வெள்ளி, 20 ஜனவரி, 2017

சல்லிக்கட்டு மல்லுக்கட்டு


ஜல்லிக்கட்டு’, இது தான் இன்று உலக தமிழர்களின் ஒற்றைச் சொல்லாக இருகின்றது. இது தமிழர்களின் வீர விளையாட்டு. வருடா வருடம் தை மாதம் முதல் நாள் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது. இரண்டாம் நாள் விவசாயிகள் தங்களுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுகளை அலங்கரித்து மாட்டுப் பொங்கலாக கொண்டாடுகின்றனர். மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாடுகளின் கொம்பை சீவி அதில் வண்ண சாயங்கள் பூசி ஊர்வலம் கொண்டு வருகின்றனர். மக்கள் அதற்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக ஊர்களில் காளை மாடுகளை வளர்ப்பவர்கள் காளைகள் விளையாட்டுக் களத்தில் நுழைய ஒரு வாசலை அமைத்து அதன் வழியாக தங்கள் காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடுவார்கள். அந்த நுழைவாயிலின் பெயர் வாடிவாசல். அவிழ்த்துவிடப்படும் காளைகளின் கொம்பில் சல்லி காசு கட்டப்பட்டிருக்கும். இந்த காளைகளை அதன் திமில் பகுதியை அங்கு கூடி இருக்கும் மாடுபிடி வீரர்கள் பிடித்தவாறு பத்து வினாடிகலோ அல்லது வாடிவாசலில் இருந்து ஐம்பது அடி தூரம் வரையிலோ பிடித்துக் கொண்டிருந்தால் மாடு பிடி வீரர் வென்றதாக அறிவிக்கப்படும். பரிசும் வழங்கப்படும். இல்லையென்றால் காளை வென்றதாக அறிவிக்கப்படும். காளைகளின் கொம்பில் கட்டப்படும் சல்லிக்கட்டு காலப் போக்கில் ஜல்லிக்கட்டு என்றானது. ஜல்லிக்கட்டின் உண்மையான பெயர் ஏறுதழுவுதல். மஞ்சு விரட்டு என்றும் அழைக்கப்படுகிறது இந்த விளையாட்டு.

ஏறு தழுவுதல் விளையாட்டின் வரலாறு சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிந்து சமவெளி நாகரிகத்தின் சுவடுகளில் இருந்து கிடைத்த சில அரிய பொருட்களில் ஒரு வீரர் காளையை அடக்குவது போன்ற சித்தரிப்புகள் காணப்படுகின்றன. 2500 வருடம் பழமை வாய்ந்த சங்க தமிழ் இலக்கியத்திலும் இந்த வீர விளையாட்டு குறித்த பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இவை தான் சல்லிக்கட்டு விளையாட்டா? இதற்கு தான் இவ்வளவு பிரச்சனையா? இந்த விளையாட்டை நடத்தவில்லையென்றால் என்ன? இதன் அவசியம் தான் என்ன? முதலில் உழவனுக்கு ஏர் உழுதுவதற்கு உறுதுணையாக இருப்பது காளை. அது மட்டுமல்லாமல் உழவர்கள் விவசாயத்திற்க்காக வளர்க்கும் மாடுகள் பால் தருவதால் அவர்களுக்கான ஒரு வாழ்வாதரமாகவே மாடு வளர்த்தல் என்பது மாறுகிறது. இந்த மாட்டை தன் குடும்பத்தில் ஒருவராகவே விவசாயி பார்க்கிறான். இந்த குடும்ப நபரை கொண்டாடவும் முடிவு செய்கிறான். அப்படித் தான் அவன் பாரம்பரியத்தில் மாட்டுப் பொங்கல் என்ற ஒரு பண்டிகையை உருவாக்கி மாட்டை போற்றுகிறான் தமிழன்.

விலங்கை போற்ற ஏன் இந்த ஒரு விளையாட்டு? தன் வாழ்வாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் மாடுகள் செழிப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான் அந்த தமிழ் விவசாயி. ஆக தன் மாடுகளின் இனப் பெருக்கம் மிகவும் முக்கியமானதாக அவனுக்கு படுகிறது. மாடுகளின் இந்த செயலுக்காக வலுவான, பலம் பொருந்திய காளை மாடுகளை தேர்வு செய்ய ஒரு விளையட்டை கண்டுபிடிக்கிறான். அதுவே இந்த ஏறு தழுவுதல். போட்டியில் வெல்லும் காளைகளை இனப் பெருக்கத்திற்கு பயன்படுத்துகின்றான். இதை காலம் காலமாக நடத்தி வருவதால் மாடுகள் எப்படி அவன் வாழ்வில் ஒரு அங்கமாகிறதோ அதே போல மாட்டிற்காக நடத்தப்படும் இந்த மஞ்சு விரட்டு போட்டியும் ஒரு முக்கிய அங்கமாகவே அவன் வாழ்வில் மாறுகிறது. காலமும் மாறுகிறது. விவசாய நிலங்களில் உழுவதற்கு மாடுகளுக்கு பதிலாக அறிவியல் கண்டுபிடிப்பான டிராக்டர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் படுகிறது. இதனால் விவசாயிக்கு காளைகளின் தேவை குறைய தொடங்குகிறது. அவன் தன் காளைகளை பேணிக் காக்க ஏறு தழுவுதல் என்ற ஒன்றை மட்டுமே காரணமாக கொள்கிறான்.

இப்படி விவசாயிகளின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக திகழும் சல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான ஒரு நிலையை கடைபிடிக்கும் இந்த பீட்டா யார்? ஏன் யாருக்கும் இல்லாத விவசாயிகளின் மாடுகள் மீது இந்த பீட்டாவிற்கு இவ்வளவு அக்கறை? உலகிலேயே அதிக மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்வதற்காக இதே இந்தியாவில் நடக்கும் மிருகங்கள் கொல்லப்படும் சம்பவங்களில் தென்படாத மிருக துன்புறுத்தல் ஏன் அவர்கள் கண்களுக்கு தென்படவில்லை. அதை முதலில் கவணிக்க ஏன் தவறுகிறது நமது நாட்டின் அனிமல் வெல்ஃபேர் போர்ட் என்ற மிருக நல வாரியம்?

பீட்டா, அமெரிக்காவை சேர்ந்த விலங்குகள் நலன் சார்ந்த லாப நோக்கற்ற ஒரு அமைப்பு(Non-Profit Organisation). விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவர்கள் ஒரு இனத்தின் பாரம்பரியமும் கலாச்சாரமும் தெரியாமலும் புரியாமலும் கூட்டத்தில் ஒரு சிலர் செய்யும் தவறான செயல்களை ஆவணமாக எடுத்துக் கொண்டு முற்றிலும் தவறுதலான கண்ணோட்டத்தை சல்லிக்கட்டு மீது சுமத்துவது மிகப் பெரிய ஒரு தவறு. இவர்கள் இவ்வாறு செய்வதால் நிகழ்ந்து கொண்டிருக்கும், இனி வரும் காலங்களில் நிழகப் போகும் சம்பவங்கள் தான் என்ன?

சல்லிக்கட்டு என்ற பாரம்பரியம் மிக்க தமிழர் விளையாட்டு தடை செய்யப்பட்டால், விவசாயி தன் மாடுகளின் இனப் பெருக்கத்திற்கான தனது வலுவான பலம் பொருந்திய காளைகளை தேர்வு செய்யும் முறையை அடியோடு இழக்கிறான்! அவனது காளைகளை பேணிப் பாதுகாப்பதற்கான காரணத்தை இழக்கிறான். அவனது பண்டிகையான மாட்டுப் பொங்கலையும் கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். அவனது அடையாளத்தை இழக்கிறான். அவனிடம் இருக்கும் காளைகள் அழிய தொடங்குகின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி பண்ணாட்டு நிறுவனங்கள் ஜெர்சி வகை மாடுகளின் விந்தணுவை நம் நாட்டில் இறக்குமதி செய்யும். நம் நாட்டு பசுக்களுக்கு இந்த விந்தணு ஊசி மூலம் கருத்தரிப்பு செய்யப் படும். இது புதிதல்ல. பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று தான்.

இதனால் இரண்டு மிகப் பெரிய கேடுகள் நமக்கு ஏற்படும். ஒன்று, நம் நாட்டு மாடுகள் இனம் அழிந்துவிடும். ஏற்கனவே நூற்றுக்கும் அதிகமான வகை நாட்டு மாடுகள் இனம், இன்று வெறும் முப்பது வகையாக குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை படுகின்றனர். இரண்டாவது, இந்த ஜெர்சி வகை பசுக்களின் மூலம் கிடைக்கும் பால்!

பால் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஏ-1 மற்றும் ஏ-2’. நமது நாட்டு மாடுகள் தரக்கூடிய பால் வகை ஏ-2’(நமது தாய் பாலும் ஏ-2 பிரிவின் கீழ் தான் வருகிறது). ஆக அது தாய் பாலுக்கு இணையானது. ஆரோக்கியமானது. ஜெர்சி பசுக்களில் இருந்து கிடைக்கும் பால் ஏ-1 வகை. ஏ-1 வகை பாலில் இரண்டு வகையான (ஏ-1 பீட்டா-கேசின் மற்றும் ஏ-2 பீட்டா-கேசின்) புரதங்கள் இருக்கும். ஆனால் ஏ-2 வகை பாலில் ஒரு வகை புரதம்(ஏ-2 பீட்டா-கேசின்) மட்டும் இருக்கும். ஏ-1 வகை பாலால் சர்க்கரை நோய், இருதய நோய், குழந்தை இறப்பு மற்றும் செரிமான பிரச்சனைகள் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகின்றன. நோயால் மருந்துகள் விற்பனை அதிகமாகும். ஃபார்மா துறைக்கு லாபம் அதிகம் ஏற்படும்.

ஜெர்சி பசுக்களை நாட்டு மாடுகள் போல் எளிதாக பராமரிக்க முடியாது. அவை குளிர் தேசங்களுக்கு உகந்தவை. அவற்றுக்கு புல், வைக்கோல் போன்ற உணவுகளை கொடுக்க முடியாது. இறக்குமதி செய்யப்பட்ட உணவுகள் தர நேரிடும். இது ஒரு சாதாரண விவசாயிக்கு சுமையாக மாறிவிடும். அப்போது பண்ணாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் நமது விவசாயம் வந்துவிடும். இத்தகைய ஒரு சூழலை தான் பண்ணாட்டு நிறுவனங்கள் உருவாக்குவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன.

ஏறு தழுவுதல் நிகழ்வை ஒரு போட்டியாக மட்டுமே பார்க்காமல் அதன் பின்னால் இத்தனை பெரிய அரசியல் ஒளிந்திருப்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும். அப்போது தான் அதன் அவசியமும் புரியும். பீட்டா அமைப்பு இந்த பண்ணாட்டு நிறுவனங்களின் கைக் கூலியாக வேலை செய்வதும் புரியும். அன்று பிரிட்டிஷ் நாட்டுக்காரன் இந்தியாவிற்குள் உணவு பொருட்களான மசாலாவை வியாபாரம் செய்ய நுழைந்தான். அதன் பின் நம் சுதந்திரத்தை பரித்துக் கொண்டு நம்மை முன்னூறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அன்று அவன் முதலில் ஒழிக்க நினைத்தது நம் திண்ணை கல்வி முறையை தான். இன்று பண்ணாட்டு நிறுவனங்கள் ஒழிக்க நினைப்பது நம் காளைகளை!

மாணவர்களும் இளைஞர்களும் சல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்ததற்கு மிகப் பெரிய அளவில் போராட முக்கிய காரணம், தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக உரிமைகள் மறுக்கப்பட்டு கொண்டே இருப்பதை அவர்கள் பொறுத்துக் கொண்டு பார்த்து வந்தனர். இன்று அவர்களின் அடையாளத்தையும் மறுக்க அவர்கள் தயாராக இல்லை. பொங்கி எழுந்துவிட்டார்கள்.

சல்லிக்கட்டு மட்டுமல்லாமல் தமிழனுக்கு இழைக்கப்பட்ட எல்லா அநீதிக்கும் இனி அவன் எதிர்த்து குரல் கொடுக்கப் போகிறான்.

அன்புடன்

ஜெகன்

சனி, 7 ஜனவரி, 2017

கருப்பு பணமும் சாமானியர்களும்



2016 நவம்பர் 8-ஆம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் கையில் எனது ஸ்மார்ட் ஃபோனில் சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பதிவில் வித்தியாசமான ரூபாய் நோட்டு கட்டு ஒன்றை ஒருவர் தனது கையில் வைத்திருப்பது போல ஒரு புகைப்படம். அந்த புகைப்பட பதிவின் விளக்கம் – இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அவை சட்ட விரோதமானது. அதற்கு பதிலாக இந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும்.

சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் வருவது வழக்கம் தானே, அதற்காக இப்படியான ஒரு வதந்தியை லட்சம் மக்கள் பின் தொடரும் ஒரு குழு பரப்புவதா என்று முதலில் தோன்றியது. ஒரு சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை. அப்போது என் வீட்டில் இருந்தேன். தொலைக்காட்சியில் செய்தி சேனல்களை பார்க்கலாம் என்று ஒரு சேனலுக்கு மாற்றினேன். பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கை ஓடிக் கொண்டிருந்தது. முக்கியச் செய்தி என்று இணையதளத்தில் படித்த செய்தியை பார்த்தேன். உறுதி படுத்திக் கொண்டேன்.

இப்படியும் ஒரு விஷயம் நடக்குமா என்று நினைக்கும் வேளையில், நடந்து விட்டது என்று ஊர்ஜிதப்படுத்தியது அந்த தருணம்.

அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்த செய்தி - பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது, நாளை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை, அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்த ஏ.டி.எம்-களும் வேலை செய்யாது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் செலுத்தலாம். பழைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். அதற்கு கால அவகாசம் டிசம்பர் 30-ம் தேதி வரையில்(அதாவது 50 நாட்கள்). அதன் பிறகு செல்லாக் காசை மாற்ற வேண்டும் என்றால் மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை அடையாள அட்டை நகல் கொடுத்து ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம். அடுத்த 72 மணி நேரத்திற்கு அரசு மருத்துவமனைகளில், அரசு பேருந்து நிலைய, இரயில் நிலைய மற்றும் விமான நிலைய கவுண்டர்களில் பழைய நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும். பெட்ரோல் நிலையங்கள், சுடுகாடுகள், விமான நிலையங்களில் உள்ள அந்நிய செலாவணி நிலையங்கள் ஆகிய இடங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

வங்கிகளில் ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 10,000 ரூபாயும், ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக 20,000 ரூபாயும் எடுத்துக் கொள்ளலாம். ஏ.டி.எம்-களில் ஒரு கார்டுக்கு ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம். புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும்.

நாட்டின் கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்று அறிக்கையில் சொல்லி இருந்தார் பிரதமர் மோடி. இதன் மூலமாக தீவிரவாதத்திற்காக பயன்படுத்தப்படும் கருப்பு பணத்தையும் நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தார்.

மேலே குறிப்பிட்டிருந்தவை யாவும் ஒரே நாளில் கொண்டு வரப் பட்ட மாபெரும் மாற்றங்கள், கருப்பு பணத்திற்கு எதிராக! நினைத்துப் பார்க்கவே வியக்க வைக்கும் ஒரு துணிச்சலான நடவடிக்கை என்று தான் சொல்ல வேண்டும். இந்திய மக்கள் தொகை 130 கோடி. இவர்கள் அனைவரின் கைகளில் இருக்கும் பணத்தையும் வங்கிகளில் கொடுத்து மாற்ற வேண்டும். இந்த அதிரடி நடவடிக்கையின் நோக்கம் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லப் பட்டது. ஆனால் அதன் தாக்கம் எப்படிப் பட்டது என்பது தான் இதில் முக்கியம்.

உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர்! ஒருவர் தன் வேலை நிமித்தமாக வெளியூர் செல்கிறார். அவர் கையில் பத்தாயிரம் ரூபாய்க்கு ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தான் இருக்கிறது. இரவு 8 மணிக்கு பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிடுகிறார். வெளியூருக்கு புதிதாக சேன்ற நபர் எங்கு சென்று பணம் எடுப்பார்? ஏ.டி.எம் ஏ.டி.எம்-மாக அலைந்து திரிந்து பணம் எடுப்பதற்காக ஒன்றும் அவர் வெளியூர் செல்லவில்லை. அதன் காரணமாக தான் கையில் பணம் வைத்திருக்கிறார். மறுநாள் ஏ.டி.எம்-கள், வங்கிகள் எதுவும் வேலை செய்யாது!

அவர் அந்த ஒரு நாள் எங்கு சென்று உணவு வாங்குவார்? உணவு வழங்க அரசு ஏற்பாடு செய்ததா? இல்லை. அவரை உண்ணாவிரதம் இருக்கும் நிலைக்கு தள்ள யாருக்கு உரிமை இருக்கிறது? சுதந்திர இந்தியாவில் அவரது சுதந்திரத்தை பறிக்க யாருக்கு உரிமை இருக்கிறது? இதற்கு யார் பொறுப்பு? பாதிக்கப் பட்ட நபர் சர்க்கரை நோய் உள்ள ஒரு முதியவர் என்றால் என்ன ஆகும்? அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு நடந்தே செல்ல வேண்டும் என்றால், அவர் செல்லும் வழியில் மயங்கி விழுந்து இறந்தே போவார். இப்படியான ஒரு மரணம் இந்த அறிவிப்பு வந்த பிறகு நிகழ்ந்திருக்க நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. நிஜத்தில் 33 பேர் செல்லாக்காசு விவகாரத்தால் இறந்ததாக செய்திகள் கூறுகின்றன. இது தான் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டிய சிரமமா? இப்படித் தான் புதிய இந்தியா பிறந்ததா!!?

வீட்டில் பணம் வைத்திருப்பவர்கள் எல்லோரும் வங்கிகளுக்கு சென்று தங்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் அனைவரது பணமும் கணக்கில் வந்துவிடும். இத்தனை நாட்கள் கணக்கில் காட்டப் படாத கருப்பு பணம் எப்படியும் பிடிபடும் என்ற ஒரு எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. ஆனால் நடந்தது அதுவா?

சாமானியர்கள் தான் வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசலிலும் நாள்தோறும் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர். கருப்பு பணம் வைத்திருக்கும் நபர்களா வங்கியில் சென்று காத்துக் கிடந்தார்கள்? ஒரு பணக்காரனையோ அல்லது ஒரு அரசியல்வாதியையோ வங்கியின் வரிசையில் நின்று பணம் மாற்றியதை நாம் பார்த்தோமா? அவர்களிடம் இருக்கும் பணம் எவ்வாறு மாற்றப்பட்டது? இல்லை அவர்களிடம் கருப்பு பணமே இல்லையா? அது தான் செல்லாக்காசு நடவடிக்கையின் அதிர்ச்சி தகவலா?

யாரிடம் எவ்வளவு கருப்பு பணம் இருக்கிறது என்பது அரசு புலனாய்வுத் துறைக்கு நன்றாகவே தெரியும். செல்லாக்காசு நடவடிக்கை கருப்பு பணத்தை கணக்கில் கொண்டுவர தான் என்றால், கருப்பு பணத்தை பதுக்கியவர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்டிருக்கலாம். அதை முதலில் செய்யாமல் இப்படி மக்களை துன்புறுத்துவதால் நிலைமை இன்னும் மோசமாக தான் ஆகும்.

இந்த நடவடிக்கையால் கருப்பு பணத்தை ஓரளவிற்கு வெளியில் கொண்டு வந்து விட்டோம் என்று அரசு சொன்னால், தற்போதும் இனிமேலும் கருப்பு பணம் உருவாகாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் செல்லாக்காசு நடவடிக்கையும் செல்லாமல் போய் விடும். 50 நாட்கள் மக்கள் பட்ட துயரங்கள் வீணாகிவிடும்.

அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் இனி வரப்போகும் கருப்பு பணத்தின் புழக்கத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திட்டத்தை அமல்படுத்துவதற்கான அடிப்படை வசதிகளை அரசு அமைத்திட வேண்டும்.

அன்புடன்
ஜெகன்