‘ஜல்லிக்கட்டு’, இது தான் இன்று உலக தமிழர்களின்
ஒற்றைச் சொல்லாக இருகின்றது. இது தமிழர்களின் வீர விளையாட்டு.
வருடா வருடம் தை மாதம் முதல் நாள் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்
படுகிறது. இரண்டாம் நாள் விவசாயிகள் தங்களுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி
செலுத்தும் விதமாக மாட்டுகளை அலங்கரித்து மாட்டுப் பொங்கலாக கொண்டாடுகின்றனர்.
மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாடுகளின் கொம்பை சீவி அதில் வண்ண சாயங்கள் பூசி
ஊர்வலம் கொண்டு வருகின்றனர். மக்கள் அதற்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்துவது
வழக்கம்.
இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக ஊர்களில்
காளை மாடுகளை வளர்ப்பவர்கள் காளைகள் விளையாட்டுக் களத்தில் நுழைய ஒரு வாசலை
அமைத்து அதன் வழியாக தங்கள் காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடுவார்கள்.
அந்த நுழைவாயிலின் பெயர் வாடிவாசல். அவிழ்த்துவிடப்படும் காளைகளின் கொம்பில் சல்லி
காசு கட்டப்பட்டிருக்கும். இந்த காளைகளை அதன் திமில் பகுதியை அங்கு கூடி இருக்கும்
மாடுபிடி வீரர்கள் பிடித்தவாறு பத்து வினாடிகலோ அல்லது வாடிவாசலில் இருந்து ஐம்பது
அடி தூரம் வரையிலோ பிடித்துக் கொண்டிருந்தால் மாடு பிடி வீரர் வென்றதாக அறிவிக்கப்படும்.
பரிசும் வழங்கப்படும். இல்லையென்றால் காளை வென்றதாக அறிவிக்கப்படும். காளைகளின்
கொம்பில் கட்டப்படும் ‘சல்லிக்கட்டு’ காலப் போக்கில் ஜல்லிக்கட்டு என்றானது. ஜல்லிக்கட்டின் உண்மையான பெயர் ‘ஏறுதழுவுதல்’. மஞ்சு விரட்டு என்றும் அழைக்கப்படுகிறது இந்த விளையாட்டு.
ஏறு தழுவுதல் விளையாட்டின் வரலாறு
சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிந்து சமவெளி நாகரிகத்தின் சுவடுகளில்
இருந்து கிடைத்த சில அரிய பொருட்களில் ஒரு வீரர் காளையை அடக்குவது போன்ற சித்தரிப்புகள்
காணப்படுகின்றன. 2500 வருடம் பழமை வாய்ந்த சங்க தமிழ் இலக்கியத்திலும் இந்த வீர
விளையாட்டு குறித்த பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இவை தான் சல்லிக்கட்டு விளையாட்டா? இதற்கு தான் இவ்வளவு பிரச்சனையா? இந்த விளையாட்டை நடத்தவில்லையென்றால்
என்ன? இதன் அவசியம் தான் என்ன? முதலில் உழவனுக்கு ஏர் உழுதுவதற்கு
உறுதுணையாக இருப்பது காளை. அது மட்டுமல்லாமல் உழவர்கள் விவசாயத்திற்க்காக
வளர்க்கும் மாடுகள் பால் தருவதால் அவர்களுக்கான ஒரு வாழ்வாதரமாகவே மாடு வளர்த்தல்
என்பது மாறுகிறது. இந்த மாட்டை தன் குடும்பத்தில் ஒருவராகவே விவசாயி பார்க்கிறான்.
இந்த குடும்ப நபரை கொண்டாடவும் முடிவு செய்கிறான். அப்படித் தான் அவன்
பாரம்பரியத்தில் மாட்டுப் பொங்கல் என்ற ஒரு பண்டிகையை உருவாக்கி மாட்டை
போற்றுகிறான் தமிழன்.
விலங்கை போற்ற ஏன் இந்த ஒரு
விளையாட்டு? தன் வாழ்வாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் மாடுகள் செழிப்பாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான் அந்த தமிழ் விவசாயி. ஆக தன்
மாடுகளின் இனப் பெருக்கம் மிகவும் முக்கியமானதாக அவனுக்கு படுகிறது. மாடுகளின்
இந்த செயலுக்காக வலுவான, பலம் பொருந்திய காளை மாடுகளை தேர்வு செய்ய ஒரு விளையட்டை கண்டுபிடிக்கிறான்.
அதுவே இந்த ஏறு தழுவுதல். போட்டியில் வெல்லும் காளைகளை இனப் பெருக்கத்திற்கு பயன்படுத்துகின்றான்.
இதை காலம் காலமாக நடத்தி வருவதால் மாடுகள் எப்படி அவன் வாழ்வில் ஒரு அங்கமாகிறதோ
அதே போல மாட்டிற்காக நடத்தப்படும் இந்த மஞ்சு விரட்டு போட்டியும் ஒரு முக்கிய அங்கமாகவே
அவன் வாழ்வில் மாறுகிறது. காலமும் மாறுகிறது. விவசாய நிலங்களில் உழுவதற்கு மாடுகளுக்கு
பதிலாக அறிவியல் கண்டுபிடிப்பான டிராக்டர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் படுகிறது.
இதனால் விவசாயிக்கு காளைகளின் தேவை குறைய தொடங்குகிறது. அவன் தன் காளைகளை பேணிக்
காக்க ஏறு தழுவுதல் என்ற ஒன்றை மட்டுமே காரணமாக கொள்கிறான்.
இப்படி விவசாயிகளின் வாழ்வில் ஒரு
முக்கிய அங்கமாக திகழும் சல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான ஒரு நிலையை கடைபிடிக்கும்
இந்த பீட்டா யார்? ஏன் யாருக்கும் இல்லாத விவசாயிகளின் மாடுகள் மீது இந்த பீட்டாவிற்கு இவ்வளவு
அக்கறை? உலகிலேயே அதிக மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்வதற்காக இதே இந்தியாவில் நடக்கும் மிருகங்கள்
கொல்லப்படும் சம்பவங்களில் தென்படாத மிருக துன்புறுத்தல் ஏன் அவர்கள் கண்களுக்கு
தென்படவில்லை. அதை முதலில் கவணிக்க ஏன் தவறுகிறது நமது நாட்டின் ‘அனிமல் வெல்ஃபேர் போர்ட்’ என்ற மிருக நல வாரியம்?
பீட்டா, அமெரிக்காவை சேர்ந்த விலங்குகள் நலன் சார்ந்த லாப நோக்கற்ற ஒரு அமைப்பு(Non-Profit Organisation). விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவர்கள் ஒரு இனத்தின்
பாரம்பரியமும் கலாச்சாரமும் தெரியாமலும் புரியாமலும் கூட்டத்தில் ஒரு சிலர்
செய்யும் தவறான செயல்களை ஆவணமாக எடுத்துக் கொண்டு முற்றிலும் தவறுதலான
கண்ணோட்டத்தை சல்லிக்கட்டு மீது சுமத்துவது மிகப் பெரிய ஒரு தவறு. இவர்கள் இவ்வாறு
செய்வதால் நிகழ்ந்து கொண்டிருக்கும், இனி வரும் காலங்களில் நிழகப் போகும் சம்பவங்கள் தான் என்ன?
சல்லிக்கட்டு என்ற பாரம்பரியம்
மிக்க தமிழர் விளையாட்டு தடை செய்யப்பட்டால், விவசாயி தன் மாடுகளின் இனப் பெருக்கத்திற்கான தனது வலுவான
பலம் பொருந்திய காளைகளை தேர்வு செய்யும் முறையை அடியோடு இழக்கிறான்! அவனது காளைகளை
பேணிப் பாதுகாப்பதற்கான காரணத்தை இழக்கிறான். அவனது பண்டிகையான மாட்டுப்
பொங்கலையும் கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். அவனது அடையாளத்தை இழக்கிறான். அவனிடம்
இருக்கும் காளைகள் அழிய தொடங்குகின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி பண்ணாட்டு
நிறுவனங்கள் ஜெர்சி வகை மாடுகளின் விந்தணுவை நம் நாட்டில் இறக்குமதி செய்யும். நம்
நாட்டு பசுக்களுக்கு இந்த விந்தணு ஊசி மூலம் கருத்தரிப்பு செய்யப் படும். இது
புதிதல்ல. பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று தான்.
இதனால் இரண்டு மிகப் பெரிய கேடுகள்
நமக்கு ஏற்படும். ஒன்று, நம் நாட்டு மாடுகள் இனம் அழிந்துவிடும். ஏற்கனவே நூற்றுக்கும் அதிகமான வகை
நாட்டு மாடுகள் இனம், இன்று வெறும் முப்பது வகையாக குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை படுகின்றனர்.
இரண்டாவது, இந்த ஜெர்சி வகை பசுக்களின் மூலம் கிடைக்கும் பால்!
பால் இரண்டு வகையாக
பிரிக்கப்படுகிறது. ‘ஏ-1’ மற்றும் ‘ஏ-2’. நமது நாட்டு மாடுகள் தரக்கூடிய பால் வகை ‘ஏ-2’(நமது தாய் பாலும் ‘ஏ-2’ பிரிவின் கீழ் தான் வருகிறது). ஆக அது தாய் பாலுக்கு இணையானது.
ஆரோக்கியமானது. ஜெர்சி பசுக்களில் இருந்து கிடைக்கும் பால் ‘ஏ-1’ வகை. ‘ஏ-1’ வகை பாலில் இரண்டு வகையான (ஏ-1 பீட்டா-கேசின் மற்றும் ஏ-2 பீட்டா-கேசின்) புரதங்கள்
இருக்கும். ஆனால் ‘ஏ-2’ வகை பாலில் ஒரு வகை புரதம்(ஏ-2 பீட்டா-கேசின்) மட்டும் இருக்கும். ‘ஏ-1’ வகை பாலால் சர்க்கரை நோய், இருதய நோய், குழந்தை இறப்பு மற்றும் செரிமான பிரச்சனைகள் உள்ளிட்ட
நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகின்றன. நோயால் மருந்துகள்
விற்பனை அதிகமாகும். ஃபார்மா துறைக்கு லாபம் அதிகம் ஏற்படும்.
ஜெர்சி பசுக்களை நாட்டு மாடுகள்
போல் எளிதாக பராமரிக்க முடியாது. அவை குளிர் தேசங்களுக்கு உகந்தவை. அவற்றுக்கு புல், வைக்கோல் போன்ற உணவுகளை கொடுக்க
முடியாது. இறக்குமதி செய்யப்பட்ட உணவுகள் தர நேரிடும். இது ஒரு சாதாரண விவசாயிக்கு
சுமையாக மாறிவிடும். அப்போது பண்ணாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் நமது
விவசாயம் வந்துவிடும். இத்தகைய ஒரு சூழலை தான் பண்ணாட்டு நிறுவனங்கள் உருவாக்குவதற்கு
காத்துக் கொண்டிருக்கின்றன.
ஏறு தழுவுதல் நிகழ்வை ஒரு
போட்டியாக மட்டுமே பார்க்காமல் அதன் பின்னால் இத்தனை பெரிய அரசியல்
ஒளிந்திருப்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும். அப்போது தான் அதன் அவசியமும்
புரியும். பீட்டா அமைப்பு இந்த பண்ணாட்டு நிறுவனங்களின் கைக் கூலியாக வேலை
செய்வதும் புரியும். அன்று பிரிட்டிஷ் நாட்டுக்காரன் இந்தியாவிற்குள் உணவு
பொருட்களான மசாலாவை வியாபாரம் செய்ய நுழைந்தான். அதன் பின் நம் சுதந்திரத்தை
பரித்துக் கொண்டு நம்மை முன்னூறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அன்று அவன் முதலில்
ஒழிக்க நினைத்தது நம் திண்ணை கல்வி முறையை தான். இன்று பண்ணாட்டு நிறுவனங்கள்
ஒழிக்க நினைப்பது நம் காளைகளை!
மாணவர்களும் இளைஞர்களும் சல்லிக்கட்டு
போட்டிக்கு தடை விதித்ததற்கு மிகப் பெரிய அளவில் போராட முக்கிய காரணம், தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக
உரிமைகள் மறுக்கப்பட்டு கொண்டே இருப்பதை அவர்கள் பொறுத்துக் கொண்டு பார்த்து
வந்தனர். இன்று அவர்களின் அடையாளத்தையும் மறுக்க அவர்கள் தயாராக இல்லை. பொங்கி
எழுந்துவிட்டார்கள்.
சல்லிக்கட்டு மட்டுமல்லாமல் தமிழனுக்கு
இழைக்கப்பட்ட எல்லா அநீதிக்கும் இனி அவன் எதிர்த்து குரல் கொடுக்கப் போகிறான்.
அன்புடன்
ஜெகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக