பிரச்சனை 1 :
அக்டோபர் 17-ஆம் தேதி முதல் வடகிழக்கு
பருவமழை தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் நல்ல மழையும்
பெய்து வருகிறது. எனவே இனி தண்ணீர் பிரச்சனை குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று
நாம் நினைத்தோமேயானால், நம்மைவிட ஒரு சிறந்த முட்டாள் இந்த உலகத்தில் வேறு யாரும்
இருக்க முடியாது.
காரணம், பிரச்சனை மழையல்ல. சென்னையை பொறுத்தவரை
மழையின் சராசரி அளவு 1350-1400 மிமீ ஆக இருந்து வருகிறது. இது தமிழ்நாட்டின்
சராசரியை விடவும் அதிகம். ஆக, பிரச்சனை கிடைக்கும் மழையை நாம் முழுமையாக போதுமான
அளவுக்கு சேமித்து வைக்கிறோமா இல்லையா என்பதில் தான் இருக்கிறது.
இல்லை என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. ஏரிகள்,
குளங்கள் தூர்வாரப்படாமல் பல வருடங்களாக இருப்பது, நீர்நிலைகளில் கழிவு நீர்
கலப்பது. இதனால் முழுமையாக சேமிக்கபடாமல் மழை நீரானது கடலில் சென்று கலக்கிறது. இதுவே
இங்கு வாடிக்கையாக இருக்கிறது.
இதைவிட ஒரு முக்கிய பிரச்சனை ஒன்று
இருக்கிறது.
அதுதான், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு
செய்வது!
நீர்நிலைகளை அதிகமாக ஆக்கிரமிப்பு செய்வது
மக்களை விட அரசாங்கம் தான். அரசாங்கம் என்பது ஆட்சியாளர்கள், அதிகாரிகள். இவர்கள்
பொறுப்பற்று நடப்பது தான் நமது தண்ணீர் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக
இருக்கிறது.
அரசு அலுவலகங்களுக்காகவும்
திட்டங்களுக்காகவும் நீர்நிலைகளை மறுவகைப்பாடு(Reclassification) செய்து
அதிகாரத்தால் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். பள்ளிக்கரணை சதுப்புநிலம், எண்ணூர் நீர்பகுதி என முக்கியமான நீர்நிலை பகுதிகள்
அரசு திட்டங்களுக்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
![]() |
| தாமரைக்கேணி ஏரி மிது கட்டப்படும் காவல்நிலையம் |
பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதியின் மேல் சில
வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து துறையின் RTO அலுவலகத்திற்காக அரசு 7 ஏக்கர்
நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதை எதிர்த்து சூழலியல் போராளி ஈஞ்சம்பாக்கம்
சேகர் வழக்கு தொடர்ந்து அதை தடுத்தார்.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்பு 15000 ஏக்கராக இருந்திருக்கிறது. இன்று அது வெறும் 1500
ஏக்கராக சுருங்கியுள்ளது. 1980-களில் பள்ளிக்கரணையை ஆய்வு செய்த ஒரு நிறுவனம்
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாத்தாலே சென்னையின் நீர்த்தேவையை பூர்த்தி
செய்யமுடியும் என்று ஆய்வறிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை பகுதியில் உள்ள அனல் மின்
நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், எண்ணூர் நீரோடை பகுதியில் கலந்து
சுற்றுச்சுழலை மாசு படுத்துகிறது. எண்ணூர் நீரோடையின் மேல் அதானியின் துறைமுகம் மற்றும் மின்
ஆலைகள் அமைப்பது அந்த பகுதியை பெரும் சுற்றுச்சூழல் ஆபத்துக்கு ஆட்படுத்தும் என்று
மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அரசாங்கம் அதை பற்றியெல்லாம் கவலை கொள்ள
நேரமில்லாமல் இருக்கிறது.
அம்பத்தூர்
ஏரி 1954-ஆம் வருடம் 1146.5 ஏக்கராக இருந்திருக்கிறது. இன்று அது வெறும் 410 ஏக்கராக சுருங்கியுள்ளது. அதற்கு
முக்கிய காரணம், ஏரியின் நடுவில் ஒரு பெரும் பகுதியை அரசாங்கம் வீட்டுவசதி
வாரியத்திற்காக எடுத்துக்கொண்டதால் அம்பத்தூர் ஏரியே இரண்டாக பிரிந்து அயப்பாக்கம்
ஏரி என்ற பெயரில் புதிய ஏரி ஒன்று உருவாகியுள்ளது. ஏரியின் மீது ஆயிரக்கணக்கான
வீடுகள் தற்போது இருக்கிறது. ஏரியில் கழிவுநீர் கலப்பதால் அம்பத்தூர் ஏரி மெல்ல
இறந்துகொண்டிருக்கிறது.
சென்னை
நந்தம்பாக்கம் அருகே அடையாற்றின் மீது இருக்கும் 6 ஏக்கர் நிலத்தை ப்ளு நைல் ப்ராபெர்டீஸ் (Blue Nile Properties) என்ற கட்டுமான நிறுவனம் 2004 முதல் மறுவகைப்பாடு செய்ய முயன்று வருகிறது.
அதற்கு அவர்களிடம் இருக்கும் காரணம், அந்த நிலத்திற்கு பட்டா இருப்பது தான். நீர்நிலைகள்
இருக்கும் நிலம் பொது இடமாகும். இதற்கு தனி நபர் யாரும் உரிமை கோர முடியாது. ஆனால்,
தாசில்தார் அலுவலகத்தில் முறைகேடுகள் செய்து, லஞ்சம் கொடுத்து இவர்கள் பட்டா
வாங்கிவிடுகிறார்கள். அந்த பட்டாவை காட்டி நீர்நிலைகளை மறுவகைப்பாடு
செய்துகொள்கிறார்கள். இரண்டும் சட்ட விரோதமானது. அதிகாரிகள் நேர்மையாக
செயல்பட்டால் இத்தகைய சமூக கோளாறுகள் நடைபெறாமல் இருக்கும். உண்மையில் அதிகாரிகள்
அப்படி செயல்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது.
சோழிங்கநல்லூரில்
தாமரைக்கேணி என்ற ஏரியின் மீது தற்போது
காவல்நிலையம் கட்டிக்கொண்டிருக்கிறது அரசு. சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல்
ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 53.97 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்திற்கு தாரைவார்க்க
இருக்கிறது. இதுவே இந்த அரசின் நீர்மேலாண்மை கொள்கையின் யோக்கியதையாக இருக்கிறது. ஏரியின்
நீர்பிடிப்பு பகுதியின் மேல் தொழில் வளர்ச்சி கண்டு மக்களை தண்ணீருக்காக
தெருத்தெருவாக அலையவிடுவது தான் இவர்களின் திட்டமாக இருக்கிறது.
பிரச்சனை 2 :
சமீபத்தில் எர்த்வாச்
என்ற நிறுவனம்(Earthwatch Institute) லண்டனில்
நடந்த ஒரு கருத்தரங்கில்
‘உலகின் மிக முக்கியமான உயிரினம் தேனீக்கள் தான்’ என்றும் அதே நேரத்தில் விஞ்ஞானிகள் அறிவித்திருப்பது: ‘தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டது’ என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஒரு
முக்கியமான விடயத்தை அறிவித்துவிட்டு அதைவிட முக்கியமான இன்னொரு விடயத்தையும் கூடவே
அறிவித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
நமக்குள்
எழும் முதல் கேள்வி: தேனீக்கள்
ஏன் உலகின் மிக முக்கியமான உயிரினம் ஆகிறது?
காரணம்,
உலகின் உணவு உற்பத்தியில் 70% தேனீக்களை ஏதோ ஒருவகையில் சார்ந்தே இருக்கிறது. ஆக,
உணவு உற்பத்தி சீராக இருக்க வேண்டுமென்றால் அதற்கு தேனீக்கள் பாதுகாப்பாக இருப்பது
அவசியம்.
உலகின் வேறு
எந்த உயிரினத்திடமும் இல்லாத ஆனால் தேனீக்களிடம் மட்டுமே இருக்கும் ஒரு சிறப்பான
அம்சம், நோய்களை உருவாக்கக்கூடிய எந்த ஒரு நுண்ணுயிரையும் தேனீக்கள் கொண்டு
செல்வதில்லை/பரப்புவதில்லை. இந்த பண்பு தேனீக்களை இன்னும் மேன்மைபடுத்துகிறது.
![]() |
| பூவிலிருந்து தேனை உரிஞ்சும் தேனீ |
மகரந்த
சேர்க்கையில் தேனீக்கள்
ஈடுபடுவதால் செடிகள் இனப்பெருக்கம் செய்வதன் வழியாக அவற்றை சார்ந்திருக்கும் பல
லட்சம் விலங்கினங்கள் உயிருடன் இருக்கிறது. இவற்றை தவிர தேனீக்களிடமிருந்து
கிடைக்கும் தேன் மருத்துவகுணம் வாய்ந்தது.
தேனீக்களால்
உயிர்வாழ்வது மனிதன் மட்டுமல்ல. விலங்கினங்களும் தாவரங்களும் கூட.
நமக்குள்
எழும் இரண்டாவது கேள்வி: ஏன் தேனீக்கள்
அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்ந்தது?
அதற்கு
முக்கிய காரணங்கள் - பெருமளவில் காட்டை அழித்தல், தேனீ கூடு கட்ட பாதுகாப்பான இடம் இல்லாதது, பூக்கள்
குறைவாக இருப்பது, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகள், மண்ணில் ஏற்படும்
மாற்றங்கள்.
விஞ்ஞானி
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தேனீக்களை பற்றி குறிப்பிட்ட வாக்கியம் இது, “பூமியிலிருந்து
தேனீக்கள் மறைந்துவிட்டால் மனிதன் வாழ்வதற்கு வெறும் 4 வருடங்களே இருக்கும்”. தேனீக்களின்
முக்கியத்துவத்தையும் மனிதனால் தேனீக்கள் இல்லாமல் பூமியில் உயிர் வாழ முடியாது
என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வளவு
முக்கியத்துவம் வாய்ந்த உயிரினமான தேனீக்கள் அண்மை காலத்தில் 90% வரை
அழிந்துவிட்டது என்பது அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலாக இருக்கிறது.
காடுகளை அழிப்பதில்
இருக்கும் அசுரவேகத்தை நாம் வெகுவாக குறைத்துக்கொள்ள வேண்டும். உலகில் ஒரு வினாடிக்கு
ஒன்றரை ஏக்கர் அளவுக்கான காடு என்ற விகிதத்தில், ஒவ்வொரு நிமிடமும் 20 கால்பந்து
மைதானங்கள் அளவுக்கான காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த பத்தியை நீங்கள்
படிக்கும் வேளையில் சில ஏக்கர் காடுகள் அழிந்திருக்கும்.
உணவு
உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும் தேனீக்கள் அழிய மிக முக்கிய காரணமாக
சொல்லப்படுவது உணவு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளே! இதனால்
கொலம்பியா நாட்டில் கடந்த மூன்று வருடத்தில் மட்டும் 34% தேனீக்கள்
அழிந்துவிட்டன. உழவில் ரசாயன பூச்சிக்கொல்லிகள்
பல்வேறு காரணங்களால் திணிக்கப்பட்டதே அன்றி உண்மையில் ஆரோக்கியமான உணவு
உற்பத்திக்கு ரசாயன பூச்சிக்கொல்லிகள் என்பது தேவையே இல்லை. அது இந்தியாவில்
பசுமைப்புரட்சி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட காலம் முதல் இன்றுவரை பன்னாட்டு
ரசாயன ஆலைய முதலாளிகளின் வணிக நலனை மையப்படுத்தியே திணிக்கப்பட்டது என்பதை வேளாண்
விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தை
சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனம், நாம்
உபயோகிக்கும் அலைபேசியின் அலைகளால் தேனீக்கள் பாதிப்படைகிறது என்ற ஒரு தகவலை
முன்வைக்கிறது. அலைபேசியின் அலைகள் தேனீக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அதன்
பாதையை மறக்கடிக்க செய்து அதன் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக சொல்லப்படுகிறது.
உயிரியல் அறிஞர்
டேனியல் ஃபவரே மற்றும் பல ஆய்வாளர்கள்
சேர்ந்து நடத்திய 83 ஆய்வுகளில் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அது என்னவென்றால், அலைபேசி அலைகள் இருக்கும் பொழுது தேனீக்கள் சாதாரணமாக போடும் இரைச்சலை விட பத்து மடங்கு
அதிகமாக சத்தமிடுகின்றன. அதன் மூலம் மற்ற தேனீக்களிடம் கூட்டைவிட்டு வெளியேறச்சொல்லி
எச்சரிக்கை விடுக்கின்றன. முன்பு சொன்னது போல் அலைபேசி அலைகள் தேனீக்களை குழப்பி
பாதையை மறக்கடிக்க செய்வதே இதற்கு காரணம்.
மனிதன் புரட்சி,
தொழில்நுட்பம் என்று சொல்பவையெல்லாம் அவனுக்கே எதிராக திசை திரும்புகிறது. தேனீக்கள்
அழிந்து வரும் இந்த சூழல் நமக்கு முக்கியமாக உணர்த்துவது ஒன்றை தான். அது
ரசாயனங்கள் இல்லாத இயற்கை வேளாண்மையை நாம் பின்பற்றுவது.
நாம் இப்போது
பார்த்த இரண்டு பிரதான
பிரச்சனைகளின் அடிப்படையானது, உயிர் வாழ ஆதாரமான நீர் மற்றும் உணவுக்கு ஏற்படும்
தட்டுப்பாடு தான். இவை
இரண்டும் மனிதன் ஏற்படுத்திக்கொண்ட செயற்கையான பிரச்சனைகளே. இயற்கை உருவாக்கியது
அல்ல என்பதை கவனிக்க வேண்டும். 21-ஆம் நூற்றாண்டில் வாழும் மனிதனுக்கு, நீரும் சோறும் இல்லாமல்
உயிர்வாழ முடியாது என்பது புரியும் என்று நம்புவோம்.
அன்புடன்,
ஜெகன்








