புதன், 28 டிசம்பர், 2016

பதிவு தகவல்

இதற்கு முந்தைய பதிவுகள் அனைத்தும் ஏற்கனவே வேர்ட்பிரெஸ்.காம் இணையத்தில் வெளியீடு செய்யப்பட்டுவிட்டது. முகநூலில் பகிர்வதற்காக மீண்டும் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் உண்மையாக பதிவேற்றப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி வரும் வலைப்பதிவுகள் பிளாகர்.காம் வாயிலாக பகிரப்படும். நன்றி.

வேர்களை சாய்த்த வர்தா!


அவ்வபோது சென்னை, கடலூர் என தமிழகத்தில் கரையைக் கடந்து செல்கின்றன சில புயல்கள். அவற்றிக்கு பெயர்களும் சூட்டப்படுகிறது கடந்த சில வருடங்களாக. அவற்றின் பெயர்கள் – லைலா, நிலம், தானே, வர்தா. நாம் சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ளவே புயல்களுக்கு பெயர்களிடப்படுவதாக நான் கருதுகிறேன்.
இந்த முறை வந்திருக்கும் புயலோ பெயரைக் குறிப்பிடாமலே நினைவில் நிற்கும் அளவிற்கு வேலையைக் காண்பித்துப் போயிருக்கிறது. இதற்கு முன்னர் வந்த தானே புயலின் தாக்கம் பெரிது என்றால், வர்தாவின் தாக்கம் அதுக்கும் மேல! புயலின் மையக் கண் சென்னைக்கு மிக அருகில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓலமிட்டுக் கரையைக் கடந்ததால்.
வானிலை ஆய்வாளர்கள், மழையை கணிப்பவர்கள், நிபுணர்கள் என பலரது கருந்து 1994-ஆம் ஆண்டிற்கு பின் வரும் மிகப் பெரிய புயல் இது என்றும், வரலாறு காணாத அளவுக்கு வலுமை வாய்ந்ததாக வர்தா இருக்கின்றது என்றும் கணித்தனர். சென்ற ஆண்டு டிசம்பர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் இந்த முறை மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தனர். காரணம், கடந்த ஆண்டு பெய்த வரலாற்று மழை ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு சிறு அச்சத்தை விதைத்து விட்டுச் சென்றது. அதன் விளைவாக நம் ஊடகங்கள், அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொது மக்கள் அனைவரும்,
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”
என்ற குறளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கினர்.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே புயலை கணிக்க உதவிய அறிவியல் தொழில்நுட்பத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.இத்தகையதொரு புயலை மக்கள் யாரும் உணராமல் இருந்திருந்தால் பாதிப்புகள் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும்.
என்னதான் முன்கூட்டியே நாம் புயலை கணித்து இருந்தாலும் கூட புயலின் வேகத்தை எவராலும் நிறுத்த முடியாது. அதுவே இயற்கைச் சீற்றம். நாம் சிறு வயதில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாட பயன்படுத்திய மரமாக இருந்தாலும், நமக்கு சுவையான மாங்காய்களை வாரி வழங்கிய மாமரமானாலும், வெயிலின் பொழுது அதன் நிழலில் நீண்ட நேரம் களைப்பாற்றியிருந்தாலும், நமது வீட்டிற்கு தினமும் வந்து உணவைச் சுவைத்துச் செல்லும் காக்கை, குறுவிகளின் வீடாக இருந்தாலும், புயலுக்கு இறையாக வேண்டியது தான்.
கடந்து சென்ற வர்தாவின் ஒரே நன்மை, மிகப் பெரிய நன்மை, இந்த வருடம் பெய்யாத பருவ மழை விட்டுச் சென்ற ஏரிகள் மற்றும் குளங்களின் வெற்றிடத்தை ஓரளவிற்காவது நிரப்பும் அதன் கன மழையே.
வர்தாவின் தீமைகள், வலுவான காற்றைக் கொண்டு ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்தது, மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடர்பாடு செய்தது ஆகியவை. வேரோடு சாய்ப்பதற்கு மரங்களை விட்டு வைத்திருக்கின்றோமே என்று புன்னகைக் கொள்வோம். தினசரி அலச்சலுக்கு நடுவே ஒரு நாள் வாழ்வின் ஒரு அனுபவமாக கிடைத்ததே என்று பெருமிதம் கொள்வோம்.
இப்போது விழுந்த மரங்களை அள்ளிச் சென்று சாலையில் போட்டதோடு நிறுத்தாமல் பல மரக்கன்றுகளையும் நடுவோம்.
அன்புடன்
ஜெகன்
(14-12-2016)

புகையெனும் நரகாசுரன்!


இந்த மாதம் தமிழகத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் சற்றே யோசிக்கச் செய்கிறது. ஒன்று செய்திகளில் பார்த்த விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசு ஆலயத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் ஐந்து பேர் உயிர் இழந்த சம்பவம். மற்றொன்று சென்னையில் இந்தியாவின் முதல் மின்சார பேருந்தை அசோக் லேலாண்ட் நிறுவனம் வெளியீடு செய்துள்ளது!
இவ்விரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு என்றால் அது சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விஷயத்தில் தான்!
தீவாவளி சீசனில் இது போன்று பட்டாசு ஆலய விபத்துக்கள் ஏற்படுவது சாதாரண ஒரு விஷயமாகவே பார்க்கப் படுகிறது. ஒவ்வொரு வருடமும் இது போன்ற பட்டாசு ஆலயத் தீ விபத்தால் உயிர் இழந்தோரின் குடும்பங்கள் தீபாவளி பண்டிகையை தியாகம் செய்து மற்றவர் அனைவரும் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சிவகாசியில் ஒரு மருத்துவ சோதனை கூடம் அருகே பட்டாசுகளை வண்டியில் ஏற்றும் பொழுது நிகழ்ந்த தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள்! அவர்கள் உயிர் இழந்தது பட்டாசு வெடித்ததில் காயப்பட்டு இல்லையாம். வெடித்த வெடிப் பொருட்களின் புகையை சுவாசித்து ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக. இது மிகவும் மோசமானது. அதே பட்டாசுகளையே நாம் அடுத்த சில நாட்களில் வெடித்து கொண்டாடவிருக்கிறோம்.
நான் எனது சிறு வயதில் தீபாவளி கொண்டாடிய பொழுது என் உறவினர் அண்ணன் என் கையை பிடித்து குருவி வெடியை வெடித்த ஞாபகம் இருக்கிறது. அது காலப் போக்கில் தீபாவளி தினத்தன்று மாலை மொட்டைமாடிக்குச் சென்று வானவெடிகளை வேடிக்கை பார்ப்பதும், அதை கேமெராவில் படம் பிடிப்பதுமாக மாறியது. தற்பொழுது தீபாவளியன்று புதுப்பட வெளியிடலை திரையரங்குகளில் பார்த்து ரசிப்பதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதுமாக இருந்து வருகிறது.
ஆனால் அன்றும் இன்றும் தீபாவளி பண்டிகையன்று காலையில் எழுப்புவது என்னவோ பட்டாசு வெடிகளின் சத்தங்கள் தான். ஒன்று காற்றில் மாசு. மற்றொன்று ஒலியில் மாசு. இவை தான் தீபாவளியன்று நாம் இயற்கைக்கும், சுற்றுசூழலுக்கும் ஏற்படுத்தும் தீங்குகள்.
தீபாவளி பண்டிகைக்கு பல கதைகள் உள்ளது. ஆனால் பட்டாசு வெடிக்கும் கலாச்சாரம் என்பது நமது வழக்கத்திலே புதிதாக ஒட்டிக்கொண்ட ஒன்று தான். சிலர் பட்டாசு வெடிக்கும் கலாச்சாரம் அரேபிய கலாச்சாரம் என்றும் சிலர் பட்டாசு வெடிகள் சீனர்கள் கண்டுபிடித்தது என்றும் கூறுகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் தீபாவளி என்பது தீப+ஒளி என்பதன் இணைப்பு. தீபங்களை ஏற்றி வீட்டை அலங்கரித்தும், இனிப்புகள் வழக்கியும், நண்பர்கள் உறவினர்களை சந்தித்தும், புத்தாடைகள் அணிந்தும் கொண்டாடி மகிழ்வதால் எந்த தொந்தரவும் ஏற்படாது.
இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் மாசு காரணமாக புவி வெப்பம் அடைந்து பல்வேறு சிக்கல்களை பூமி சந்தித்து வருகிறது. இதனால் பருவ நிலைகளில் பெரும் மாற்றம், அண்டார்டிகாவில் பனி மலைகள் உருகி பூமியின் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து பல தீவுகளும் பல சிறிய நாடுகளும் அழியும் தருவாயில் உள்ளன. இதற்கு எல்லாம் நாம் வெடிக்கும் தீபாவளி பட்டாசு தான் காரணமா என்றால் முழுமைவதுமாக கிடையாது, ஆனால பங்குள்ளது.
உலகின் பருவநிலை மற்றங்களை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒருங்கினைந்து போராடத் துவங்கியுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் புவியின் வெப்ப நிலையை இரண்டு டிகிரி செல்சியஸ் குள்ளாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதே இன்றைய உலக நாடுகளின் குறிக்கோள்! இதற்கான முயற்சியாக உலக நாடுகள் கையில் எடுத்திருக்கும் வஸ்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடைய தொழில்நுட்பத்தையே பயன்படுத்துவது என்பது.(Sustainable environment through renewable energy)
நிலையான ஒரு சுற்றுசூழலை உருவாக்க இயற்கையின் போக்கை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் இருப்பது அவசியம். அந்த விதத்தில் மின்சாரப் பேருந்திற்கு மிக முக்கிய பங்குள்ளது. இதற்கு எரிபொருட்களும் தேவையில்லை, இந்த பேருந்துகள் புகையையும் வெளியிடுவதில்லை. இதன் நோக்கம் டீசல் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்துவதாக சொல்லப்படுகிறது. அப்பொழுது காற்றில் மாசு என்பது அதிக அளவில் குறையும்.
மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களும் மகிழுந்துகளும் வர துவங்கியுள்ளது வரவேற்புடையது.
இன்று சீனாவில் சுத்தமான காற்றை விலை கொடுத்து வாங்கும் கொடூரமான நிலை உருவாகியுள்ளது. இதற்கு நாம் நடவடிக்கை எடுக்காவிடில் வேறு எதை பற்றியும் சிந்தித்து எந்த பயனும் கிடையாது. நம் ஊரில் இன்று தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நாம் நாளை காற்றுக்கும் விலை கொடுக்காத நிலை இருந்தல் வேண்டும்.
அதற்கு ஒரே தீர்வு இயற்கையோடு ஒன்றி வாழப் பழக வேண்டும். அதன் ஒரு முயற்சியாகவே இன்றைய மின்சாரப் பேருந்தை நான் பார்க்கிறேன்.
அன்புடன்
ஜெகன்
(22-10-2016)

பஞ்சமா பாசாங்கா!?


நீரிஇன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு – குறள்.
சமீபத்தில் நிகழ்ந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை துஷ்பிரயோகம் செய்யும் விதமாக கர்நாடகா மாநிலத்தின் தலைநகரம் பெங்களூருவில் ஏற்பட்ட கலவரத்தால் இருவர் உயிர் இழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கில் தமிழ்நாடு பதிவு எண் பொருந்திய வாகனங்கள் சேதம். மேலும் இவை தவிர கர்நாடகா மாநிலத்திற்கு பணிக்காக சென்றிருந்த அப்பாவி தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தியும் அவர்களை இழிவு படுத்தும் விதமான செயல்களிலும் சில இனவெறியர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இதன் விளைவாக பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். அவர்களின் தினசரி வாழ்வு பாதிக்கப்பட்டதோடு அவர்கள் செய்யும் பணிகள் முடங்கின. இதனால் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு நேர்ந்தது.
இரு மாநிலங்களுக்கு இடையேயான இந்த பிரச்சனை தேசிய ஒருமைப்பாட்டை சீர்குளைக்கும் விதமாக காட்சி அளித்தது. விளைவு, முழுக்க முழுக்க விவசாயிகளின் பிரச்சனை, நீரியல் வல்லுநர்களால் தீர்த்து வைக்கபட்டிருக்க வேண்டிய ஒரு பிரச்சனை, இன்று பூதாகரமாக உருவெடுத்து உச்சநீதிமன்றம் வரை சென்று உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காமல் ஒரு நாட்டிற்குள் நிகழும் இந்த நீர் பிரச்சனை இரு நாடுகளிடையே நிகழும் ஒரு பிரச்சனை போலவே தோன்றுகிறது. இதற்கு மத்திய அரசு தலைக்குனிய வேண்டும். காரணம் புதிதாக இதுபோன்றதொரு கலவரம் நிகழ்ந்திருந்தால் இப்படி சொல்லத் தேவையில்லை. ஆனால் இருபத்தைந்து வருடத்திற்கு முன்னதாக நடந்தது போலவே மீண்டும் ஒரு கலவரம். இதற்கிடையில் பல முறை தகராறுகள்.
ஒரே நாட்டிற்குள் உருவெடுத்து கடலில் கலப்பதற்குள் சுமார் எண்ணூறு கிலோமீட்டர் நீளம் கொண்ட நதி காவிரி. இதில் தான் இவ்வளவு சிக்கல்கள். நதி ஏதுமறியாமல் உருவாகும் இடத்திலிருந்து கடலை நோக்கி பயணம் செய்யும். அது பயணிக்கும் பாதையும் இயற்கையாக தாழ்வான பாதையாக கடலை சேர்ந்தடையும் பாதையாகவே இருக்கிறது. இதற்கிடையே தான் பிரச்சனை.
காவிரி ஆறு காலம் காலமாக பெறுக்கெடுத்து தமிழகத்தின் வழியே கடலில் கலக்கிறது. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கரிகாலச்சோழ மன்னனால் காவிரி ஆற்றின் மீது நீர் பாசனத்துக்காக கல்லணை கட்டப்பட்டு விட்டது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் காவிரிப் புகழ் பாடப்பட்டிருப்பது சான்று.
கடந்த ஐம்பது முதல் நூறு ஆண்டுகளில் இந்தியாவில் நிலவும் அரசியல் பிரிவினைகளால் ஏற்பட்டுள்ள போக்கு இத்தனைக் கால பாரம்பரிய வேளாண்மையை பாதிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. காவிரி பிரச்சனையை அரசியலாக்குவதன் ஆணிவேர் இங்குதான் உள்ளது. முக்கியமாக கர்நாடகா மக்களின் மனதில் விதைக்கப்படும் நீர் பற்றாக்குறை நிலைமை தங்களுக்கு வந்துவிடுமோ என்னும் அச்சமே அது. அதை பயன்படுத்தி தான் 1991-ஆம் வருடம் நடந்த கலவரம் இன்று 2016-ல் வெள்ளி விழாவாக மாறிய அவலத்தை நாம் சந்திக்கிறோம்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் கர்நாடகாவில் குடிப்பதற்கே தண்ணீர் இருக்காது என்கிறது கர்நாடகா. அதே நேரத்தில் கர்நாடகாவின் பாசனத்திற்கு தண்ணீர் தேவை என்றும் கூறுவதால் அவர்கள் நாடகம் வெட்ட வெளிச்சமாக தெறிகிறது. அவர்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்று முதலில் கூறியதன் காரணம் – இரு மாநில காவிரி நதி நீர் பங்கீட்டு உடன்படிக்கையின்படி நதி நீர் தமிழ் நாட்டில் தான் கடலில் கலப்பதால் தமிழகத்தில் பாசனத்திற்கு நிச்சயம் தண்ணீர் திறந்து விட வேண்டும்(சர்வதேச நதி நீர் பங்கீட்டு அடிப்படையும் இதுவே), அதே சமயம் கர்நாடகாவின் குடி தண்ணீருக்கே முதலுரிமை வழங்க வேண்டும் என்பது. மிக முக்கியமான இந்த விஷயத்தில் தான் காவிரி பிரச்சனை சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகிறது. ஆக காவிரி நதி நீர் பங்கீடு என்பது முழுக்க முழுக்க ஒரு விவசாய நீர் பங்கீட்டு விவகாரம். இதில் தான் நீரியல் வல்லுநர்கள் பங்கு தேவைப்படுகிறது.
இயற்கையின் விதிகள்படி நதிநீர் கடலில் கலந்து கரையோர நிலப்பகுதியை பாதுகாத்து வாரும். அப்படி நிகழவில்லையெனில் கடலின் உப்புத் தன்மை நிலத்தடி நீரை வற்றச் செய்து பூமி பாலைவனமாக மாறிவிடும். இந்த ஒரு நிகழ்வையும் கர்நாடக மக்கள் மனதில் அவர்களுக்கு அநியாயம் இழைக்கப்படுவதை போல ஒரு விஷமத்தை விதைக்கிறார்கள். கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் கலக்கும் நதிகளின் நீர் அளவை பார்த்தால் சுலபமாகவே புரியும்.
அன்புடன்
ஜெகன்
(07-10-2016)


“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று எழுதிய பாரதி தான்
“சுந்தர தெலுங்கினில் பாட்டு இசைத்து” என்றும்,
“சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு” என்றும் உரைத்தான்.
மொழிகள் வெறும் ஓசையா? அல்ல தொடர்புக்கான ஒரு கருவியா? அல்ல  மனிதனின் ஒரு படைப்பா?
பேசும் பொழுது அது ஒரு ஓசையாகிறது, எழுதும் பொழுது தொடர்புக்கான கருவியாகிவிடுகிறது, அதை மனிதன் உருவாக்கியதால் ஒரு படைப்பாகிவிடுகிறது.
இவை அனைத்திற்கும் மேலாக வரலாற்றை சுமந்து வரும் ஒரு ஒப்பற்ற பொருளாகிவிடுகிறது மொழி.
கற்காலங்களில் இருந்தே மனிதன் எழுத துவங்கிவிட்டான். விலங்குகளை மேய்த்துக்கொண்டிருந்தவன் அவை அனைத்தும் எண்ணிக்கையில் சரியாக வந்து சேர்ந்துவிட்டனவா என்பதை கணக்கிட கோடுகள் கிழிக்க துவங்கினான். எண்கள் உருவாக துவங்கியது. ஒவ்வொரு மொழியிலும் எண்கள் வெவ்வேறாக இருக்கும். உதாரணம் நாம் பரவலாக பயன்படுத்தும் ஆங்கில எண்களும், ‘ரோமன் லெட்டர்ஸ்’ எண்களும் வெவ்வேறாக இருக்கும். காரணம் அது ரோமானியர்கள் பயன்படுத்திய எழுத்துக்கள். இப்படி ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு விதமாக உருவெடுத்து இருக்கும். தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் தமிழ் உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழி என்று தொல்பொருள் ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் இருக்கும் பல கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வரலாறு எல்லா மொழிகளுக்கும் உண்டு. வயது முன்னும் பின்னுமாக இருக்கும். இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளே உள்ளன. ஆங்கிலம் மற்றும் இந்தி. பல்வேறு இலக்கிய சிறப்பும் வரலாற்று சிறப்பும் இருந்தும் தமிழ் மொழி அதிகாரப்பூர்வ மொழியாகாதது ஒரு துரதிர்ஷ்டமே! அந்த தகுதியை தமிழ் ஒரு வாக்கு வித்தியாசத்தில் இழந்தது.
இந்தியாவில் மாநிலங்கள் மொழி வாரியாக பிரிந்தாலும் கூட அவை பிரிக்கபட்ட போது ஒன்றோடு ஒன்று பிணைந்தே இருக்கும். அதற்கு சில உதாரணங்களும் உண்டு. திருப்பதி கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு கோவிலின் சுவர்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கபட்டு இருப்பதை காணலாம். அதே போல் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலின் சுவர்களில் பாலி மொழியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருப்பதை காணலாம். ஆனால் திருப்பதி மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரியாது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு பாலி தெரியாது.
இவை எல்லாம் சுதந்திரம் அடைந்த போது அனைத்து மாநில மக்களும் ஒற்றுமையாக இருக்க ஆங்கிலேயர்கள் செய்துவிட்டு சென்றது. இல்லையேல் ஒன்றாக போராடி பெற்ற சுதந்திரம் மட்டுமே இருந்திருக்கும், இந்தியா என்ற நாடு இருந்திருக்காது. இந்தியா வேண்டாம் என்று பிரிந்து சென்ற நாடுகளின் நிலை கொடூரமாகவே உள்ளது. காரணம் அவர்கள் நோக்கம் இந்தியாவை பிரிப்பதாகவே உள்ளது. அதில் கவனம் செலுத்தி முன்னேற்றம் ஏதுமின்றி இருந்து வருகிறார்கள்.
என்னிடம் பேசிய ஒரு ஐரோப்பியர், “இந்தியா தன் நாட்டுக்குள்ளேயே நிறைய நாடுகளை வைத்துள்ளதே!” என்று கேட்டார். “ஐரோப்பிய ஒன்றியம் உங்களுக்கு இருக்கிறதா?” என்று கேட்டேன். “அதேபோல் தான் இந்தியாவில் மத்திய அரசு எங்களுக்கு” என்றேன். ஐரோப்பாவில் ஒன்றியம் இருந்தாலும் எல்லா நாடுகளுக்கும் ஒரே நாணயம் கிடையாது. இந்தியா முழுவதிற்கும் ஒரே நாணயம் தான். அதை அடையாளமும் படுத்தியது இந்தியா. இவற்றுக்கெல்லாம் மேலாக ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கொள்கையின் அடிப்படையில் இருந்து வருகிறது இந்தியா.
மொழியை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு இனம் பிரித்து காண்பிக்கும் மனிதர்களை பார்க்க முடிகிறது. மனித இனத்தை பற்றிய எந்த கவலையும் இல்லாதவர்களாகவே அவர்களை நான் பார்க்கிறேன். தமிழிலும் அப்படி பலரை பார்க்கும் பொழுது தமிழில் தான் எழுத வேண்டுமா என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது! நாளை நமக்கும் ஒரு முத்திரையை குத்த இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதனால்.
இன்று தென்னிந்தியா முழுவதும் அரிசி தான் பிரதாண உணவு. இது எந்த மொழிக்கு சொந்தம்? அல்ல ஏதாவது இனத்திற்கு சொந்தமா? அவர்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா? மொழி பற்றி பேசுபவர்களிடம் இதற்கெல்லாம் எந்த பதிலும் கிடையாது. அவர்கள் மொழியை பயன்படுத்தி மக்களை கட்டுபடுத்த முயல்கிறார்கள்.
மொழி என்ன மதம் போன்ற ஒரு சித்தாந்தமா அதை பயன்படுத்தி ஒருவரை கட்டுகோப்புக்குள் கொண்டுவர? மதமே எந்த பயனும் இன்றி இருந்துவருகிற நிலையில் மொழியால் யாரையும் ஒழுங்கு படுத்திவிட முடியாது.
ஒரு மொழியின் சிறப்புகள் என்ன என்பதை ஒருவர் புரிந்து கொண்டால் அவரும் அந்த மொழியை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதற்கு மாறாக மொழியால் பிரித்து பேசுவதன் மூலம் ஒன்றும் நிகழாது.
கேட்கும் பேசும் திறன் கொண்ட ஒருவனுக்கு தன் தாய் மொழியாலே சிந்திக்க முடியும். அது இயல்பு. மற்ற மொழிகள் யாவும் ஒரு ஓசை மட்டுமே. அந்த ஓசையை தன் தாய் மொழியில் புரிந்து கொண்டு பிறகு அதற்கேற்ப வேற்று மொழியின் ஓசையை உச்சரித்து பதில் கூறுவார்கள். அதனால் வேற்று மொழியில் பேசுபவர்களை வெறுப்பவர்கள் எந்த மொழி பேசி என்ன பயன்? மனித உணர்வுகளை மதிக்காமல் அவர்கள் வெறுக்க முடிவு செய்து விட்டார்கள். வெறுப்பை சம்பாதிக்க போகிறார்கள். அதனால் வெறுப்பை மொழியில் காட்டி மொழியின் புனிதத்தை கெடுக்க வேண்டாம். வெறுப்பையும் வன்முறையையும் எந்த மொழியாவது கற்று தருகிறதா? ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட விரோதத்தின் மேல் மொழி என்ற ஒரு போற்வையை போர்த்தி யாரையும் இழிவு படுத்த எந்த மொழியும் சொல்லாது. மொழியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு எது நல்லது எது கெட்டது என்பதை பார்த்தால் மொழிகள் ஒரு பிரச்சனையாகவே தோன்றாது. இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இன்னொரு பிரச்சனையா மொழியின் பெயரில்!
தமிழ் நாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி விளையாடிக் கொண்டிருந்தபோது அதில் விளையாடிய வீரர்களில் பலர் வேற்று மொழியை சார்ந்தவர்கள். அவர்கள் விளையாடியது நமக்காக. தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்கு மொழி ஒரு பிரச்சனை ஆகாது. இரண்டு அணிகள் விளையாடும் பொழுது எந்த அணி சிறப்பாக விளையாடி போட்டியை வெல்கிறார்கள் என்பதே முக்கியம். ஒரு அணியில் பல நாட்டு வீரர்கள் ஒன்றாக விளையாடும் பொழுது வேற்றுமையில் ஒற்றுமை ஓங்குகிறது.
திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ். தமிழை பிரிக்க பல ஜாதிகள் மொழிகளுக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறது. அதை நாம் பல இடங்களில் பார்க்கலாம். உதாரணமாக நம் ஊரில் இருக்கும் பல கல்லூரிகளுக்கு ஜாதியின் பெயரை சூட்டி மாணவர்களுக்கு இடையே வன்முறையை தூண்டுபவர்களை என்னவென்று சொல்வது!
எத்தனையோ மொழிகள் இருக்க மனித வாழ்வை மேம்படுத்த என்ன இருக்கிறது என்பதையே ஒரு மொழியில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக மொழி வாரியாக சண்டை போடுவதால் ஒரு பயனும் இல்லை. சமூகத்தில் நடக்கும் அவலங்களை மொழியால் சரி செய்ய முடியுமா என்று முயற்சி செய்தால் நல்லது.
இன்று காதல் என்றால் என்ன என்றே தெரியாமல் இளைஞர்கள் இருந்து வருகிறார்கள். தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அகநானூறு, திருக்குறள் போன்ற நூல்களில் உள்ள அழகிய தெளிவுரைகளை புரிந்துணர்ந்தால் இத்தகைய பிரச்சனைகள் குறையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அன்புடன்
ஜெகன்
(06-07-2016)

செல்-வாக்கு


கட்ட பஞ்சாயத்துக்கள் ஒழிந்து ஜனநாயக முறைப்படி மக்களின் ஆட்சி நடைபெறவே தேர்தல்கள் நடைபெறுகின்றன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நம் இந்தியா. அதில் பல கட்சிகள். பல வேட்பாளர்கள். பல வாக்குகள். வாக்குச்சாவடிக்குள் நாம் அனைவரும் சென்று வாக்களிப்பது  குறைந்துக்கொண்டே போக போக வாக்கு பதிவு எந்திரங்கள் யாவும் செல் அரித்து போய்விடும்!
செல் என்றால் ஆங்கிலத்தில் இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது விற்பனை செய்வது. நாம் போய் வாக்கு எந்திரத்தின் பொத்தானை அழுத்தாத ஒவ்வொரு வாக்கும் விற்பனையாகிவிடுகிறது! இது ஒரு கற்பனையாகவே இருந்தாலும் இதன் முக்கியத்துவம் என்னவென்பதை பார்ப்போம்.
2011-ல் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் முன் அப்பொழுது சென்னையில் நிகழ்ந்த ஒரு நாடகத்தின் கதை சுருக்கம் வருமாறு..
ஒரு ஊரில் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து தங்கள் கடமையை செய்வார்கள். ஆனால் ஒரு பெண்ணால் மட்டும் வாக்களிக்க இயலாத ஒரு நிலை உருவாகிவிடும். தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும். எண்ணிக்கை முடிவில் இரண்டு பெரிய கட்சிகளுமே சரிசமமான வாக்குகளை பெற்றிருக்கும். வாக்காளர் பட்டியலை பார்த்தால் ஒரே ஒரு பெண் மட்டும் வாக்குசாவடிக்கு சென்று தன் வாக்கிணை பதிவு செய்திருக்க மாட்டாள். இப்பொழுது இரண்டு கட்சிகளுக்குமே அந்த பெண்ணின் வாக்கு மிக முக்கியமானதாகிவிடும். அப்பொழுது தான் வெற்றி யாருக்கு என்று தெரியும். அந்த பெண்ணிடம் இரு கட்சி தரப்பில் இருந்தும் வந்து கெஞ்சுவார்கள். அவள் தன் வாக்கை மாறாக ‘யாருக்கும் இல்லை'(None Of The Above) என்று தேர்வு செய்து விடுவாள். அந்த ஊருக்கு தலைவனோ தலைவியோ இல்லாத ஒரு நிலை உருவாகிவிடும்! அத்துடன் நாடகம் நிறைவு பெற்றது.
ஜனநாயகத்தில் ஒரு வாக்கின் மதிப்பை எடுத்து காட்டும் விதமாக இந்த நாடகம் அமைந்திருந்தது. ஒரு தொகுதியில் எத்தனை சதவிகிதம் வாக்குபதிவு நடைபெற்றதோ அங்கு ஜனநாயத்தின் மதிப்பும் கூடுகிறது. குறைவான வாக்குபதிவு நடைபெற்றால் அங்கு அதன் மதிப்பு குறைவாக உள்ளது என்றே பொருள். இது வேறு யாராலும் முடிவு செய்ய படுவது அல்ல. இதற்கு எந்த அரசியல் கட்சியையும் குறை கூற முடியாது. காரணம், உங்கள் வாக்கு உங்கள் உரிமை! சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் நம் உரிமையை நாம் பயன்படுத்தாமல் வேறு யார் வந்து பயன்படுத்துவார்கள்?
அதே போல் தன் வாக்கை அரசியல் கட்சிகளுக்கு விற்பது! அவர்கள் கொடுக்கும் பணம் அவர்கள் அரசியலின் ஊடாக சம்பாதித்த பணம். அதை நமக்கு திரும்பவும் சிதறவிட்டு ஏமாற்றும் முயற்சி. நமது நாட்டில் மூன்று விதமான தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி, சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம். இதுவரை கூறியவை இந்த மூன்றுக்கும் பொருந்தும்.
எனக்கு இந்த தேர்தல் முறை பிடிக்கவில்லை. யாரும் சரியானவர்கள் அல்ல போன்ற எந்த காரணத்தை முன்வைத்தாலும் அதை பதிவு செய்து விடுங்கள். காரணம் அது உங்களை மட்டும் பாதிக்காது. அனைவரையும்  சேர்த்தே பாதிக்கும்.
பிடிக்கவில்லையா, நோட்டா (None Of The Above) என்ற தேர்வை பதிவு செய்து விடுங்கள். அதற்கு முன் வாக்கு பதிவு எந்திரத்தில் தேர்தல் களத்தில் நிற்கும் சுமார் 20 வேட்பாளர்களை கவனியுங்கள். கட்சிகள் சரி இல்லை என்றால், ஒரு 5 முதல் 10 கட்சிகள் வரை நிற்கும். சுயேட்சையாக 10 வேட்பாளர்கள் வரை நிற்பார்கள். அவர்கள் யாரும் சரி அல்ல என்றால் நோட்டா-வை தேர்வு செய்யுங்கள். இதை தான் நம் தேர்தல் ஆணையமும் சொல்லிக்கொண்டே வருகிறது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் செய்ய வேண்டும். அவர்கள் பொறுப்புடன் கேட்கும் இணைய தளம் மூலம் வாக்குபதிவு செய்யும் ஒரு சூழல் உருவாகும் வரை கப்பலிலோ அல்லது விமானத்திலோ வந்து தங்கள் வாக்கை பதிவு செய்து விட்டு போகவேண்டும்.
தேர்தல்கள் முடிவடைந்த பின் தலைவர்கள் தேர்வாகிறார்கள். ஆட்சி அமைத்து சட்டங்கள் கொண்டுவருகிறார்கள். அதை செய்வதற்காக நம் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகளும் மதிப்புகளும் ஏராளம். இன்றைய குறுஞ்செய்திகள் ஊடாக நாம் அதனை படித்திருப்போம். ஒரு வருடத்திற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு சலுகைகள் என்றும், ஐந்து வருடங்களுக்கு எவ்வளவு இருக்கும் என்றும், அனைத்திற்குமான மதிப்பு என்ன என்றும். இவை எல்லாம் அவர்கள் தங்கள் கடமையை மக்களுக்கு சரியாக செய்யவே.
இத்தனை வருடங்களாக நடந்தவை கொஞ்சம் நஞ்சம் ஊழல்கள் அல்ல. மிகப் பெரிய ஊழல்கள். இந்த ஊழல் செய்தவர்கள் கைதாவார்கள் பின் விடுதலையும் ஆவார்கள். ஊழல் பணம் தொலைந்து போய் விடும். இது தான் நடைமுறையில் உள்ளது. அரசியலில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் கருப்பு பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குள் இருக்கும்.
இது காலப்போக்கில் நம் தொண்டையை நெறிக்கும் அளவிற்கு செல்லும்! நாமெல்லாம் வயிற்றுக்கு உணவை தான் உட்கொள்கிறோமா அல்ல வேறு எதையாவது சாப்பிடுகிறோமா?? சோறு, காய்கறிகள், பழங்கள், இறைச்சி. இவைதான் என்றால் அதனை ஆசை தீர உட்கொள்ளுங்கள். இன்றைய கார்ப்பரேட் முதலைகள் இயற்கை(கரிம) விவசாயத்திற்குள் நுழைகிறோம் என்று சொல்லிக்கொண்டு கம்பு, களி போன்றவற்றை நம் வாயில் அடைக்க முயல்கிறார்கள். அவை எல்லாம் நல்லது தான். ஆரோக்கியமானது தான். காரணம் இன்றைய பயிர்களில் போடப்படும் பூச்சிக்கொல்லி உரங்கள் தான் நம் உணவின் தரத்தை மோசமாக்கிவிட்டது. இயற்கை(கரிம) உரங்கள் போதும். ஏற்கனவே சாப்பிடும் இயற்கை உணவுகளை செம்மை படுத்தும் இயற்கை உரங்கள் போதும்.
இதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் வந்து நமக்கு செய்து தரவேண்டும் என்று எண்ணுவோமேயானால் அதோ கெதி தான். அதனால் தான் இன்று உலகின் கார்ப்பரேட் முதலாளிகள் அனைவரும் கோட்டுக்கு அந்த பக்கம் இருக்கிறார்கள். உலகின் ஒரு சதவிகிதம் பேர் மீதம் உள்ள தொண்ணூற்றொன்பது சதவிகித மக்களை விடவும் பணக்காரர்களாக!
அரசியல்வாதிகளை தன் கைக்குள் வைத்திருக்கும் இவர்கள், இவர்களுக்கு சாதகமாகவே அரசியல் சூழலை உருவாக்குவார்கள். இதற்கு உதாரணம் மிகவும் திறமை வாய்ந்த இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்களுக்கு வரும் நெருக்கடிகள் தான். அதற்கு தீர்வு, அடுத்து வருபவரும் இன்னொரு ரகுராம் ராஜனாகவே இருக்க வேண்டும்!
அரசியல்வாதிகள் இவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருக்கையில் அவர்களின் தவறுகளை தடுத்து நிறுத்தவே ஐந்து வருடங்களில் மூன்று தேர்தல்கள் நடைபெறுகின்றது. நம் வாக்கை பயன்படுத்தி நம் செல்வாக்கை காப்பாற்றுவோம்.
அன்புடன்
ஜெகன்
(23-06-2016)

ஏகாதிபத்தியம்


மனிதர்களாகிய நம்மை சுற்றி பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல், மதம், நாடுகள், நாடுகள் இடையேயான உறவுகள், பொருளாதாரம், வணிகம், விளையாட்டு, ஊடகம். இவை அனைத்தும் மனித வாழ்வை மேம்படுத்துவதற்காக நிகழக்கூடியவை. இவை தவிர போர், ஆக்கிரமிப்பு, சதி போன்றவையும் நடைபெற்று கொண்டே வருகிறது.
பின் கூரியவை யாவும் முதலில் நடைபெற்று வரும் விஷயங்களை தன் கட்டுகோப்புக்குள் வைக்கவே. யாருடைய கட்டுக்கோப்பு? அரசியல் செய்பவர்கள், மதங்களை முன்னிறுத்துபவர்கள், வணிகம் செய்பவர்களால். முக்கியமாக அரசியல்வாதிகளால். அவர்கள் தான் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள். அவர்கள் உத்தரவின் பேரில் தான் போர்கள், ஆக்கிரமிப்புகள் நிகழ்கின்றன. அரசியல்வாதிகள் தங்களாகவே இந்த முடிவை செய்கிறார்களா.. இல்லை. அவர்களை செயலாற்ற வைக்கும் வணிக முதலைகள், மதவாதிகள் போன்றோரால் செயல் படுகிறார்கள். அதன் படி நடந்துகொள்கிறார்கள்.
இவை எல்லாம் எதன் அடிப்படையில் நடைபெறுகிறது? அந்தந்த நாட்டின் அல்லது நிலம் இருக்கும் பகுதியை, அதன் சுற்று சூழல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிகழ்வது இயல்பு. அப்படி ஒரு சூழல் இல்லையேல் அதனை உருவாக்குவார்கள்! யார்? அதே அரசியல் செய்பவர்கள், மதங்களை முன்னிறுத்துபவர்கள், வணிகமுதலைகள். அந்த சூழல் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அது அந்த நாட்டின், பகுதியின் வாழ்வை மேம்படுத்துவதர்க்கான விஷயத்தை பாதிக்கும் ஒன்றாக இருக்கும். அதை காரணம் காட்டியே மக்களின் ஆதரவை பெற்று செயலாற்றுவார்கள்.
இதன் பெயர் சதி(Conspiracy). இதற்கு முழு ஆதாரங்கள் இருக்காது. அதை நிரூபிக்க இயலாது. காரணம் நிரூபிக்கபட்டால் அதன் நோக்கம் சிதைந்து விடும். இவை பற்றி மக்கள் நிறைய பேசுவார்கள். சில வதந்திகளாக கூட இருக்கலாம். ஆனால் நிறைய நேரங்களில் அது ஒரு முழு பூசணியை சோற்றில் மறைக்கும் கதை போல் தான். ஏன் என்றால் சூழல் உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. அதை சாதகமாக பயன்படுத்த முயல்வார்கள் உருவாக்கியவர்கள். விளைவு அரசியல் நன்மை, செய்தவர்க்கு.
இந்த சதி என்னும் விஷயம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தலைப்பு. காரணம் அது ஒரு சுவாரஸ்யமான தலைப்பு. அதை நிரூபிக்க இயலாது என்றாலும் அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் தான் அதனை கவனிக்க வைக்கிறது. உண்மையோ என்றும் எண்ணத் தூண்டுகிறது.
சதியாலோசனைகள் பலவற்றுள் 2001-ல் அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 தாக்குதல்கள் பிரபலமான ஒன்று.
9/11 தாக்குதல்கள் நடைபெறுவதை முதலே தெரிந்தும் அதனை அமெரிக்க அரசு அமைதியாக பார்த்துகொண்டு இருந்தது என்றும் அதற்கான காரணங்கள் என்று சில கூறப்படுகின்றன.
பரவலாக நம்பப்படும் ஒன்று – தாக்குதல்கள் நடைபெற்றால் தான் அமெரிக்கா எண்ணெய் கிணறுகள் உள்ள மத்திய கிழக்கு நாடுகளில் படை எடுத்து அதனை ஆக்கிரமித்து உலகின் வல்லரசாக நீடித்திருக்க முடியும் என்பது.
மற்றொன்று, டிவின் டவர்ஸ் என்று அழைக்கப்படும் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த கட்டிடத்தை நிலைக்குலைய செய்ய வெடிபொருட்கள் தேவை. வெறும் விமான தாக்குதல்கள் போதாது. அதனால் ஏற்கனவே அந்த கட்டிடத்திற்குள் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. கட்டிடத்தை தாக்குதல்களுக்கு சில நாட்கள் முன்னர்தான் புதிய உரிமையாளர் ஒருவர் வாங்கினார் என்றும் அந்த கட்டிடம் சேதம் அடைந்ததால் காப்பீட்டு பணம் 500 மில்லியன் டாலர்கள்(அன்றைய இந்திய மதிப்பில் சுமார் 2400 கோடி) பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் மூலம் அடைந்த காப்பீட்டு லாபத்திற்காக என்பதே இந்த காரணம்!
இன்னொன்று, வர்த்தக மைய கட்டிடங்களில் வைத்திருந்த 950 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க கட்டிகளில் கட்டிடம் சேதம் அடைந்த பின் 230 மில்லியன் மதிப்பு தங்கம் மட்டுமே கண்டெடுக்க பட்டது. மீதம் உள்ள 720 மில்லியன் டாலர் மதிப்பு தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. மிகப்பெரிய இந்த கொள்ளைக்காகவே தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததாகவும் பேசப்பட்டது.
மூன்று காரணங்களில் கடைசி இரண்டும் சதியாக தோன்றவில்லை. ஒரு கட்டிடம் இடிந்தால் அதன் காப்பீட்டு பணம் பெறப்படுவது நடைமுறையில் ஒன்று.
கடைசி காரணமான தங்கம் கொள்ளை என்பதை இடிந்த ஒரு கட்டிடத்தில் நடைபெற்றதாகதான் பார்க்க முடியும்.
முதலில் சொல்லப்படும் காரணம் உண்மையோ பொய்யோ! அதாவது அமெரிக்கா தன் அரசியல் சுயநலத்திற்காக தெரிந்தே தங்களின் மக்களை காவு கொடுத்துவிட்டதா? இந்த கோணத்தில் பார்த்தல் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் தாக்குதல்களிலும் தன் மக்களை அந்தந்த நாடுகளே பலிகடாக்கள் ஆக்குகின்றனவா? ஒரு போதும் கிடையாது!
9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அமெரிக்கா அந்த தாக்குதலை பயன்படுத்தி எண்ணெய் கிணறுகள் உள்ள மத்திய கிழக்கு நாடுகளில் போர் தொடுத்தது. அவற்றை கைப்பற்றி வல்லரசாக நிலைத்திருப்பதற்காக!
ஒரு சந்தர்ப்பத்தை தன் வசப்படுத்தியது என்றே சொல்லலாம்!
அதன் மூலம் உலக அரசியலில் தான் ஒரு அயோக்கிய நாடு என்பதை நிரூபித்து கொண்டு வருகிறது! காரணம் தன் நாட்டில் தாக்குதல் நடத்திய தீவிரவாத இயக்கத்திற்கு போட்டியாக அதன் நாட்டிற்குள் நுழைந்து அதன் வளங்களை கொள்ளை அடித்ததை என்னவென்று கூறுவது?
ஐக்கிய நாடுகளின் சபை (United Nations Organisation) என்று ஒன்று எதற்காக இருக்கிறது?? அங்கு அமெரிக்கா என்ற நாடு உறுப்பினர் தானே? உலக நாடுகளின் ஒற்றுமைக்காக உள்ள ஒரு அமைப்பில் இருந்து கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபடும் அமெரிக்கா எதற்காக அந்த அமைப்பில் இருக்க வேண்டும்? அங்கும் தன் ஆதிக்கத்தை செலுத்தவே! இப்படியெல்லாம் செய்துதான் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி பிடித்துகொண்டிருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள்? மத்திய கிழக்கு நாடுகளில் போர்!
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நிறுத்திவைப்பு! இது ஒற்றை வாக்கியம் அல்ல. வரலாற்று நிகழ்வு.
தங்கள் நாட்டிலுள்ள எண்ணெய் வளங்களை அமைதியாக பிறகு பார்த்துகொள்ளலாம் என்று பதுக்கி வைத்துக்கொண்டு அடுத்த நாட்டின் வளத்தை சுரண்டுவதற்கு பெயர் தான் வல்லரசோ!?
இவர்கள் இராணுவத்தை அனுப்பி போர் நடத்தியது உலகில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதி. தற்போது இஸ்லாமியர்கள் யாரும் தங்கள் நாட்டினுள் நுழையாத படி தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் திரு.டோனல்ட் டிரம்ப் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்! அதற்கான நியாயத்தையும் படிக்கும் படி கோருகிறார்.
அவரிடம் நான் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான். அப்படி நீங்கள் அமெரிக்க அதிபராக வந்தால், நீங்கள் விரும்பும் சட்டம் நிறைவேற்றுகையில் அதனுடன் சேர்த்து அமெரிக்கர்கள் யாரும் இஸ்லாமியர்கள் வாழும் நாட்டிற்குள் நுழைய தடை என்ற என் கோரிக்கையையும் சேர்த்து நிறைவேற்றுவீர்களா??
உங்கள் நாட்டில் தாக்குதல் நடத்தியவனை பிடிக்கிறேன் என்று கூறி அவன் ஒளிந்திருந்த பாகிஸ்தான் நாட்டிற்குள் வரம்பின்றி நுழைந்து அவன் தங்கி இருந்த வீட்டின் படுக்கையறைக்குள் சென்று “ஒசாமா.. ஒசாமா..” என்று காதில் ரசசிய செய்தி ஒன்றை உரைப்பது போல் அவனை சுட்டு தள்ளி விட்டு அவன் உடலை கல்லில் கட்டி கடலில் இறக்கிவிட்டோம் என்றும் அறிவிப்பீர்கள்!
ஆனால் பிறர் நாட்டில் தாக்குதல்கள் நடத்திய குற்றவாளிகளை தங்கள் நாட்டின் சிறைக்குள் அடைத்து வைத்துகொண்டு வீடியோ கான்பரன்சிங்க் மூலம் அடாவடி செய்கிறீர்கள்!
உங்களுக்கு வந்தால் அது  ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னியா?
இன்றைய நவீன தொழில்நுட்ப அறிவியல் காலத்திலும் உலகத்தை அமெரிக்கா தான் முண்ணிருந்து வழி நடத்தி செல்வதாக சொல்லிக்கொள்கிறீர்களே. இதுதான் அதன் அழகா!
அன்புடன்
ஜெகன்
(18-06-2016)

வலுவிழந்த கடவுள்


“கடவுள்”

ஒற்றை சொல்! அது என்றும் மேலே தான். நாம் எல்லாம் அதற்கு கீழே!

நான் கடவுள் மறுப்பாளன் அல்ல! காரணம். நான் நம்புவது அப்படி. கடவுள் யாரையும் படைக்க வில்லை. மாறாக மனிதனே தன் தேவைக்காக கடவுளை உருவாக்கினான்.
என் பெயர் ஜாதக பெயர். என் பெற்றோர்கள் எனக்கு வைத்தது. அதற்காக நான் அவற்றை நம்பபோவதும் இல்லை. ஏன் என்பதை பிறகு பார்ப்போம்.
‘கடவுள்’ என்னும் சித்தாந்தம் பற்றிய நிறைய மாறுபட்ட கருத்துக்கள் கீழ் உலகம் முழுவதும் நிலவி வருகிறது. அதை யாரும் மறுக்க முடியாது. மதங்களே அதற்கு சாட்சி!
உலகம் முழுவதும் சுமார் எத்தனை மதங்கள் உள்ளது என்று சொல்ல முடியுமா?
ஆயிரம்! ஆம்! சரியான எண்ணிக்கை இல்லை என்றாலும் ஆயிரத்திற்கும் மேலே எண்ணிக்கையில் உலகில் மதங்கள் உள்ளன. அதில் ஒரு பதினொரு மதங்கள் முக்கிய மதங்களாக கருதப்படுகின்றன. அப்படி பார்த்தால் ஒரு ஆயிரம் மாறுபட்ட கருத்துக்கள், கடவுளை பற்றி!
கடவுள் என்னும் சித்தாந்தம் வெவ்வேறாக பார்க்க படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும். அபிப்பிராயம் இல்லாதவர்குளும் உண்டு. நீங்களே இப்பொழுது உங்களை கேட்டுபாருங்கள்.. ‘கடவுள் என்றால் என்ன?’ உங்கள் பார்வையில்.
ஒரு விடை கிடைத்திருக்கும். அப்படி ஒன்றும் இல்லை என்பதும் ஒரு விடை தான். இது போன்று பல கருத்துக்கள் உள்ளது. கடவுள் என்றால் சர்வ வல்லமை கொண்டவன், உலகை படைத்தவன், காப்பவன், அழிப்பவன், அவன் இல்லாமல் அணுவும் அசையாது, உருவம் அற்றவன், இன்னும் பல..
இப்போது நீங்கள் உங்களுக்கு கிடைத்த விடையை கீழ் வருபவையில் ஒன்றாக இருக்குமா என்று பாருங்கள். கடவுள் என்றால் நம்மை எல்லாம் படைத்தவன்(இது உங்கள் பதிலாக இருந்தால்.. நீங்கள் நிறைய யோசிப்பவறல்ல என்றே நான் கருதுகிறேன்.) கடவுள் என்றால் நம்பிக்கை, சக்தி, இயற்கை, பயம், தெளிவு, பிறரிடம் கொண்டுள்ள அன்பு, மனசாட்சி, உண்மை, அப்படி ஒன்று இல்லவே இல்லை. இவைகளெல்லாம் ஒரு தனிப்பட்ட நபர் சுயமாக சிந்தித்து கூறும் பதில்கள். அதற்கு முன்னர் கூறியவை எல்லாம் மதங்கள் மூலமாக சிந்திக்க விடாமல் திணிக்க பட்ட கருத்துக்கள்.
எனக்கு கிடைத்த விடை இது தான் – கடவுள் என்றால் உண்மை. இது நான் கடவுளை பற்றி சிந்திக்க ஆரம்பித்து, தேடும் பொழுது கிடைத்த விடைகளில் ஒன்று. என்னை ஓரளவு ஈர்த்த பதிலும் இதுவே. அதன் அடிப்படையில் தான் நான் கடவுளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். அதன் விளைவாகவே என்னால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. முதலில் சொன்ன, மனிதன் தான் தன் தேவைக்காக கடவுளை உருவாக்கினான் என்ற முடிவு. இது ஒரு மாற்று சிந்தனைக்காக கூறுவது அல்ல. அதனை விளக்கவும் கடமை உள்ளது எனக்கு.
உண்மையாகவே மதங்கள் போதிக்கும் கடவுள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள உண்மையை தேடினாலே விடை கிடைத்து விடும் என்றும் உணர்ந்தேன்.
அவர்கள் சொல்லும் ஒன்று இல்லவே இல்லை என்பதே உண்மை. முக்கியமான மதங்களால் சொல்லப்பட்டு வரும் எந்த ஒரு விஷயமும் கட்டுகதைகளே. இதை பற்றி ஆராய்ந்தும் பலரிடம் பேசியும் வந்துள்ளேன். ஒரு கோவிலிற்குள் செல்கிறோம் அங்குள்ள கடவுள் சிலையை வணங்குகிறோம், கோவிலை சுற்றி வருகிறோம், கரணம் இடுகிறோம், விழுந்து கும்பிடுகிறோம், துளசி நீரை பெற்று குடிக்கிறோம், கடவுள் சிலைக்கு தீபம் காட்டுவார்கள் அதை கும்பிட்டு சாம்பல், குங்குமம், சந்தனம் பெற்று நெற்றியின் மைய பகுதியில் அதனை பூசிக்கொள்கிறோம். ஆலையங்களில் மணி எழுப்ப படுகிறது, சாப்பிட பிரசாதம் தரப்படுகிறது. இன்னும் பல. இவை அனைத்திற்கும் ஒரு காரணம் கற்பிக்க படுகிறது. ஐந்து புலன்களும் செயலாற்ற படுகிறது(It activates our senses)   என்பது அந்த காரணம். உதாரணம் – கோவில் மணி ஓசை செவியினை செயல் படுத்துவது, தீபம் கண்களை செயல் படுத்துவது. இதை எல்லாம் காலையிலும் மாலையிலும் செய்தால் அந்த நாள் நல்ல புத்துணர்ச்சியோடு செயலாற்ற முடியும் என்றும் கூறபடுகிறது. இதையே தான் தியானம் செய்பவர்களும் சொல்கிறார்கள். அந்த நாளை நன்றாக செயல் படுத்த, செயல் படுத்தினால் நாம் செய்யும் வேலையில் நல்ல விளைவுகள் கிடைக்கும். வெற்றி பெற முடியும். இதில் எங்கிருந்து நம்மை படைத்தவன் என்று ஒருவன் வருகிறான்? கோவிலை அரசர்கள் கட்டினார்கள். மக்கள் நன்றாக இருக்கவும், அவர்கள் புகழ் நிலைத்திருக்கவும். காலையில் நல்ல இசையை கேட்டாலும் செவியை செயல்படுத்த முடியும். இசை என்பது நல்ல இசை. கடவுள் துதி பாடும் இசை அல்ல! கடவுள் துதி என்பது ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு கடவுளுக்குமான விளம்பர பாடல் தான். இந்த கோயிலுக்கு வந்தா எல்லா நோய்யும் தீரும், இந்த கோயிலுக்கு வந்தா வெற்றி கிடைக்கும், கேட்ட வரம் கிடைக்கும் இப்படி எல்லாம் விளம்பர படுத்தி வரவழைப்பது. வந்தா கட்டணம், வசூல். சில மனித கடவுள்களும் இதற்கிடையில் அவதரித்து விட்டன. அதுகள் யுக்தி ரொம்ப மோசம். பணம் கறப்பதில் படு கில்லாடிகள் அவை. கடைசியா கடவுள் தரகர்களான ஆன்மிக குருக்கள்.
நாம் இன்று மாட்டிக்கொண்டுள்ள இடம் எப்படி பட்டது என்றால், நம்மை ஆண்டு விட்டு சென்ற கொள்ளைகாரனான வெள்ளையனிடம் இருந்து விடுதலை பெற்று வெள்ளையரோடு உறவாடிய நம் நாட்டு கொள்ளைகாரர்களிடம். இந்த கொள்ளைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் நாம் விழித்தெழாமல் உறங்கிகொண்டிருக்கும் வரை. அட எல்லா புலன்களும் செயல்படுத்த தான் கோவில், கடவுள் இருக்கிறதே! நம் நாளை நன்றாக பயன்படுத்தி வெற்றி பெற்று விமோச்சனம் அடைந்து விடுவோமே! சரி தானே?! விமோச்சனம் அடைந்து எங்கு செல்வீர்கள்?? உங்களுக்கு விமோச்சனம் அளித்த அந்த கடவுளிடமும், அதனை படைத்த எண்ணங்களிடமும் மனிதர்களிடமும், தன்னை கடவுள் என்று சொல்லும் கயவர்களிடமும், கடவுளிடம் அழைத்து செல்கிறேன் என்று கூறும் தரகர்களிடமும் தானே! அவர்களுக்கு தானே அடிமையாகிவிட போகிறீர்கள்!! உண்மையான விமோச்சனம் என்பது நம் ஏழ்மையில் இருந்தோ, தோல்விகளில் இருந்தோ அல்ல. இந்த மதம், கடவுள் எனும் சூழலிலிருந்து தான். காரணம் அவை தான் ஒளி வட்டம் ஒன்றை உருவாக்குகிறது. அவற்றை விட்டு வெளியேற வேண்டும். அவர்களின் பிடியிலிருந்து வெளியேற வேண்டும். அப்போது தான் எது சரி எது தவறு என்ற தெளிவே முதலில் கிடைக்கும்! சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியும். புரிந்தால் நம் தேவையை எளிதாக அடையமுடியும் ஒரு மனிதனாக, சமுதாயமாக, நாடாக! பிறகு இந்த ‘செயல் படுத்து’ முறைக்கு எங்கும் ஓட வேண்டியதில்லை. தெளிவு கிடைத்த பின் எது சரியான முறை என்பது புரியும், உடலளவிலும் மனதளவிலும். இதுவே சரி!
அப்போ மதங்களும் கடவுள்களும் தவறா? நிச்சயம் தவறு! சரி என்றால் எத்தனை சரி இருக்க முடியும். 1000 குறுஞ் சரிகள், 11 முக்கிய பெருஞ் சரிக்களா?? சற்று நகைச்சுவையாக தோன்றவில்லையா? இந்த நகைச்சுவைகள் செய்யும் வேலைகள் மூலம் பல குழப்பங்கள் நிலவுகிறது. அது சண்டை விரோதமாக மாறுகிறது. ஒருவருக்கு ஒருவர் பகை வளர்கிறது. பகை தீர்க்க தாக்குதல்கள் நடத்தபடுகின்றன. மக்கள் அழிக்க படுகிறார்கள். இந்த வேலைகள் அரசியலுக்காக தான். இதற்கு துணை நிற்பது மதங்களும் அவற்றின் கூச்சல் குழப்பங்களும் தானே. அப்போ அது தவறு தானே! மதங்கள் அமைதிக்காக தான் என்று கூறினால், அவைகள் முதலில் யாரையும் தெளிவடைய விடுவதில்லை   கூச்சல் குழப்பங்களுக்கு வழிவகை செய்கின்றன, ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன. போட்டி தீவிரவாதமாக உருவெடுக்கின்றது! அது அழிவையன்றி வேறு எதை தருகிறது? அதற்கு தீர்வு இவைகளிலிருந்து சற்று வெளியே வருவது. மதங்களின் குழப்பங்களை மட்டுமே அரசியல் பயன்படுத்துவது இல்லை. தீவிரவாதத்தையும் பயன்படுத்துகிறது! இந்த அரசியல் போக்கை சரி செய்ய நல்ல அரசியல் தேவை படுகிறது. மதங்களின் போட்டி ஏன் தீவிரவாதமாக மாறுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. எந்த மதமும் தன்னை தீவிரவாதத்தோடு சொந்தம் கொண்டாடுவது கிடையாது. தீவிரவாதிகளோ மதத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள். அது மதத்திற்கு ஒரு போதும் நன்மை செய்யாது. தீங்கு மட்டுமே விளைவிக்கும். அதனால் என்ன? மதங்கள் சாகட்டும் நல்லது தானே என்று இருக்க முடியாது. காரணம் மதங்கள் செத்தால் எந்த பிரச்சனையும் கிடையாது இதற்கிடையில் மாட்டிக்கொண்டு மனிதர்கள் தானே சாகிறார்கள். ஆக எப்படி பார்த்தாலும் இந்த மதங்களும் அவை சொல்லும் கடவுள்களும் ஒன்றுக்கும் பிரயோஜனம் அல்லாத விஷயமாகவே இருந்து வருகிறது! மாறாக மதங்களை, கடவுள்களை நம்பாதவர்கள் வாழும் நாடுகளில் குற்றங்கள் குறைவாக உள்ளது! வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மேலே இருக்கின்றன! மக்கள் அங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பிறகு எதற்காக கோவில்களையும் கடவுள்களையும் நாடி செல்ல வேண்டும்?
அது அறிவியல் அது நம் நன்மைக்காகவே என்றால், நம்மை சுற்றி உள்ள நாம் பயன்படுத்தும் அனைத்தும் நம் நன்மைக்காக தான். எல்லாவற்றையும் வணங்கிகொண்டா செல்கிறோம். காற்று எல்லா இடங்களிலும் இருக்கிறது அதை உணர எப்படி மின்விசிறி தேவை படுகிறதோ அப்படி தான் கோவிலும் என்றால், காற்றை சுவாசிக்க நம் மூக்கு குழாய் இருக்கிறது சதா சுவாசித்துக்கொண்டு தான் உயிர் வாழ்கிறோம். உணர மரங்களின் காற்று வீசுகிறது.
மதங்களின் கடவுள்களின் அறிவியல் பூர்வமான நன்மைகள் என்று வக்காலத்து வாங்கும் முன் சற்றே யோசிப்போம்! மதம் ஒரு சித்தாந்தம்(Ideology, not Science). மதங்களின் தேவைக்காக உருவாக்க பட்டது தான் கடவுள். அதன் தேவை அதை பரப்புவது! இதில் எங்கிருந்து வருகிறது அறிவியல்?? அறிவியல் ரீதியாக பரப்புவதனாலா??? இது அரசியலை விடவும் கேவலமாக இல்லை? அரசியல் என்பது ஒரு சாக்கடை. அதை சுத்தம் செய்கிறதா இந்த மதமும் கடவுளும்? மாறாக துணை நிற்கிறது. அப்படி பட்ட மதமும் கடவுளும் தேவையே இல்லை!
மதமும் கடவுளும் உலகின் மக்களின் பசியையும் பட்டினியையும் போக்குகிறதா? அதனால் ஏற்படும் எண்ணிலடங்கா சாவுகளை நிறுத்துகிறதா? நாடுகளுக்குள், மக்களுக்குள் பகையை நிறுத்துகிறதா? போர் வராமல் தடுக்கிறதா? போரில் எவரையும் சாகாமல் பார்த்துக்கொள்கிறதா? ஒருவனை மதுவிலிருந்தோ பேராசைகளில் இருந்தோ விடுவிக்கிறதா? (விளம்பரங்களில் அல்ல, நிஜத்தில்!).
ஒருவனை சுயமாக என்றாவது யோசிக்க விட்டதா??? இப்படி எதையுமே செய்யாத கடவுள் வலுவை இழந்து அல்லவா நிற்கிறது!

அன்புடன்
ஜெகன்
(10-06-2016)

நினைவேந்தல்

மே மாதம்.. கடந்த சில வருடங்களாகவே கவலை அளிக்கும் மாதமாக  இருந்து வருகிறது, தமிழர் இனப்படுகொலை நடத்தப்பட்ட மாதம் என்பதால்! முள்ளிவாய்க்கால் நினைவு நாளான ஒவ்வொரு மே 18ம் தேதி அன்றும் அந்த கவலையை ஒரு விதமாக வெளிப்படுத்த தோன்றும். தமிழர் போராட்டம் பற்றி என் நண்பனோடு விவாதிப்பேன், பேஸ்புக் பதிவு போடுவேன், மெரினா கடற்கரைக்கு சென்று அமர்ந்து விட்டு வருவேன். இப்படி ஏதாவது செய்வேன். இந்த வருடம் மே 18 அன்று சென்னையில் நல்ல மழை! அதற்கு முந்தைய வாரங்கள் அடித்த வெயிலின் தாக்கத்தை சற்று தனித்தது அந்த மழை. இந்த வருடம் மே 18 அன்று எந்த பதிவும் போடவில்லை, எந்த நண்பனிடமும் பேசவில்லை, கடற்கரைக்கும் செல்லவில்லை. அலுவலகம் சென்றுவிட்டு பிறகு அங்கிருந்து கொட்டும் மழையில் நனைந்தபடி ஒரு சினிமாவிற்கு சென்று வீடு திரும்பினேன்!
கடந்த வாரம் வலைத்தளத்தில் மே 29ம் தேதி மெரினா கடற்கரையில் ‘மே17 இயக்கம்’ என்ற சமூக உரிமை இயக்கம் தமிழர் இனப்படுகொலைக்கான நினைவேந்தல் கூட்டம் ஒன்றை ஒருங்கிணைப்பது தெரிய வந்தது. நிச்சயம் பங்கேற்பது என்று முடிவு செய்தேன். கடந்த 7 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 3ம் ஞாயிறு அன்று மெரினா கண்ணகி சிலை அருகில் இந்த கூட்டம் நடந்து வருகிறது என்று அறிந்து கொண்டேன். இம்முறை தேர்தல் காரணத்தால் மே 29ல் நினைவேந்தல் நடந்தது. இனியும் தொடரும்!
மாலை 4 மணி அளவில் நான் சென்றேன். கடற்கரையில் பாதுகாப்புக்கு  காவல்துறை இருந்தது. நினைவேந்தல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. சிலவற்றை வாங்கினேன். இயக்கத்தின் நபர் ஒருவரிடம் சிறிது உரையாடிவிட்டு கூட்டத்தில் சென்று அமர்ந்தேன். என்னுடன் பள்ளியில் ஒரே வருடம் படித்த நண்பன் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் என்று புரிந்தது. 2007-08 சமயங்களில் இருந்தே தீவிரமாக தமிழர் விடுதலைக்காக குரல் கொடுக்ககூடிய அவர் அங்கு ஒருங்கிணைப்பாளராக இருந்ததில் எனக்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பெருமை தான்.
கேள்விக்கணைகளை தொடுக்கும் பதாகைகளை தோழர்கள் நினைவேந்தலில் பங்கேற்றவர்களுக்கு கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஒன்றை பெற்றுக்கொண்டேன்.
சிறிது நேரம் கழித்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியின் நிழற் படக்  கருவிகள் நிகழ்விற்கு வந்த ஒருவரை சூழ்ந்து கொண்டது. கூட்டத்தில் எழுந்தவர்களை மெதுவாக அமரும்படி கை அசைத்து விட்டு மக்களோடு மக்களாக அமர்ந்தார் திரு.வைகோ!
பறை வாசிப்புடன் நிகழ்வு தொடங்கியது. பிறகு மேற்கு வங்கத்தில் இருந்து வந்த ஒரு குழு மௌன நாடகம் ஒன்றை நிகழ்த்தினார்கள். யுத்தம் ரத்தம் இனி வேண்டாம் எனும் கருத்தை கொண்டிருந்தது அவர்களின் நாடகம். அதற்கடுத்து  மே17 இயக்கத்தின் இளைஞர்கள் சேர்ந்து ஒரு வீதி நாடகத்தை நிகழ்த்தினார்கள். தமிழ் ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளையும், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் நடந்திய போராட்டத்தையும், அதற்கு இங்குள்ள அரசியல்வாதிகளின் செயல்களையும் நினைவு படுத்தும் விதமாக அமைந்திருந்தது நாடகம்.
இப்படி நகர்ந்து கொண்டிருந்த நினைவேந்தலில் சில நூறு பேர் மட்டுமே பங்கேற்றார்கள். காசுக்கும் பிரியாணி பொட்டலத்திர்க்கும் மயங்காத சில நூறு பேர் கொண்ட கூட்டம் அது!
இயக்கத்தினர் இனப்படுகொலைக்கு எதிரான முழக்கங்களை எழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்பினோம். துரோகத்தை எதிர்த்து! அநீதியை கேள்வி கேட்டு! நீதி வேண்டுமென்றும்! உரிமைகள் வேண்டுமென்றும்! உலகம் அறிய தமிழர்களுக்கு நீதி கிடைக்க தமிழ் ஈழம் பிறக்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பினோம். உரிமை போராட்டத்தில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாகவும், உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்வில் உரிமைகள் கிடைத்து அவர்கள் வாழ்வதற்காகவும் தலைவர்கள் மற்றும் போராளிகள் நினைவேந்தல் சுடரை ஏற்ற; வந்திருந்த இளைஞர்கள், பெரியவர்கள், குடும்பத்தினர் அனைவரும் தங்கள் கைகளில் இருந்த மெழுகு வர்த்தியை ஏற்றி உயர்த்தி பிடித்து தமிழீழப் போராளி மக்களுக்கு வீர வணக்கத்தை செலுத்தினார்கள். மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் அவர்கள் நினைவேந்தல் உரையை வழங்கினார். அத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
அதனை பார்க்க : https://www.youtube.com/watch?v=yjd0HP3J5Zw
மே 17 இயக்கத்தின் இணையதள முகவரி : http://may17iyakkam.com/
இந்த உலகின் ஒரு பகுதியில் வாழும் மக்கள் தங்கள் நாட்டில் சகோதர சகோதரிகளாக பார்க்கப் படவேண்டியவர்களால் விரோதம் கொண்டு நசுக்கப்பட்டு தங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு போராட்டதிற்கு தள்ளபடுகிறார்கள். ஆயுதம் ஏந்தும் நிலை. ஒரே குறிக்கோள். ஒரே லட்சியம். தங்கள் கனவு நாடான தமிழ் ஈழம் பிறக்க வேண்டும். இதற்கிடையில் பல்வேறு அரசியல் சதிகள், அத்துமீறல்கள் போராட்டத்தையும் போராளிகளையும் ஒடுக்க முயற்சிக்கின்றன. எதுவும் எடுபடவில்லை. மாறாக சதிகாரர்களையும் சேர்த்தே எதிர்க்கிறார்கள் போராளிகள். ஒரு சுதந்திர நாட்டிற்கு தன் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் தன் நாட்டிலேயே தன் மக்கள் வதைக்க படுவதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது. அதன் விளைவாகவே அவர்களின் தனி தேசம் வேண்டும் என்று கேட்கிறார்கள். அது அவர்களின் உரிமை! இன்று தேசங்கள் உருவாவதற்கு காரணமும் அதுவே! உரிமைக்கும் வாழ்விற்கும் தனி நாடு தேவை இல்லை என்றால் உலகம் ஒன்று தான். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பது நிஜமாகும் பட்சத்தில் யாரும் தனி தேசம் கேட்கபோவதில்லை. அதுவரையில் என்ன நிலை??? தேசங்கள் நிலைப்பது, புதிய தேசங்கள் உருவாவது. தேசங்களின் பாதுகாப்பிற்கு ஆயுதம், ராணுவம். அவற்றின் செலவு தங்கள் நாட்டு மக்களின் பசியையும் பட்டினி சாவுகளையும் சுகாதாரத்தையும் விடவும் முக்கியமானது! இன்று உலகின் நாடுகள் பாதுகாப்பிற்காக வைத்துள்ள ஆயுதங்கள் உலகை பல நூறு முறை அழிக்கும் வல்லமை கொண்டது! இது தான் இன்றைய தேசங்களின் வெற்றியா???
உரிமைகள் மறுக்கப்படும் மக்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும். பாதுகாப்பு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் அழிவுகளும் நிறுத்தபட வேண்டும்!
இயற்கைக்கு எல்லைகள் தேசங்கள் கிடையாது. உலகின் ஒற்றுமைக்கும் நலனுக்கும் அனைவரும் இணைந்தே போராட வேண்டியது அவசியம்.
தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் பலர் எப்படி எல்லா சூழல்களையும் தங்கள் அரசியல் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துவார்களோ அவ்வாரே இந்த பிரச்சனையிலும் நடந்துகொள்கிறார்கள். இலங்கை  வடமாகாணத்தின் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியாவிற்கு வந்திருந்தபோது இந்த பிரச்சனை சம்பந்தமாக உணர்ச்சிவசப்பட்டு பேசவேண்டாம் அது தங்களை பாதிக்கும் சுழல் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அதை மனதில் வைத்து கொண்டு பேச வேண்டும். அங்கு ‘இலங்கை தமிழ் அரசு கட்சி’ தேர்தலில் வெற்றி பெற்று வடக்கு மாகாணத்தில் ஆட்சியில் இருந்தும் ராணுவத்தின் பிடியில் தான் தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கை மத்திய அரசின் ஒத்துழைப்பு முழுவதுமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் வாழும் மக்களின் உணர்வு, உதவி மற்றும் அனைத்து நன்மைகளும் தேவை என்றே இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நினைக்கிறார்கள். அவர்களில் இந்தியாவில் இருந்து சென்ற மலையக தமிழர்களும் உள்ளார்கள்.
Transnational Government of Tamil Eelam – நாடு கடந்த தமிழீழ அரசு உருவானது உங்களுக்கு தெரியுமா?
அதன் பிரதமர் பெயர் தெரியுமா?
பதினொரு நாடுகளில் வாழும் தமிழ் ஈழம் மக்களால் தேர்தல் நடத்தப்பட்டு உருவானது இந்த அரசாங்கம்.
அதன் இரண்டாம் பாராளுமன்ற பதவிக்காலம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது!
லட்சத்திற்கும் மேலான புலம் பெயர்ந்த ஈழம் தமிழர்கள் வாழும் இந்தியாவில் இந்த வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
மே 17 இயக்கம் போன்ற இயக்கம் மூலம் மக்கள் தங்கள் நியாயத்திற்கான ஆதரவு குரலை வலுபடுத்த முடியும். மீண்டும் அடுத்த மே மாதம் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் நிகழும் ஒவ்வொரு மக்கள் விரோத செயல்களையும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

அன்புடன்
ஜெகன்
(06-06-2016)



செவ்வாய், 27 டிசம்பர், 2016

பாச வலை


2016! பள்ளி தேர்வு முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கிற நேரம். 2006-ஆம் ஆண்டு  என் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி சரியாக பத்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் நான் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறேன் என்று பார்க்கிறேன்.
2006-ல் தேர்வு முடிவுகள் வந்த நிலையில் அடுத்த கட்டமாக கல்லூரியில் சேர மற்றும் எந்த பட்டபடிப்பு பயில வேண்டும் என்று முடிவு செய்யும் தருணம் அது. என் விருப்பம் சினிமா சம்பந்தமான படிப்பு படிக்க வேண்டும். குறிப்பாக விஸ்.காம் என்று சொல்ல கூடிய  Bsc.Visual Communication. ஆனால் என் பெற்றோர்கள் கூரியது இது தான். எங்களுக்காக பி.காம் படிப்ப இப்போ படி, அப்பறமா உனக்கு பிடிச்ச சினிமா வேலைய தேடிக்கோ. நானும் அவங்க பேச்ச கேட்டேன். பி.காம் எடுத்தேன்.
எவ்வளவோ விஷயத்துக்காக அப்பா அம்மா கிட்ட பிடிவாதம் பிடிச்ச நான் இந்த மிக முக்கியமான தருணத்தில் ரொம்ப தவறான அந்த முடிவை எடுத்தேன். தவறு தான்! காரணம் நாம படிக்கிற படிப்பு தான் நம்ம தொழிலை தீர்மானிக்கும். அதுக்காக தான நாம படிக்கிறோம்?
இப்போ பிரச்சனை என்னனா, இங்க இருக்கற நிறைய பெற்றோர்கள் இத தெரிஞ்சுக்கறதும் இல்ல! புரிஞ்சிக்கறதும் இல்ல!
Your children are not your children.
They are the sons and daughters of Life’s longing for itself.
They come through you but not from you,
And though they are with you yet they belong not to you.
You may give them your love but not your thoughts,
For they have their own thoughts. – Khalil Gibran
கிப்ரானுடைய இந்த அழகான வரிகள் நினைவிற்கு வருகிறது!!
பொருள்:
உங்கள் குழந்தைகள் உங்கள் மூலமாக இந்த உலகிற்கு வருகிறார்கள். உங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல! அவர்களுக்கு உங்கள் அன்பை காட்டுங்கள், உங்கள் கனவுகளை குடுத்துவிடாதீர்கள்!
நாம் அதையா செய்கிறோம்? நமக்கு கிரிக்கெட் வீரனாக ஆசை! அது நிறைவேறவில்லை. அதனால நம்ம குழந்தைய ஒரு கிரிக்கெட் வீரராக ஆக்க முயற்சிக்கிறோம்! ஆனா நம்ம குழந்தையோட ஆர்வம் ஓவியம் வரைவதில் தான்! இப்போ இங்க யோசிக்க வேண்டிய விஷயமே இது தான். கிரிக்கெட் மட்டையை வைத்து நல்ல ஓவியம் தீட்ட முடியுமா? ஒரு ஓவியராக முடியுமா? உங்கள் ஆசை என்னும் கட்டாயத்துக்காக உங்கள் பிள்ளையை கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்புகிறீர்கள். குழந்தை பயிற்சியில் ஆர்வம் காட்டுவதில்லை. சிறப்பாக கிரிக்கெட் விளையாட இயலவில்லை. இதில் மிக முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது – உங்கள் குழந்தைகள் உண்மையில் தங்களுக்கு ஆர்வம் உள்ள ஓவியத்தில் இருந்து திசை திருப்பப் படுகிறார்கள் . இது எவ்வளவு பெரிய தவறு என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்வது அவசியம். காலம் கடந்தபின் புரிந்து கொள்வதால் எந்த பயனும் இல்லை! பொறியியல் கல்லூரிகளுக்கு நன்கொடை, லட்சக்கணக்கில் கட்டணம் என்று பணம் செலுத்துவதை விட உங்கள் குழந்தைகள் விரும்பும் கல்விக்கு செலவிடுவது சரியானது. உங்கள் மகளின் கல்யாணத்திற்கு வரதட்சனை கொடுக்க சேர்க்கும் பணத்தை அவள் விரும்பும் துறைக்கு செலவிடுங்கள். அவர்கள் சுயமாக வாழ வழி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையை மட்டும் வாழுங்கள். உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையையும் சேர்த்து வாழ நினைக்காதீர்கள்!
இதே போன்று தான் உங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்க்கையும்! இதற்கு இன்றைய பெற்றோர்கள் கூறும் ஒரே பதில் என்னும் காரணம் – எங்க அப்பா அம்மா கிட்ட இப்படி பேசிட்டு இருக்க மாட்டோம். அவங்க சொன்னத செஞ்சோம். அவங்க சொன்ன ஆள தான் கல்யாணம் பண்ணோம். அவங்க சொன்ன படிப்ப தான் படிச்சோம். அன்றைக்கு சூழலே வேறு. நம்ம பாட்டன் காலத்துல ரெண்டு மனைவிகளோடு இருந்தார்கள். இன்றைக்கு நீங்கள் அப்படியா வாழ்கிறீர்கள்? உங்கள் தலைமுறைக்கான மாற்றம் என்று ஒன்று இருந்தது. அதை நீங்கள் அனுபவித்தீர்கள். இன்றைய தலைமுறைக்கான மாற்றம் இது தான். அதை தடுத்து நிறுத்தாதீர்கள். இதில் உங்கள் பிள்ளைகள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படவில்லை, இந்த சமூகத்தில் வாழும் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கிறது. சமூகம் இந்த நாட்டில் தான் உள்ளது. அதனால் நாட்டின் வளர்ச்சியும் சேர்ந்தே பாதிக்கிறது. இதுவரை பெற்றோர்கள் எப்படி தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் சமுதாயத்தை பாதிக்கிறார்கள் என்று பார்த்தோம்.
இப்போது உங்கள் சுயநலத்தால் எப்படி சமுதாயத்தின்(அதாவது இந்த நாட்டின்) மற்ற குழந்தைகளின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள் என்று பார்ப்போம். ஆம்! அரசு பணிகள் மற்றும் பிற அதிகாரங்களில் அமர்ந்து கொண்டு நீங்கள் செய்யும் ஊழல், லஞ்சம், மோசடி குற்றங்களால் இந்த நாட்டின் ஒவ்வொரு இளைஞன்(பிறர் வீட்டின் குழந்தைகள்) தலையிலும் கையை வைக்கிறீர்கள்! இதை சந்திக்க விரும்பாதவர்கள் எங்கு பிரச்சனை இல்லையோ அங்கு செல்கிறார்கள். இப்படி உங்கள் குழந்தைகளின் கனவுகளையும் திசை திருப்பிவிட்டு, அடுத்தவர் வீட்டு பிள்ளைகளின் கனவுகளையும் தடுத்துக் கொண்டு இருந்தால் நாடு எப்படி முன்னேறும்?
There can be no keener revelation of a society’s soul than the way in which it treats its children – Nelson Mandela
நெல்சன் மண்டேலாவின் வரிகள் – ஒரு குழந்தையை எவ்வாறு நடத்துகிறது என்பதை விடவும் ஒரு சமுதாயத்தின் மனநிலையை வெளிபடுத்த முடியாது.

நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருக்கிறது என்றாலும் அதற்கு அடிக்கல் அவர்கள் கல்வி, திறன், முன்னேற்றத்திற்கு தடை இல்லாத இன்றைய பெற்றோர்கள் தான்!
அன்புடன்
ஜெகன்
(30-5-2016)