வியாழன், 20 ஜூன், 2019

தண்ணீர் பஞ்சமும்! வேற்று கிரக அமைச்சரும்!

1) தண்ணீர் பற்றாக்குறையால் சென்னையில் 4000 உணவகங்கள் மூடப்படும் சூழல். பல தங்கும் விடுதிகள் மூடப்படுகிறது.

2) சென்னையில் பல ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் தேவையான தண்ணீரை ஏற்பாடு செய்ய இயலாத காரணத்தால் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி வலியுறுத்துகின்றன.

3) ஒரு வீட்டிற்கு 3-4 நான்கு குடம் மட்டுமே மெட்ரோ தண்ணீர் வழங்கப்படுகிறது. அதுவும் 2-3 நாட்களுக்கு ஒரு முறை! நிறைய பகுதிகளில் 4-5 நாட்களுக்கு ஒரு முறை தான் அந்த தண்ணீரும் கூட கிடைக்கிறது.

4) நிலத்தடி நீர் வறண்ட பகுதிகளில் மெட்ரோ குடிநீர் லாரி மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ஒரு வீட்டிற்கு வழங்கப்படுகிறது!

5) மெட்ரோ இரயில் நிலையங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தால் கழிப்பறைகள் மூடப்பட்டிருக்கின்றன!

6) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாமா என்று ஆலோசிப்பதாக செய்திகள் வருகின்றன.

7) இன்று ஒரு உணவகம் சென்றிருந்தேன். அங்கு கழிப்பறையில் தண்ணீர் இல்லை என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது.

8) நான் வசிக்கும் குடியிருப்பில் இதுவரை தண்ணீர் பிரச்சினை இருந்ததே இல்லை. 20 வருடங்களில் முதல் முறையாக தண்ணீர் பஞ்சம் என்று இங்கு பல வருடங்களாக வசிப்பவர் சொல்கிறார். 

இவை எல்லாம் நிகழும் தருணத்தில் தான், தமிழக அமைச்சர் வேலுமணி வாய்க்கூசாமல் சொல்கிறார், "சென்னையில் தண்ணீர் பஞ்சமே இல்லை. இது வெறும் வதந்தி. நம்ப வேண்டாம்" என்று!

பஞ்சம் என்று ஒப்புக்கொண்டால் கேள்விகள் எழுப்பப்படும் என்பதற்காக உண்மைக்கு புறம்பாக பஞ்சமே இல்லை என்று பொய் சொல்பவர் தான் இங்கு நமக்கு அமைச்சர்!

சென்ற ஆண்டு மழையே இல்லாததால் தான் தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டதாக அரசாங்கம் சொல்கிறது. ஆனால், சென்னையின் எந்த ஏரியையும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தூர் வாரவே இல்லை என்ற உண்மையை அரசாங்கம் சொல்ல மறுக்கிறது!

சென்னை, மழை மிகையாக பெய்யும் ஒரு பகுதியாக இருந்தும் இத்தகைய பஞ்சம் வருவதற்கு காரணம் அரசாங்கத்திடம் மழைநீர் பொறுப்புடைமை இல்லாதது தான். வருடத்திற்கு சராசரியாக 1400 மி.மீ மழை பொழிவை பெறுகிறது சென்னை. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் 80 TMC கொள்ளளவுள்ள 3600 நீர்நிலைகள் இருந்தும், அரசாங்கம் இவற்றை சரியாக பராமரிக்காத காரணத்தால், பெய்யும் மழையில் அதிகப்படியான நீர் சேமிக்கப்படாமலேயே கடலில் சென்று கலந்துவிடுகிறது!

சென்னைக்கு ஒரு மாதத்திற்கு சுமார் 1 TMC தண்ணீரே போதுமானது. ஆண்டுக்கு 12 TMC நீர் தேவை. காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்துக்கு சேர்த்து மாதம் 1 TMC என்று வைத்துக் கொண்டால் ஆண்டுக்கு 12 TMC தான் அங்கும் தேவை. இந்த மூன்று மாவட்டங்களின் 80 TMC கொள்ளளவுள்ள நீர்நிலைகளை முழுமையாக தூர் வாரி அல்லது கொள்ளளவை இன்னும் அதிகப்படுத்தி இருந்திருந்தால், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வறட்சி வந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும். ஆனால், நிலைமை அதற்கு நேர் எதிர்!
(ஒரு TMC என்பது 2832 கோடி லிட்டர் தண்ணீர் ஆகும்!)

2015 சென்னை பெருவெள்ளத்தில் 300 TMC நீர் கடலில் சென்று வீணாக கலந்தது. சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூரின் பத்து ஆண்டுகளுக்கு தேவையான நீர் அது! ஆனால், அடுத்த ஆண்டு 2016-ல் 140 வருடங்கள் இல்லாத வறட்சியை தமிழ்நாடு சந்தித்தது! நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் தமிழ்நாட்டில்! காரணம், 2015-ல் பெய்த மழை நீரை சரியாக சேமிக்க தவறியது தான்!

சென்னை குடிநீர் வாரியம் முன்பு ஒரு நாளைக்கு 85 கோடி(850 MLD) லிட்டர் தண்ணீரை கொடுத்துக் கொண்டிருந்தது. அது தற்போது 55 கோடி(550 MLD) லிட்டராக படிப்படியாக குறைந்துவிட்டது. ஆனால், சென்னையின் ஒரு நாள் தண்ணீர் பயன்பாடு, 150-200 கோடி லிட்டர். குடிநீர் வாரியம் தருவதை தவிர மீதம் தேவையான 145 கோடி லிட்டர் நீரை, மக்கள் நிலத்தடியில் ஆழ்குழாய்கள்(Borewell) போட்டு உறிஞ்சி தான் எடுத்துக்கொள்கிறார்கள். 

பல்லாயிரம் கோடி ரூபாய்களை நம்மிடமிருந்து வரிப் பணமாக பெறும் இந்த அரசாங்கம், நாம் உயிர் வாழ அடிப்படை தேவையான தண்ணீரை வழங்குவதில் சிக்கல் வைத்திருக்கிறது என்றால், அமைப்பின் அடிப்படையிலேயே பிரச்சினை இருக்கிறது என்பது திண்ணம்.

மழை நீரை முழுவதுமாக கடலில் கலக்கவிட்டு விட்டு, பிறகு கடல் நீரை குடிநீர் ஆக்குகிறோம் என்று சொல்லி பல்லாயிரம் கோடிகளை செலவு செய்வதை தான் தனது நீர் மேலாண்மை திட்டமாக அரசாங்கம் மேற்கொள்கிறது. கடல் நீரை சுத்திகரித்து கிடைக்கும் குடிநீர் உடலுக்கு ஆரோக்கியமானதல்ல என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மற்றொரு புறம் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய, நடைமுறையிலும் பொருளாதார ரீதியிலும் சாத்தியமே இல்லாத தேசிய நதிகள் இணைப்பு திட்டம் மூலம் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதாக தவறான தீர்வுகளை முன் வைக்கிறது அரசு. காவிரி நீரை கேட்டால், கோதாவரி நீரை கொண்டு வருவோம் என்று பாசாங்கு காட்டி நம்மை முட்டாளாக்கி ஏமாற்றும் வேலையை தான் இந்த அயோக்கியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்!

கடல் நீர் சுத்திகரிப்பு, நதிகள் இணைப்பு, இவை இரண்டையும் விட மிக மிக எளிமையான, அரசாங்கத்திற்கு வருவாய் தரக்கூடிய நீர்நிலைகளை தூர் வருவதை மட்டும் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் செய்வதே இல்லை! காரணம், சட்ட விரோதமாக மணலை கொள்ளையடிப்பதற்கு இது பாதகமாக மாறிவிடும் என்பதால்!

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழாவரம் ஏரிகளை தூர் வார அரசாங்கத்திற்கு ஆகக்கூடிய செலவு 35 கோடி. ஆனால், இந்த நான்கு ஏரிகளையும் தூர் வாரினால் கிடைக்கும் சவுடு மணலை விற்பனை செய்வதன் மூலமே 647 கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு வருவாய் கிடைக்கும். அதனால், தூர் வாருவது என்பது ஒரு செலவல்ல, வருமானம். இதைக் கூட செய்யாமல் இருப்பதென்பது நாம் தேர்ந்தெடுத்திருக்கும் அரசாங்கம் நமக்கு செய்யும் பச்சை துரோகம்!

அடுத்ததாக, பயன்படுத்தப்பட்ட(கழிவு) நீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்கு உபயோகித்தல்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் 25 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு தினமும் 52.5 கோடி லிட்டர் பயன்படுத்தப்பட்ட நீர் உற்பத்தி ஆகிறது. அதில் 48 கோடி லிட்டர் நீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் கிட்டத்தட்ட 90% பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்கிறார்கள். விரைவில் இதை 100% ஆக்க முனைகிறார்கள்.

சென்னை நிலவரத்தை பார்ப்போம். சென்னையின் மக்கள் தொகை இன்று ஒரு கோடி. ஒரு நாளைக்கு(வறட்சி அல்லாத காலங்களில்) சென்னையின் அனைத்து தேவைகளுக்கும் சேர்த்து பயன்படுத்தப்படும் நீரின் அளவு சுமார் 150 முதல் 200 கோடி லிட்டர்.  சராசரி அளவு 180 கோடி லிட்டர் என்று வைத்துக் கொண்டால், அதில் 85% நீரை சுத்திகரிப்பு செய்தால் கூட தினசரி 153 கோடி லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்ய முடியும்! ஆனால் நாம் தற்போது சுத்திகரிப்பு செய்யும் நீரின் அளவு 42.7 கோடி லிட்டர் தான், சுமார் 23.72% மட்டுமே. மீதம்  உள்ள 76.27% பயன்படுத்தப்பட்ட நீர் சென்னையின் பல ஏரிகளில் கலந்து நீர்நிலைகளை பாழாக்குவதோடு, வாசம் வீசும் நமது கூவம் நதியிலும் சென்று கலக்கிறது! இப்போது புரிகிறதா ஏன் சென்னையின் மூன்று நதிகளும் சாக்கடையாக மாறிவிட்டது என்று!

இதுவே, 85 சதவிகிதமான 153 கோடி லிட்டர் அளவு பயன்படுத்தப்பட்ட நீரை நாம் சுத்திகரித்து மறுசுழற்சி செய்திருந்தால், தினமும் நம்மால் 153 கோடி லிட்டர் நீரை சேமிக்க முடியும்! இன்று தினமும் வீராணம் ஏரியில் இருந்து விவாசாயத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டிய 18 கோடி லிட்டர் தண்ணீரை சென்னைக்கு எடுத்துக் கொள்ளாமல், விவாசாயிகளையும் தண்ணீருக்காக தவிக்க விடாத ஒரு சூழலை உருவாக்க முடியும்.

இதை தவிர, நீர் சுழற்சிக்கான(Water Cycle) ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது அவசியம். கடல் மற்றும் இதர நீர்நிலைகளில் இருக்கும் நீரானது சூரிய வெப்பம் காரணமாக ஆவியாக மேலே செல்கிறது. அவற்றின் வெப்பம் குறையும் போது மேலே சென்ற நீராவி மீண்டும் திரவ வடிவம் பெறுகிறது. அவை அதிக அளவில் சேரும் போது மேகமாக உருவெடுத்து அதிக எடை கூடிய பிறகு மழையாக பூமியில் பொழிகிறது. பூமியில் பெய்யும் மழை நிலத்திற்கு அடியிலும், நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் சென்று சேர்கிறது. ஆறுகளில் இருந்து இறுதியாக கடலில் சென்று கலக்கிறது. இதுவே ஒரு நீர் சுழற்சி.

நீர் சுழற்சி என்பது பருவநிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பருவநிலை(Climate) என்பது ஒரு பகுதியின் நீண்டகால வானிலையை(Weather Conditions) குறிப்பதாகும். பருவநிலையில் பங்கு வகிக்கும் இரண்டு வானிலை அம்சங்கள் 1) காற்றில் உள்ள ஈரப்பதம் (Humidity) மற்றும் 2) வெப்பநிலை (Temperature). இவை இரண்டுமே நீர் சுழற்சியின் தாக்கம் கொண்டவை.

எனவே, நீர் சுழற்சியை ஆரோக்கியமாக வைப்பது முக்கியம். அதற்கு பசுமை போர்வையை அதிகப்படுத்துவது அவசியம். மரங்கள் அதிகமாக இருந்தால் அதன் வழியே நீராவியாதல்(Evapotranspiration) நிகழும் போது மழை அதிகரிக்கும். மரங்கள் காற்றின் மாசை குறைப்பதால் மழை மேகங்கள் மாசாகாமல் இருக்க பெரும் உதவியாக இருப்பதோடு,  சுற்றுச்சூழலும் ஆரோக்கியமாக இருக்கும். நமது அரசாங்கமோ, மலைகளையும் காடுகளையும் அழித்து எட்டு வழிச் சாலை திட்டங்களை நிறைவேற்றுவதில் தான் முனைப்போடு இருக்கிறது.

நாம் வரி செலுத்த தான் முடியும், அரசாங்கத்தை வலுயுறுத்த தான் முடியும். ஆனால் அரசாங்கம் தான் இதற்கு தீர்வு காண வேண்டும். மக்கள் வீதிக்கு வர துவங்கிவிட்டனர். இனிமேலும் தாமதிக்காமல் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சரியான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அனைத்து ஜீவராசிகளும் வாழ அரோக்கியமான சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாப்பது ஒரு நல்ல அரசின் அடையாளமாகும்!

அன்புடன்,
ஜெகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக