ஞாயிறு, 21 ஜூலை, 2019

வாய்மையே வெல்லும்!


தமிழ்நாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வமான சின்னத்தின் கீழ் எழுதப்பட்டிருக்கும் வாக்கியம் தான்வாய்மையே வெல்லும்’. ஆனால், அதற்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசுக்கும் சம்பந்தமே இல்லை என்பது தான் உண்மை. ஏன் என்று விரிவாக பார்ப்போம்!

தமிழ்நாட்டில் இன்று மிகப் பெரிய ஒரு தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் முறையாக பராமரிக்காமல் இருப்பதே ஆகும். நீர்நிலைகளை சரியாக பராமரிக்காவிட்டால், மழைநீரை முழுமையாக சேமிக்க இயலாது. இதன் காரணமாக பருவமழை குறைவாக இருக்கும் வருடங்களில் கடுமையான வறட்சியை நாம் சந்திக்க நேரிடுகிறது. சென்னையும் இதற்கு விதிவிலக்கல்ல!

தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிகமாக மழை பொழிவை பெறும் பகுதி சென்னை தான். வருடத்திற்கு சராசரியாக 1350 மில்லிமீட்டர் மழை பொழிவை நாம் பெறுகிறோம். ஆனால், சென்னையின் நீர்நிலைகள் முறையாக பராமரிக்காத காரணத்தால் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சத்தை நாம் எதிர்கொண்டு வருகிறோம். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் கீழே சென்று விட்டதால் மக்கள் தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். குளங்கள், குட்டைகள், ஏரிகள் எல்லாம் ஃபிளாட்களாக மாற்றி விற்கப்பட்டு, மழை வந்தால் தண்ணீரை தேக்கி வைக்க போதுமான இடம் இல்லாமல் காண்க்ரீட்(Concrete) காடாக மாறி வருகிறது சென்னை.

சென்னைக்கு குடிநீர் வழங்க வேண்டியபெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்’ (CMWSSB), தான் வழங்கிக் கொண்டிருந்த 830 MLD(ஒரு நாளைக்கு 83 கோடி லிட்டர்) தண்ணீரை ஜூன் 1 ஆம் தேதி முதல் 525 MLD-யாக(52.5 கோடி லிட்டராக) குறைத்துக் கொண்டது. தண்ணீர் பஞ்சம் என்று மக்கள் அரசாங்கத்தை நோக்கி செல்லும் போது, அரசாங்கம் அவர்களை கைவிரித்துவிட்டது.

நிலைத்தடி நீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் மக்கள் எடுத்து பயன்படுத்தி வந்தனர். மழைக் காலங்களில் கிடைக்கக் கூடிய தண்ணீரை போதுமான அளவுக்கு செமிக்காமல் கடலில் கலக்கவிட்டு விட்டதால், நிலத்தடி நீரை மீள்நிரப்பு(Ground Water Recharge) செய்யமுடியாமல் போனது. மழைநீர் சேகரிப்பு திட்டம் என்பது வீடுகளில் செய்யப்படுவது மட்டுமல்ல. ஏரிகள், குளங்கள், குட்டைகளில் செய்யப்பட வேண்டியது. அதை இந்த அரசாங்கம் செய்யத் தவறியதன் விளைவாகவே இன்று சென்னை நகரம், தேவைக்கு அதிகமான சராசரி மழைப் பொழிவு இருந்தும் ஒரு பெரும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

கடந்த நான்கு வருடங்களில் 2015 ஆம் ஆண்டு நூற்றாண்டு காணாத பெரு மழை பெய்தது. அதனால் வெள்ளம் என்றார்கள். ஆனால் அதற்கு அடுத்த வருடமே 2016-ல் 140 வருடம் இல்லாத மழைக் குறைவு, அதனால் வறட்சி என்றார்கள். அப்போது 2015-ல் பெய்த மழை நீர் எல்லாம் எங்கே போயிற்று?

2017-ல் சராசரி மழை. 2018-ல் குறைவான மழை. நான்கு வருடங்களில், ஒரு வருடம் அதிகப்படியான மழை, ஒரு வருடம் சராசரி மழை, இரண்டு வருடங்கள் குறைவான மழை. ஆனால், சராசரி மழையின் அளவு 1350 மில்லிமீட்டர். அதிகமாக மழை பொழிவு இருக்கும் காலங்களில் முழுமையாக மழை நீரை சேமித்து வைக்காதது தான், அரசாங்கத்தின் நீர் மேலாண்மையின் தோல்வியை அப்பட்டமாக காட்டுகிறது.

ஒரு நல்ல அரசாங்கம் என்பது தன் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வைப்பது தான். ஆனால், தண்ணீர் பஞ்சம் நிலவும் இந்த சூழலில், நிலத்தடி நீர் இல்லாமல் மக்கள் அரசாங்கத்தை நாடினால், ஏற்கனவே கொடுத்துக் கொண்டிருந்த தண்ணீரின் அளவை 37% குறைத்துவிட்டது தான் அதிமுக அரசின் சாதனையாக இருக்கிறது. இன்று சென்னை குடிநீர் வாரியத்திடம் தண்ணீர் லாரிக்கு பதிவு செய்தால், 45 நாட்கள் கழித்து தான் 9000 லிட்டர் லாரி தண்ணீர் ஒரு வீட்டிற்கு கிடைக்கிறது. இந்த நிலையில் வேறு வழியின்றி மக்கள் தனியார் லாரிகளுக்கு 5-6 மடங்கு அதிக விலையை கொடுத்து தண்ணீர் பெற்று சமாளித்து வருகின்றனர்.

சென்னை குடிநீர் பஞ்சத்தை போக்க சென்னையில் உள்ள 13 நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தலாம் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில், மூன்று நீர்நிலைகளில் இருந்து மட்டுமே தற்போது நீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து பயன்படுத்த முடியும் என்று முடிவு செய்யப்பட்டது. கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி மற்றும் திருநீர்மலை ஏரிகளில் உள்ள நீரை சுத்திகரிப்பு செய்தாலும் பயன்படுத்த முடியாது என்று கண்டறியப்பட்டது. தொழிற்சாலைகள் மற்றும் இதர கழிவுநீர் கலப்பதால் இவற்றின் நிலை இவ்வாறு மோசமாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், ‘பெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்’ (CMWSSB), தற்போது சுமார் 23.72% அளவு மட்டுமே கழிவுநீரை (பயன்படுத்தப்பட்ட நீரை) சுத்திகரிப்பு செய்கிறது.

சென்னை நகர் பகுதிக்குள் அமைந்திருக்கும் மிகப் பெரிய நீர்நிலை கொரட்டூர் ஏரி(610 ஏக்கர்) என்பது குறிப்பிடத்தக்கது. அம்பத்தூர், கொரட்டூர் மற்றும் ரெட்டேரி(மாதவரம் ஏரி) ஏரிகளின் கொள்ளளவு 0.83 டி.எம்.சி(TMC). இதை இருமடங்காக ஆழப்படுத்தி 1.6 டி.எம்.சி-யாக (TMC) அதிகப்படுத்தினால், சென்னையின் ஒன்றரை மாத கால நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்!

2011 முதல் கடந்த எட்டு வருடங்களாக அதிமுக அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால், ஒரு முறை கூட சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடய செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளை தூர் வாரவே இல்லை. நீர் மேலாண்மையில் மிக மோசமாக இந்த அரசாங்கம் இருந்து வருகிறது என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.

ஜனநாயகம்/மக்களாட்சி என்றால், ஆட்சி அதிகாரத்தில் மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பது தான் பொருள். ஆனால், நடைமுறை வேறாகவே இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை, ஜூன் 13-ஆம் தேதி காலையில் அறப்போர் இயக்கம் சார்பாக பதினொரு தன்னார்வலர்கள் சென்னை தரமணி பகுதியில் உள்ள கல்லுக்குட்டை ஏரியை சமூக தணிக்கை செய்ய சென்றார்கள். அவர்களில் நானும் ஒருவன். நாங்கள் அங்கு செல்லும் முன்பே உளவுத்துறையினர் அங்கு இருந்தார்கள். எங்களிடம் எதற்காக வந்துள்ளீர்கள் என்று விசாரித்துவிட்டு, நீர்நிலைகளை ஆய்வு செய்வது நல்லது என்று கூறிவிட்டு சென்றார்கள். ஆனால், பிறகு நாங்கள் ஆய்வு செய்து கொண்டிருந்த போதே தரமணி ஜெ-13 காவல்நிலைய ஆய்வாளர் தேவராஜ் குறுக்கிட்டு, ஆய்வு செய்ய அனுமதி இல்லை என்று கூறி எங்கள் பதினொரு பேரையும் கைது செய்து தரமணி 100-அடி சாலையிலுள்ள ஹேமா மஹாலில் அடைத்து வைத்தனர். முதலில் அனுமதி பெறவில்லை என்று சொன்னவர்கள், பிறகு ஜனாதிபதி தரமணியில் உள்ள சட்ட கல்லூரியில் நடக்கும் விழாவிற்கு வருவதால் பாதுகாப்புக்காக கைது செய்துள்ளதாகவும், அவர் சென்ற பிறகு மதியம் 1 மணிக்கு அனுப்புவதாகவும் கூறினர். 1 மணிக்கு பிறகும் எங்களை அனுப்பவில்லை.

மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட பதினொரு பேரிடமும் ஒரு நோட்டு புத்தகத்தில் கையெழுத்து பெற்று, காவல்துறையின் சொந்த பிணையில் வெளியிடுவதாக கூறி விடுவிப்பு செய்தனர். வழக்கு பதிந்தால் தான் பிணை தர முடியும். எனவே, வழக்கு விவரங்களை(FIR) கேட்டதற்கு, காவல்துறை இணையதளத்தில் எடுத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டார் தரமணி காவல்நிலைய ஆய்வாளர் தேவராஜ்.

இணையத்தில் இருந்து பெற்ற வழக்கில், தரமணியை சேர்ந்த மதியழகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தன்னார்வலர்கள் மீது மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நான்கு வழக்குகளை பதிவு செய்துள்ளது காவல்துறை என்பது தெரியவந்தது. மதியழகன் என்பவர், ஏரியை ஆய்வு செய்து கொண்டிருந்த எங்களிடம் வந்து விசாரித்ததாகவும், அதற்கு அவரை ‘ச்சீ போடா’ என்று சொல்லி அவர் நெஞ்சை பிடித்து தள்ளி, தொலைத்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறி எங்கள் மீது புகார் ஒன்றை அளித்திருக்கிறார். இந்த மதியழகனை இதுவரையில் நாங்கள் யாரும் பார்த்தது கூட கிடையாது. இது முழுக்க முழுக்க அதிகார வர்க்கத்தின் அழுத்தத்தினால், காவல்துறையினரால் புனையப்பட்ட பொய்யான வழக்குகள். 

பொய் வழக்கு விவரம்

ஏன் ஒரு ஏரியை ஆய்வு செய்து அரசாங்கத்திடம் மனு கொடுக்க நினைத்தவர்களை அரசாங்கத்தினர் இப்படி நடத்துகிறார்கள்?
சென்னையை சேர்ந்த அறப்போர் இயக்கம் ஊழலுக்கு எதிராக இயங்கும் ஒரு இயக்கம். அது கடந்த சில வருடங்களாக சென்னை மாநகராட்சியில் நிகழும் அரசாங்க டெண்டர் ஊழல்களையும், அந்த துறையின் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி அவர்களையும் அம்பலத்தி வருகிறது. அதன் காரணமாகவே, அறப்போர் இயக்கத்தை பழி தீர்க்கும் விதமாக, அதன் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல இடர்பாடுகளை கொடுத்து வருகின்றனர். அதில் இந்த கைது நடவடிக்கையும் பொய் வழக்குகளும் ஒன்று.

”முதலில் அவர்கள் உன்னை உதாசினப்படுத்துவார்கள். பிறகு உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். பிறகு உன்னிடம் சண்டையிடுவார்கள். இறுதியில், நீ வெற்றி பெறுவாய்”, காந்தியடிகளால் கூறப்பட்ட வாக்கியம் இவை. இதில் மூன்றாம் கட்டத்தில் மேலே சொன்ன நிகழ்வு நடைபெற்றிருக்கிறது என்று கருதுகிறேன். 


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், ஊழல்களால் அதன் துறைகள் வழிந்து கொண்டிருக்கும் வேலையில், அவற்றை சுட்டிக் காட்டி நிவர்த்தி செய்யும்படி கூறும் மக்களை நசுக்கும் முயற்சியை செய்கிறது என்றால், இது மக்கள் விரோதமான அரசாக தான் இருக்க முடியும்.

ஆட்சியாளர்களின் செயல்களை கண்காணிப்பதும், கேள்வி எழுப்புவதும் மக்களின் கடமை. ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. அதை மறுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. ஆனால், அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் அந்த உரிமையை மறுக்கும் செயல்களில் ஈடுபட்டு மக்களின் மீது பொய்யான வழக்குகளை போடுவதன் மூலம், ‘வாய்மையே வெல்லும்’ என்னும் தன் நோக்கத்துக்கே எதிராக செயல்படுவதால், அறம் சார்ந்து இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்க தகுதியற்றது என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. 

அன்புடன்,
ஜெகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக