புதன், 17 ஜனவரி, 2018

அன்புள்ள ஞாநிக்கு

                                                   

பத்திரிக்கையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடக ஆசிரியர், ஆவணப் படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் இயக்குநர் என பன்முக தன்மை கொண்ட ஞாநியின் ஆளுமைக்கு அவரது மறைவின் போது அவருக்கு அஞ்சலி செலுத்திய தமிழகத்தின் மிக முக்கிய நபர்களின் வருகையே ஒரு சான்று. அத்தகைய ஒருவர் மிகவும் எளிமையாகவே தன்னை எப்போதும் வைத்துக் கொள்பவர். அப்படியான அவருடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது 2007-ஆம் வருடம் அவரது நாடக குழுவான பரீக்‌ஷாவில் பணியாற்ற சென்ற போது தான்.

அவர் தனது வாழ்வில் கடைபிடித்த கொள்கைகளில் முக்கியமாக அவர் தன் நண்பர்களிடம் சொல்லுவதென்பது, நாம் நம் வாழ்வில் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை தான். நாம் எங்கு பிறக்கும் யாராக பிறக்கிறோம் என்பதை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் நாம் யாராக வாழ்கிறோம் என்பதையும் நம் அறநெறிகளையும் நாம் தான் தெர்ந்தெடுக்கிறோம் என்று சொல்வார்.

ஒரு நாடக ஆசிரியராக, கலைஞராக அவர் சொல்வது, கலையின் வேலை என்பது மனிதனை சிந்திக்க தூண்ட வேண்டும் அவனை தொந்தரவு செய்ய வேண்டும். அத்தகைய படைப்புகளே அவரது நாடகங்கள். அதில் சில காலம் நடித்த அனுபவம் என்பது மறக்க முடியாத பல விஷயங்களை கற்பித்தது. அவர் தமிழ் உருவாக்கம் கொடுத்த பாதல் சர்க்காரின் ’முனியன்’ நாடகம் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் அரசியல், விவசாயம், சுற்றுசூழல் என பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டிருக்கும். அவரும் அதில் நடித்திருப்பார். அதே போல் ’தேடுங்கள்’ என்ற நாடகத்தில் அவருடன் நடித்த அனுபவம் என்றும் என் நினைவில் இருக்கும்.

பத்திரிக்கை துறை, எழுத்து, அரசியல் விமர்சனம் மற்றும் சமூக செயல்பாட்டாளர் என பல்வேறு வேலைகளில் தொடர்ந்து இயங்கி வந்த அவருக்கு நாடகம் – பரீக்‌ஷா என்பது புத்துணர்ச்சியளிக்க கூடிய ஓர் இடம். தொடர்ந்து இளைஞர்களை வைத்து நாடக ஒத்திகைகள் செய்வது, நாடக பயிற்சிகள் நடத்துவது, நாடகங்களை மேடையேற்றுவது என அது அவரது வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகவே இருந்தது. அவர் திருமணம் கூட நாடக மேடையில் தான் நிகழ்ந்தது என்பதை அவர் சொல்வதுண்டு. பரீக்‌ஷா நாடக குழுவின் நண்பர்கள் அவருக்கு ஒரு குடும்பம் போலவே இருந்தார்கள்.

அனைவரிடமும் அன்பு கொண்ட அவரது வீடு எப்போதும் ஒரு திறந்த வீடு. நண்பர்கள், தேவை இருப்பவர்கள் அங்கு தங்கவும் அனுமதி அளித்தார்.  

அவரிடம் நான் மிகவும் ரசித்த விஷயங்கள் அவரது எழுத்துக்கள், அவரின் வரலாற்று அறிவு, அவரது நடிப்பு. வியந்தவை, எந்த விஷயத்திலும் அவரது அறிவு சார்ந்த தனித்துவமான பார்வை.

எனது வாழ்வில் கிடைத்த சிறந்த விஷயங்களில் அவரது நட்பும் ஒன்று. குறுகிய பார்வையிலிருந்து சமூக பார்வைக்கு என்னை விசாலமடைய செய்தவர் அவர். அது ஒரே நாளில் நின்று போவது இல்லை. வாழ்க்கை முழுவதும் என்னுடன் பயணிக்க கூடிய ஒன்று.

மரணம் என்பது எவரும் விரும்பாத ஒன்று. நீண்ட நாட்கள் வாழ தான் அனைவரும் ஆசை படுவர். ஞாநி ஒரு முறை பேசும் போது கூறியது, ‘நான் நீண்ட நாட்கள் வாழ்ந்தால் இன்னும் எத்தனை பிரச்னைகளுக்காக, சமூக நலனுக்காக என்னால் உழைக்க முடியும்’ என்றார். அவர் தனது வாழ்க்கையின் கொள்கைகளையும் வாழ்க்கையையுமே சமூக நலனுக்காக வாழ விரும்பியவர். அவர் இறக்கும் சில மணி நேரம் முன்பு வரை ஓயாமல் அதை செய்து கொண்டும் இருந்தவர்.

நாடகம், இலக்கியம், அரசியல் ஆய்வுகள், சமூக செயல்பாடுகள் என பல்வேறு தளங்களில் இயங்கிய ஞாநி இன்று தனது படைப்புகளாலும் என்னை போன்ற பலரின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களாலும் இயங்கி கொண்டு தான் இருப்பார்.

பல்வேறு மக்களை இணைக்கும் ஒரு மையமாக இயங்கியவர் ஞாநி. அந்த இணைக்கும் புள்ளியை இன்று இழந்துவிட்டோம் என்பது பெரும் வருத்தமளிக்கிறது. அவரது மறைவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்பது அவர் விட்டு சென்ற பணிகளை அவர் அமைத்து கொடுத்த தளங்களில் தொடர்வது தான் என்று கருதுகிறேன்.

எனக்கு பிடித்த எழுத்தாளருக்கு என் எழுத்துக்களால் மரியாதை செலுத்துகிறேன்.

அன்புடன்,

ஜெகன். 

2 கருத்துகள்:

  1. முற்றிலும் உண்மை. அவர் ஏற்படுத்திய தாக்கம் அவருடன் பயணித்தவர்க்கு கிடைத்த வரம்

    பதிலளிநீக்கு
  2. ஜெகன் நல்ல பதிவு உங்கள் முன்னேற்றத்தில் அவருடைய சிந்தனையும் ஒரு பங்கு பெரும் அது சிறந்த அடித்தளம் உங்கள் வாழ்வில். வெற்றி பெற வாழ்த்துக்கள்💐

    பதிலளிநீக்கு