திங்கள், 5 அக்டோபர், 2020

எஸ்.பி.பி. எனும் சகாப்தம்!

சின்ன வயதில் ரஜினி ரசிகனாக வளர்ந்த எங்களுக்கு அவரது திரைப்படத்தில் வரும் அறிமுக பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவற்றை சினிமா பாட்டு புத்தகம் வாங்கி மனப்பாடம் செய்து பாடிய பள்ளிப்பருவமானது மலரும் நினைவுகள்.

அந்த கதாநாயக அறிமுக தத்துவ பாடல்களை பாடிய குரலுக்கு சொந்தக்காரரான பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை அப்படி தான் எனக்கு அறிமுகம். இப்படி தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் பலவிதமாக தங்கள் வாழ்வோடு ஒன்றிய ஒரு குரலாக எஸ்.பி.பி அவர்கள் இருந்திருக்கிறார்.


தமிழில் 10,000 பாடல்களுக்கு மேல் பாடி தமிழ் சினிமாவின் பிரதான பாடகராக இருக்கும் அவர்கன்னட மொழியில் அதைவிட அதிக எண்ணிக்கையில் பாடல்களை பாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல்! இப்படி தென்னிந்தியாவின் மொழிகளான தமிழ்கன்னடம்தெலுங்குமலையாளம் என அனைத்திலும் பாடி ஒரு சகாப்தமாக இருக்கும் அவர் மொத்தமாக 16 மொழிகளில் 40,000-ற்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார்!

இசையமைப்பாளர் இளையராஜா இசையில் மட்டும் எஸ்.பி.பி சுமார் 2000 பாடல்களை பாடியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இவர்களின் இசை கூட்டணியில் உருவான அற்புதமாக பாடல்களை தமிழ் சினிமாவின் பொக்கிஷம் எனலாம். அதில் ரஜினியும் இருப்பார்கமல்ஹாசனும் இருப்பார்நடிகர் மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள்மற்றும் இயக்குனர்கள்இசைக் கலைஞர்கள்தமிழ் இசை ரசிகர்கள் என அனைவரையும் பின்னி பிணைந்த ஒரு கூட்டணி அது. இதுவே அவரை ஒரு காலாச்சார அடையாளமாகவும் மாற்றி இருக்கிறது. அதுவே சினிமா எனும் கலையின் சிறப்பு.



தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த பாடகர் யேசுதாஸ் அவர்கள். ஆனால், எஸ்.பி.பி-யை பொறுத்தவரை அவர் பல்வேறு விதமான பாடல்களை பாடி அசத்தியதே அவரை பின்னணி பாடகர்களில் ஒரு சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளது. 

எஸ்.பி.பி பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி'ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அற்புதமாக இருக்கும்.

அவர் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமாக பாடக்கூடியவர் என்பதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிடுகிறார். யோசித்து பார்த்தால்அவர் ஒவ்வொரு நடிகருக்கும் பாடிய பாடல்களில் அந்த நடிகருக்கான ஒரு அடையாளத்தை கொடுப்பதோடுஅவரின் தனித்தன்மையையும் அந்த பாடல்களை கேட்ட உடனே நாம் அறிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் அவர் பாடிய எண்ணற்ற பாடல்கள் மூலம் நம்முடைய சந்தோஷத்திலும்கொண்டாட்டத்திலும்சோர்விலும்சோகத்திலும்,  உத்வேகம் அளிப்பதிலும் என நம் வாழ்வியலின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறார். உதாரணமாக ஒவ்வொரு வருடமும் ஆங்கில புத்தாண்டின் போதும் அவரின் 'விஷ் யூ ஹெப்பி நியூ இயர்என்ற பாடலை கேட்டே நாம் புதிய வருடத்தை வரவேற்கிறோம். அதே போல் கல்யாண கச்சேரிகளில் அவரது பாடல்கள் இல்லாமல் கொண்டாட்டம் இருக்காது.

ஒரு பாடகராக மட்டுமில்லாமல்இசையமைப்பாளராக 60 படங்கள்நடிகராக 75 படங்கள்டப்பிங் கலைஞராக பல படங்கள்தயாரிப்பாளராக என பன்முகத்தன்மை கொண்ட ஒரு ஆளுமையாக திகழ்ந்திருக்கிறார்.

மத வேறுபாடு பார்க்காமல் ஆன்மீக பாடல்களையும் பாடியுள்ளார். 

இவை அனைத்தையும் கடந்து பணிவன்பான ஒரு மனிதராக அவரை பார்க்க முடிகிறது. அதுவே அவர் மேல் நமக்கிருக்கும் அன்பை அதிகப்படுத்துகிறது. அவர் மரணித்த செய்து பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த அவர்கொரோனா விழிப்புணர்வை குறித்தும் ஒரு பாடலை பாடிவிட்டு தான் சென்றிருக்கிறார்.

எஸ்.பி.பி எனும்  சகாப்தம் உடலால் மறைந்தாலும்,  இசையாய் தினம் மலர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்பதற்கு,

"
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" என்று அவர் பாடிய பாடலே சாட்சி.


நிச்சயமாக சொல்ல முடியும் ஐயாகடந்த 50 ஆண்டுக்கும் மேலாக நீங்கள் பாடி நாங்கள் கேட்ட பாடல்களை விடஇன்னும் கேட்காத பாடல்களே அதிகம் என்று!

அனைத்திற்கும் நன்றி திரு.எஸ்.பி.பி. 🙏

அன்புடன்,
ஜெகன்

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

இவர்களில் யாரும் இனி தங்கள் குழந்தைகளை மருத்துவராக்கும் கனவை காண முடியாது!

‘நீட்’ – NEET (National Eligibility cum Entrance Test) – தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு.

மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் நுழைந்து படிக்க என்ன தகுதி பிரதான தேவையாக இருக்க முடியும்?

மருத்துவ கல்லூரியில் படிக்க விருப்பமுள்ள மாணவர்கள், மருத்துவ படிப்புக்கு தேவையான பாடங்களான உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


 2017 செப்டம்பரில் ‘நீட்’ தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா(வயது 17) தனது 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 200 மதிப்பெண்களுக்கு தலா 194, 200 மற்றும் 199 மதிப்பெண்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவரால் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. காரணம், மாநில வழி கல்வியில் பயின்ற அனிதாவுக்கு நீட் தேர்வில் மத்திய பாட திட்டமான சி.பி.எஸ்.ஈ முறையில் கேள்விகள் கேட்கப்பட்டது தான்.

இப்படி மருத்துவ படிப்புக்கு தேவையான எல்லா பாடங்களிலும் சிறந்த முறையில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஒரு மருத்துவராக பயிற்றுவித்து தகுதி படுத்தும் பொறுப்பு அந்தந்த மருத்துவ கல்லூரிகளுக்கே உள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதால் எவரும் மருத்துவராகிவிட முடியாது. அடுத்த ஐந்து ஆண்டுகள் மருத்துவ கல்லூரிகளில் பயின்ற பிறகே ஒருவர் மருத்துவராக முடியும். இதை நீட் என்ற ஒரு பாகுபாடான நுழைவு தேர்வின் பேரில் ‘தகுதி’ என்று சொல்வதே ஒரு மிகப் பெரிய மோசடி மற்றும் அயோக்கியத்தனம்.

2017 முதல் இன்று வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வின் காரணமாக 15 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். மருத்துவ கல்லூரிகளில் அனுமதி பெற்று படிக்கும் அனைத்து தகுதிகளும் இருந்தும், வேறு பாட திட்டத்தில் தேர்வை எதிர்கொள்ளும் நிர்பந்தத்தாலும், நீட் தேர்வு பயிற்சிகளுக்கு செலவு செய்து படிக்க இயலாத சூழலாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் இத்தனை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.



தற்கொலைகள் தீர்வாகாது. நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வாகும்.

நீட் நுழைவு தேர்வில் மேலும் ஒரு மிகப்பெரிய மோசடி ‘நீட் பயிற்சி மையங்கள்’. கடந்த ஆண்டு(2019) தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில்  நீட் நுழைவு தேர்வின் மூலம் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 3033 பேர் தனியார் நீட் பயிற்சி மையங்களில் பயின்றவர்கள். வெறும் 48 மாணவர்களே தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறாமல் தேர்வானவர்கள். இது வெறும் 1.58% மட்டுமே.

அதே போல் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அனுமதி பெற்ற மாணவர்களில் 1598 பேர் தனியார் பயிற்சி மையங்களில் பயின்றவர்களே. வெறும் 52 பேர் மட்டுமே தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறாமல் தேர்வானவர்கள். இது வெறும் 3.15% மட்டுமே.

தனியார் பயிற்சி மையங்கள் மூலம் தேர்வானவர்களில் கூட முதல் முறை தேர்வு எழுதி நுழைந்தவர்கள் 1628 பேர் மட்டுமே. இரண்டாவது அல்லது மூன்றாவது முறை தேர்வு எழுதி நுழைந்தவர்கள் எண்ணிக்கை 3104

இவை அனைத்தும் 2019 நவம்பரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட தகவல்கள். இவற்றை கேட்டறிந்த நீதிபதிகள், “நீட் தேர்வின் மூலம் சமமற்றவர்கள் சமமானவர்களாக நடத்தப்படுகிறார்கள்”, “இதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் ஏழைகளுக்கு அடைக்கப்பட்டுவிட்டது நிரூபனமாகிறது. இதுவே உண்மை” என்று குறிப்பிட்டனர்.  

இந்த தனியார் நீட் பயிற்சி மையங்கள் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் சுமார் இரண்டரை லட்சம்(2,50,000) முதல் ஐந்து லட்சம்(5,00,000) ரூபாய் வரை பயிற்சி கட்டணமாக வசூலிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் வரை நீட் நுழைவு தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் பயின்றாலும் கூட 2,500 முதல் 5000 கோடி ரூபாய் வரை கட்டணம் செலுத்தி இருப்பார்கள்.

நீட் தேர்வினால் தனியார் மருத்துவ கல்லூரிகளின் நன்கொடை/ஆளினர் வீத கட்டணமாக(Capitation Fees) வசூலிக்கப்படும் நிலை இருக்காது என்று வாதிடுபவர்கள், இந்த தனியார் பயிற்சி மைய கொள்ளைகளை பற்றியும் பேச வேண்டும்.

“முந்தைய அரசாங்கம் எடுத்த அனைத்து முடிவுகளையும் நீங்கள் (இந்திய ஒன்றிய அரசு) மாற்றியமைக்கிறீர்கள், இதையும் மாற்றவும். தனியார் கல்லூரிகள் பணம் சம்பாதிப்பதைத் தடுப்பதே நீட்டின் நோக்கம், ஆனால் இப்போது பயிற்சி மையங்கள் பணம் சம்பாதிக்கின்றன.” – நீதிபதி கிருபாகரன்.

இந்திய மக்கள் தொகையில் வெறும் 1.15% பேர் மட்டுமே வருமான வரி செலுத்துபவர்கள்(2019-20 நிதியாண்டு). அதாவது ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்துக்கும் மேல் சம்பாதிப்பவர்கள். மீதமுள்ள 128.5 கோடி மக்களின் ஆண்டு வருவாய் இரண்டரை லட்சத்துக்கும் கீழ். இவர்களில் யாரும் இனி தங்கள் குழந்தைகளை மருத்துவராக்கும் கனவை காண முடியாது!

சமீபத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டு இறந்த தமிழக மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா(19 வயது) தனது தற்கொலை வாக்குமூலத்தில் எழுதிய “என்னை மன்னிக்கவும். நான் சோர்வடைந்துவிட்டேன்” (“I SORRY. I AM TIRED”) என்ற வாக்கியம், இந்த நீட் தேர்வு முறையால் கல்வியில் காட்டப்படும் பாகுபாடு, பயிற்சி மையங்கள் என்ற பெயரில் நடக்கும் மோசடிகள், இவற்றால் நசுக்கப்படும் ஏழை-தடுத்தர குடும்பங்களின் மொத்த வலியின் வெளிப்பாடே. கடந்த ஆண்டை விட இந்த வருடம் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 13% வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




நம் மாநிலத்தில், நம் ஏழை-தடுத்தர மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நம் அரசு மருத்துவ கல்லூரிகளில் நம் குழந்தைகளுக்கு படிக்க அனுமதி மறுக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராக வலிமையான குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறோம்.

பணக்காரர்களுக்காகவும் முதலாளித்துவ லாப வெறிக்காகவும் கொண்டு வரப்பட்ட இந்த நீட் தேர்வினால் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு இந்திய ஒன்றிய அரசும் மாநில அரசும் தான் முழு பொறுப்பு.

மாணவர்கள் கல்வியில் இதை விட மிகப்பெரிய அடுத்த பேராபத்தாக வரப்போவது ‘புதிய கல்வி கொள்கை 2020’ சட்டம் தான்.  

தமிழ்நாடு போன்ற கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தின் பறிபோகும் உரிமைகளை மீட்க வேண்டுமென்றால், கல்வி அதிகாரம் மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும். 1976-ல் அவசர கால(Emergency) நடவடிக்கையாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கல்வி உள்ளிட்ட இன்னும் சில அதிகார உரிமைகள் மாநில பட்டியலில் இருந்து பொது(ஒன்றியம் மற்றும் மாநிலம்) பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டது. கல்வி பொதுப் பட்டியலில் இருக்கும் வரை அதில் ஒன்றிய அரசின் கையே ஓங்கி நிற்கும்.

அன்புடன்,

ஜெகன்

வியாழன், 10 செப்டம்பர், 2020

நாம் தற்கொலை செய்து கொள்ளலாமா?

இன்று கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகளவில் முடக்கம் ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்து வாடிக்கொண்டிருக்கிறோம். இருப்பினும் இத்தகைய நடவடிக்கைகளை அரசுகள் எடுப்பதற்கு ஒற்றை காரணம் மட்டுமே உள்ளது. அது, விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே!

இன்றுவரை சுமார் 9 லட்சம் உயிர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் உலகின் பணக்காரர்களுக்கு பரவாமல் இருக்குமானால் இத்தகைய நடவடிக்கைகளை அரசுகள் எடுத்திருக்குமா என்றால், நிச்சயம் எடுத்திருக்காது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் ‘தற்கொலைகள்’.


உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் சுமார் 8 லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். உலக சுகாதார மையத்தின் 2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி 7,93,000 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் 79% பேர் குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவைச் சேர்ந்தவர்கள்.


 

இந்தியாவில் இது மிகவும் மோசம். சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி 2019-ல் மட்டும் இந்தியாவில் 1,39,123 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் 92,083(66.2%) பேர் ஆண்டு வருமானமாக 1 லட்சத்துக்கும் கீழே உள்ளவர்கள். தற்கொலை செய்துகொண்ட மேலும் 41,197(29.6%) பேரின் ஆண்டு வருமானம் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை உள்ளவர்கள். ஆகமொத்தம் 95.8% பேர் குறைவான வருமானம் ஈட்டுபவர்களே.

தற்கொலை என்பது மன அழுத்தம் போன்ற மனநல பிரச்சனைகளால் மட்டுமே வருவதில்லை. சமூக, பொருளாதார பிரச்சனைகளும் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. இதை உறுதிபடுத்தும் விதமாகவே மேலே குறிப்பிட்ட சமீபத்திய இந்த அறிக்கை உள்ளது.

இந்தியாவில் 2019-ல் தற்கொலை செய்தவர்களில் 10,281(7.4%) விவசாயிகளும், 32,559(23.4%) தினக்கூலி தொழிலாளர்களும், 11599(23.4%) வேலையில்லாதவர்களும் உள்ளனர்.

மொத்த தற்கொலை செய்தோர் எண்ணிக்கையில் 93,061(66.89%) பேர் 18-45 வயதுடைய இளைய சமூகத்தினரே!

தற்கொலை செய்து கொண்டவர்களில் 21,359(15.4%) பேர் இல்லத்தரசிகள். மொத்த பெண் தற்கொலைகள் 41,493(29.8%) பேர்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் 49.5% தற்கொலைகள் நடைபெற்றுள்ளது.

நகர்புறங்களில் நடைபெறும் தற்கொலைகளில் சென்னைக்கு முதலிடம் – 2461 மரணங்கள்!

விவசாயிகள், தினக்கூலிகள், வேலையில்லாதவர்கள், இல்லத்தரசிகள், இளைஞர்கள் என தற்கொலை செய்துகொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுபவர்கள் குறைந்த வருமானம் ஈட்டக்கூடியவர்கள் அல்லது வருமானமே இல்லாதவர்களாக இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை உறுதி செய்யும் விதமாக, பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேலே படித்தவர்கள் மொத்த தற்கொலை சதவீதத்தில் வெறும் 3.7% மட்டுமே உள்ளனர்.

இதன் மூலம் கல்வியும், வருமானம் ஈட்டும் சூழலும் ஒருவருக்கு இருந்தால் தற்கொலை செய்யும் சந்தர்ப்பத்தை குறைக்க முடியும் என்பது புரிகிறது.


 

இந்திய துணைக்கண்டத்தின் பிரதான தொழில் விவசாயம். ஆனால், விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விவசாயிகள் தற்கொலைக்கு வங்கிக் கடன்கள் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. பெரு நிறுவன முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகள் வரை கடனை தள்ளபடி செய்யும் அரசுகள், விவசாயிகள் தற்கொலைக்கு காரணமான வங்கி கடன் சுமையை குறைக்க வழிவகை செய்ய வேண்டும். இயற்கை பேரிடர்களால் பயிர்கள் நாசம் அடைவதும் விவசாயிகள் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உரிய நீர் மேலாண்மை ஏற்படுத்துவதோடு, காடுகளை அழிக்கும் போக்கையும் அரசுகள் கைவிட வேண்டும்.  

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் நம் மனம் மிகுந்த வேதனையில் இருக்கும் போது ஏற்படுகிறது. அந்த சிந்தனையில் இருந்து நாம் வெளியே வந்தால் நிச்சயம் தற்கொலையை தவிர்க்க முடியும். அப்படியான சூழலை கடந்து வந்த சிலரில் சமீப பேட்டிகளில் சாதனையாளர்களான நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கடந்த காலத்தில் தங்களுக்கு தற்கொலை சிந்தனை ஏற்பட்டு இருந்ததாக கூறுவதை பார்க்க முடிந்தது.

உலகில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அப்படி ஒருவர் தற்கொலையில் இறக்கும் வேளையில் சுமார் 20-க்கு அதிகமானோர் தற்கொலையை முயற்சித்துக் கொண்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார மையம்.


‘நாம் தற்கொலை செய்து கொள்ளலாமா?’ என்ற இந்த கட்டுரைக்கான பதில் இதோ...

எனக்கும் ஒரு முறை தற்கொலை செய்யும் எண்ணம் எழுந்துள்ளது! அடுத்த சில நிமிடங்களில் என் கைபேசியில் தற்கொலை தடுப்புக்கான உதவி எண்களை தேடினேன். அரசின் தற்கொலை தடுப்பு சேவைக்கான எண்.104-ஐ உடனே தொடர்புகொண்டு ஒரு ஆலோசகருடன் பேச முடிந்தது.

நம் பிரச்சனையின் காரணத்தை கேட்டு புரிந்துகொண்ட அவர், பிரச்சனை ஏன் ஏற்படுகிறது. அதற்கான தீர்வு என்ன என்று மிக நேர்த்தியாக புரிய வைத்து தற்கொலை சிந்தனையில் இருந்து நம்மை மீளச் செய்கிறார்.

அந்த தருணத்தில் நமக்கு தேவை, நம் மனதை ஆட்கொண்டிருக்கும் அந்த சிந்தனையில் இருந்து வெளிவருவதற்கான ஒரு வெளி.

இதனால் பிரச்சனை தீருமா என்றால், அதை எதிர்கொள்வதற்கான ஒரு சிறிய உதவியை நிச்சயம் அது தரும். நீச்சல் தெரியாமல் குளத்தில் தவிக்கும் ஒருவருக்கு கிடைக்கும் நீச்சல் குழாய்/மரக்கட்டை போன்றது அந்த உதவி. நீந்தப் பழகுவது நம் அவசியம்.

நினைவில் கொள்ளவும் – தற்கொலை தடுப்பு ஆலோசனை எண்.104!

செப்டம்பர் 10 – உலக தற்கொலை தடுப்பு தினம்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை இணைப்பு: 

https://ncrb.gov.in/sites/default/files/Chapter-2-Suicides_2019.pdf

அன்புடன்,

ஜெகன்

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

நான் ஏன் பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன்?

‘பார்ப்பனியம்’ என்றால் என்ன என்பதற்கு முதலில் விளக்கம் கொடுத்துவிட்டு மேலும் பேசுவது சரியாக இருக்கும்.


பார்ப்பனியம் என்பது பார்ப்பன சமூகத்தினரை குறிப்பதல்ல. பார்ப்பனிய சித்தாந்தத்தை கடைபிடிப்பதை பார்ப்பனியம் என்று சொல்கிறோம். பார்ப்பன சமூகத்தில் இருந்து வந்த நண்பர்கள், ஆசான்கள் என அன்பான பலர் எனக்கு இருக்கின்றனர். அவர்கள் அந்த சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் இல்லை. அதை பின்பற்றுபவர் எவரும் எனக்கு நண்பரும் இல்லை.

'
நான் பிறப்பாலும் அந்தஸ்தாலும் உயர்ந்தவன். என்னைவிட தாழ்ந்தவன் இன்னொருவன் இருக்கிறான்' என்ற சிந்தனையே பார்ப்பனியம். உலகில் அனைவரும் சமமானவர்களே. பிறப்பாலும் செய்யும் தொழிலாலும் யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் கிடையாது.  ஆனால் நாம் அனைவரும் அப்படி சிந்திக்கிறோமா?

ஒரு பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் மட்டுமே முக்கியமானவர்களா என்றால் கிடையாது. அந்த பள்ளிக்கூடத்தில் மணி அடிக்கும் பணியாளும், உணவு தயாரிக்கும் அம்மாவும், துப்புறவு செய்யும் தொழிலாளியும் அதே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் தான். இதில் எல்லோருடைய பங்களிப்பும் சேர்ந்தால் தான் அந்த பள்ளி இயங்க முடியும்.

இந்த சமத்துவம் ஏன் இருப்பதில்லை?

பிறப்பால் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வை நம் சமூகத்தில் உருவாக்கியது எது என்ற கேள்வியையும் அதற்கான பதிலையும் ஆராயாமல் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.

இந்திய சமூகத்தில் ஏற்றத்தாழ்வு என்பது ஜாதி அடிப்படையில் உருவானது. ஜாதி, மதம் என்ற போர்வைக்குள் இருந்து வருகிறது. மதம், கடவுள் என்ற ஒன்றிலிருந்து வருகிறது. கடவுள் என்பது இருப்பதற்கான எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் கிடையாது.

ஆக, கடவுள் என்ற ஒன்றை நிரூபிக்காத வரையில், மதம் என்பதும் ஜாதி என்பதும் ஏற்றத்தாழ்வு என்பதும் சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியவைகள் ஆகும்.

ஆனால், புராணங்களும் வேதங்களும் போதிப்பது என்ன?
கடவுளையும் விட உயர்ந்தவன் பிராமணன் என்ற பார்ப்பனன் என்பதாகும். கடவுளே நிரூபிக்கப்படாத ஒன்றாக இருக்கும்போது, அதைவிட உயர்ந்தவன் என்ற ஒன்றை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

இன்றைய அறிவியல் உலகில் நாளுக்கு நாள் அனைத்தும் புதுப்பித்துக்கொண்டே(updating) இருக்கும் சூழலில், ஆயிரம் வருடங்கள் முன்பு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல் சொல்லப்பட்ட புராணங்களின் கட்டுக்கதைகளை நம்புவதை விட ஒரு முட்டாள்தனம் இருக்க முடியாது.

அதை நம்ப வைக்கவும், பின்பற்ற வைக்கவும் வரலாறு முழுவதும் ஒரு தொடர்ச்சியான வேலை நடந்து கொண்டே இருக்கிறது, ஆன்மீகம் என்ற பெயரில்!

இந்த காலாவதியான வேதங்களும், புராணங்களும் மனித சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து மக்கள் மனதில் விதைத்துக் கொண்டே இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை சட்டங்கள் படி, "அனைத்து நபர்கள், நிறுவனங்கள், தனியார், பொதுவுடமை மற்றும் அரசுக்கும் நியாயமான மற்றும் சமமான சட்டங்களுக்கான பொறுப்பும், அதை பாதுகாப்பதற்கான எந்தவித பாகுபாடற்ற உரிமையும் உண்டு. இனம், பாலினம், மொழி அல்லது மதம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சம உரிமைகளை அளித்து மதிக்க அவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.”

பார்ப்பனிய ஜாதி அடுக்குகள் 

ரிக்வேதத்தின் மனு சாஸ்திரப்படி, மனிதர்களை நான்கு ஜாதிகளாக பிரிக்கின்றனர். பிரம்மணின் தலையில் இருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் சத்ரியன், தொடையில் இருந்து பிறந்தவன் வைஷியன், பாதத்தில் இருந்து பிறந்தவன் சூத்திரன் என்பதாகும். இந்த நான்கு பிரிவுகளும் அவரவரின் தொழிலுக்காக பிரிக்கப்பட்டதாக ஒரு பொய்யான வாதம் முன் வைக்கப்படுகிறது.

இதன் மூலம் கல்வி கற்கும் உரிமை ஒரு பிரிவினரான பிராமணர்/பார்ப்பனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கூட சம்ஸ்கிருத மொழி தெரிந்தால் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலை இங்கு இருந்தது, தற்போது நீட் தேர்வு இருப்பதை போல. இவை மற்றவர்களிடம் இருந்து கல்வி, உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை பறிக்கவே செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய சூழ்ச்சி சாஸ்திரங்களால் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே கல்வியை பெற்று உயர் பதவிகளிலும் அதிகாரத்திலும் இருப்பதை உறுதி செய்து வந்தது. மற்றவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் இந்த ஏற்றத்தாழ்வை தகர்க்கவே, கல்வியும் வேலைவாய்ப்பும் மறுக்கப்படும் மற்ற சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு என்ற முறை சட்டத்தில் கொண்டு வரப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது. இதனால், கல்வியும் வேலைவாய்ப்பும் இதுவரை மறுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டு முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

எந்த ஜாதி என்ற அடிப்படையில் இவை மறுக்கப்பட்டதோ, அதே ஜாதியின் அடிப்படையில் இன்று இவை வழங்கப்படுகிறது. இந்த வரலாற்று உண்மையை முற்றிலும் மறுத்துவிட்டு, இடஒதுக்கீடால் திறமையானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று எதிர்ப்பதை விட ஒரு அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது.

இடஒதுக்கீடு தான் வந்துவிட்டதே, இனி ஏற்றத்தாழ்வுகள் நம் நாட்டில் இருக்கப்போவதில்லை என்று நினைப்பது தவறு. ஜாதிகள் இருப்பதற்கு காரணமான மதங்களும் கடவுள்களும் இன்றும் இருக்க தானே செய்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவு பலத்துடன் இந்துத்துவா மதவாத கட்சி தான் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. ‘மதாச்சார்ப்பின்மை’, ‘சமதர்மம்’ என்ற வார்த்தைகளை அரசியலமைப்பு சட்ட முன்னுரையில் இருந்தே நீக்க வேண்டும் என்று வாதிடப்படுகின்றன.

ஆன்மீகம் என்ற பெயரில் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் என அனைத்து ஊடகங்களிலும் மதமும் கடவுளும் தொடர்ந்து பரப்பப்படுகிறது. இதன் மூலம் அதன் உறுப்பான ஜாதிய எண்ணம் சமூகத்தில் தொடர்வதை உறுதிபடுத்துகிறது. ஜாதி வெறி ஆணவக்கொலைகளும், அக்கிரமங்களும் தினம் தினம் இந்தியாவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாட்டின் குடியரசு தலைவராகவே இருந்தாலும் அவரை கோயிலுக்குள் அனுமதிக்காத பாகுபாடுகள் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

இவை மாறவேண்டும் என்றால், இந்த பார்ப்பனிய சித்தாந்தத்தை பின்பற்றுவதை நாம் கைவிட வேண்டும். அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்க வேண்டும். சமத்துவம் அடைவதற்கான சட்டங்களை உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வளவு சிக்கல்கள் நிறைந்த ஒரு சித்தாந்தத்தை எதிர்ப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

 

அன்புடன்,

ஜெகன்