புதன், 28 டிசம்பர், 2016

பஞ்சமா பாசாங்கா!?


நீரிஇன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு – குறள்.
சமீபத்தில் நிகழ்ந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை துஷ்பிரயோகம் செய்யும் விதமாக கர்நாடகா மாநிலத்தின் தலைநகரம் பெங்களூருவில் ஏற்பட்ட கலவரத்தால் இருவர் உயிர் இழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கில் தமிழ்நாடு பதிவு எண் பொருந்திய வாகனங்கள் சேதம். மேலும் இவை தவிர கர்நாடகா மாநிலத்திற்கு பணிக்காக சென்றிருந்த அப்பாவி தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தியும் அவர்களை இழிவு படுத்தும் விதமான செயல்களிலும் சில இனவெறியர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இதன் விளைவாக பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். அவர்களின் தினசரி வாழ்வு பாதிக்கப்பட்டதோடு அவர்கள் செய்யும் பணிகள் முடங்கின. இதனால் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு நேர்ந்தது.
இரு மாநிலங்களுக்கு இடையேயான இந்த பிரச்சனை தேசிய ஒருமைப்பாட்டை சீர்குளைக்கும் விதமாக காட்சி அளித்தது. விளைவு, முழுக்க முழுக்க விவசாயிகளின் பிரச்சனை, நீரியல் வல்லுநர்களால் தீர்த்து வைக்கபட்டிருக்க வேண்டிய ஒரு பிரச்சனை, இன்று பூதாகரமாக உருவெடுத்து உச்சநீதிமன்றம் வரை சென்று உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காமல் ஒரு நாட்டிற்குள் நிகழும் இந்த நீர் பிரச்சனை இரு நாடுகளிடையே நிகழும் ஒரு பிரச்சனை போலவே தோன்றுகிறது. இதற்கு மத்திய அரசு தலைக்குனிய வேண்டும். காரணம் புதிதாக இதுபோன்றதொரு கலவரம் நிகழ்ந்திருந்தால் இப்படி சொல்லத் தேவையில்லை. ஆனால் இருபத்தைந்து வருடத்திற்கு முன்னதாக நடந்தது போலவே மீண்டும் ஒரு கலவரம். இதற்கிடையில் பல முறை தகராறுகள்.
ஒரே நாட்டிற்குள் உருவெடுத்து கடலில் கலப்பதற்குள் சுமார் எண்ணூறு கிலோமீட்டர் நீளம் கொண்ட நதி காவிரி. இதில் தான் இவ்வளவு சிக்கல்கள். நதி ஏதுமறியாமல் உருவாகும் இடத்திலிருந்து கடலை நோக்கி பயணம் செய்யும். அது பயணிக்கும் பாதையும் இயற்கையாக தாழ்வான பாதையாக கடலை சேர்ந்தடையும் பாதையாகவே இருக்கிறது. இதற்கிடையே தான் பிரச்சனை.
காவிரி ஆறு காலம் காலமாக பெறுக்கெடுத்து தமிழகத்தின் வழியே கடலில் கலக்கிறது. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கரிகாலச்சோழ மன்னனால் காவிரி ஆற்றின் மீது நீர் பாசனத்துக்காக கல்லணை கட்டப்பட்டு விட்டது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் காவிரிப் புகழ் பாடப்பட்டிருப்பது சான்று.
கடந்த ஐம்பது முதல் நூறு ஆண்டுகளில் இந்தியாவில் நிலவும் அரசியல் பிரிவினைகளால் ஏற்பட்டுள்ள போக்கு இத்தனைக் கால பாரம்பரிய வேளாண்மையை பாதிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. காவிரி பிரச்சனையை அரசியலாக்குவதன் ஆணிவேர் இங்குதான் உள்ளது. முக்கியமாக கர்நாடகா மக்களின் மனதில் விதைக்கப்படும் நீர் பற்றாக்குறை நிலைமை தங்களுக்கு வந்துவிடுமோ என்னும் அச்சமே அது. அதை பயன்படுத்தி தான் 1991-ஆம் வருடம் நடந்த கலவரம் இன்று 2016-ல் வெள்ளி விழாவாக மாறிய அவலத்தை நாம் சந்திக்கிறோம்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் கர்நாடகாவில் குடிப்பதற்கே தண்ணீர் இருக்காது என்கிறது கர்நாடகா. அதே நேரத்தில் கர்நாடகாவின் பாசனத்திற்கு தண்ணீர் தேவை என்றும் கூறுவதால் அவர்கள் நாடகம் வெட்ட வெளிச்சமாக தெறிகிறது. அவர்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்று முதலில் கூறியதன் காரணம் – இரு மாநில காவிரி நதி நீர் பங்கீட்டு உடன்படிக்கையின்படி நதி நீர் தமிழ் நாட்டில் தான் கடலில் கலப்பதால் தமிழகத்தில் பாசனத்திற்கு நிச்சயம் தண்ணீர் திறந்து விட வேண்டும்(சர்வதேச நதி நீர் பங்கீட்டு அடிப்படையும் இதுவே), அதே சமயம் கர்நாடகாவின் குடி தண்ணீருக்கே முதலுரிமை வழங்க வேண்டும் என்பது. மிக முக்கியமான இந்த விஷயத்தில் தான் காவிரி பிரச்சனை சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகிறது. ஆக காவிரி நதி நீர் பங்கீடு என்பது முழுக்க முழுக்க ஒரு விவசாய நீர் பங்கீட்டு விவகாரம். இதில் தான் நீரியல் வல்லுநர்கள் பங்கு தேவைப்படுகிறது.
இயற்கையின் விதிகள்படி நதிநீர் கடலில் கலந்து கரையோர நிலப்பகுதியை பாதுகாத்து வாரும். அப்படி நிகழவில்லையெனில் கடலின் உப்புத் தன்மை நிலத்தடி நீரை வற்றச் செய்து பூமி பாலைவனமாக மாறிவிடும். இந்த ஒரு நிகழ்வையும் கர்நாடக மக்கள் மனதில் அவர்களுக்கு அநியாயம் இழைக்கப்படுவதை போல ஒரு விஷமத்தை விதைக்கிறார்கள். கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் கலக்கும் நதிகளின் நீர் அளவை பார்த்தால் சுலபமாகவே புரியும்.
அன்புடன்
ஜெகன்
(07-10-2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக