வியாழன், 13 ஆகஸ்ட், 2020

இந்தியாவை அழிக்கும் மோடி அரசு?

பல தேசிய இனங்களை கொண்ட இந்திய ஒன்றியத்தின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியே தன் தேசத்தை அழிக்க நினைப்பாரா என்ற சந்தேகம் எழலாம். ஆனால் அவரது அரசு தலைமையில் உள்ள அமைச்சகத்தின் செயல்பாடுகள் அவ்வாறே இருக்கிறது!

இன்று உலக மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கும் கோவிட்-19 கொரோனா நோய்த்தொற்று பரவ முக்கிய காரணமாக சொல்லப்படுவது இயற்கை வளங்களான காடுகள் அழிக்கப்படுவது தான். கொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடியது. காடுகள் அழிக்கப்படுவதால், அங்கு வாழும் விலங்குகள் மனிதன் இருக்கும் இடத்தில் அவனுடன் சேர்ந்து வாழ்வதால், மனிதனுக்கு கொவிட்-19 போன்ற புதிய நோய்கள் பரவுகின்றன.

காலநிலை மாற்றம்(climate Change) மற்றும் கொரோனா பெருந்தொற்று போன்ற சூழலில் நம் காடுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. ஆனால், மோடி அரசு என்ன செய்திருக்கிறது என்று பார்ப்போம்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (Draft Environment Impact Assessment 2020Draft EIA2020) தற்போது இந்திய ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு’ என்றால் என்ன?

இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் ஒரு மிக மோசமான தொழில்துறை பேரழிவாக கருதப்பதும் ‘போபால் பேரழிவு’ நடைபெற்ற பின் 1986-ல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இந்தியாவில் உருவாக்கபட்டது. அதன் ஒரு அங்கமாக 1994-ல் கொண்டுவரப்பட்டது தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு. இதன் நோக்கம் சுரங்கம், உள்கட்டமைப்பு, மின் உற்பத்தி, மனை விற்பனை மற்றும் இதர தொழில் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய்ந்து அவற்றை தடுப்பதும் குறைப்பதும் சீராக்குவதும் ஆகும்.

போபால் பேரழிவு 1984

போபால் பேரழிவில் இறந்த குழந்தை


கடைசியாக 2006-ல் திருத்தபட்ட இந்த சட்டத்தில், தற்போது பல மாற்றங்களை கொண்டுவருவதாக மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஆம், காலத்திற்கேற்ப சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவது அவசியம் தான். அது சுற்றுச்சூழலை மேன்மையடைய செய்யுமா அல்லது மோசமடைய செய்யுமா என்பது தான் மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவில் கொண்டுவரப்பட உள்ள இந்த திருத்தங்கள், சுற்றுச்சூழலை மேலும் மோசமடைய செய்யும் என்பதே  சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

அதற்கான முக்கிய காரணங்கள் வருமாறு: 

1)      ‘POST FACTO’ ENVIRONMENTAL CLEARANCE – தொழில்துறை நிறுவனங்களை தொடங்கிய பின் அனுமதியை வாங்கிக்கொள்ளலாம் :

கேட்கவே நகைப்பாக இல்லையா? ஆம், இதை தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்திருக்கிறது. எந்த ஒரு தொழில் நிறுவனமும் ஆரம்பிக்கும் முன்பே சுற்றுச்சூழல் துறைகளிடம் விண்ணப்பித்து, அதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் இல்லை என்ற அனுமதியை பெற்ற பிறகே தொடங்க முடியும். ஆனால் அந்த நடைமுறையை தற்போது வர இருக்கும் இந்த மதிப்பீட்டு வரைவு 2020(DRAFT EIA 2020) முற்றிலும் மாற்றி இருக்கிறது.

ஒரு தொழில் நிறுவனம் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறாமலேயே தொழில் தொடங்கி விடலாம். பிறகு அதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் வரும் என்று தெரிந்தால் அதற்காக ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம் மூடப்படாது. அதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்தி தப்பித்து கொள்ளலாம்.

 

புதிய மதிப்பீட்டு வரைவு 2020-ன் தாக்கத்தை சித்தரிக்கும் படம்

2)       சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் இருந்து விலக்கு:

இந்த மதிப்பீடு வரைவு 2020 சட்டமாக வந்தால், உள்நாட்டு நீர் வழித்தடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், 1,50,000 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் கடுமானங்கள், மற்றும் அரசால் ‘பிற யுக்தி’ (Categorized as ‘Other Strategic’) திட்டங்கள் என்று வகைபடுத்தப்பட்ட திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படாது.

இந்த ‘பிற யுக்தி’ திட்டங்கள் பற்றிய எந்த தகவலும் மக்களுக்கு சொல்லப்படாது. மேலே குறிப்பிட்ட எந்த திட்டங்களுக்கும் மக்களிடம் கருத்து கேட்கப்படாது!

மலைகளையும், காடுகளையும், நீர்நிலைகளையும் அழிக்கும் சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வரும் சூழலில், இந்த புதிய மதிப்பீட்டு வரைவு 2020 நடைமுறைக்கு வந்தால், இவை எவற்றையும் அது பொருட்படுத்தாது.

 

3)      ஆபத்தான திட்டங்களுக்கு அனுமதி:

இதுவரை எல்லா நிறுவன திட்டங்களும் A, B என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டன. தற்போது அதில் B வகை – B1, B2 என்று மேலும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. B2 வகைபடுத்தப்பட்ட திட்டங்கள் பலவற்றுக்கு(சுமார் 50) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு ஆய்வு திட்டங்கள் B2 வகையில் வருகிறது. இதனால் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷெல் வாயு உள்ளிட்ட அனைத்து நாசகார திட்டங்களும் நடைமுறைக்கு வரும். இதனால் நிலத்தடி நீர், மண், மற்றும் காற்று என மொத்தமாக பாதிப்படையும்.

2020 வரைவுக்கு எதிராக
 இந்திய அளவில் டிரெண்டான டிவிட்டர் பிரச்சாரம் ஹேஷ்டேக்
 

4)      பொதுமக்கள் புகார் தெரிவிக்க முடியாது:

இந்த மதிப்பீட்டு வரைவு 2020 நடைமுறைக்கு வந்தால் இந்த தொழில் நிறுவனங்கள் விதிகளை மீறி செயல்பட்டால் அது குறித்து விதியை மீறிய அந்த நிறுவனமோ அல்லது அரசு தரப்போ தான் புகார் அளிக்க முடியும். திருடன் கையிலேயே சாவியை கொடுப்பது போல் தோன்றுகிறதா? ஆம், அதை தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் செய்ய விரும்புகிறது.

தற்போது தொழில் நிறுவனங்கள் அரையாண்டு இணக்க அறிக்கையை(Compliance Report) தாக்கல் செய்து வருகின்றன, அதாவது வருடம் இருமுறை. புதிய மதிப்பீட்டு வரைவு 2020 படி வருடம் ஒருமுறை மட்டுமே தாக்கல் செய்தால் போதுமானது. இது நிறுவனங்களின் பொறுப்பை மேலும் குறைத்துவிடுகிறது.

நிறுவனங்கள் தொடங்குவதற்கு முன் அதன் திட்டங்களை வெளியிட்டு மக்களிடம் கருத்து கேட்கப்படும். முன்னதாக அதற்கு 30 நாட்கள் கால அவகாசம் இருந்தது. தற்போது அதை 20 நாட்களாக குறைக்கப் போகிறார்கள்.

சென்னையில் கோலம் போட்டு மக்கள் எதிர்ப்பு

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (EIA2020) ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மாநில மொழிகளில் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் இவ்வளவு மோசமான வரைவு கொள்கையை மக்களிடமிருந்து மறைக்க முயற்சி செய்திருக்கிறது மோடி அரசு. இதற்காக கண்டனம் தெரிவித்து கர்நாடகா மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் இந்த புதிய வரைவு அறிக்கையை நிறுத்தி வைத்துள்ளன. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்துள்ளது. 

உலகில் உள்ள பிற நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை மேலும் வலிமையாக்கி வரும் இந்த சூழலில், மோடியின் அரசோ அதை மேலும் நீர்த்துப்போக செய்வதை தான் நாம் பார்க்க முடிகிறது.

சுமார் 83 பக்கங்கள் கொண்ட இந்த புதிய அறிக்கையில் இருந்து இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் முக்கியமான சில மட்டுமே. இன்னும் நிறைய இருக்கின்றன. 

இப்படி பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும், மக்களின் வாயை அடைத்து அவர்கள் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாகவும் உள்ள இந்த சட்ட திருத்தத்தின் விளைவாக நம் சுற்றுச்சூழல் பாதிப்படைவதால், இது இந்தியர்களையும் இந்தியாவையும் சேர்ந்தே தான் பாதிக்கும். 


அன்புடன்,

ஜெகன்


1 கருத்து:

  1. T-Mobile App - Titanium Money Clip - T-Mobile App
    This babyliss nano titanium is a fully functional smartphone application. The T-Mobile application ti89 titanium calculators allows titanium camping cookware you to place bets and track your status with a mobile device. titanium apple watch band Once you titanium rings for men download the

    பதிலளிநீக்கு