வியாழன், 20 ஆகஸ்ட், 2020

நான் ஏன் பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன்?

‘பார்ப்பனியம்’ என்றால் என்ன என்பதற்கு முதலில் விளக்கம் கொடுத்துவிட்டு மேலும் பேசுவது சரியாக இருக்கும்.


பார்ப்பனியம் என்பது பார்ப்பன சமூகத்தினரை குறிப்பதல்ல. பார்ப்பனிய சித்தாந்தத்தை கடைபிடிப்பதை பார்ப்பனியம் என்று சொல்கிறோம். பார்ப்பன சமூகத்தில் இருந்து வந்த நண்பர்கள், ஆசான்கள் என அன்பான பலர் எனக்கு இருக்கின்றனர். அவர்கள் அந்த சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் இல்லை. அதை பின்பற்றுபவர் எவரும் எனக்கு நண்பரும் இல்லை.

'
நான் பிறப்பாலும் அந்தஸ்தாலும் உயர்ந்தவன். என்னைவிட தாழ்ந்தவன் இன்னொருவன் இருக்கிறான்' என்ற சிந்தனையே பார்ப்பனியம். உலகில் அனைவரும் சமமானவர்களே. பிறப்பாலும் செய்யும் தொழிலாலும் யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் கிடையாது.  ஆனால் நாம் அனைவரும் அப்படி சிந்திக்கிறோமா?

ஒரு பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் மட்டுமே முக்கியமானவர்களா என்றால் கிடையாது. அந்த பள்ளிக்கூடத்தில் மணி அடிக்கும் பணியாளும், உணவு தயாரிக்கும் அம்மாவும், துப்புறவு செய்யும் தொழிலாளியும் அதே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் தான். இதில் எல்லோருடைய பங்களிப்பும் சேர்ந்தால் தான் அந்த பள்ளி இயங்க முடியும்.

இந்த சமத்துவம் ஏன் இருப்பதில்லை?

பிறப்பால் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வை நம் சமூகத்தில் உருவாக்கியது எது என்ற கேள்வியையும் அதற்கான பதிலையும் ஆராயாமல் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.

இந்திய சமூகத்தில் ஏற்றத்தாழ்வு என்பது ஜாதி அடிப்படையில் உருவானது. ஜாதி, மதம் என்ற போர்வைக்குள் இருந்து வருகிறது. மதம், கடவுள் என்ற ஒன்றிலிருந்து வருகிறது. கடவுள் என்பது இருப்பதற்கான எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் கிடையாது.

ஆக, கடவுள் என்ற ஒன்றை நிரூபிக்காத வரையில், மதம் என்பதும் ஜாதி என்பதும் ஏற்றத்தாழ்வு என்பதும் சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியவைகள் ஆகும்.

ஆனால், புராணங்களும் வேதங்களும் போதிப்பது என்ன?
கடவுளையும் விட உயர்ந்தவன் பிராமணன் என்ற பார்ப்பனன் என்பதாகும். கடவுளே நிரூபிக்கப்படாத ஒன்றாக இருக்கும்போது, அதைவிட உயர்ந்தவன் என்ற ஒன்றை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

இன்றைய அறிவியல் உலகில் நாளுக்கு நாள் அனைத்தும் புதுப்பித்துக்கொண்டே(updating) இருக்கும் சூழலில், ஆயிரம் வருடங்கள் முன்பு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல் சொல்லப்பட்ட புராணங்களின் கட்டுக்கதைகளை நம்புவதை விட ஒரு முட்டாள்தனம் இருக்க முடியாது.

அதை நம்ப வைக்கவும், பின்பற்ற வைக்கவும் வரலாறு முழுவதும் ஒரு தொடர்ச்சியான வேலை நடந்து கொண்டே இருக்கிறது, ஆன்மீகம் என்ற பெயரில்!

இந்த காலாவதியான வேதங்களும், புராணங்களும் மனித சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து மக்கள் மனதில் விதைத்துக் கொண்டே இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை சட்டங்கள் படி, "அனைத்து நபர்கள், நிறுவனங்கள், தனியார், பொதுவுடமை மற்றும் அரசுக்கும் நியாயமான மற்றும் சமமான சட்டங்களுக்கான பொறுப்பும், அதை பாதுகாப்பதற்கான எந்தவித பாகுபாடற்ற உரிமையும் உண்டு. இனம், பாலினம், மொழி அல்லது மதம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சம உரிமைகளை அளித்து மதிக்க அவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.”

பார்ப்பனிய ஜாதி அடுக்குகள் 

ரிக்வேதத்தின் மனு சாஸ்திரப்படி, மனிதர்களை நான்கு ஜாதிகளாக பிரிக்கின்றனர். பிரம்மணின் தலையில் இருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் சத்ரியன், தொடையில் இருந்து பிறந்தவன் வைஷியன், பாதத்தில் இருந்து பிறந்தவன் சூத்திரன் என்பதாகும். இந்த நான்கு பிரிவுகளும் அவரவரின் தொழிலுக்காக பிரிக்கப்பட்டதாக ஒரு பொய்யான வாதம் முன் வைக்கப்படுகிறது.

இதன் மூலம் கல்வி கற்கும் உரிமை ஒரு பிரிவினரான பிராமணர்/பார்ப்பனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கூட சம்ஸ்கிருத மொழி தெரிந்தால் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலை இங்கு இருந்தது, தற்போது நீட் தேர்வு இருப்பதை போல. இவை மற்றவர்களிடம் இருந்து கல்வி, உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை பறிக்கவே செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய சூழ்ச்சி சாஸ்திரங்களால் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே கல்வியை பெற்று உயர் பதவிகளிலும் அதிகாரத்திலும் இருப்பதை உறுதி செய்து வந்தது. மற்றவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் இந்த ஏற்றத்தாழ்வை தகர்க்கவே, கல்வியும் வேலைவாய்ப்பும் மறுக்கப்படும் மற்ற சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு என்ற முறை சட்டத்தில் கொண்டு வரப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது. இதனால், கல்வியும் வேலைவாய்ப்பும் இதுவரை மறுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டு முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

எந்த ஜாதி என்ற அடிப்படையில் இவை மறுக்கப்பட்டதோ, அதே ஜாதியின் அடிப்படையில் இன்று இவை வழங்கப்படுகிறது. இந்த வரலாற்று உண்மையை முற்றிலும் மறுத்துவிட்டு, இடஒதுக்கீடால் திறமையானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று எதிர்ப்பதை விட ஒரு அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது.

இடஒதுக்கீடு தான் வந்துவிட்டதே, இனி ஏற்றத்தாழ்வுகள் நம் நாட்டில் இருக்கப்போவதில்லை என்று நினைப்பது தவறு. ஜாதிகள் இருப்பதற்கு காரணமான மதங்களும் கடவுள்களும் இன்றும் இருக்க தானே செய்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவு பலத்துடன் இந்துத்துவா மதவாத கட்சி தான் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. ‘மதாச்சார்ப்பின்மை’, ‘சமதர்மம்’ என்ற வார்த்தைகளை அரசியலமைப்பு சட்ட முன்னுரையில் இருந்தே நீக்க வேண்டும் என்று வாதிடப்படுகின்றன.

ஆன்மீகம் என்ற பெயரில் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் என அனைத்து ஊடகங்களிலும் மதமும் கடவுளும் தொடர்ந்து பரப்பப்படுகிறது. இதன் மூலம் அதன் உறுப்பான ஜாதிய எண்ணம் சமூகத்தில் தொடர்வதை உறுதிபடுத்துகிறது. ஜாதி வெறி ஆணவக்கொலைகளும், அக்கிரமங்களும் தினம் தினம் இந்தியாவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாட்டின் குடியரசு தலைவராகவே இருந்தாலும் அவரை கோயிலுக்குள் அனுமதிக்காத பாகுபாடுகள் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

இவை மாறவேண்டும் என்றால், இந்த பார்ப்பனிய சித்தாந்தத்தை பின்பற்றுவதை நாம் கைவிட வேண்டும். அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்க வேண்டும். சமத்துவம் அடைவதற்கான சட்டங்களை உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வளவு சிக்கல்கள் நிறைந்த ஒரு சித்தாந்தத்தை எதிர்ப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

 

அன்புடன்,

ஜெகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக