புதன், 28 டிசம்பர், 2016

புகையெனும் நரகாசுரன்!


இந்த மாதம் தமிழகத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் சற்றே யோசிக்கச் செய்கிறது. ஒன்று செய்திகளில் பார்த்த விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசு ஆலயத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் ஐந்து பேர் உயிர் இழந்த சம்பவம். மற்றொன்று சென்னையில் இந்தியாவின் முதல் மின்சார பேருந்தை அசோக் லேலாண்ட் நிறுவனம் வெளியீடு செய்துள்ளது!
இவ்விரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு என்றால் அது சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விஷயத்தில் தான்!
தீவாவளி சீசனில் இது போன்று பட்டாசு ஆலய விபத்துக்கள் ஏற்படுவது சாதாரண ஒரு விஷயமாகவே பார்க்கப் படுகிறது. ஒவ்வொரு வருடமும் இது போன்ற பட்டாசு ஆலயத் தீ விபத்தால் உயிர் இழந்தோரின் குடும்பங்கள் தீபாவளி பண்டிகையை தியாகம் செய்து மற்றவர் அனைவரும் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சிவகாசியில் ஒரு மருத்துவ சோதனை கூடம் அருகே பட்டாசுகளை வண்டியில் ஏற்றும் பொழுது நிகழ்ந்த தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள்! அவர்கள் உயிர் இழந்தது பட்டாசு வெடித்ததில் காயப்பட்டு இல்லையாம். வெடித்த வெடிப் பொருட்களின் புகையை சுவாசித்து ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக. இது மிகவும் மோசமானது. அதே பட்டாசுகளையே நாம் அடுத்த சில நாட்களில் வெடித்து கொண்டாடவிருக்கிறோம்.
நான் எனது சிறு வயதில் தீபாவளி கொண்டாடிய பொழுது என் உறவினர் அண்ணன் என் கையை பிடித்து குருவி வெடியை வெடித்த ஞாபகம் இருக்கிறது. அது காலப் போக்கில் தீபாவளி தினத்தன்று மாலை மொட்டைமாடிக்குச் சென்று வானவெடிகளை வேடிக்கை பார்ப்பதும், அதை கேமெராவில் படம் பிடிப்பதுமாக மாறியது. தற்பொழுது தீபாவளியன்று புதுப்பட வெளியிடலை திரையரங்குகளில் பார்த்து ரசிப்பதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதுமாக இருந்து வருகிறது.
ஆனால் அன்றும் இன்றும் தீபாவளி பண்டிகையன்று காலையில் எழுப்புவது என்னவோ பட்டாசு வெடிகளின் சத்தங்கள் தான். ஒன்று காற்றில் மாசு. மற்றொன்று ஒலியில் மாசு. இவை தான் தீபாவளியன்று நாம் இயற்கைக்கும், சுற்றுசூழலுக்கும் ஏற்படுத்தும் தீங்குகள்.
தீபாவளி பண்டிகைக்கு பல கதைகள் உள்ளது. ஆனால் பட்டாசு வெடிக்கும் கலாச்சாரம் என்பது நமது வழக்கத்திலே புதிதாக ஒட்டிக்கொண்ட ஒன்று தான். சிலர் பட்டாசு வெடிக்கும் கலாச்சாரம் அரேபிய கலாச்சாரம் என்றும் சிலர் பட்டாசு வெடிகள் சீனர்கள் கண்டுபிடித்தது என்றும் கூறுகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் தீபாவளி என்பது தீப+ஒளி என்பதன் இணைப்பு. தீபங்களை ஏற்றி வீட்டை அலங்கரித்தும், இனிப்புகள் வழக்கியும், நண்பர்கள் உறவினர்களை சந்தித்தும், புத்தாடைகள் அணிந்தும் கொண்டாடி மகிழ்வதால் எந்த தொந்தரவும் ஏற்படாது.
இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் மாசு காரணமாக புவி வெப்பம் அடைந்து பல்வேறு சிக்கல்களை பூமி சந்தித்து வருகிறது. இதனால் பருவ நிலைகளில் பெரும் மாற்றம், அண்டார்டிகாவில் பனி மலைகள் உருகி பூமியின் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து பல தீவுகளும் பல சிறிய நாடுகளும் அழியும் தருவாயில் உள்ளன. இதற்கு எல்லாம் நாம் வெடிக்கும் தீபாவளி பட்டாசு தான் காரணமா என்றால் முழுமைவதுமாக கிடையாது, ஆனால பங்குள்ளது.
உலகின் பருவநிலை மற்றங்களை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒருங்கினைந்து போராடத் துவங்கியுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் புவியின் வெப்ப நிலையை இரண்டு டிகிரி செல்சியஸ் குள்ளாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதே இன்றைய உலக நாடுகளின் குறிக்கோள்! இதற்கான முயற்சியாக உலக நாடுகள் கையில் எடுத்திருக்கும் வஸ்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடைய தொழில்நுட்பத்தையே பயன்படுத்துவது என்பது.(Sustainable environment through renewable energy)
நிலையான ஒரு சுற்றுசூழலை உருவாக்க இயற்கையின் போக்கை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் இருப்பது அவசியம். அந்த விதத்தில் மின்சாரப் பேருந்திற்கு மிக முக்கிய பங்குள்ளது. இதற்கு எரிபொருட்களும் தேவையில்லை, இந்த பேருந்துகள் புகையையும் வெளியிடுவதில்லை. இதன் நோக்கம் டீசல் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்துவதாக சொல்லப்படுகிறது. அப்பொழுது காற்றில் மாசு என்பது அதிக அளவில் குறையும்.
மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களும் மகிழுந்துகளும் வர துவங்கியுள்ளது வரவேற்புடையது.
இன்று சீனாவில் சுத்தமான காற்றை விலை கொடுத்து வாங்கும் கொடூரமான நிலை உருவாகியுள்ளது. இதற்கு நாம் நடவடிக்கை எடுக்காவிடில் வேறு எதை பற்றியும் சிந்தித்து எந்த பயனும் கிடையாது. நம் ஊரில் இன்று தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நாம் நாளை காற்றுக்கும் விலை கொடுக்காத நிலை இருந்தல் வேண்டும்.
அதற்கு ஒரே தீர்வு இயற்கையோடு ஒன்றி வாழப் பழக வேண்டும். அதன் ஒரு முயற்சியாகவே இன்றைய மின்சாரப் பேருந்தை நான் பார்க்கிறேன்.
அன்புடன்
ஜெகன்
(22-10-2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக