“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று எழுதிய பாரதி தான்
“சுந்தர தெலுங்கினில் பாட்டு இசைத்து” என்றும்,
“சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு” என்றும் உரைத்தான்.
மொழிகள் வெறும் ஓசையா? அல்ல தொடர்புக்கான ஒரு கருவியா? அல்ல மனிதனின் ஒரு படைப்பா?
பேசும் பொழுது அது ஒரு ஓசையாகிறது, எழுதும் பொழுது தொடர்புக்கான கருவியாகிவிடுகிறது, அதை மனிதன் உருவாக்கியதால் ஒரு படைப்பாகிவிடுகிறது.
இவை அனைத்திற்கும் மேலாக வரலாற்றை சுமந்து வரும் ஒரு ஒப்பற்ற பொருளாகிவிடுகிறது மொழி.
கற்காலங்களில் இருந்தே மனிதன் எழுத துவங்கிவிட்டான். விலங்குகளை மேய்த்துக்கொண்டிருந்தவன் அவை அனைத்தும் எண்ணிக்கையில் சரியாக வந்து சேர்ந்துவிட்டனவா என்பதை கணக்கிட கோடுகள் கிழிக்க துவங்கினான். எண்கள் உருவாக துவங்கியது. ஒவ்வொரு மொழியிலும் எண்கள் வெவ்வேறாக இருக்கும். உதாரணம் நாம் பரவலாக பயன்படுத்தும் ஆங்கில எண்களும், ‘ரோமன் லெட்டர்ஸ்’ எண்களும் வெவ்வேறாக இருக்கும். காரணம் அது ரோமானியர்கள் பயன்படுத்திய எழுத்துக்கள். இப்படி ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு விதமாக உருவெடுத்து இருக்கும். தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் தமிழ் உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழி என்று தொல்பொருள் ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் இருக்கும் பல கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வரலாறு எல்லா மொழிகளுக்கும் உண்டு. வயது முன்னும் பின்னுமாக இருக்கும். இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளே உள்ளன. ஆங்கிலம் மற்றும் இந்தி. பல்வேறு இலக்கிய சிறப்பும் வரலாற்று சிறப்பும் இருந்தும் தமிழ் மொழி அதிகாரப்பூர்வ மொழியாகாதது ஒரு துரதிர்ஷ்டமே! அந்த தகுதியை தமிழ் ஒரு வாக்கு வித்தியாசத்தில் இழந்தது.
இந்தியாவில் மாநிலங்கள் மொழி வாரியாக பிரிந்தாலும் கூட அவை பிரிக்கபட்ட போது ஒன்றோடு ஒன்று பிணைந்தே இருக்கும். அதற்கு சில உதாரணங்களும் உண்டு. திருப்பதி கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு கோவிலின் சுவர்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கபட்டு இருப்பதை காணலாம். அதே போல் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலின் சுவர்களில் பாலி மொழியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருப்பதை காணலாம். ஆனால் திருப்பதி மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரியாது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு பாலி தெரியாது.
இவை எல்லாம் சுதந்திரம் அடைந்த போது அனைத்து மாநில மக்களும் ஒற்றுமையாக இருக்க ஆங்கிலேயர்கள் செய்துவிட்டு சென்றது. இல்லையேல் ஒன்றாக போராடி பெற்ற சுதந்திரம் மட்டுமே இருந்திருக்கும், இந்தியா என்ற நாடு இருந்திருக்காது. இந்தியா வேண்டாம் என்று பிரிந்து சென்ற நாடுகளின் நிலை கொடூரமாகவே உள்ளது. காரணம் அவர்கள் நோக்கம் இந்தியாவை பிரிப்பதாகவே உள்ளது. அதில் கவனம் செலுத்தி முன்னேற்றம் ஏதுமின்றி இருந்து வருகிறார்கள்.
என்னிடம் பேசிய ஒரு ஐரோப்பியர், “இந்தியா தன் நாட்டுக்குள்ளேயே நிறைய நாடுகளை வைத்துள்ளதே!” என்று கேட்டார். “ஐரோப்பிய ஒன்றியம் உங்களுக்கு இருக்கிறதா?” என்று கேட்டேன். “அதேபோல் தான் இந்தியாவில் மத்திய அரசு எங்களுக்கு” என்றேன். ஐரோப்பாவில் ஒன்றியம் இருந்தாலும் எல்லா நாடுகளுக்கும் ஒரே நாணயம் கிடையாது. இந்தியா முழுவதிற்கும் ஒரே நாணயம் தான். அதை அடையாளமும் படுத்தியது இந்தியா. இவற்றுக்கெல்லாம் மேலாக ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கொள்கையின் அடிப்படையில் இருந்து வருகிறது இந்தியா.
மொழியை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு இனம் பிரித்து காண்பிக்கும் மனிதர்களை பார்க்க முடிகிறது. மனித இனத்தை பற்றிய எந்த கவலையும் இல்லாதவர்களாகவே அவர்களை நான் பார்க்கிறேன். தமிழிலும் அப்படி பலரை பார்க்கும் பொழுது தமிழில் தான் எழுத வேண்டுமா என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது! நாளை நமக்கும் ஒரு முத்திரையை குத்த இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதனால்.
இன்று தென்னிந்தியா முழுவதும் அரிசி தான் பிரதாண உணவு. இது எந்த மொழிக்கு சொந்தம்? அல்ல ஏதாவது இனத்திற்கு சொந்தமா? அவர்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா? மொழி பற்றி பேசுபவர்களிடம் இதற்கெல்லாம் எந்த பதிலும் கிடையாது. அவர்கள் மொழியை பயன்படுத்தி மக்களை கட்டுபடுத்த முயல்கிறார்கள்.
மொழி என்ன மதம் போன்ற ஒரு சித்தாந்தமா அதை பயன்படுத்தி ஒருவரை கட்டுகோப்புக்குள் கொண்டுவர? மதமே எந்த பயனும் இன்றி இருந்துவருகிற நிலையில் மொழியால் யாரையும் ஒழுங்கு படுத்திவிட முடியாது.
ஒரு மொழியின் சிறப்புகள் என்ன என்பதை ஒருவர் புரிந்து கொண்டால் அவரும் அந்த மொழியை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதற்கு மாறாக மொழியால் பிரித்து பேசுவதன் மூலம் ஒன்றும் நிகழாது.
கேட்கும் பேசும் திறன் கொண்ட ஒருவனுக்கு தன் தாய் மொழியாலே சிந்திக்க முடியும். அது இயல்பு. மற்ற மொழிகள் யாவும் ஒரு ஓசை மட்டுமே. அந்த ஓசையை தன் தாய் மொழியில் புரிந்து கொண்டு பிறகு அதற்கேற்ப வேற்று மொழியின் ஓசையை உச்சரித்து பதில் கூறுவார்கள். அதனால் வேற்று மொழியில் பேசுபவர்களை வெறுப்பவர்கள் எந்த மொழி பேசி என்ன பயன்? மனித உணர்வுகளை மதிக்காமல் அவர்கள் வெறுக்க முடிவு செய்து விட்டார்கள். வெறுப்பை சம்பாதிக்க போகிறார்கள். அதனால் வெறுப்பை மொழியில் காட்டி மொழியின் புனிதத்தை கெடுக்க வேண்டாம். வெறுப்பையும் வன்முறையையும் எந்த மொழியாவது கற்று தருகிறதா? ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட விரோதத்தின் மேல் மொழி என்ற ஒரு போற்வையை போர்த்தி யாரையும் இழிவு படுத்த எந்த மொழியும் சொல்லாது. மொழியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு எது நல்லது எது கெட்டது என்பதை பார்த்தால் மொழிகள் ஒரு பிரச்சனையாகவே தோன்றாது. இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இன்னொரு பிரச்சனையா மொழியின் பெயரில்!
தமிழ் நாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி விளையாடிக் கொண்டிருந்தபோது அதில் விளையாடிய வீரர்களில் பலர் வேற்று மொழியை சார்ந்தவர்கள். அவர்கள் விளையாடியது நமக்காக. தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்கு மொழி ஒரு பிரச்சனை ஆகாது. இரண்டு அணிகள் விளையாடும் பொழுது எந்த அணி சிறப்பாக விளையாடி போட்டியை வெல்கிறார்கள் என்பதே முக்கியம். ஒரு அணியில் பல நாட்டு வீரர்கள் ஒன்றாக விளையாடும் பொழுது வேற்றுமையில் ஒற்றுமை ஓங்குகிறது.
திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ். தமிழை பிரிக்க பல ஜாதிகள் மொழிகளுக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறது. அதை நாம் பல இடங்களில் பார்க்கலாம். உதாரணமாக நம் ஊரில் இருக்கும் பல கல்லூரிகளுக்கு ஜாதியின் பெயரை சூட்டி மாணவர்களுக்கு இடையே வன்முறையை தூண்டுபவர்களை என்னவென்று சொல்வது!
எத்தனையோ மொழிகள் இருக்க மனித வாழ்வை மேம்படுத்த என்ன இருக்கிறது என்பதையே ஒரு மொழியில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக மொழி வாரியாக சண்டை போடுவதால் ஒரு பயனும் இல்லை. சமூகத்தில் நடக்கும் அவலங்களை மொழியால் சரி செய்ய முடியுமா என்று முயற்சி செய்தால் நல்லது.
இன்று காதல் என்றால் என்ன என்றே தெரியாமல் இளைஞர்கள் இருந்து வருகிறார்கள். தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அகநானூறு, திருக்குறள் போன்ற நூல்களில் உள்ள அழகிய தெளிவுரைகளை புரிந்துணர்ந்தால் இத்தகைய பிரச்சனைகள் குறையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அன்புடன்
ஜெகன்
(06-07-2016)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக