வெள்ளி, 8 மார்ச், 2019

பயணம் பழகு!


                   பயணங்கள் வாழ்க்கையை இனிதாக்கும். வாழ்க்கையே ஒரு பயணம் தான், கருவறை முதல் கல்லறை வரை. இயல்பாகவே பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இரயிலில், பேருந்தில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது ஒவ்வொரு வினாடியும் ஒரு தருணத்தை நாம் கடந்து சென்றுகொண்டிருப்பதை மிக அழகாக உணர முடியும். புதிய தருணத்தை, புதிய இடத்தை, புதிய மனிதர்களை, புதிய சூழலை, புதிய அனுபவத்தை பயணங்கள் நமக்கு தருகிறது.

சமீப காலமாக தொடர்ந்து புதிய இடங்களுக்கு பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வருகிறது. அதற்கான சூழல் அமைவதை பொறுத்து பயணங்கள் நிகழ்கிறது. அப்படி சமீப வருடங்களில் நண்பர்களின் திருமண நிகழ்வுகள் பயணிக்கும் அந்த வாய்ப்பை வழங்கியது. ஒரு முறை கேரளாவிற்கும், இன்னொரு முறை கொல்கத்தாவிற்கும் சமீபத்தில் திருநெல்வேலியில் உள்ள சங்கரன் கோவிலுக்கும் பயணம் செய்தேன். திருமண நிகழ்வில் கலந்து கொண்டு அப்படியே இரண்டு மூன்று நாட்கள் அங்குள்ள இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு வருவது வழக்கம். கேமரா இருப்பதால் புகைப்படங்கள் எடுக்கும் பழக்கமும் பயணங்களில் தொடர்கிறது.

சமீபத்தில் நண்பனின் திருமணத்திற்காக தெற்கே உள்ள சங்கரன் கோவில் என்ற ஊருக்கு செல்லும் போது அங்கிருந்து எனது நீண்ட நாள் பயண விருப்பமான ராமேஸ்வரம்-தணுஷ்கோடிக்கு சென்றுவர திட்டமிட்டு, இரயில் மற்றும் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தேன்.

பயண நேரங்களில் வசதியாக இருக்க ஷார்ட்ஸ் (அரை பேண்ட்) அணிந்து செல்வது வழக்கம். அப்படியாக இந்த முறையும் சென்றிருந்தேன். ஊருக்கு இரயிலில் சென்று இறங்கி, அங்கிருந்து நடந்து முகவரியை தேடி பிடித்து நண்பனின் வீட்டு வாசலுக்கு சென்று அலைபேசியில் அழைத்தால், உள்ளே இருந்து வந்த நண்பன் என்னை பார்த்தவுடன் நலம் விசாரிக்கவில்லை. ”இது கிராமம், ஏன் டா ஷார்ட்ஸ்ல வந்த?” என்று தான் முதலில் கேட்டான். சென்னையில் சில வருடங்களாக வசித்து வந்தாலும் ஊருக்கு சென்றால் ஊர் பழக்கம் என்ற கடிவாளம் அவனை விட்டு வைக்கவில்லை. நகர்புறத்திலும், ஏன் உலகம் முழுவதிலும் இந்த உடை கலாச்சாரம் என்ற சிக்கல் பல இடங்களில் பல வடிவங்களில் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

சங்கரன்கோவிலில் சங்கர நாராயணன் கோவில் ஆலயம் பிரபலமானது. அதை தவிர அங்கு சுற்றி பார்க்க ஓரிரு மணி நேர தொலைவில் குற்றாலம், பாபநாசம் மற்றும் திருநெல்வேலி இருக்கிறது.  

(குறிப்பு : முழு புகைப்படத்தை காண புகைப்படத்தின் மீது கிளிக் செய்யவும்) 

சங்கர நாராயணன் கோவில், சங்கரன் கோவில்
சங்கர நாராயணன் ஆலயத்திற்கு கேமராவுடன் சென்று அருகிலிருந்த சில காட்சிகளை புகைப்படங்கள் எடுத்தேன். ஆலயத்திற்குள்ளும் சில புகைப்படங்கள் எடுக்க முடிந்தது. ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சங்கர நாராயணன் கோவில், உக்கிர பாண்டியன் என்ற மன்னரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெரிய கோபுர வாசல், உள்ளே நல்ல சிற்ப வேலைபாடுகள் கொண்ட கோவிலாக இருந்தது

வன விலங்கான சின்ன தம்பி என்ற ஒரு யானையின் துயரை பார்த்து சமூக வலைதளங்களில் பலர் குரல் கொடுத்தோம். ஆனால் ஒவ்வொரு பெரிய கோவில்களிலும் ஆஸ்தானமாக ஒரு யானையை கட்டிப்போட்டு கொடுமை படுத்திக் கொண்டிருக்கிறோம் நாம் அனைவரும்! அந்த யானையை பிச்சை எடுக்க நன்றாக பழக்கி வைத்திருக்கிறோம். திருச்சி ஸ்ரீரங்கம், சங்கரன் கோவில் ஆலயம், ராமேஸ்வரம் ஆலயம் என சமீபத்தில் சென்ற எல்லா இடங்களிலும் இந்த நிகழ்வு நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. வரும் காலங்களில் இந்த நிலை மாறும் என்று நம்புகிறேன்.

சங்கர நாராயணன் கோவில், சங்கரன் கோவில்

சங்கரன் கோவில் நகர மக்கள் மிக நன்றாக பேசி பழகக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நான் அங்கிருந்த ஓரிரு நாட்களில் அதை பார்க்க முடிந்தது. கையில் கேமராவுடன் இருப்பதால் விசாரிக்கிறார்கள், அவர்கள் கதைகளை நம்மிடம் சொல்கிறார்கள். பொது இடங்களில் புகைப்படங்கள் எடுப்பதால் பத்திரிக்கையாளர் என்று எண்ணி அங்குள்ள பொது பிரச்சினைகளை நம்மிடம் சொல்கிறார்கள். பெரும்பாலான மக்கள் சென்னையில் ஒரு முறையாவது வேலை செய்தவர்களாக இருக்கிறார்கள்.

நண்பனின் திருமணத்திற்கு சென்னையில் இருந்து ஒரு சில நண்பர்கள் வந்திருந்தார்கள். குற்றாலம் போகலாம் என்று நினைத்தால் தற்போது அங்கு சீசின் இல்லை, தண்ணீர் வராது என்று சொல்லிவிட்டார்கள். திருமண வீட்டில் நல்ல உபசரிப்பு. நிகழ்வு முடிந்த பிறகு அன்று இரவு திருநெல்வேலியிலிருந்து இராமேஸ்வரத்திற்கு இரயிலில் பயணம் செய்தேன்.

பாம்பன் பாலம் பழுது பார்க்கும் வேலை நடைபெற்று வருவதால் மண்டபம் இரயில் நிலையத்திலேயே இரயில் நின்றது. அங்கிருந்து இலவசமாக பேருந்தில் ராமேஸ்வரம் செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தது இரயில்வே துறை

பாம்பன் இரயில் மற்றும் தரை வழி பாலங்கள்

பாம்பன் பாலத்தில் பேருந்து நிற்காது என்பதால் ஒரு ஷேர் ஆட்டோவில் சென்றேன். ஷேர் ஆட்டோ ஓட்டுனரும் சில நாட்கள் சென்னையில் வேலை செய்திருக்கிறேன் என்று சொன்னார்! அவருடன் பாம்பன் அருகே தேனீர் அருந்திவிட்டு அங்கிருந்து மீண்டும் ஒரு பேருந்தை பிடித்து நான் IBIBO (ஐபிபோ) என்ற மொபைல் ஆப்-ல் பார்த்து வைத்த விடுதி இருக்குமிடத்திற்கு சென்றேன். ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கிங் அருகில் இருந்தது அந்த விடுதி. அறையில் குளித்துவிட்டு கேமராவுடன் விடுதியை விட்டு கிளம்பினேன்.

தமிழ்நாட்டின் வரைபடத்தில் பாம்பன் தீவு (ராமேஸ்வரம்) புவியியல் ரீதியாக பல வகையில் மிக முக்கியமான ஒரு பகுதி. இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் நிலப்பகுதி, மன்னார் வலைகுடா பகுதியில் இருக்கும் நிலப்பரப்பு, மீனவர் தீவு என பல காரணங்கள். மத வழிபாட்டு தளமாகவும் கருதப்பட்டு அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் ஒரு தீவாக இருக்கிறது.

கேமராவுடன் கிளம்பிய நான் நேராக தணுஷ்கோடிக்கு தான் சென்றேன். என் பயணத்தின் முக்கிய நோக்கம் தணுஷ்கோடியை பார்க்க வேண்டும் என்பது தான். இன்று ராமேஸ்வரம் தான் பாம்பன் தீவின் பிரதான பகுதியாக இருக்கிறது. ஆனால், 1964-க்கு முன்பு வரை தணுஷ்கோடி என்ற நகரம் தான் இந்த தீவின் கடைசி பகுதியாகவும், அதுவரை இரயில் சேவையும் இருந்திருக்கிறது. ஆனால் அந்த வருடம் வந்த சுனாமி போன்ற ஒரு பெரும் கடல் வெள்ளத்தால் அந்த நகரமே அழிந்து போய்விட்டது

கட்டிட இடிபாடுகள், தணுஷ்கோடி 

தணுஷ்கோடிக்கு செல்லும் போதே அழிந்து போன நகரின் மிச்சங்களான கட்டிட இடிபாடுகளை காண முடிந்தது. கடைசி பகுதியான முக்கடல் சங்கமிக்கும் இடத்திற்கு முதலில் சென்றேன். அங்கிருந்து அழிந்துபோன நகரின் பகுதியில் உள்ள ஒரு உணவு கடையில் தணுஷ்கோடி ஸ்பெஷலான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் உணவு சாப்பிட்டேன். கடற்கரைக்கு சென்றேன். தூய்மையான நீர், அழகான கடல், நகரத்தை விழுங்கிய, காற்றோடு சுழன்று அடிக்கும் அலைகள் என ரசிக்கும்படியாக பொழுதை கழிக்க ஒரு அற்புதமாக இடம். கடற்கரைக்கு செல்லும் வழியில் இடிந்த பழைய கட்டிடங்கள் புயல் சின்னங்களாக இருக்கின்றன


தேவாலய இடிபாடு, தணுஷ்கோடி 

முக்கடல் சங்கமிக்கும் இடம், தணுஷ்கோடி 

தணுஷ்கோடி ஸ்பெஷல் மீன் வறுவல்

அங்குள்ள ஒருவரிடம் ராமேஸ்வரத்தில் மீனவர் பிரச்சினை அடிக்கடி வருகிறதே என்றேன். இங்கிருந்து எல்லை தாண்டிய பகுதிக்கு சென்றால் தான் நல்ல மீன்கள் கிடைப்பதாக சொன்னார் அந்த மீனவர்! நம் பகுதியிலும் மீன்கள் கிடைக்கிறது. ஆனால் அந்த பகுதியில் இன்னும் அதிகமாகவே கிடைப்பதால் அங்கு செல்லவேண்டிய சூழ்நிலை இருப்பதாக சொன்னார். தங்கள் வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைத்து கடலுக்குள் சென்று வருகிறார்கள் தினமும்! ஆயிரமாயிரம் வருடங்களாக கடலுக்குள் செல்லும் அவர்களை இந்த எழுபது வருட எல்லை கோடுகளால் சுருக்கிவிட முடியுமா என்ன?!

அமைதியான, அழகான, தூய்மையான தணுஷ்கோடி கடற்கரை

கடற்கரையில் என்னை போல் கேமராவுடன் ஒரு இளைஞர் இருந்தார். அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து நானும் அவரும் சேர்ந்தே பயணித்தோம். ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமர் பாதம் என்ற இடத்திற்கு சென்றோம். குன்று போல் இருக்கும் அந்த பகுதியின் மேல் இருந்து தீவின் ஒரு பெரும் பகுதியை காண முடிந்தது.

ராமர் பாதம் மேலிருந்து இராமேஸ்வரம் தீவு

ராமேஸ்வரம் என்றால் நமக்கு ஞாபகம் வரும் இன்னொரு பெயர் Dr.A.P.J.அப்துல்கலாம். அவர் வீடு அங்கு மிக பிரபலம். அவரது நினைவிடத்திற்கு சென்றோம். டி.ஆர்.டி. (DRDO) கட்டுப்பாட்டில் இருக்கும் நினைவிடத்திற்குள் செல்ல சில கட்டுப்பாடுகள் இருந்தன. செல்ஃபோனை அனைத்து விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். கேமராக்கள் கொண்டு செல்லக்கூடாது. ஆனால் கேமராக்களை வெளியே வைத்துவிட்டு செல்ல அறை எதுவும் கிடையாது! உலகெங்கிலும் இருந்து மக்கள் வரும் ஒரு இடத்தில் இந்த சின்ன வசதி கூட இல்லை. பிறகு அங்குள்ள அலுவலகத்தில் புகார் அளித்து சண்டை போட்டு, அவர்களிடம் எங்களை கேமராக்களை கொடுத்துவிட்டு இருவரும் உள்ளே சென்றோம். அப்துல்கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்ட வைக்கவே ஒரு பெரும் போராட்டமாக இருந்தது. அங்கு தேவையான வசதிகள் கிடைக்கவும் மக்களின் தொடர் முயற்சிகள் தேவைப்படுகிறது.

உள்ளே அவரின் சமாதியும், அவரது வாழ்க்கையை விவரிக்கும் பல புகைப்படங்களும், ஓவியங்களும் அவரின் இறுதி மேடை பேச்சின் தருணங்கள் என பல விடயங்கள் இருந்தன. நினைவிடத்திற்கு பின்னால் அவரது உருவ சிலையும் ஒரு ராக்கெட் மாதிரியும் இருந்தது.


ராமேஸ்வரம் என்றாலே பாம்பன் பாலம் தான் நம் கண் முன்னே வந்து நிற்கும். அங்கு செல்லாமல் எப்படி இருக்க முடியும். அடுத்து அங்கு தான் சென்றோம் நானும் என் புதிய பயண நண்பரும்

கடற்கரை மேல் அமைந்திருக்கும் பாம்பன் இரயில் பாலம்

இந்த தீவை தமிழ்நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாம்பன் இரயில் பாலம் தான் இந்தியாவில் முதன்முதலில் கடல் மேல் கட்டப்பட்ட பாலம். இந்தியாவிலேயே இரயில் பாதையால் ஒரு தீவு இணைக்கப்படுகிறது என்றால் அது இராமேஸ்வரத்தின் பாம்பன் பாலமாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். 1988-ஆம் ஆண்டு சாலை பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது.

பாலத்தின் கீழ் பகுதியில் மீன் அங்காடி இருக்கிறது. மேலே பருந்துகள் கூட்டம் பறந்து கொண்டிருந்தன. அழகான பாம்பன் பாலம், சுற்றிலும் கடல், கரையோரம் நிற்கும் படகுகள், மறைந்து கொண்டிருக்கும் மாலை சூரியன் என அற்புதமான ஒரு மாலை பொழுதாக அது அமைந்தது. புகைப்படங்கள் சில எடுக்க முடிந்தது. அங்கிருந்து என பயண நண்பர் விடைபெற்றார். சென்னையில் வேலை செய்யும் அவரை வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம் என நினைத்தேன். விடுதிக்கு வந்தடைந்தேன். மறுநாள் மாலை தான் ஊருக்கு பேருந்து

இரண்டாம் நாள், அங்குள்ள ராமேஸ்வரம் கோயிலின் மூன்றாம் பிரகாரம் மிக பிரபலம் என்பதால் அதை பார்க்க சென்றிருந்தேன். சிறப்பான கட்டிடகலை வேலைபாடுகள். 1212 தூண்களால் அமைக்கப் பெற்ற மூன்றாம் பிரகாரம் கொண்ட பெரிய கோயில். கோயிலுக்கு உள்ளேயே பழமையான 22 கிணருகள் இருக்கின்றன. அவற்றில் குளித்தால் கர்ம வினைகள் தீரும் என்று சொல்லி கூட்டம் கூட்டமாக மக்கள் வரிசையில் நின்று குளிக்கின்றனர். ஒரே பகுதியில் இருக்கும் 22 கிணருகளுக்கு ஒரே ஊத்து தான் இருக்கும். பிறகு ஏன் 22 முறை குளிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது எனக்கு. அங்கு வரும் எவரும் அதை யோசிப்பது போல் தெரியவில்லை. அதிக எண்ணிக்கையில் வட இந்திய மக்கள் அந்த கோவிலுக்கு வருகிறார்கள்

கோவிலுக்கு அருகில் இருக்கும் கடற்கரை மிக அழகாக இருந்தது. சென்னை போல் சாக்கடை எதுவும் கடலில் கலக்காததால் தீவின் அனைத்து கடற்கரைகளும் தூய்மையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். பக்தர்கள் பலர் கடலில் மூழ்கி நீராடினார்கள். அங்குள்ள மண்டபங்களில் திதி அளிக்கும் சடங்குகள் நடைபெறுகிறது. பசுக்களுக்கு கீரையை தானம் அளித்தால் நல்லது என்று நம்பப்பட்டு தானம் வழங்கப்படுகிறது. 

இராமேஸ்வரம் கடற்கரை

இராமேஸ்வரம் கடற்கரை

பசுவிற்கு கீரை தானம் கொடுக்கும் பக்தர்

காலையே விடுதியை காலி செய்துவிட்டு அங்குள்ள அலுவலகத்தில் எனது பையை வைத்துவிட்டேன். ஞாயிற்றுகிழமை என்பதால், விடுதியில் இருந்து காலையில் பார்க்கும்போதே கோயில் பார்க்கிங் முழுவதுமாக பேருந்துகளால் நிறைந்திருந்தது. மதியமாக சென்று எனது பையை எடுத்துக்கொண்டு பேருந்து நிலையம் வந்தேன்.

இரயிலில் டிக்கெட் இல்லாததால் அரசின் எஸ்..டி.சி (SETC) பேருந்தில் டிக்கெட் புக் செய்திருந்தேன். அது ஒரு தகர டப்பா வண்டியாக வந்து சிக்கியது! ஜன்னல்கள் டகடக என பயணம் முழுக்க ஒரே சத்தமாக இருந்தது. ஜன்னலுக்கு கீழ் உள்ள பேருந்தின் பகுதி ஆடிக்கொண்டே இருந்தது. இவற்றையெல்லாம் புகைப்படும் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டேன், புகார் அளிக்கப்பதற்காக. ஒரு டிக்கெட்-க்கு 630 ரூபாய் விலை கொடுத்து இவ்வளவு மக்கள் பயணம் செய்யும் ஒரு பேருந்தை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் வேலை பார்க்கிறது போக்குவரத்து துறை. நாமாக அவர்கள் தலையில் குட்டு வைத்து சொல்லவில்லை என்றால், இந்த அரசு இயந்திரம் எந்த வேலையையும் செய்யாது. அவ்வளவு மோசமான ஒரு சிஸ்டம் தான் இங்கு இயங்கிவருகிறது.


அந்த சத்தமான பேருந்தில் பயணத்தை முடித்துவிட்டு காலையில் கோயம்பேடு வந்தடைந்தேன்.

இராமேஸ்வரம் கடற்கரையில்... 

பயணம் கொடுக்கும் அனுபவம் என்பது நமக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறதுஅடுத்த பயணத்திற்காக காத்திருக்க செய்கிறதுஎனவே பயணப் பழகுவோம்.

அன்புடன்,
ஜெகன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக