இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பல
திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. 1976-ஆம் ஆண்டு இ.அ.சட்டத்தில் 42-வது
முறையாக கொண்டு வந்த திருத்தம் மிக முக்கியமானது. அது தான் ‘மதச்சார்பின்மை’.
மதச்சார்பின்மை யாதெனில், கொள்கை ரீதியாக
அரசாங்கமும் மத நிறுவனங்களும் பிரிந்து இருக்க வேண்டும் என்பதாகும். ஆனால்
இந்தியாவில் நிலவுவது போலி மதச்சார்பின்மை என்று சொல்லப்படுகிறது. இதற்கு பல
உதாரணங்கள் இருக்கிறது. திருமணங்கள் மத அடிப்படையில் சட்டத்தின் முன்
பார்க்கப்படுவது ஓர் உதாரணம்.
இந்திய மதச்சார்பின்மை போலியானது என்பதற்கு
மிகச் சிறந்த உதாரணம் இந்து மதத்தை அடிப்படையாக கொண்ட பாரதிய ஜனதா கட்சி நாட்டை
ஆட்சி செய்து கொண்டிருப்பது தான். அதனால், மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டியது
நீதிமன்றங்களின் கடமையாகும்.
![]() |
| இந்துத்துவா மதவெறியன் |
இப்படி மத அடிப்படையில் ஆட்சியில்
அமர்ந்திருக்கும் ஒரு கட்சி, மத அடிப்படையில் தான் செயல்படும் என்பதற்கு கடந்த
ஐந்து ஆண்டுகளாக நாம் பல செயல்திட்டங்களை பார்த்து வந்தோம். யார் எந்த உணவை
சாப்பிட வேண்டும், யார் எந்த மொழியை படிக்க வேண்டும் போன்றவற்றை திணிக்கும் விதமாக
பா.ஜ.க அரசு செயல்பட்டு வந்தது. அதன் தொண்டர்கள் அதற்காக பல கொலைகளையும்
செய்கின்றனர். இவை அனைத்தும் மதச்சார்பின்மைக்கும் மனித
தன்மைக்கும் எதிரானது தான். மக்கள் தொடர்ந்து இதற்கு
எதிராக அறவழியில் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் அரைகுறையாக இருந்து வந்த
மதச்சார்பின்மையை குழி தோண்டி புதைக்கவே தற்போது பா.ஜ.க அரசு கையில்
எடுத்திருப்பது குடியுரிமை திருத்த சட்டம்(Citizenship Amendment Act - CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு(National Register of Citizens - NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு(National
Population Register - NPR).
இதை செய்வோம் என்று கடந்த ஆண்டு நாடாளுமன்ற
தேர்தல் நடக்கும் முன்பாக பா.ஜ.க தனது டிவிட்டர் பக்கத்தில் அமித்ஷா பேசியதாக பதிவிட்டது. அதை பார்த்தும்
மக்கள் பா.ஜ.க-வை தேர்ந்தேடுத்தார்களா என்றால், இல்லை என்று தான் சொல்ல முடியும். இந்திய
மக்கள் தொகையில் 37% மக்கள் தான் பா.ஜ.க-விற்கு வாக்களித்துள்ளார்கள். அதன் கூட்டணி கட்சி
வாக்குகளையும் சேர்த்தால் மொத்தம் 45% தான். 51% மக்கள் கூட தேர்ந்தெடுக்காத
ஒரு கூட்டணி தான் 100% மக்களும் என்ன உணவு சாப்பிட வேண்டும், எந்த மொழி பேச வேண்டும், யார்
இந்த நாட்டின் குடிமக்கள் என்றெல்லாம் சட்டம் போடுகிறது. இது ஜனநாயக தேர்தல்
முறையில் உள்ள சிக்கல்களில் ஒன்று. இதுவே விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் பா.ஜ.க-விற்கு 202 எம்.பி
சீட்டுகள் தான் கிடைத்திருக்கும். அதன் கூட்டணிக்கோ 245 எம்.பி-க்கள் தான்
இருந்திருப்பார்கள். இன்று அவர்கள் செய்து கொண்டிருக்கும் நாசகார வேலைகளை
செய்திருக்க முடியாது. 100% வாக்குகளை பெற்று செய்தாலும் இவை மனித விரோத செயல்கள்.
“மதம் மனிதனை மிருகமாக்கும். சாதி மனிதனை சாக்கடையாக்கும்.” – தந்தை
பெரியார்.
குடியுரிமை திருத்த சட்டம் (Citizenship Amendment Act - CAA) - கடந்த டிசம்பர் 2019-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இருந்து 31 டிசம்பர் 2014-க்கு முன்பு இந்தியாவிற்குள் சட்டப்படி
அல்லாமல் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், கிருஸ்தவர்கள், புத்த
மதத்தவர்கள், ஜெயின் மதத்தினர் மற்றும் பார்சியர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை
வழங்கப்படும் என்று திருத்தம் கொண்டு வந்தது பா.ஜ.க அரசு. இஸ்லாமிய நாட்டில்
இருந்து பல்வேறு காரணங்களுக்காக முக்கியமாக இஸ்லாமியர் ஒருவர் கூட வெளியேற
மாட்டார்களா என்ற அறிவு இந்த பா.ஜ.க அரசுக்கு இல்லையா என்று நீங்கள் கேட்டால்,
நிச்சயமாக இருக்கிறது. இஸ்லாமியர்களை இந்தியாவிற்குள் நுழைய விடக்கூடாது என்பது
தான் இந்த மதவெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க அரசின் எண்ணம்.
ஆனால், இஸ்லாமிய நாடுகளில் இருந்து
கிடைக்கும் கச்சா எண்ணெய் மட்டும் வேண்டும்.
இந்த சட்ட திருத்தத்தால் பாதிக்கப்படுவது
இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழீழ மக்கள், மியான்மர் ரோஹின்யா
இஸ்லாமியர்கள் மற்றும் திபெத்தில் இருந்து வரும் புத்த மதத்தவர்கள்.
மத சிறுபான்மையினருக்கும் புலம்பெயர் தமிழீழ
மக்களுக்கும் குடியுரிமை வழங்க மறுக்கும் இந்த சட்டத்தை ஆதரித்து ராஜ்ய சபாவில்
அதிமுக எம்.பி-க்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் இந்த சட்டம் நிறைவேறி
இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது! இதன் மூலம் அதிமுக கட்சி, பதவிக்காக மக்கள்
நலன்களை யோசிக்காமல் மதவாத ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க-வின் பக்கம் சாய்ந்துவிட்டது என்பதை
தெள்ளத்தெளிவாக நிரூபித்திருக்கிறது.
இந்த சட்ட திருத்தம் இந்தியாவின்
மதச்சார்பின்மைக்கு எதிராக மட்டுமல்லாமல், அடிப்படை மனித உரிமைக்கே எதிரானது! இந்த
சட்ட திருத்ததிற்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து கண்டனங்கள்
எழுந்தது. ஐ.நா-வின் மனித உரிமை ஆணையம், இந்த சட்ட திருத்தம் ‘அடிப்படையில்
தீண்டாமையாய் இருக்கிறது’ என்றும், ‘புலம்பெயற்பவர்கள் யாராக இருந்தாலும்
அவர்களது மனித உரிமை பாதுகாப்புடனும், மதிப்புடனும் நிறைவேற்றப்பட வேண்டும்’
என்றும் வலியுறுத்தியது.
இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடிய
மக்களை பா.ஜ.க அரசு தனது படைகளை கொண்டு வன்முறையால் கையாண்டதற்கு ஐ.நா-வின் பொது
செயலாளர் ஆண்டோனியோ கியுடெராஸ் கண்டனம் தெரிவித்தார். மக்கள் அறவழியில்
போராடுவதையும், தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதையும் வெளிப்படுத்துவதையும்
அனுமதிக்க வேண்டும் என்று இந்த ஃபாசிச அரசுக்கு அறிவுறுத்தினார்.
இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது, “பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் மதரீதியிலான துன்புறுத்தல்களை எதிர்கொள்ளாததால், இந்த சட்டத் திருத்தத்தின் வாயிலாக எந்த பலனையும் பெற முடியாது" என்று அமித்ஷா கூறியுள்ளார். ஆனால், பங்களாதேஷ் நாட்டில் இருந்து 25 ஆண்டுகளாக
மத அடிப்படைவாதத்தின் காரணமாக நாடு கடத்தப்பட்ட எழுத்தாளர் மற்றும் கடவுள்
மறுப்பாளரான தஸ்லிமா நஸரீன்(Taslima Nasreen)
இந்தியாவில் தன்னைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்
என்று கோருகிறார். முஸ்லீம்களை அனுமதிக்க மாட்டீர்கள். பகுத்தறிவாளர்களை?
![]() |
| சென்னை ஷகீன்ஃபாக் போராட்டம், வண்ணாரப்பேட்டை. |
தேசிய மக்கள் தொகை பதிவேடு(National
Population Register - NPR) -
தேசிய மக்கள் தொகை என்பது இந்தியாவில் வசிக்கும்
மக்களின் கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்புக்காக மத்திய அரசு 8500 கோடி
ரூபாய் தொகையை ஒதுக்கியுள்ளது. இந்த கணக்கெடுப்பை வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்த இருப்பதாக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம்
அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு ஏற்கனவே மேற்கு வங்க மாநிலம், கேரளா, ராஜஸ்தான்
உள்ளிட்ட மாநிலங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டது.
ஏன் இந்த எதிர்ப்பு?
கணக்கெடுப்பது மதவெறி ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ பா.ஜ.க அரசாயிற்றே!
மதச்சார்பற்ற மாநில அரசுகளுக்கு அச்சம் இருக்காதா பின்னே?
இதற்கு ஒரு உதாரணம் – இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும்
சில கேள்விகளும் அதன் ஆபத்துகளும்..
1) உன் பெற்றோர் பிறந்த ஊர் மற்றும்
அவர்களது பிறந்த தேதி என்ன?
ஆபத்து ஒன்று - அறுபது வயதுடைய ஒருவரின்
இறந்துபோன தந்தை பிறந்த ஊரானது மற்றும் பிறந்த தேதி தெரிய வாய்ப்பில்லை. இதுவே
அந்த நபரினுடைய தந்தை ஒரு இஸ்லாமியராக இருந்து, அவர் பிறந்த ஊர் கராச்சியாக
இருந்தால், அவரது குடும்பத்தின் நிலை என்னவாகும்? இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்
போது எங்களுக்கு பாகிஸ்தான் வேண்டாம் இந்தியா தான் வேண்டும் என்று
சுதந்திரத்திற்காக போராடிய மதச்சார்ப்பின்மையுள்ள இஸ்லாமியர்கள் இங்கு ஏராளம்.
ஆட்டுக்கறி கொண்டு சென்றவரை மாட்டுக்கறி கொண்டு செல்கிறார் என்று காவி கொடியுடன்
அடித்து கொலை செய்த மதவெறி பிடித்த மிருக கூட்டத்தால் இத்தகைய மக்களுக்கு நிச்சயம்
ஆபத்து உள்ளது. இந்த மக்கள் தான் இன்று தேசிய கோடியை பிடித்துக்கொண்டு வீதியில்
போராடுகிறார்கள்.
2) உன் தாய் மொழி என்ன?
ஆபத்து இரண்டு - இந்தியா ஒரு பன்முகத்தன்மை
கொண்ட நாடு என்று எப்படி சொன்னாலும் இவர்களுக்கு புரியப்போவதில்லை. ‘ஒரே தேசம் ஒரே
மொழி’ கொள்கைக்கு ஏதுவாக அமைந்துள்ளது இந்த கேள்வி. மற்ற மொழிகளை நசுக்க உதவியாக
இருக்கும்.
3) உங்கள் வீட்டின் பிரதான தானியம் என்ன?
ஆபத்து மூன்று – ‘ஒரே தேசம் ஒரே உணவு’ என்ற
கொள்கைக்கு உதவுவதாக அமைந்துள்ளது இந்த கேள்வி!
இந்தியாவை ஹிந்து நாடாக பிரகடனப்படுத்த இவையெல்லாம் தேவை அல்லவா!
எல்லா தகவல்களையும் நம்மிடமிருந்து பெற்றுக்கொண்டு நமக்கே ஆப்பு வைக்க
காத்திருக்கிறது இந்த ஃபாசிச பா.ஜ.க அரசு. தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள்
பதிவேட்டை உருவாக்க உதவியாக இருக்கும்.
தேசிய குடிமக்கள் பதிவேடு(National Register of Citizens - NRC) – மற்ற இரண்டு விடயங்களையும் விட பிரச்னையின் வீரியம்
அதிகமாக இருப்பது ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டில்’ தான். கடந்த வருடம் ஆகஸ்ட் 31-ஆம்
தேதி அசாம் மாநிலத்தில் 19 லட்சம் பேரின் பெயர் தேசிய குடியுரிமை பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டதாக
அறிவிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் ஒரே நாளில் அகதிகளாக மாற்றப்பட்டனர்! முதலில் 41
லட்சமாக இருந்த இந்த பட்டியல் இறுதி வடிவில் 19 லட்சமாக
மாறியுள்ளது. இந்த பட்டியலிலும் பல குளறுபடிகள் உள்ளன.
![]() |
| அசாமில் குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரை உறுதி செய்ய நிற்கும் மக்கள் |
இந்தியாவின் ஐந்தாவது ஜனாதிபதி ஃபக்ருதின் அலி அகமது. அவரது சகோதரரின் மகன் மற்றும் அவரது
குடும்பத்தினர் பெயர் பட்டியலில் விடுபட்டிருக்கிறது. இந்திய
ராணுவத்தில் பணி புரிந்து பின் அசாம் போலிஸாக வேலை பார்த்த பிமல் சவுத்ரி, சாகித்ய
அகாடமி விருது பெற்ற துர்கா கத்திவாடா, சுதந்திர போராட்ட வீரர்
சபிலால் உபத்யே-வின் பேத்தி
மஞ்சு தேவி மற்றும் அரசு ஊழியர்கள் பலரது
பெயர்கள் இந்த குடியுரிமை பட்டியலில் இல்லை!!
இந்த மக்கள் 120 நாட்களுக்குள் ‘வெளிநாட்டினர்
தீர்ப்பாயத்தில்’ திருத்தம் கோரி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகும் பெயர் இல்லாதவர்கள் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச
நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
இவர்கள் அனைவரும் 1971 மார்ச்
24-ம் தேதிக்கு பின் உரிய ஆவணங்கள் இல்லாமல் அசாமுக்குள்
நுழைந்தவர்கள் என்ற அடிப்படையில் குடியுரிமை பதிவேட்டில் இருந்து
நீக்கப்பட்டவர்கள். அப்போது கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம் உருவான சமயம்(26
மார்ச் 1971). அதுவரையில் பாகிஸ்தான்
மற்றும் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்திற்கும் இடையில் நடந்த போரின்
காரணமாக வந்தவர்களை தவிர்த்துவிட்டு எடுக்கப்பட்ட பட்டியல் என்று சொல்லலாம்.
இத்தகைய ஒரு சூழலுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. இதற்கு பா.ஜ.க மட்டும் காரணம்
அல்ல. ஆனால் இவ்வளவு குளறுபடிகள் உள்ள ஒரு பட்டியலையும், அதை வைத்து அவர்கள்
செய்யவிருக்கும் திட்டமும் பேராப்பத்தானது.
![]() |
| அசாமில் குடிமக்கள் பதிவேட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் |
பெயர் விடுபட்ட 19 லட்சம் பேரில் 5 லட்சம் பெங்காளி இந்துக்கள் மற்றும் 7 லட்சம்
இஸ்லாமியர்கள் உள்ளனர். மிதமுள்ளவர்கள் உள்ளூர் மற்றும் வட இந்தியர்கள்.
யார் இந்த உள்ளூர் மற்றும் வட இந்தியர்கள்?
1820-களில் கூர்க்காக்கள் என்று சொல்லப்படும் நேப்பாளிய
மக்கள் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு துணையாக பர்மா நாட்டு படையுடன் போர் புரிய
வந்துள்ளார்கள். இவர்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வடகிழக்கு பகுதியில்
வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இவர்களில் 1,50,000 மக்கள்
தேசிய குடிமக்கள் பதிவேட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ‘பாரதிய கூர்க்கா பரிசங்கா’ அமைப்பின் அசாம்
மாநில பொது செயலாளர் பிரகாஷ் தஹல் தெரிவித்துள்ளார். இதற்காக கூர்க்காக்கள் ‘வெளிநாட்டினர்
தீர்ப்பாயம்’ செல்லப்போவதில்லை. ‘நேப்பாளி மொழி பேசும் மக்களை இந்த அரசியல்
அமைப்பு இழிவு படுத்துகிறது என்று நீதிமன்றத்தில் வழக்கு வேண்டுமானால் தொடுப்போம்’
என்று கூர்க்கா பரிசங்காவின் தேசிய தலைவர் சுகமன் மோக்டன் உறுதியாக
தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக போராடிய கூர்க்கா மக்களையும்,
வெள்ளையர்களை எதிர்த்து போர் செய்த திப்பு
சுல்தான் வழியில் வந்தவர்களையும், நாட்டில் வாழ உரிமை இல்லை என்று வெள்ளைக்காரனின்
காலை நக்கிப் பிழைத்தவர்கள் வழியில் வந்தவர்கள் நிற்பந்தப்படுத்துகிறார்கள்.
அசாமில் பாதிக்கப்பட்ட 5 லட்சம் இந்துக்களையும் பிற மதத்தினரையும்
காப்பாற்ற குடியுரிமை திருத்த சட்டம் இருக்கிறது. ஆம்,
டிசம்பர் 31, 2014-க்கு முன்பு வரை பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில்
இருந்து சட்ட விரோதமாக நுழைந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சியர்கள், புத்த
மதத்தினர், சீக்கியர்கள் மற்றும் ஜெயின் மதத்தினர்கள் அனைவருக்கும் தான்
குடியுரிமை வழங்கப்படுமே, இஸ்லாமியர்களை தவிர்த்து! இதுவே பா.ஜ.க-வின் திட்டம்.
![]() |
| மக்கள் விரோத CAA, NRC, NPR சட்டத்திற்கு எதிராக சென்னையில் திரண்ட மக்கள் |
அந்த 7 லட்சம்
மக்களின் வாழ்க்கை இனி என்னவாகும் என்று எண்ணும் போது மனம் கனக்கிறது.
அவர்களுக்கான அகதிகள் முகாம்களை அவர்களே
கட்டிக்கொள்கிறார்கள். ஆம், முகாமின் கட்டுமானப்பணியில் இருக்கும் பெண்
ஒருத்தியின் பெயரும் பட்டியலில் இல்லை! இத்தகைய ஒரு தேசிய குடியுரிமை பதிவேட்டை
நாட்டின் பிற பகுதிகளிலும் நடைமுறை படுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
ஃபாசிச அரசின் கீழ் வாழ்வதே கொடுமை. அதிலும்
பட்டியலிட்டு முகாமில் வைத்து மக்களை மேலும் சித்தரவதை செய்வதை ஏற்க முடியாது.
இதற்கு பெயர் தேசிய பாதுகாப்பு இல்லை, ஃபாசிசம்.
பல வருடமாக சமூகமாக வாழ்ந்து வரும் மக்களை
மதத்தின் பெயரால் முகாமில் அடைத்து சித்ரவரை செய்வது அடிப்படை மனித உரிமை மீறல்
ஆகும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிட்லரும் முகாம் அமைத்து தான்
இனக்குழுக்களை பிரித்தான். கொன்று குவித்தான்.
வரலாறு திரும்புகிறது! விடுதலை போராட்டம்
துவங்குகிறது!
அன்புடன்,
ஜெகன்






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக