ஞாயிறு, 20 ஜனவரி, 2019

மெரினா காதல்!


வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்றால், சென்னைக்கு வந்தாரை அன்போடு அழைக்கும் நம் மெரினா கடற்கரை என்றே சொல்லலாம்! அவ்வளவு எழில் பொங்கும் ஓர் இடம்.

வெறும் கடற்கரையாக இருந்த நம் தமிழர் கடலான மெரினா கடற்கரைக்கு 1884 ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரஸிடென்சியின் ஆங்கிலேய கவர்னராக இருந்த மவுண்ட்ஸ்டுவார்ட் எல்ஃபின்ஸ்டோன் கிராண்ட் டஃப் (M.E.Grant Duff) என்பவர் நடை பாதை அமைத்து அதற்குமெட்ராஸ் மெரினாஎன்றும் பெயர் சூட்டியுள்ளார்

மெரினா கடற்கரையை பற்றி எழுத ஒரு கட்டுரை போதாது. ஒரு புத்தகமென்ன ஒரு நாவலே எழுதலாம். அவ்வளவு வாழ்வையும் வரலாற்றையும் சுமந்து கொண்டிருக்கிறது நமது மெரினா. தினமும் எத்தனை எத்தனை மக்கள், வரலாற்றில் எத்தனை நிகழ்வுகள், எத்தனை மாமனிதர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்றால், சென்னையின் முக்கிய இடங்களில் மெரினா கடற்கரையை நாம் நிச்சயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். தமிழ்நாட்டின் நான்கு முதலமைச்சர்கள்-மக்கள் தலைவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் இடம். பல முக்கிய அரசியல் பொதுக் கூட்டங்கள் நடைபெற்ற இடம். 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக இளைஞர் பட்டாளம் ஒன்று திரண்ட வரலாற்று சிறப்புமிக்க இடம். இன்று நான்கு பேர் கூடுவதற்கு கூட தடை என்று பூட்டு போடப்பட்டிருக்கும் இடம். மீறினால் குண்டர் சட்டம் நம் மீது பாயும்!

ஜல்லிக்கட்டு போராட்டம், 2017.

தமிழக வரலாற்றில் அரசியலும் மெரினாவும் பிரிக்க முடியாத பின்னிப்பிணைந்த ஒரு இடமாகிவிட்டது. உண்மையில் ஒரு கடற்கரைக்கும் அரசியலுக்கும் உலகில் வேறெங்கும் இவ்வளவு தொடர்பு இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. மெரினா, அரசியலுக்கு முக்கியம் வாய்ந்த ஒரு இடமாக மாற ஒரு காரணம் இருக்கிறது என்று கருதுகிறேன். ஒவ்வொரு ஊரிலும் போராட்டம் நடத்துவதற்கு, மக்கள் பெரும் அளவில் ஒன்று திரள்வதற்கு என்று ஒரு பெரிய இடம் இருக்கும். உதாரணத்திற்கு டெல்லியில் ராம் லீலா மைதானம். அது போல் சென்னையில் மக்கள் திரளாக கூட மெரினா மிக பொருத்தமான ஒரு இடமாக இருக்கிறது. சென்னையின் மக்கள் தொகைக்கு ஒரு பெரும் திரள் மக்கள் கூட்டத்தை ஏற்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இடமாக மெரினா இருக்கிறது.

உலகின் இரண்டாவது மிக நீலமான நகர்புற கடற்கரை மெரினா. இந்தியாவின் மிக நீலமான கடற்கரையும் நம் மெரினா தான். தம் வாழ்வின் எத்தனை எத்தனை தருணங்களை மெரினா சந்தித்திருக்கிறது என்று சென்னை வாசிகளை கேட்டால் மனம் திறந்து பல கதைகள் சொல்வார்கள். 

கலங்கரை விளக்கம் மேலிருந்து மெரினா கடற்கரை.

பல ஆயிரம் மக்கள் தங்கள் காலை பொழுதின் நடைபயிற்சிக்கும் உடற்பயிற்சிக்கும் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கும் மெரினாவை பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமா, பலர் தங்கள் நண்பர்களுடன் விளையாடவும் மெரினாவிற்கு அன்றாட வருகிறார்கள். பல குழுக்களாக ஹியூமர் கிளப் மக்கள் காலையில் ஒரு கூட்டமாக நின்று சிரித்து பழகுவதை பார்த்திருக்கிறேன்.

காலை சூரிய உதயம், மெரினா.

விடியற்காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டால் வண்டியில் மெரினாவிற்கு சென்று அலைகளை ரசித்துவிட்டு சூரியன் உதயமாவதை கண்டு ரசித்துவிட்டு வரும் பழக்கம் எனக்கு உண்டுஅதே போல் கடற்கரையில் இருக்கும் மெரினா நீச்சல் குளத்திற்கு 29A பேருந்தில் பெரம்பூரில் இருந்து வந்து குளித்துவிட்டு சென்ற அனுபவமும் உண்டுஎன் மாமா வீடு கடற்கரைக்கு 1.5 கி.மீ தொலைவில் இருக்கிறது என்பதால்எனது பள்ளி பருவத்தில் விடுமுறை நாட்களில் எப்போது அவரது வீட்டிற்கு சென்றாலும் என் மாமா மற்றும் பெரியம்மா மகன் மகள்களுடன் நடந்தே கடற்கரைக்கு சென்று ஒரு ஆட்டம் போட்டுவிட்டு வீடு திரும்புவது வழக்கம்இது போல் எத்தனை எத்தனை குடும்பங்கள் தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக இந்த மாபெரும் கடற்கரையில் கழிக்கிறார்கள் என்று நினைக்கும் போதே அதன் பெருந்தன்மை நமக்கு புரிகிறது. 

நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்றால் அன்று மாலை ஒரு சிறந்த பொழுதாகிவிடும் நமக்கு. அவ்வளவு அழகான சூழல், வீசும் காற்று என கடற்கரைக்கு காலையில் ஒரு அழகான முகம் என்றால், மாலை அதன் இன்னொரு அழகான தோற்றத்தால் தன்னிடம் வருபவரை ஆசுவாசப்படுத்தி திருப்பி அனுப்பி வைக்கிறது இந்த விலைமதிப்பில்லா பொக்கிஷம்

மாலை பொழுது, மெரினா கடற்கரை.

ஒரு முறை மறைந்த எழுத்தாளர் ஞாநி அவர்கள் தனக்கு பிடித்த சுற்றுலா தலம் என்று மெரினாவை தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அவர் குறிப்பிட்ட காரணம் மிக அழகாக இருந்தது. மிக எளிமையாக அனைவரும் வந்து செல்லக்கூடிய இடமாக மெரினா இருக்கிறது என்று சொல்லி இருந்தார். எத்தனை உண்மை இது என்று நாம் சற்று யோசித்துப் பார்த்தால் புரியும். நடந்து வருபவரையும், அரசு பேருந்தில் வருபவரையும், இரு சர்க்கர வாகனத்தில் வருபவரையும், சொகுசு காரில் வருபவரையும் என அனைத்து தரப்பு மக்களையும் ஒரு சுற்றுலா தலம் திறந்த மனதோடு வரவேற்க முடியும் என்றால் அது மெரினாவாகத் தான் இருக்க முடியும்

மெரினா என்றால் சட்டென்று நம் நினைவில் தோன்றும் விடயங்களில் சிலைகளும் ஒன்று. மெரினா கடற்கரையில் முதன்முதலில் நிறுவப்பட்ட சிலை என்றால் 1959 ஆம் ஆண்டு நிறுவப் பட்ட உழைப்பாளர்கள் சிலை தான். அதே ஆண்டு மகாத்மா காந்தி சிலையும் நிறுவப் பட்டது. பிறகு 1968 ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் உலக தமிழ் மாநாட்டின் போது திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், பாரதியார், பாரதிதாசன், ஜி.யு.போப், வீரமா முனிவர், கால்டுவெல் போன்றோர் சிலைகள் நிறுவப்பட்டன. மற்ற சிலைகள் பின்னர் வெவ்வேறு காலங்களில் நிறுவப்பட்டன

உழைப்பாளர் சிலை, மெரினா கடற்கரை.

மெரினா கடற்கரை ஆரம்பிப்பது அண்ணா சமாதி அருகில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 3.1 கி.மீ. தொலைவு என்றால் அதன் மணல் பரப்பு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தொடங்கி பெசன்ட் நகர் கடற்கரை வரை சுமார் பதிமூன்று கி.மீ தொலைவு என்றே சொல்லலாம்.

இந்த 3.1 கி.மீ தொலைவில் வடக்கே அண்ணா சமாதி அருகே கூவம் நதிக்கரை கடலில் கலக்கும் இடம் இருக்கிறது. கடற்கரையின் இந்த பகுதியில் பல கடைகள் இருக்கும். முக்கியமாக கிளிஞ்சல் மற்றும் பிற கடல்சார் பொருட்களால் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு இங்கு கிடைக்கும். பல உணவு விடுதிகள் கடற்கரை முழுவதும் இருக்கும். அதே போல் மெரினாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் காந்தி சிலை பின்புறம் பல கடைகள் அமைந்திருக்கும். அவற்றில் உணவு பொருட்கள் மற்றும் கடல்சார் பொருட்கள் எல்லாம் கலந்திருக்கும். மாலை வேலையில் தினமும் இந்த இரண்டு முனைகளும் திருவிழா போல் காட்சியளிக்கும். தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து போகும் இடம் மெரினா. கோடை மற்றும் விடுமுறை நாட்களில் அதுவே அதிகமான எண்ணிக்கையில் இருக்கும். குறிப்பாக காணும் பொங்கல்தினத்தன்று கடல் அலையோடு சேர்ந்து மக்கள் அலையும் மெரினாவில் வீசம் என்றால் அது மிகையாகாது. 

காணும் பொங்கல், 2019 - மெரினா கடற்கரையின் ஒரு பகுதி.

கூவம் நதி ஒரு புறம் என்றால் கடற்கரையின் தெற்கே கம்பீரமாய் நிற்கும் கலங்கரை விளக்கம் மறுபுறம். கலங்கரை விளக்கம் மேலிருந்து மொத்த மெரினாவின் மிக அழகான பார்வை அற்புதமானது. கலங்கரை விளக்கம் பின்புறம் வரிசையாக இருக்கும் வாசம் வீசும் மீன் கடைகள். மீனவர்கள் வசிக்கும் குடில்களும் அருகே இருக்கிறது. மெரினாவை அலங்கரிக்கும் விடயங்களில் முக்கியமானது மீனவர் படகுகளும் தான். மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு தயாரித்தல், முத்து குளித்தல் போன்ற கடல்சார் வணிக தொழில்களை கொண்ட தமிழர் பண்பாட்டு நிலத்திணையானநெய்தல்பகுதி மக்களான மீனவர்களின் வீடு தான் இந்த கடற்கரை என்பதே உண்மை. அவர்கள் தங்கள் பகுதிக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் அன்றும் இன்றும் பல போராட்டங்களை செய்து வருகின்றனர்

நொச்சிக்குப்பம் மீனவர் குடியிருப்பு மற்றும் மீன் அங்காடி, மெரினா கடற்கரை.

பிராணிகள் என்றால் மெரினாவில் காக்கை கூட்டம் முன்பு அதிகமாக இருக்கும். ஆனால் சமீபமாக பறவை ஆர்வலர்கள் சிலரால் புறா கூட்டம் காலை வேலையில் கூடுகிறது. அவர்கள் தினமும் புறாக்களுக்கு அரிசி வகை உணவுகளை வைப்பதால் இவ்வாறு ஆயிரக்கணக்கில் பறவைகள் சிறகடிப்பதை காண முடிகிறது. சவாரி செய்ய குதிரைகள் சில எப்போதும் நம் மெரினாவில் இருக்கும். நாய்களும் மெரினாவின் செல்லப் பிராணிகளே

காலை வேலையில் பல்லாயிரக்கணக்கான புறாக்கள், மெரினா கடற்கரை.

மாலை நேரங்களில் போரடித்தால் மெரினாவிற்கு செல்வது எனது வழக்கம். நடைபயணம் செய்ய, காற்று வாங்க, ஆசுவாசப்பட்டுக்கொள்ள, கற்பனையாக சிலவற்றை எழுத, மீன் வாங்க என பல வேலைகளை செய்ய முடிகிறது மெரினாவிற்கு சென்றால். அப்படி செல்லும் வேலையில் பள்ளி மாணவர்கள் சிலர் சுண்டல் விற்பனை செய்து போகும் பொழுது அவர்கள் அமைதியாக ஏதோ ஒரு பாடத்தை நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு செல்கிறார்கள்

புதுப்பிக்கப்பட்ட மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகில்.

மெரினாவை அழகு படுத்தும் வேலைகள் பலமுறை நடந்தாலும் 2009 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட  சீரமைப்பு பணி மிக முக்கியமானது. மெரினாவை முற்றிலும் அழகாக மாற்றியமைத்தது என்றே சொல்லலாம். இத்தகைய கடற்கரையை மேன்மைபடுத்தவும் பாதுகாக்கவும் மாநகராட்சி பல முயற்சிகள் எடுத்தாலும் மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கடற்கரை ஒரு சுற்றுப்புற சூழலியல் சார்ந்த இடம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதை பல்வேறு வகைகளில் அசுத்தம் செய்வதையும் மாசு படுத்துவதையும் முற்றிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.  

புல்வெளி, மெரினா கடற்கரை.

என்னைப் பொறுத்த வரை மெரினா என்றால் அன்பு, மெரினா என்றால் அரவணைப்பு, மெரினா என்றால் புரட்சி, மெரினா என்றால் ஜில்காற்று, மெரினா என்றால் அலைகள், மெரினா என்றால் காந்தி சிலை, மெரினா என்றால் கலங்கரை விளக்கம், மெரினா என்றால் நினைவேந்தல், மெரினா என்றால் தமிழர் கடல்.

அன்புடன்,
ஜெகன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக