ஞாயிறு, 14 ஜனவரி, 2018

தமிழக அரசியலில் ரஜினி-கமல்!


2014-ல் லிங்கா திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்வில் பேசிய நடிகர் திரு.ரஜினிகாந்த்,

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் நல்ல கருத்துக்களை சொல்லும் படைப்புகளே போதும்என்றார்.

ஆனால் 2017 டிசம்பர் 31 அன்று தான் அரசியலுக்கு வருவதை உறுதி படுத்தினார். அப்போது பேசிய அவர்,

கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து பிற மாநிலங்கள் சிரிக்கின்றன. தமிழக மக்களுக்காக இந்த முடிவை எடுக்கவில்லை என்றால் நான் சாகும் வரை இந்த குற்ற உணர்வு என்னை துறத்தும்என்றார்.

இதன் மூலம் தமிழகத்தில் தற்போது இருப்பதாக சொல்லக்கூடிய அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சி தான் இது.

அதை நிரப்புவது யார் என்பதே மிக முக்கியமான கேள்வி!
கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் தான் என்னென்ன?

2017 ஜனவரி மாதம் - 140 வருடங்களில் இல்லாத வறட்சியால் தினந்தோறும் விவசாயிகள் தற்கொலை என தொடங்கி, ஜல்லிக்கட்டு போராட்டம் தை புரட்சி, நெடுவாசல் - கதிராமங்கலம் போராட்டம், புது டெல்லியில் விவசாயிகள் போராட்டம்அவர்களை மதிக்காத ஒரு பிரதமர், 2009 முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்த மெரினா கடற்கரைக்கு சென்ற மக்களை கைது செய்ததோடு அவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தது காவல்துறை. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் கணவோடு இருந்த மாணவி அனிதாவை மருத்துவ கவுண்சிலிங்குக்கு அழைக்காமல் நீதி மன்றங்களுக்கு அலையவிட்டு அவளை தற்கொலைக்கு தள்ளியது இந்த சிஸ்டம்!
மாட்டிறைச்சி உண்ண தடை! ஜி.எஸ்.டி என்ற பெயரில் மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு எடுத்துக் கொண்டதும், அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டதும் கடந்த ஆண்டில் நிகழ்ந்தவை. ரேசன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வந்த பொருட்கள் நிறுத்தப்பட்டும் விலை உயர்த்தப்பட்டும் விட்டது.
21 வயதான தமிழக மீனவர் பிரிட்ஜோ நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார், ஒக்கி புயலால் காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்கள், அவர்களை மீட்க போராடும் மக்கள்.

இவ்வாறு 2017 முழுவதுமாக பல்வேறு இன்னல்களுடன் ஒரு போராட்ட வருடமாகவே தமிழ்நாட்டுக்கு இருந்து வந்தது
இவ்வாறான பல்வேறு பிரச்னைகளை கடந்த ஆண்டில் தமிழக மக்கள் சந்தித்தனர். அப்போதெல்லாம் தன்னை வாழவைத்த தெய்வங்களுக்கு நடிகர் ரஜினி குரல் கொடுத்தாரா? இல்லை. இனிமேல் குரல் கொடுப்பாரா என்றால், நிச்சயம் இல்லை!

காரணம், அவர் தேர்தலுக்காக மட்டுமே தன்னை தயார் படுத்திக்கொள்ள முற்படுகிறார். அதனால் தான் சட்டசபை தேர்தல் வரும் போது கட்சியை அறிவிப்பேன். அதுவரை தான் உட்பட தன் ரசிகர்கள் யாரும் அரசியல் பேச வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், அறிக்கை விடுவதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் வேறு சிலர் இருக்கிறார்கள். அதை நாம் செய்ய வேண்டாம் என்றும் சொல்லி இருக்கிறார். ரஜினி தன் அரசியலில் பெரும் தோல்வியை சந்திப்பார் என்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணமாக இருக்கும். சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது. அதை மாற்ற வேண்டும் என்று சொல்லும் ஒருவர் மக்களுக்காக களத்தில் போராடாமல் மாற்றுவேன் என்று சொல்வது ஒரு மிகப் பெரிய மாயை. இதை தான் மக்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

இந்த மாயையை கட்டி எழுப்பி அதில் அரசியல் செய்து வெற்றி பெற நினைக்கும் ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது இந்த சீர் கெட்ட சிஸ்டத்தின் வெளிப்பாடு தான். அதை உடைத்தெறியும் பொறுப்பு தமிழக மக்களுக்கு நிச்சயம் இருக்கிறது. அதை சிறப்பாக செய்து முடிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழக அரசியல் என்பதை 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு முன் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின் என்றே சொல்லலாம். அதன் பிறகான தொடர் எழுச்சி போராட்டங்கள் இங்குள்ள சட்டங்களையும் சிஸ்டத்தையும் மக்கள் விரோத கொள்கைகளையும் சுற்றுசூழலை அழிக்கும் திட்டங்களையும், இனப்படுகொலைகளையும் எதிர்த்து கேள்விகள் எழுப்பிக் கொண்டு இருக்கிறது. இந்த போராட்டங்களுக்கு தனியாக ஒரு தலைவன் இல்லை! மக்களின் கூட்டு முயற்சிகளே இந்த போராட்டங்கள். உண்மையில் தலைமையற்ற இந்த மக்கள் எழுச்சியை பயன்படுத்திக் கொள்ள தான் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இப்படி தான் ஒரு தலைவன் உருவாகுவானா? நிச்சயம் இல்லை. இன்று வரை நம் சிஸ்டம் நடிகர் ரஜினி சொல்வதை போல சீர் கெட்டு இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமும் இது தான். இங்கு தலைவர்கள் எழுச்சியால் உருவாவதில்லை. வெறும் பிம்பங்களாக உருவாக்கப்படுகிறார்கள். இந்த அரசியல் தெளிவு என்று மக்களிடத்தில் பிறக்கிறதோ அன்று தான் இங்குள்ள சிஸ்டத்தில் மாற்றம் ஏற்படும். இந்த தெளிவின் ஒரு ஆரம்பம் தான் ஜல்லிக்கட்டு போராட்டம்.

எழுச்சியால் உருவாகும் தலைவர்கள் பல்வேறு தளங்களில் உருவாக துவங்கிவிட்டார்கள். அவர்களை அடையாளம் காண முடிகிறது. மக்களை நோக்கிய அவர்களின் பயணம் விரிவடையும். அதுவே மாற்றத்தையும் கொண்டு வரும்.

இன்று அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்களாகிய ரஜினி, கமல் போன்றோரால் இந்த மாற்றத்தை நிச்சயம் கொண்டு வர முடியாது. இதற்கு ஒரு சிறு உதாரணம்இன்று தமிழ் நாட்டில் கல்வி ஒரு வியாபாரமாகிவிட்டது. தனியார் மயமாக்கப்பட்டுவிட்டது. கல்வி தனியார்மயமாக அன்றைய தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு முக்கிய காரணம். அவர் திராவிட முன்னேற்ற கழக கட்சியில் இருந்தவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், பிறகு தனிக்கட்சி தொடங்கி முதலமைச்சராகவும் இருந்தவர். எம்.ஜி.ஆர் அளவுக்கு அரசியல் அடித்தளம் இல்லாத இன்றைய நடிகர்கள் நிச்சயம் அரசியலில் வெற்றி பெற முடியாது. அதைவிட முக்கியம், அவர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவே முடியாது என்பது தான்.

நடிகர் கமல் ஊழல் அரசியலை ஒழிக்க வேண்டும் என்ற விடயத்தை கையில் எடுத்திருக்கிறார். நடிகர் ரஜினியும் சொந்த நாட்டு மன்னர்களே கொள்ளையடிக்கிறார்கள் என்ற கருத்தை முன் வைக்கிறார். இவர்கள் இருவரில் கமல் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் ஊழல்களையும் விமர்சனம் செய்தவர். ரஜினி தனிப்பட்டு யாரையும் குறிப்பிடாமல் சிஸ்டமே சரியில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லி இருக்கிறார்.
ஆனால் இவர்கள் இருவருமே இந்த சிஸ்டத்தின் ஆரம்பமான இந்திய சிஸ்டத்தின் ஊழல்களை பற்றி ஏன் பேசவில்லை?

இந்தியாவில் 1948 ஜீப் ஊழல் தொடங்கி, 1957 முந்திராஎல்..சி பேர ஊழல், 1971 மாருதி ஊழல், 1986 ஏர் இந்தியாபோயிங் ஊழல், 1989 போபர்ஸ் பீரங்கி ஊழல், 1994 சர்க்கரை இறக்குமதி ஊழல், 1996 கால் நடை தீவன ஊழல், 2002 கார்க்கில் சவப்பெட்டி ஊழல், 2009 தேக்குமர ஊழல், 2010 2ஜி அலைக்கற்றை ஊழல், 2010 காமன் வெல்த் விளையாட்டு ஊழல் என ஊழல்களின் பட்டியல் மிக நீளம். மேலே குறிப்பிட்டவை எல்லாம் வெறும்டிப் ஆஃப் தி ஐஸ்பெர்க்தான்.

இந்திய ஊழல் சிஸ்டத்தின் தொடர்ச்சி தான் இங்கு மாநிலத்தில் தொடர்கிறது. மாநிலங்களின் வரிப்பணத்தில் தான் இந்தியாவில் ஊழல்கள் நடைபெறுகிறது. உண்மையில் ஊழலை எதிர்க்கிறேன் என்று பேசும் இவர்கள் ஏன் இவற்றை பற்றி பேச மறுக்கிறார்கள்?? ஆக, இவர்களின் ஊழல் ஓழிப்பு பிரச்சாரம் என்பதே ஒரு மிகப் பெரிய கேள்விக்குறி தான்!

நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பதிவுகளில் பா.ஜ.க-வுக்கு ஆதரவான கருத்துக்களை சொல்லி இருக்கிறார் என்ற தகவல்கள் வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தேவைபட்டால் மதவாத கட்சியான பா.ஜ.க-வுடன் இணைந்து செயல்படவும் தயார் என்று அவர் சொல்லி இருப்பது ஆபத்தான அரசியல்.

நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் ஒரு படி மேலே தான். கொள்கைகள் என்ன என்று பத்திரிக்கையாளர்கள் தன்னிடம் கேட்க, தனக்கு இரண்டு நிமிடம் தலை சுற்றிவிட்டதாக கூறியவர், ஜாதி மத பேதமற்ற ஓர் ஆன்மீக(!!!) அரசியலை முன்னெடுக்கப் போவதாக சொல்லிவிட்டு ராமகிருஷ்ண மடத்தின் மடாதிபதியை போய் சந்திக்கிறார். அங்குள்ளவர் ரஜினியின் ஆன்மீக அரசியலை மடாதிபதியிடம் விளக்கும் போதுமதச்சார்பின்மைஎன்று சொல்லிக்கொள்ளும் தன்மை இல்லை என்று நையாண்டியாக கூறுகிறார். அந்த கருத்தை நடிகர் ரஜினியும் இதுவரை மறுக்கவும் இல்லை. இது தான் நடிகர் ரஜினியின் அரசியல் தரம்.

ரஜினியின் அரசியல் வருகையை இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் மகன் வரவேற்கிறார்!

ரஜினியின் அரசியல் வருகையை தமிழக பா..க வரவேற்கிறது, தமிழக பா..-வினர் பாராட்டுகின்றனர். பா..க உறுப்பினர் ஒருவர் ஒரு படி மேலே சென்று, ’மோடி மற்றும் அமித்ஷாவின்மாஸ்டர் ஸ்ட்ரோக்’ ‘ என்று ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார்! தொலைக்காட்சி விவாதங்களில் ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிரான கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும் பா..-வினர் கோபமடைகின்றனர். ரஜினியின் அரசியல் வருகை பா..-விற்கு பலத்தை சேர்க்கும் என்பதால் தான் பா..-வினர் அவரை ஆதரிக்கின்றனர், வரவேற்கின்றனர்.

என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே என்று சொல்லும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக மக்களின் வாழ்வில் மத நம்பிக்கையும் அரசியலும் வேறுபட்ட ஒன்று என்று தெரியாதா? இத்தனை வருடங்களாக தன் பாதைராஜ்ஜியமா இல்லை இமையமா?’(அரசியலா அல்ல ஆன்மீகமா) என்று கூறி வந்தவர் இன்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்காமல் இரண்டையும் கலப்பது ஏன்? நடிகர் ரஜினிகாந்த் முன்னெடுப்பது யாருக்கான அரசியல்? அது தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு பலம் சேர்க்கும் அரசியல். அதை தமிழக மக்கள் ஒரு நாளும் அனுமதிக்கமாட்டார்கள்!

சமூக நீதிக்காகவும் ஜாதி மத ஏற்றத் தாழ்வுகள் இல்லாத ஒரு சமூகம் அமைப்பதற்காகவும் போராடிய தந்தை பெரியாரின் மண்ணில் அந்த மக்களின் வாழ்வில் பொழுதுபோக்கின் ஒரு அம்சமான சினிமா துறையில் சாதிக்க தமிழகத்திற்கு வந்த ஒருவரான நடிகர் ரஜினிகாந்த், இன்று இந்த மண்ணில் அரசியல் செய்ய காவலர்கள் வேண்டும் என்று கேட்கிறார். இந்த அரசியல் காவலர்கள் என்ற கட்டமைப்பு மதவாத அரசியல் அமைப்புகளின் வெளிப்பாடு அன்றி வேறென்ன?

தமிழர்களால் பெயரையும் புகழையும் பெற்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று தமிழர்களுக்கு நேர் எதிர் அரசியலை, தன் பெயரையும் புகழையும் பயன்படுத்தி நடத்த முயற்சி செய்கிறாரே இது தான் அவர் தமிழக மக்களுக்கு செய்ய நினைக்கும் தொண்டா?

இன்று இந்தியாவில் முற்போக்கு சிந்தனையாளர்கள் நிறைந்த நகரமயமாக்கப்பட்ட முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டில் ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது எந்த விதத்திலும் பயன் தராது என்பதை தாண்டி தமிழர்களின் வாழ்வியலை பின்னுக்கு தான் தள்ளும்.

அன்புடன்,

ஜெகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக