கடந்த இரண்டு
வருடங்களாகவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் தடை
விதித்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. சென்ற வருடம் பொங்கல் பண்டிகை
நெருக்கத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா இல்லையா என்ற பரபரப்பு இருந்தது. ஜல்லிக்கட்டு
ஆர்வலர்களும் போட்டியை நடத்த கடும் முயற்சி எடுத்தனர். தமிழக அரசும் மத்திய
அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் மத்திய அரசு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்
தொடரில் ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் அவசர சட்டம் எதுவும் கொண்டு வராமல்
கடமைக்கு 2016 ஜனவரி மாதம் 7-ஆம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதை அமல் படுத்த
முடியாத வகையில் விலங்குகள் நல வாரியம் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய, ஜனவரி 12-ஆம் தேதி உச்ச நீதி மன்றம்
மத்திய அரசு கொண்டு வந்த அறிக்கைக்கு தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடை
நீடிக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்தார்கள். தடையை
மீறி சில இடங்களில் போட்டியை நடத்த முயன்றனர். காவல் துறையால் கைது
செய்யப்பட்டனர். பொங்கல் பண்டிகை ஜல்லிக்கட்டு நிகழாமலே சென்றது.
அதன் பிறகு கடந்த
ஒரு வருடமாக மத்திய அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு வரும் பொங்கலில் நிச்சயம் நடக்கும்
என்று உறுதி அளித்தார்கள். தமிழக மக்களும் எல்லா வாக்குறுதிகளையும் கேட்டுக்
கொண்டே தான் இருந்தார்கள். இந்த முறையும் ஜல்லிக்கட்டு நடத்த பாராளுமன்றத்தில்
எந்த சட்டமும் கொண்டு வர வில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால்
எதுவும் செய்ய இயலாது என்ற பதிலை கொடுத்தது மத்திய அரசு.
ஜனவரி மாதமும்
வந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை ஆதரிக்கும் வகையில் ஜனவரி 8-ஆம் தேதி காலை 7
மணிக்கு ஆயிரக் கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கு அருகே
கூடினர். அங்கிருந்து உழைப்பாளர் சிலை வரை பேரணி நடத்தினர்.
பொங்கல் பண்டிகை
நெருக்கத்தில் உச்ச நீதிமன்றத்திடம் ஜல்லிக்கட்டு வழக்கில்
தீர்ப்பை வழங்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியது. அதற்கு நீதிமன்றம் தீர்ப்பு
வழங்க கால அவகாசம் வேண்டும் என்று கூறியது. அவர்கள் சொன்ன கால அவகாசம் என்பது
பொங்கல் பண்டிகை முடிந்த பிறகே! ஓர் இன மக்கள் தங்கள் பாரம்பரியம் மிக்க ஒரு
பண்டிகையை கொண்டாடுவதற்கு நீதி மன்ற வாசலில் காத்து கிடப்பதை விடவும் ஒரு இழிவான
செயல் ஒரு நாட்டில் எதுவும் இருக்க முடியாது. அப்படி அவர்களுக்கு தடை போடுவதென்பது
அவர்களின் அடையாளத்தை அழிக்கும் செயலன்றி வேறெதுவும் கிடையாது.
சென்ற
ஆண்டு போலவே இந்த முறையும் ஜல்லிக்கட்டு நடைபெறப் போவதில்லை என்றே தோன்றியது. அப்படி
நிகழ்ந்தால் அது அதிசயம் தான் என்றும் தோன்றியது. இந்த முறையும் பல்வேறு இடங்களில்
ஜல்லிக்கட்டு போட்டியை தடையை மீறி நடத்தினர். மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு
நடைபெறும் இடத்தில் மக்கள் போராட்டம் நடத்தினர். ஒரு நாள் முழுவதும் போராட்டம்
நடைபெற்றது. அன்று இரவு போராட்டக்காரர்களை கலைக்க போலீஸ் தடியடி தடத்தியும் சிலரை
கைதும் செய்தது. இருப்பினும் பெண்களும் அலங்காநல்லூரை சுற்றியுள்ள கிராமப்புர
மக்களும் ஒன்று கூடி விட, போராட்டத்தை நிறுத்த இயலவில்லை. அன்று
இரவு முழுவதும் அலங்காநல்லூரில் மக்களின் அறவழிப் போராட்டம் தொடர்ந்தது.
அன்று
அலங்காநல்லூரில் போராடிய மக்களுக்கு நிகழ்ந்த இடையூறுகளுக்காகவும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க
கோரியும் மறுநாள்(17-01-2017) காலை சென்னை மெரினா கடற்கரையில்
உள்ள விவேகானந்தர் இல்லம் எதிரே இளைஞர்கள் அணி திரண்டனர்! போராட்டம் தொடங்கிய சில
மணி நேரத்தில் போராட்டத்தை பதிவு செய்ய ஊடகங்கள் அங்கு வர தொடங்குகிறது. இளைஞர்கள்
போராட்டத்தின் அதிரடி ஆரம்பமாக முந்தைய நாள் அலங்காநல்லூரில் காவல்துறையினாரால்
தடியடி நடத்தப்பட்ட போது அதை ஒளிபரப்பாத தொலைக்காட்சிகளை விரட்டினர்! பின் அங்கு
வந்த அரசியல் தலைவர்களை வர வேண்டாம் என்றும் கூறிவிட்டனர்.
மாணவர்களும்
இளைஞர்களும் நடத்திய இந்த போராட்டதின் சிறப்பு அம்சமே தன்னெழுச்சி தான்.
இவர்களுக்கு இந்த போராட்டத்தை நடத்த எவரது தலைமையும் தேவைப்பட வில்லை. சென்னையில்
வசிக்கும் மக்கள் மதுரையில் தங்களின் உரிமைகளுக்காக போராடிய மக்களுக்கு ஒரு தீங்கு
என்றவுடன் தானாக முன் வந்து குரல் கொடுத்தது சிறப்பு!
மெரினாவில்
நடைபெற்ற போராட்டத்தின் முதல் நாள் மாலை கலந்து கொள்ள சென்றிருந்தேன். மாணவர்களும் இளைஞர்களும் தான்
இருக்கிறார்களா என்றால், அங்கு உத்வேகமாக கலந்து கொண்ட ஒரு
வயதான அம்மாவும் இருந்தார்! அன்று சில ஆயிரம் மக்கள் திரண்டு இருந்ததை காண
முடிந்தது.
“வேண்டும்!
வேண்டும்! ஜல்லிக்கட்டு வேண்டும்!”
“தடை
செய்! தடை செய்! பீட்டாவை தடை செய்!”
என்று
மக்கள் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது.
காவல்துறையினர்
பலர் களத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர். தொலைக்காட்சி சேனல்கள் நிகழ்வை ஒளிப்பதிவு
செய்து கொண்டு இருக்க, தன்னெழுச்சிப் போராட்டத்தில் அவ்வப்போது
ஒருவரையொருவர் கட்டுப்படுத்திக் கொண்டே இருந்தனர். சாலையில் போக்குவரத்து
பாதிக்கப்படாமல் இருக்கவும் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்கவும் அங்கு
கூடியவர்களே பொறுப்பேற்றுக் கொண்டு நடந்ததை காண முடிந்தது. காவல்துறையினர் இவற்றை
கவனித்துக் கொண்டு இருந்தனர். மாலை இருள் சூழத் துவங்கியது. கடற்கரையில் இருந்த
விளக்குகள் அனைக்கப்பட்டு இருந்தது. இளைஞர்கள் கைகளில் வைத்திருந்த செல்ஃபோன்
ஃபிலாஷ் லைட்டை ஏற்றி போராட்டத்தை தொடர்ந்தனர்.
காவல்துறையினர்
கூடி பேசிக் கொண்டனர். லத்தியோடு காவலர்கள் குழு ஒன்று இடதுபுறமாகவும் மற்றொன்று
வலது புறமாகவும் சென்றது. போராட்டக்காரர்கள்(நான் உட்பட) அசருவதாகத் தெரியவில்லை. சிறிது
நேரத்தில் போராட்டக்காரர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அலங்காநல்லூரில் கைது
செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பதே அந்த தகவல். நல்லது. ஆனால், அதனால் ஜல்லிக்கட்டு நடைபெறுமா
என்ற கேள்வி அங்கு குழுமி இருந்த அனைவரது மனதிலும் எழுந்தது.
அலங்காநல்லூர்
மக்களின், “வாடிவாசல் திறக்கும் வரை வீடு
வாசல் போக மாட்டோம்” என்ற மனநிலை மெரினாவிலும் பரவத் தொடங்கியது.
மக்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்
வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்!
(தொடரும்)
அன்புடன்
ஜெகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக