சமீபத்தில் நான் செய்ய தொடங்கிய ஆழ்நிலை தியானத்தின் அனுபவம் குறித்த கட்டுரை இது என்பதை இப்போதே கூறிவிடுகிறேன். ஆன்மீகம், தியானம் போன்றவற்றில் ஆர்வம் இல்லாதவராக நீங்கள் இருந்தால் இப்போதே உங்கள் நேரத்தை இதில் வீணடிக்காமல் வேறு வேலைக்கு செல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், ஒருவரின் அனுபவப் பகிர்வை படிக்க விருப்பம் இருந்தால் தொடரும்படி கேட்டிக் கொள்கிறேன்.
மேலே கூறியது போல் இக்கட்டுரை ஆழ்நிலை தியானம் குறித்த எனது அனுபவம் பற்றியது என்றாலும், தியானம் என்றால் என்ன என்பதை முதலில் தெளிவு படுத்திவிடுவது இக்கட்டுரையை முழுமையாக புரிந்துகொள்ள அவசியம் என்று கருதுகிறேன்.
தியானம் என்றால் என்ன?
மன அமைதிக்காக மனிதர்கள் கண்களை மூடியபடி அமர்ந்து கொண்டு இருப்பது. இதற்கு வரையறுக்கப்பட்ட நேரம் என்பது கிடையாது. பத்து நிமிடங்கள் தியானம் செய்பவர்களும் உண்டு, ஒரு மணி நேரத்திற்கு மேல் தியானம் செய்பவர்களும் உண்டு. புராணங்களில் நாம் கேட்டிருப்போம். பல வருடங்கள் தியானம் செய்த முனிவர் இவர் என்றும். வாழ்க்கையையே தியானத்தில் கழித்தவர் என்றும்.
பழங்கால நடைமுறை என்பது அவ்வாறாக தான் இருந்திருக்கிறது. துறவியாக செல்பவர்களே தியானம் செய்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கும் ஒரு இல்லற வாழ்க்கை இருந்திருக்கிறது!
பல கடவுள் சிலைகளை நாம் பார்த்தால் தெரியும், கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்யும் ஒரு உருவம் இருக்கும். தீவிர தியானத்தில் இருந்தவர்களையே கடவுளாக நாம் வழிபட்டுக் கொண்டிருப்பது புரியும். இவர்கள் அனைவரும் தியானத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது தான் உண்மை. கால போக்கில் பல்வேறு காரணங்களால் உருவ வழிபாட்டுக்குள் இவர்கள் கொண்டு வரப்பட்டு கடவுளாக பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டார்கள். பிறகு அதுவே மதங்களாகவும் வளர்ந்துவிட்டது. இன்று உலகில் எத்தனை மதங்கள் இருக்கிறது என்று பார்த்தால் ஆயிரத்துக்கும் அதிகம்.
மதங்கள் எப்படி ஒன்றுக்கொன்று வேறுபட்டதோ, அதே போல் தான், தியான முறைகளும். தியான முறைகள் பல இருக்கின்றது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், மருத்துவம் போல் தான் இதுவும். நாட்டு வயித்தியம், அலோபதி, ஹோமியோபதி, அக்குபங்சர் போல. எப்படி ஒரு நேரத்தில் ஒரு மருத்துவ முறையை மட்டும் தான் பயன்படுத்த முடியுமா அதே போல, ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு தியான முறையை மட்டுமே செய்து பழக முடியும்.
![]() |
| தியானத்தின் பிம்பம் |
தியான முறைகளில் குறிப்பாக சிலவற்றை சொல்கிறேன்.
1) மனதை ஒருமுகப்படுத்துதல்
(Concentration)
2) ஆழ்ந்த சிந்தனைக்குள் செல்வது (Contemplation)
3) மந்திரங்களை சொல்வது (Chanting)
4) ஆழ்நிலைக்கு செல்வது
(Transcending/Transcendental)
எந்த ஒரு தியான முறையாக இருந்தாலும் முறையாக பயிற்சி பெற்று செல்வதே சரி. இல்லையேல், அது எதிர்வினைகளை கொடுக்கும். அப்படி சில வருடங்களுக்கு முன்பு பயிற்சியை முழுமையாக பெறாமல் தியானத்தை செய்த போது சில எதிர்வினைகளை சந்தித்து மனநிலை சிக்கல்களுக்கு நான் உள்ளானேன். அதிலிருந்து நான் வருடக்கணக்கில் தியானம் செய்வதை நிறுத்திவிட்டேன். மனநல மருத்துவர் தியானம் செய்ய வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தினார். இருப்பினும் தியானம் செய்வது, மன அமைதி பெறுவது போன்ற செயல்களில் இயற்கையாகவே எனக்கு ஆர்வம் இருப்பதால் மனநல மருத்துவரிடம் தியானமே செய்யக் கூடாதா என்று கேட்டதற்கு அவர் அறிவுறுத்திய ஒரு முறை தான் ’ஆழ்நிலை தியான முறை’ (Transcendental Meditation).
![]() |
| மகரிஷி மகேஷ் யோகி, ஆழ்நிலை தியான கூடம் - நிறுவனர் |
சென்னையில் சேத்துப்பட்டில் இருக்கிறது அந்த தியான கூடம். மகரிஷி மகேஷ்யோகியின் ஆழ்நிலை தியான பயிற்சி கூடம். அவர்கள் நடத்தும் பள்ளி தான் மகஷிரி வித்யா மந்திர் பள்ளி. இங்கு தியானம் பயில்வதற்கு முன்பாக ஆழ்நிலை தியானம் குறித்த ஒரு அறிமுக கூட்டம் ஒன்று வைக்கிறார்கள்.
2016 ஆம் ஆண்டு அந்த அறிமுக கூட்டத்திற்கு முதல்முறையாக சென்றிருந்தேன். அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆழ்நிலை தியானத்தின் பல நன்மைகளை எடுத்துரைத்தார்கள். கேட்க எளிமையாகவே இருந்தது. இந்த தியான முறையும் அவ்வளவு எளிமையான ஒன்றாகவே இருந்தது கற்ற பிறகு.
விருப்பமாக இருந்ததால் பயிற்சி கட்டணம் செலுத்தி தியானத்தை கற்றுக் கொண்டேன். தினமும் தியான பயிற்சி என சில மாதங்கள் தொடர்ந்து செய்தும் வந்தேன். ஆழ்நிலை தியான முறை என்பது ஒரு மந்திரச் சொல் ஒன்றை நமக்கு மட்டும் பயிற்றுவிப்பவர் சொல்லிக் கொடுப்பார். தியானம் செய்யும் போது அதை மனதில் நினைக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொடுக்கிறார்கள். எனக்குள் எழுந்த பெரிய முரணே மந்திர சொல் என்பதை பயன்படுத்தி செய்யும் முறை தான். காரணம், கடவுள்-மூடநம்பிக்கை போன்றவற்றில் இருந்து விலகி பகுத்தறிவுடன் சிந்திக்கும் ஒரு கொள்கையை தேர்ந்தெடுத்த பின்னர் எப்படி மந்திரம் என்ற ஒரு விடயத்தை பயன்படுத்துவது. அதை எப்படி நம்புவது என்று தான். இந்த மந்திர சொல் என்பது அர்த்தமற்ற ஒரு சொல் தான். அது ஒரு அதிர்வை (vibration) கொண்ட ஒரு சொல். அவரவர் இயல்புக்கு ஏற்றால் போல் வேதங்களில் இருந்து ஒரு மந்திரச் சொல் ஒன்று கொடுக்கப்படும் என்று அறிமுக கூட்டத்திலே சொல்லிவிடுவார்கள்.
வேதங்கள், மந்திரம் போன்றவை எல்லாம் கொள்கை ரீதியாக நமக்கு எதிரானதாயிற்றே என்று ஆழ்நிலை தியானம் செய்வதையே ஒரு கட்டத்தில் நிறுத்திக் கொண்டேன். இரண்டு வருடங்கள் ஆயிற்று. வீட்டில் எனது அம்மா மற்றும் அக்கா ‘நீ ஏன் தியானம் செய்வதில்லை’ என்று கேட்ட பொழுது நான் சொன்ன காரணமும் இது தான். கொள்கை முரண் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது அதனால் தான் என்றேன். அதற்கு அவர்கள் இருவரும் தியானம் என்பது மன அமைதிக்காக செய்வது. இதை நீ தொடர்வதால் எந்த தவறும் கிடையாது என்றார்கள். உன் மனம் அமைதியாக இருக்கும் என்றால் அதை செய்வதில் தவறில்லை என்றார்கள்.
என் மனமும் அவர்கள் சொன்ன கோணத்தில் யோசிக்க/பார்க்க தூண்டியது. இயல்பாகவே ஆழமான சிந்தனை கொண்ட எனக்கு முதலில் தவறு என்று தோன்றிய விடயம் பிறகு மன அமைதி, நலம் என்ற ஒற்றை இலக்கை பற்றி யோசித்த பொழுது சரி மீண்டும் தியானம் செய்யலாமே என்று எண்ண தோன்றியது. ஆழ்நிலை வகுப்புக்கு சென்று பயிற்சியை ஒரு முறை நினைவுபடுத்திக் கொண்டேன். மீண்டும் தியானம் செய்ய தொடங்கினேன்.
தியானத்தின் பலனைகளை மீண்டும் அனுபவிக்கத் துவங்கினேன்.
ஆழ்நிலை தியானத்தின் சிறப்பான அம்சம் என்பது அது நமக்கு தரும் ஓய்வு. தூக்கத்தில் பெறும் ஓய்வை விட இரு மடங்கு ஓய்வு ஆழ்நிலை தியானம் செய்யும் பொழுது கிடைக்கிறது என்பது ஒன்று. மற்றொரு முக்கியமான அம்சம் தியானத்தில் கொடுக்கப்படும் மந்திர சொல்லை நினைக்கும் வேலையில் நம் மனதில் தேங்கிக் கிடக்கும் மன அழுத்தமானது எண்ணங்களாக தோன்றி வெளியேற்றப்படுகிறது. இவை இரண்டும் தியானம் செய்யும் அந்த 20 நிமடங்களில் நிகழ்கிறது. காலையிலும் மாலையிலும் தியானம் செய்யும் பொழுது மன அமைதி என்பது கிடைக்கிறது. மன அமைதி கிடைக்கும் பொழுது அந்த நாள் நன்றாக அமைய வழிவகை செய்கிறது.
கொள்கை என்பதை கடந்து நன்மை என்று கருதி செய்வதால் எந்த ஒரு மன வருத்தமும் இப்போது எனக்கு தியானம் செய்வதால் இல்லை.
எந்த அறிவியலும் இல்லாமல் எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லாமல் ஒரு மனிதன் காலையும் மாலையும் ஒரு 15-20 நிமிடங்கள் அமைதியாக அமரும் பொழுது இயல்பாகவே அவனுக்கு ஒரு மன அமைதி கிடைக்கிறது. அதையே அறிவியல் கோணத்தில் விரிவாக அவர்கள் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். மன அமைதியை தேடும், ஆழ்ந்த சிந்தனையை இயல்பாக கொண்ட எனக்கு ஆழ்நிலை தியானம் என்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கருதுகிறேன்.
அன்புடன்,
ஜெகன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக