்நாட்டில் திமுக அரசு செய்யும் எந்தவொரு பிரச்சனையில் இருந்தும் தப்பிக்க 'பாஜக உள்ளே வந்துவிடும்' என்று சொல்வது ஏற்புடையதல்ல. பாஜக அப்படி உள்ளே வரவும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
பாஜக போன்ற
ஓர் அரசை வீழ்த்த வேண்டும் என்றால்,
உங்கள் பக்கம் தவறுகள் இருக்கக்கூடாது. அதுவும்
டெல்லி, சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மதுபான ஊழலை ஒன்றிய பாஜக அரசு கையில் எடுத்திருப்பதை
அறிந்தும் இத்தகைய தவறுகளை திமுக அரசு செய்திருப்பது மடத்தனமானது.
ஒரு நல்ல
ஆட்சி மக்கள் பிரச்சனைகளை அறிந்து செயல்பட வேண்டும். ஒட்டுமொத்த ஊடகத்தையும் ஆளும் கட்சி தன் கட்டுப்பாட்டில்
வைத்துக்கொண்டிருந்தால் உண்மையான பிரச்சனையே வெளிவராது. பிறகு
எங்கிருந்து தீர்வு கிடைக்கும்.
2026ல் மக்கள் தான் தீர்வு காண வேண்டும்.
அன்புடன்
ஜெகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக