புதன், 28 டிசம்பர், 2016

ஏகாதிபத்தியம்


மனிதர்களாகிய நம்மை சுற்றி பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல், மதம், நாடுகள், நாடுகள் இடையேயான உறவுகள், பொருளாதாரம், வணிகம், விளையாட்டு, ஊடகம். இவை அனைத்தும் மனித வாழ்வை மேம்படுத்துவதற்காக நிகழக்கூடியவை. இவை தவிர போர், ஆக்கிரமிப்பு, சதி போன்றவையும் நடைபெற்று கொண்டே வருகிறது.
பின் கூரியவை யாவும் முதலில் நடைபெற்று வரும் விஷயங்களை தன் கட்டுகோப்புக்குள் வைக்கவே. யாருடைய கட்டுக்கோப்பு? அரசியல் செய்பவர்கள், மதங்களை முன்னிறுத்துபவர்கள், வணிகம் செய்பவர்களால். முக்கியமாக அரசியல்வாதிகளால். அவர்கள் தான் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள். அவர்கள் உத்தரவின் பேரில் தான் போர்கள், ஆக்கிரமிப்புகள் நிகழ்கின்றன. அரசியல்வாதிகள் தங்களாகவே இந்த முடிவை செய்கிறார்களா.. இல்லை. அவர்களை செயலாற்ற வைக்கும் வணிக முதலைகள், மதவாதிகள் போன்றோரால் செயல் படுகிறார்கள். அதன் படி நடந்துகொள்கிறார்கள்.
இவை எல்லாம் எதன் அடிப்படையில் நடைபெறுகிறது? அந்தந்த நாட்டின் அல்லது நிலம் இருக்கும் பகுதியை, அதன் சுற்று சூழல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிகழ்வது இயல்பு. அப்படி ஒரு சூழல் இல்லையேல் அதனை உருவாக்குவார்கள்! யார்? அதே அரசியல் செய்பவர்கள், மதங்களை முன்னிறுத்துபவர்கள், வணிகமுதலைகள். அந்த சூழல் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அது அந்த நாட்டின், பகுதியின் வாழ்வை மேம்படுத்துவதர்க்கான விஷயத்தை பாதிக்கும் ஒன்றாக இருக்கும். அதை காரணம் காட்டியே மக்களின் ஆதரவை பெற்று செயலாற்றுவார்கள்.
இதன் பெயர் சதி(Conspiracy). இதற்கு முழு ஆதாரங்கள் இருக்காது. அதை நிரூபிக்க இயலாது. காரணம் நிரூபிக்கபட்டால் அதன் நோக்கம் சிதைந்து விடும். இவை பற்றி மக்கள் நிறைய பேசுவார்கள். சில வதந்திகளாக கூட இருக்கலாம். ஆனால் நிறைய நேரங்களில் அது ஒரு முழு பூசணியை சோற்றில் மறைக்கும் கதை போல் தான். ஏன் என்றால் சூழல் உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. அதை சாதகமாக பயன்படுத்த முயல்வார்கள் உருவாக்கியவர்கள். விளைவு அரசியல் நன்மை, செய்தவர்க்கு.
இந்த சதி என்னும் விஷயம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தலைப்பு. காரணம் அது ஒரு சுவாரஸ்யமான தலைப்பு. அதை நிரூபிக்க இயலாது என்றாலும் அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் தான் அதனை கவனிக்க வைக்கிறது. உண்மையோ என்றும் எண்ணத் தூண்டுகிறது.
சதியாலோசனைகள் பலவற்றுள் 2001-ல் அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 தாக்குதல்கள் பிரபலமான ஒன்று.
9/11 தாக்குதல்கள் நடைபெறுவதை முதலே தெரிந்தும் அதனை அமெரிக்க அரசு அமைதியாக பார்த்துகொண்டு இருந்தது என்றும் அதற்கான காரணங்கள் என்று சில கூறப்படுகின்றன.
பரவலாக நம்பப்படும் ஒன்று – தாக்குதல்கள் நடைபெற்றால் தான் அமெரிக்கா எண்ணெய் கிணறுகள் உள்ள மத்திய கிழக்கு நாடுகளில் படை எடுத்து அதனை ஆக்கிரமித்து உலகின் வல்லரசாக நீடித்திருக்க முடியும் என்பது.
மற்றொன்று, டிவின் டவர்ஸ் என்று அழைக்கப்படும் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த கட்டிடத்தை நிலைக்குலைய செய்ய வெடிபொருட்கள் தேவை. வெறும் விமான தாக்குதல்கள் போதாது. அதனால் ஏற்கனவே அந்த கட்டிடத்திற்குள் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. கட்டிடத்தை தாக்குதல்களுக்கு சில நாட்கள் முன்னர்தான் புதிய உரிமையாளர் ஒருவர் வாங்கினார் என்றும் அந்த கட்டிடம் சேதம் அடைந்ததால் காப்பீட்டு பணம் 500 மில்லியன் டாலர்கள்(அன்றைய இந்திய மதிப்பில் சுமார் 2400 கோடி) பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் மூலம் அடைந்த காப்பீட்டு லாபத்திற்காக என்பதே இந்த காரணம்!
இன்னொன்று, வர்த்தக மைய கட்டிடங்களில் வைத்திருந்த 950 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க கட்டிகளில் கட்டிடம் சேதம் அடைந்த பின் 230 மில்லியன் மதிப்பு தங்கம் மட்டுமே கண்டெடுக்க பட்டது. மீதம் உள்ள 720 மில்லியன் டாலர் மதிப்பு தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. மிகப்பெரிய இந்த கொள்ளைக்காகவே தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததாகவும் பேசப்பட்டது.
மூன்று காரணங்களில் கடைசி இரண்டும் சதியாக தோன்றவில்லை. ஒரு கட்டிடம் இடிந்தால் அதன் காப்பீட்டு பணம் பெறப்படுவது நடைமுறையில் ஒன்று.
கடைசி காரணமான தங்கம் கொள்ளை என்பதை இடிந்த ஒரு கட்டிடத்தில் நடைபெற்றதாகதான் பார்க்க முடியும்.
முதலில் சொல்லப்படும் காரணம் உண்மையோ பொய்யோ! அதாவது அமெரிக்கா தன் அரசியல் சுயநலத்திற்காக தெரிந்தே தங்களின் மக்களை காவு கொடுத்துவிட்டதா? இந்த கோணத்தில் பார்த்தல் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் தாக்குதல்களிலும் தன் மக்களை அந்தந்த நாடுகளே பலிகடாக்கள் ஆக்குகின்றனவா? ஒரு போதும் கிடையாது!
9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அமெரிக்கா அந்த தாக்குதலை பயன்படுத்தி எண்ணெய் கிணறுகள் உள்ள மத்திய கிழக்கு நாடுகளில் போர் தொடுத்தது. அவற்றை கைப்பற்றி வல்லரசாக நிலைத்திருப்பதற்காக!
ஒரு சந்தர்ப்பத்தை தன் வசப்படுத்தியது என்றே சொல்லலாம்!
அதன் மூலம் உலக அரசியலில் தான் ஒரு அயோக்கிய நாடு என்பதை நிரூபித்து கொண்டு வருகிறது! காரணம் தன் நாட்டில் தாக்குதல் நடத்திய தீவிரவாத இயக்கத்திற்கு போட்டியாக அதன் நாட்டிற்குள் நுழைந்து அதன் வளங்களை கொள்ளை அடித்ததை என்னவென்று கூறுவது?
ஐக்கிய நாடுகளின் சபை (United Nations Organisation) என்று ஒன்று எதற்காக இருக்கிறது?? அங்கு அமெரிக்கா என்ற நாடு உறுப்பினர் தானே? உலக நாடுகளின் ஒற்றுமைக்காக உள்ள ஒரு அமைப்பில் இருந்து கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபடும் அமெரிக்கா எதற்காக அந்த அமைப்பில் இருக்க வேண்டும்? அங்கும் தன் ஆதிக்கத்தை செலுத்தவே! இப்படியெல்லாம் செய்துதான் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி பிடித்துகொண்டிருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள்? மத்திய கிழக்கு நாடுகளில் போர்!
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நிறுத்திவைப்பு! இது ஒற்றை வாக்கியம் அல்ல. வரலாற்று நிகழ்வு.
தங்கள் நாட்டிலுள்ள எண்ணெய் வளங்களை அமைதியாக பிறகு பார்த்துகொள்ளலாம் என்று பதுக்கி வைத்துக்கொண்டு அடுத்த நாட்டின் வளத்தை சுரண்டுவதற்கு பெயர் தான் வல்லரசோ!?
இவர்கள் இராணுவத்தை அனுப்பி போர் நடத்தியது உலகில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதி. தற்போது இஸ்லாமியர்கள் யாரும் தங்கள் நாட்டினுள் நுழையாத படி தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் திரு.டோனல்ட் டிரம்ப் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்! அதற்கான நியாயத்தையும் படிக்கும் படி கோருகிறார்.
அவரிடம் நான் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான். அப்படி நீங்கள் அமெரிக்க அதிபராக வந்தால், நீங்கள் விரும்பும் சட்டம் நிறைவேற்றுகையில் அதனுடன் சேர்த்து அமெரிக்கர்கள் யாரும் இஸ்லாமியர்கள் வாழும் நாட்டிற்குள் நுழைய தடை என்ற என் கோரிக்கையையும் சேர்த்து நிறைவேற்றுவீர்களா??
உங்கள் நாட்டில் தாக்குதல் நடத்தியவனை பிடிக்கிறேன் என்று கூறி அவன் ஒளிந்திருந்த பாகிஸ்தான் நாட்டிற்குள் வரம்பின்றி நுழைந்து அவன் தங்கி இருந்த வீட்டின் படுக்கையறைக்குள் சென்று “ஒசாமா.. ஒசாமா..” என்று காதில் ரசசிய செய்தி ஒன்றை உரைப்பது போல் அவனை சுட்டு தள்ளி விட்டு அவன் உடலை கல்லில் கட்டி கடலில் இறக்கிவிட்டோம் என்றும் அறிவிப்பீர்கள்!
ஆனால் பிறர் நாட்டில் தாக்குதல்கள் நடத்திய குற்றவாளிகளை தங்கள் நாட்டின் சிறைக்குள் அடைத்து வைத்துகொண்டு வீடியோ கான்பரன்சிங்க் மூலம் அடாவடி செய்கிறீர்கள்!
உங்களுக்கு வந்தால் அது  ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னியா?
இன்றைய நவீன தொழில்நுட்ப அறிவியல் காலத்திலும் உலகத்தை அமெரிக்கா தான் முண்ணிருந்து வழி நடத்தி செல்வதாக சொல்லிக்கொள்கிறீர்களே. இதுதான் அதன் அழகா!
அன்புடன்
ஜெகன்
(18-06-2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக