மே மாதம்.. கடந்த சில வருடங்களாகவே கவலை அளிக்கும் மாதமாக இருந்து வருகிறது, தமிழர் இனப்படுகொலை நடத்தப்பட்ட மாதம் என்பதால்! முள்ளிவாய்க்கால் நினைவு நாளான ஒவ்வொரு மே 18ம் தேதி அன்றும் அந்த கவலையை ஒரு விதமாக வெளிப்படுத்த தோன்றும். தமிழர் போராட்டம் பற்றி என் நண்பனோடு விவாதிப்பேன், பேஸ்புக் பதிவு போடுவேன், மெரினா கடற்கரைக்கு சென்று அமர்ந்து விட்டு வருவேன். இப்படி ஏதாவது செய்வேன். இந்த வருடம் மே 18 அன்று சென்னையில் நல்ல மழை! அதற்கு முந்தைய வாரங்கள் அடித்த வெயிலின் தாக்கத்தை சற்று தனித்தது அந்த மழை. இந்த வருடம் மே 18 அன்று எந்த பதிவும் போடவில்லை, எந்த நண்பனிடமும் பேசவில்லை, கடற்கரைக்கும் செல்லவில்லை. அலுவலகம் சென்றுவிட்டு பிறகு அங்கிருந்து கொட்டும் மழையில் நனைந்தபடி ஒரு சினிமாவிற்கு சென்று வீடு திரும்பினேன்!
கடந்த வாரம் வலைத்தளத்தில் மே 29ம் தேதி மெரினா கடற்கரையில் ‘மே17 இயக்கம்’ என்ற சமூக உரிமை இயக்கம் தமிழர் இனப்படுகொலைக்கான நினைவேந்தல் கூட்டம் ஒன்றை ஒருங்கிணைப்பது தெரிய வந்தது. நிச்சயம் பங்கேற்பது என்று முடிவு செய்தேன். கடந்த 7 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 3ம் ஞாயிறு அன்று மெரினா கண்ணகி சிலை அருகில் இந்த கூட்டம் நடந்து வருகிறது என்று அறிந்து கொண்டேன். இம்முறை தேர்தல் காரணத்தால் மே 29ல் நினைவேந்தல் நடந்தது. இனியும் தொடரும்!
மாலை 4 மணி அளவில் நான் சென்றேன். கடற்கரையில் பாதுகாப்புக்கு காவல்துறை இருந்தது. நினைவேந்தல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. சிலவற்றை வாங்கினேன். இயக்கத்தின் நபர் ஒருவரிடம் சிறிது உரையாடிவிட்டு கூட்டத்தில் சென்று அமர்ந்தேன். என்னுடன் பள்ளியில் ஒரே வருடம் படித்த நண்பன் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் என்று புரிந்தது. 2007-08 சமயங்களில் இருந்தே தீவிரமாக தமிழர் விடுதலைக்காக குரல் கொடுக்ககூடிய அவர் அங்கு ஒருங்கிணைப்பாளராக இருந்ததில் எனக்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பெருமை தான்.
கேள்விக்கணைகளை தொடுக்கும் பதாகைகளை தோழர்கள் நினைவேந்தலில் பங்கேற்றவர்களுக்கு கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஒன்றை பெற்றுக்கொண்டேன்.
சிறிது நேரம் கழித்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியின் நிழற் படக் கருவிகள் நிகழ்விற்கு வந்த ஒருவரை சூழ்ந்து கொண்டது. கூட்டத்தில் எழுந்தவர்களை மெதுவாக அமரும்படி கை அசைத்து விட்டு மக்களோடு மக்களாக அமர்ந்தார் திரு.வைகோ!
பறை வாசிப்புடன் நிகழ்வு தொடங்கியது. பிறகு மேற்கு வங்கத்தில் இருந்து வந்த ஒரு குழு மௌன நாடகம் ஒன்றை நிகழ்த்தினார்கள். யுத்தம் ரத்தம் இனி வேண்டாம் எனும் கருத்தை கொண்டிருந்தது அவர்களின் நாடகம். அதற்கடுத்து மே17 இயக்கத்தின் இளைஞர்கள் சேர்ந்து ஒரு வீதி நாடகத்தை நிகழ்த்தினார்கள். தமிழ் ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளையும், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் நடந்திய போராட்டத்தையும், அதற்கு இங்குள்ள அரசியல்வாதிகளின் செயல்களையும் நினைவு படுத்தும் விதமாக அமைந்திருந்தது நாடகம்.
இப்படி நகர்ந்து கொண்டிருந்த நினைவேந்தலில் சில நூறு பேர் மட்டுமே பங்கேற்றார்கள். காசுக்கும் பிரியாணி பொட்டலத்திர்க்கும் மயங்காத சில நூறு பேர் கொண்ட கூட்டம் அது!
இயக்கத்தினர் இனப்படுகொலைக்கு எதிரான முழக்கங்களை எழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்பினோம். துரோகத்தை எதிர்த்து! அநீதியை கேள்வி கேட்டு! நீதி வேண்டுமென்றும்! உரிமைகள் வேண்டுமென்றும்! உலகம் அறிய தமிழர்களுக்கு நீதி கிடைக்க தமிழ் ஈழம் பிறக்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பினோம். உரிமை போராட்டத்தில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாகவும், உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்வில் உரிமைகள் கிடைத்து அவர்கள் வாழ்வதற்காகவும் தலைவர்கள் மற்றும் போராளிகள் நினைவேந்தல் சுடரை ஏற்ற; வந்திருந்த இளைஞர்கள், பெரியவர்கள், குடும்பத்தினர் அனைவரும் தங்கள் கைகளில் இருந்த மெழுகு வர்த்தியை ஏற்றி உயர்த்தி பிடித்து தமிழீழப் போராளி மக்களுக்கு வீர வணக்கத்தை செலுத்தினார்கள். மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் அவர்கள் நினைவேந்தல் உரையை வழங்கினார். அத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
அதனை பார்க்க : https://www.youtube.com/watch?v=yjd0HP3J5Zw
மே 17 இயக்கத்தின் இணையதள முகவரி : http://may17iyakkam.com/
இந்த உலகின் ஒரு பகுதியில் வாழும் மக்கள் தங்கள் நாட்டில் சகோதர சகோதரிகளாக பார்க்கப் படவேண்டியவர்களால் விரோதம் கொண்டு நசுக்கப்பட்டு தங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு போராட்டதிற்கு தள்ளபடுகிறார்கள். ஆயுதம் ஏந்தும் நிலை. ஒரே குறிக்கோள். ஒரே லட்சியம். தங்கள் கனவு நாடான தமிழ் ஈழம் பிறக்க வேண்டும். இதற்கிடையில் பல்வேறு அரசியல் சதிகள், அத்துமீறல்கள் போராட்டத்தையும் போராளிகளையும் ஒடுக்க முயற்சிக்கின்றன. எதுவும் எடுபடவில்லை. மாறாக சதிகாரர்களையும் சேர்த்தே எதிர்க்கிறார்கள் போராளிகள். ஒரு சுதந்திர நாட்டிற்கு தன் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் தன் நாட்டிலேயே தன் மக்கள் வதைக்க படுவதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது. அதன் விளைவாகவே அவர்களின் தனி தேசம் வேண்டும் என்று கேட்கிறார்கள். அது அவர்களின் உரிமை! இன்று தேசங்கள் உருவாவதற்கு காரணமும் அதுவே! உரிமைக்கும் வாழ்விற்கும் தனி நாடு தேவை இல்லை என்றால் உலகம் ஒன்று தான். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பது நிஜமாகும் பட்சத்தில் யாரும் தனி தேசம் கேட்கபோவதில்லை. அதுவரையில் என்ன நிலை??? தேசங்கள் நிலைப்பது, புதிய தேசங்கள் உருவாவது. தேசங்களின் பாதுகாப்பிற்கு ஆயுதம், ராணுவம். அவற்றின் செலவு தங்கள் நாட்டு மக்களின் பசியையும் பட்டினி சாவுகளையும் சுகாதாரத்தையும் விடவும் முக்கியமானது! இன்று உலகின் நாடுகள் பாதுகாப்பிற்காக வைத்துள்ள ஆயுதங்கள் உலகை பல நூறு முறை அழிக்கும் வல்லமை கொண்டது! இது தான் இன்றைய தேசங்களின் வெற்றியா???
உரிமைகள் மறுக்கப்படும் மக்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும். பாதுகாப்பு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் அழிவுகளும் நிறுத்தபட வேண்டும்!
இயற்கைக்கு எல்லைகள் தேசங்கள் கிடையாது. உலகின் ஒற்றுமைக்கும் நலனுக்கும் அனைவரும் இணைந்தே போராட வேண்டியது அவசியம்.
தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் பலர் எப்படி எல்லா சூழல்களையும் தங்கள் அரசியல் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துவார்களோ அவ்வாரே இந்த பிரச்சனையிலும் நடந்துகொள்கிறார்கள். இலங்கை வடமாகாணத்தின் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியாவிற்கு வந்திருந்தபோது இந்த பிரச்சனை சம்பந்தமாக உணர்ச்சிவசப்பட்டு பேசவேண்டாம் அது தங்களை பாதிக்கும் சுழல் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அதை மனதில் வைத்து கொண்டு பேச வேண்டும். அங்கு ‘இலங்கை தமிழ் அரசு கட்சி’ தேர்தலில் வெற்றி பெற்று வடக்கு மாகாணத்தில் ஆட்சியில் இருந்தும் ராணுவத்தின் பிடியில் தான் தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கை மத்திய அரசின் ஒத்துழைப்பு முழுவதுமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் வாழும் மக்களின் உணர்வு, உதவி மற்றும் அனைத்து நன்மைகளும் தேவை என்றே இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நினைக்கிறார்கள். அவர்களில் இந்தியாவில் இருந்து சென்ற மலையக தமிழர்களும் உள்ளார்கள்.
Transnational Government of Tamil Eelam – நாடு கடந்த தமிழீழ அரசு உருவானது உங்களுக்கு தெரியுமா?
அதன் பிரதமர் பெயர் தெரியுமா?
பதினொரு நாடுகளில் வாழும் தமிழ் ஈழம் மக்களால் தேர்தல் நடத்தப்பட்டு உருவானது இந்த அரசாங்கம்.
அதன் இரண்டாம் பாராளுமன்ற பதவிக்காலம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது!
லட்சத்திற்கும் மேலான புலம் பெயர்ந்த ஈழம் தமிழர்கள் வாழும் இந்தியாவில் இந்த வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
மே 17 இயக்கம் போன்ற இயக்கம் மூலம் மக்கள் தங்கள் நியாயத்திற்கான ஆதரவு குரலை வலுபடுத்த முடியும். மீண்டும் அடுத்த மே மாதம் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் நிகழும் ஒவ்வொரு மக்கள் விரோத செயல்களையும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.
அன்புடன்
ஜெகன்
(06-06-2016)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக