“கடவுள்”
ஒற்றை சொல்! அது என்றும் மேலே தான். நாம் எல்லாம் அதற்கு கீழே!
நான் கடவுள் மறுப்பாளன் அல்ல! காரணம். நான் நம்புவது அப்படி. கடவுள் யாரையும் படைக்க வில்லை. மாறாக மனிதனே தன் தேவைக்காக கடவுளை உருவாக்கினான்.
என் பெயர் ஜாதக பெயர். என் பெற்றோர்கள் எனக்கு வைத்தது. அதற்காக நான் அவற்றை நம்பபோவதும் இல்லை. ஏன் என்பதை பிறகு பார்ப்போம்.
‘கடவுள்’ என்னும் சித்தாந்தம் பற்றிய நிறைய மாறுபட்ட கருத்துக்கள் கீழ் உலகம் முழுவதும் நிலவி வருகிறது. அதை யாரும் மறுக்க முடியாது. மதங்களே அதற்கு சாட்சி!
உலகம் முழுவதும் சுமார் எத்தனை மதங்கள் உள்ளது என்று சொல்ல முடியுமா?
ஆயிரம்! ஆம்! சரியான எண்ணிக்கை இல்லை என்றாலும் ஆயிரத்திற்கும் மேலே எண்ணிக்கையில் உலகில் மதங்கள் உள்ளன. அதில் ஒரு பதினொரு மதங்கள் முக்கிய மதங்களாக கருதப்படுகின்றன. அப்படி பார்த்தால் ஒரு ஆயிரம் மாறுபட்ட கருத்துக்கள், கடவுளை பற்றி!
கடவுள் என்னும் சித்தாந்தம் வெவ்வேறாக பார்க்க படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும். அபிப்பிராயம் இல்லாதவர்குளும் உண்டு. நீங்களே இப்பொழுது உங்களை கேட்டுபாருங்கள்.. ‘கடவுள் என்றால் என்ன?’ உங்கள் பார்வையில்.
ஒரு விடை கிடைத்திருக்கும். அப்படி ஒன்றும் இல்லை என்பதும் ஒரு விடை தான். இது போன்று பல கருத்துக்கள் உள்ளது. கடவுள் என்றால் சர்வ வல்லமை கொண்டவன், உலகை படைத்தவன், காப்பவன், அழிப்பவன், அவன் இல்லாமல் அணுவும் அசையாது, உருவம் அற்றவன், இன்னும் பல..
இப்போது நீங்கள் உங்களுக்கு கிடைத்த விடையை கீழ் வருபவையில் ஒன்றாக இருக்குமா என்று பாருங்கள். கடவுள் என்றால் நம்மை எல்லாம் படைத்தவன்(இது உங்கள் பதிலாக இருந்தால்.. நீங்கள் நிறைய யோசிப்பவறல்ல என்றே நான் கருதுகிறேன்.) கடவுள் என்றால் நம்பிக்கை, சக்தி, இயற்கை, பயம், தெளிவு, பிறரிடம் கொண்டுள்ள அன்பு, மனசாட்சி, உண்மை, அப்படி ஒன்று இல்லவே இல்லை. இவைகளெல்லாம் ஒரு தனிப்பட்ட நபர் சுயமாக சிந்தித்து கூறும் பதில்கள். அதற்கு முன்னர் கூறியவை எல்லாம் மதங்கள் மூலமாக சிந்திக்க விடாமல் திணிக்க பட்ட கருத்துக்கள்.
எனக்கு கிடைத்த விடை இது தான் – கடவுள் என்றால் உண்மை. இது நான் கடவுளை பற்றி சிந்திக்க ஆரம்பித்து, தேடும் பொழுது கிடைத்த விடைகளில் ஒன்று. என்னை ஓரளவு ஈர்த்த பதிலும் இதுவே. அதன் அடிப்படையில் தான் நான் கடவுளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். அதன் விளைவாகவே என்னால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. முதலில் சொன்ன, மனிதன் தான் தன் தேவைக்காக கடவுளை உருவாக்கினான் என்ற முடிவு. இது ஒரு மாற்று சிந்தனைக்காக கூறுவது அல்ல. அதனை விளக்கவும் கடமை உள்ளது எனக்கு.
உண்மையாகவே மதங்கள் போதிக்கும் கடவுள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள உண்மையை தேடினாலே விடை கிடைத்து விடும் என்றும் உணர்ந்தேன்.
அவர்கள் சொல்லும் ஒன்று இல்லவே இல்லை என்பதே உண்மை. முக்கியமான மதங்களால் சொல்லப்பட்டு வரும் எந்த ஒரு விஷயமும் கட்டுகதைகளே. இதை பற்றி ஆராய்ந்தும் பலரிடம் பேசியும் வந்துள்ளேன். ஒரு கோவிலிற்குள் செல்கிறோம் அங்குள்ள கடவுள் சிலையை வணங்குகிறோம், கோவிலை சுற்றி வருகிறோம், கரணம் இடுகிறோம், விழுந்து கும்பிடுகிறோம், துளசி நீரை பெற்று குடிக்கிறோம், கடவுள் சிலைக்கு தீபம் காட்டுவார்கள் அதை கும்பிட்டு சாம்பல், குங்குமம், சந்தனம் பெற்று நெற்றியின் மைய பகுதியில் அதனை பூசிக்கொள்கிறோம். ஆலையங்களில் மணி எழுப்ப படுகிறது, சாப்பிட பிரசாதம் தரப்படுகிறது. இன்னும் பல. இவை அனைத்திற்கும் ஒரு காரணம் கற்பிக்க படுகிறது. ஐந்து புலன்களும் செயலாற்ற படுகிறது(It activates our senses) என்பது அந்த காரணம். உதாரணம் – கோவில் மணி ஓசை செவியினை செயல் படுத்துவது, தீபம் கண்களை செயல் படுத்துவது. இதை எல்லாம் காலையிலும் மாலையிலும் செய்தால் அந்த நாள் நல்ல புத்துணர்ச்சியோடு செயலாற்ற முடியும் என்றும் கூறபடுகிறது. இதையே தான் தியானம் செய்பவர்களும் சொல்கிறார்கள். அந்த நாளை நன்றாக செயல் படுத்த, செயல் படுத்தினால் நாம் செய்யும் வேலையில் நல்ல விளைவுகள் கிடைக்கும். வெற்றி பெற முடியும். இதில் எங்கிருந்து நம்மை படைத்தவன் என்று ஒருவன் வருகிறான்? கோவிலை அரசர்கள் கட்டினார்கள். மக்கள் நன்றாக இருக்கவும், அவர்கள் புகழ் நிலைத்திருக்கவும். காலையில் நல்ல இசையை கேட்டாலும் செவியை செயல்படுத்த முடியும். இசை என்பது நல்ல இசை. கடவுள் துதி பாடும் இசை அல்ல! கடவுள் துதி என்பது ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு கடவுளுக்குமான விளம்பர பாடல் தான். இந்த கோயிலுக்கு வந்தா எல்லா நோய்யும் தீரும், இந்த கோயிலுக்கு வந்தா வெற்றி கிடைக்கும், கேட்ட வரம் கிடைக்கும் இப்படி எல்லாம் விளம்பர படுத்தி வரவழைப்பது. வந்தா கட்டணம், வசூல். சில மனித கடவுள்களும் இதற்கிடையில் அவதரித்து விட்டன. அதுகள் யுக்தி ரொம்ப மோசம். பணம் கறப்பதில் படு கில்லாடிகள் அவை. கடைசியா கடவுள் தரகர்களான ஆன்மிக குருக்கள்.
நாம் இன்று மாட்டிக்கொண்டுள்ள இடம் எப்படி பட்டது என்றால், நம்மை ஆண்டு விட்டு சென்ற கொள்ளைகாரனான வெள்ளையனிடம் இருந்து விடுதலை பெற்று வெள்ளையரோடு உறவாடிய நம் நாட்டு கொள்ளைகாரர்களிடம். இந்த கொள்ளைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் நாம் விழித்தெழாமல் உறங்கிகொண்டிருக்கும் வரை. அட எல்லா புலன்களும் செயல்படுத்த தான் கோவில், கடவுள் இருக்கிறதே! நம் நாளை நன்றாக பயன்படுத்தி வெற்றி பெற்று விமோச்சனம் அடைந்து விடுவோமே! சரி தானே?! விமோச்சனம் அடைந்து எங்கு செல்வீர்கள்?? உங்களுக்கு விமோச்சனம் அளித்த அந்த கடவுளிடமும், அதனை படைத்த எண்ணங்களிடமும் மனிதர்களிடமும், தன்னை கடவுள் என்று சொல்லும் கயவர்களிடமும், கடவுளிடம் அழைத்து செல்கிறேன் என்று கூறும் தரகர்களிடமும் தானே! அவர்களுக்கு தானே அடிமையாகிவிட போகிறீர்கள்!! உண்மையான விமோச்சனம் என்பது நம் ஏழ்மையில் இருந்தோ, தோல்விகளில் இருந்தோ அல்ல. இந்த மதம், கடவுள் எனும் சூழலிலிருந்து தான். காரணம் அவை தான் ஒளி வட்டம் ஒன்றை உருவாக்குகிறது. அவற்றை விட்டு வெளியேற வேண்டும். அவர்களின் பிடியிலிருந்து வெளியேற வேண்டும். அப்போது தான் எது சரி எது தவறு என்ற தெளிவே முதலில் கிடைக்கும்! சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியும். புரிந்தால் நம் தேவையை எளிதாக அடையமுடியும் ஒரு மனிதனாக, சமுதாயமாக, நாடாக! பிறகு இந்த ‘செயல் படுத்து’ முறைக்கு எங்கும் ஓட வேண்டியதில்லை. தெளிவு கிடைத்த பின் எது சரியான முறை என்பது புரியும், உடலளவிலும் மனதளவிலும். இதுவே சரி!
அப்போ மதங்களும் கடவுள்களும் தவறா? நிச்சயம் தவறு! சரி என்றால் எத்தனை சரி இருக்க முடியும். 1000 குறுஞ் சரிகள், 11 முக்கிய பெருஞ் சரிக்களா?? சற்று நகைச்சுவையாக தோன்றவில்லையா? இந்த நகைச்சுவைகள் செய்யும் வேலைகள் மூலம் பல குழப்பங்கள் நிலவுகிறது. அது சண்டை விரோதமாக மாறுகிறது. ஒருவருக்கு ஒருவர் பகை வளர்கிறது. பகை தீர்க்க தாக்குதல்கள் நடத்தபடுகின்றன. மக்கள் அழிக்க படுகிறார்கள். இந்த வேலைகள் அரசியலுக்காக தான். இதற்கு துணை நிற்பது மதங்களும் அவற்றின் கூச்சல் குழப்பங்களும் தானே. அப்போ அது தவறு தானே! மதங்கள் அமைதிக்காக தான் என்று கூறினால், அவைகள் முதலில் யாரையும் தெளிவடைய விடுவதில்லை கூச்சல் குழப்பங்களுக்கு வழிவகை செய்கின்றன, ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன. போட்டி தீவிரவாதமாக உருவெடுக்கின்றது! அது அழிவையன்றி வேறு எதை தருகிறது? அதற்கு தீர்வு இவைகளிலிருந்து சற்று வெளியே வருவது. மதங்களின் குழப்பங்களை மட்டுமே அரசியல் பயன்படுத்துவது இல்லை. தீவிரவாதத்தையும் பயன்படுத்துகிறது! இந்த அரசியல் போக்கை சரி செய்ய நல்ல அரசியல் தேவை படுகிறது. மதங்களின் போட்டி ஏன் தீவிரவாதமாக மாறுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. எந்த மதமும் தன்னை தீவிரவாதத்தோடு சொந்தம் கொண்டாடுவது கிடையாது. தீவிரவாதிகளோ மதத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள். அது மதத்திற்கு ஒரு போதும் நன்மை செய்யாது. தீங்கு மட்டுமே விளைவிக்கும். அதனால் என்ன? மதங்கள் சாகட்டும் நல்லது தானே என்று இருக்க முடியாது. காரணம் மதங்கள் செத்தால் எந்த பிரச்சனையும் கிடையாது இதற்கிடையில் மாட்டிக்கொண்டு மனிதர்கள் தானே சாகிறார்கள். ஆக எப்படி பார்த்தாலும் இந்த மதங்களும் அவை சொல்லும் கடவுள்களும் ஒன்றுக்கும் பிரயோஜனம் அல்லாத விஷயமாகவே இருந்து வருகிறது! மாறாக மதங்களை, கடவுள்களை நம்பாதவர்கள் வாழும் நாடுகளில் குற்றங்கள் குறைவாக உள்ளது! வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மேலே இருக்கின்றன! மக்கள் அங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பிறகு எதற்காக கோவில்களையும் கடவுள்களையும் நாடி செல்ல வேண்டும்?
அது அறிவியல் அது நம் நன்மைக்காகவே என்றால், நம்மை சுற்றி உள்ள நாம் பயன்படுத்தும் அனைத்தும் நம் நன்மைக்காக தான். எல்லாவற்றையும் வணங்கிகொண்டா செல்கிறோம். காற்று எல்லா இடங்களிலும் இருக்கிறது அதை உணர எப்படி மின்விசிறி தேவை படுகிறதோ அப்படி தான் கோவிலும் என்றால், காற்றை சுவாசிக்க நம் மூக்கு குழாய் இருக்கிறது சதா சுவாசித்துக்கொண்டு தான் உயிர் வாழ்கிறோம். உணர மரங்களின் காற்று வீசுகிறது.
மதங்களின் கடவுள்களின் அறிவியல் பூர்வமான நன்மைகள் என்று வக்காலத்து வாங்கும் முன் சற்றே யோசிப்போம்! மதம் ஒரு சித்தாந்தம்(Ideology, not Science). மதங்களின் தேவைக்காக உருவாக்க பட்டது தான் கடவுள். அதன் தேவை அதை பரப்புவது! இதில் எங்கிருந்து வருகிறது அறிவியல்?? அறிவியல் ரீதியாக பரப்புவதனாலா??? இது அரசியலை விடவும் கேவலமாக இல்லை? அரசியல் என்பது ஒரு சாக்கடை. அதை சுத்தம் செய்கிறதா இந்த மதமும் கடவுளும்? மாறாக துணை நிற்கிறது. அப்படி பட்ட மதமும் கடவுளும் தேவையே இல்லை!
மதமும் கடவுளும் உலகின் மக்களின் பசியையும் பட்டினியையும் போக்குகிறதா? அதனால் ஏற்படும் எண்ணிலடங்கா சாவுகளை நிறுத்துகிறதா? நாடுகளுக்குள், மக்களுக்குள் பகையை நிறுத்துகிறதா? போர் வராமல் தடுக்கிறதா? போரில் எவரையும் சாகாமல் பார்த்துக்கொள்கிறதா? ஒருவனை மதுவிலிருந்தோ பேராசைகளில் இருந்தோ விடுவிக்கிறதா? (விளம்பரங்களில் அல்ல, நிஜத்தில்!).
ஒருவனை சுயமாக என்றாவது யோசிக்க விட்டதா??? இப்படி எதையுமே செய்யாத கடவுள் வலுவை இழந்து அல்லவா நிற்கிறது!
அன்புடன்
ஜெகன்
(10-06-2016)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக